Published:Updated:

அய்யோ,ஆஃப்ரிக்கன் நத்தைகள் !

அலறும் கேரள விவசாயிகள்

பிரீமியம் ஸ்டோரி

பிரச்னை

என்.சுவாமிநாதன்

'விளைநிலங்களை வீட்டு மனைகளாக மாற்றுவதற்குத் தடை', 'தீவிர இயற்கை விவசாயத் திட்டம்', 'விவசாயிகளுக்கு ஓய்வூதியம்', 'மரபணு மாற்றுப் பயிர்களுக்குத் தடை'... இப்படி அரசின் ஆதரவோடு கேரள விவசாயிகளுக்கு எப்போதுமே உற்சாக நடைதான். ஆனால், அவர்களை சமீபகாலமாக நடுங்க வைத்துக் கொண்டிருக்கின்றன ஆஃப்ரிக்கன் நத்தைகள்!

அய்யோ,ஆஃப்ரிக்கன் நத்தைகள் !
##~##

இதுகுறித்து நம்மிடம் பேசிய கேரள வன ஆராய்ச்சி மைய விஞ்ஞானி டி.வி. சஜீவ், ''ஆஃப்ரிக்கன் நத்தைகள் என்று அழைக்கப்பட்டாலும், இவற்றின் பூர்வீகம் பர்மா. அங்கிருந்து கேரளாவுக்கு இறக்குமதியான மரங்கள் மூலமாகத்தான் இங்கு வந்திருக்கின்றன. கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கே முன்பே வந்து சேர்ந்த இவற்றை, ஆரம்பத்தில் சரியாக கவனிக்காமல் விட்டுவிட்டதால் கிட்டத்தட்ட கேரளா முழுக்கவே பரவி விட்டன.

பப்பாளி, மரவள்ளி, இஞ்சி, புளி... போன்ற பயிர்களைத்தான் இவை அதிகளவில் தாக்குகின்றன. வீட்டுத் தோட்டங்களையும் விட்டு வைப்பதில்லை. பயிர்களில் பூ பூத்தவுடனேயே, அவற்றைத் தின்று விடுவதால் மகசூல் மொத்தமாக அழிந்து விடுகிறது.

தொடக்கத்தில் விவசாயிகளுக்கு மட்டும் பிரச்னை கொடுத்த இவை, தற்போது குடியிருப்புப் பகுதிகளிலும் புக ஆரம்பித்துவிட்டன. சுண்ணாம்புச் சுவர்களில் ஒட்டி வாழும் இவற்றின் பாதிப்பிலிருந்து கொச்சி துறைமுகம்கூடத் தப்பவில்லை. திருவனந்தபுரத்தில் உள்ள வல்லியத்துறை பகுதி மக்கள் பலரும் இவற்றுக்குப் பயந்து வீட்டை விட்டே வெளியேறிவிட்டனர்'' என்று அதிர்ச்சி கிளப்பியவர்,

''ஆஃப்ரிக்கன் நத்தைகள் அதிகமா இருக்கும் பகுதியில் முட்டைக்கோஸ் இலை, அழுகிய பப்பாளி இரண்டையும் போட்டு வைத்தால்... வாசனையால் ஈர்க்கப்பட்டு நத்தைகள் அனைத்தும் அவற்றைச் சாப்பிடுவதற்காக வரும். ஒரே இடத்தில் கூடும்போது அவற்றின் மீது டி.டி.எஸ். (T.D.S - Tobacco decoction-Copper sulphate)எனும் கலவையைத் தெளித்தால் இறந்து விடும். இயற்கையான முறையில் அவற்றை அழிப்பதற்கான வழிமுறைகளையும் ஆராய்ந்து வருகிறோம்'' என்று சொன்னார்

அடுத்தக் கட்டமாக அண்டை மாநிலங்களுக்குள் இவை படையெடுத்து பரவ ஆரம்பிப்பதற்குள்ளாக அக்கம் பக்கத்து மாநில அரசுகளும், குறிப்பாக தமிழக அரசு... கேரள அரசோடு கைகோத்து இப்பிரச்னைக்குத் தீர்வு காண முயற்சிப்பது நல்லது!

படங்கள் : ரா.ராம்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு