Published:Updated:

வறட்சியிலும் வளமை காட்டும் மறுதாம்புச்சோளம் !

கறவை மாடு வளர்ப்போருக்கு வரப்பிரசாதம்....

பிரீமியம் ஸ்டோரி

காசி.வேம்பையன்

பளிச்... பளிச்...

அரை ஏக்கரில் ஆண்டுக்கு 60 டன் தீவனம்.
அறுபதாம் நாளில் இருந்து அறுவடை.
மாடுகளை வயலிலேயே மேய விடலாம்.

 கோடைக் காலங்களில் கூடும் சந்தைகளில்தான் அதிகளவில் ஆடு, மாடுகள் விற்பனைக்கு வரும். அதற்குக் காரணம்... வறட்சிக் காலங்களில் பசுந்தீவன உற்பத்தி தடைபடுவதுதான். கறவை மாடு வளர்ப்பவர்கள் பலருக்கும் சவாலான விஷயமாக இருப்பதே இந்த பசுந்தீவனம்தான். இத்தகையச் சூழலைச் சமாளித்து, கால்நடை வளர்ப்பில் வெற்றிநடை போட நினைக்கும் விவசாயிகளுக்குக் கைகொடுக்கிறது... 'கோ.எஃப்.எஸ்-29’ எனும் தீவனச்சோளம்! ஒருமுறை விதைத்துவிட்டால்... ஆண்டுக் கணக்காக அறுத்து, மாடுகளுக்குப் போட்டுக் கொண்டே இருக்கலாம் என்பதால், இதற்கு மறுதாம்புச் சோளம் (Multicut Cholam) என்றும் பெயர் உண்டு.

வறட்சியிலும் வளமை காட்டும் மறுதாம்புச்சோளம் !
##~##

தற்போது கறவை மாடு வளர்க்கும் பெரும்பாலானோர், இந்தத் தீவனப்பயிரையும் சேர்த்தே சாகுபடி செய்கிறார்கள். அப்படி சாகுபடி செய்துவரும் விழுப்புரம் மாவட்டம், சின்னசேலம், தென்செட்டியேந்தல் கிராமத்தைச் சேர்ந்த செந்தில்குமார், தன் அனுபவத்தை இங்கே பகிர்கிறார்.

பொறியியலில் இருந்து உழவியலுக்கு!

''மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் டிப்ளமோ முடிச்சுட்டு, தனியார் பாலிடெக்னிக்ல வேலை பாத்துட்டிருந்தேன். அந்த வருமானம் போதாததால, வேலையை விட்டுட்டு... பூர்விகமா இருந்த ஏழு ஏக்கர் நிலத்துல விவசாயத்தை ஆரம்பிச்சேன். கடலை, பருத்தி, மரவள்ளினு சாகுபடி செஞ்சதுல கிடைச்ச வருமானத்துல பாதியை உரக்கடைக்கும் கூலிக்கும்தான் கொடுக்க வேண்டியிருந்துச்சு. வருமானம் குறைச்சலா இருக்கவே, என்கிட்ட இருந்த ரெண்டு கறவை மாடுகளப் பெருக்கி பால் பண்ணை வைக்கலாம்னு முடிவு பண்ணினேன்.

வறட்சி கற்றுக்கொடுத்த பாடம்!

அதுக்காக 25 சென்ட்ல கோ-4 தீவனப்புல் கரணையை வாங்கி நடவு செஞ்சேன். வெயில் காலம் ஆரம்பிச்சதும் கிணத்துல தண்ணி வறண்டு, புல் முழுக்க பட்டுப் போயிடுச்சு. அது நடந்து ஆறு வருஷமாச்சு. அந்த சமயத்துலதான் சின்னசேலத்துல இருக்குற 'அரசு ஆட்டுப்பண்ணை’யில 'கோ.எஃப்.எஸ்-29’ தீவனச்சோளத்தைப் பத்தித் தெரிஞ்சுக்கிட்டு கால் கிலோ விதையை வாங்கிட்டு வந்து, 10 சென்ட்ல விதைச்சேன். நல்லா வளர்ந்து வந்துச்சு. அந்த வருஷமும் வறட்சிதான். ஆனா, பயிருக்கு ஒண்ணும் ஆகல. அதனால, அரை ஏக்கர்ல அதையே விதைச்சு விட்டுட்டேன். வளர்ந்த தீவனச்சோளத்துல இருந்தே விதையும் கிடைச்சதால ஆறு மாசத்துக்கு முன்ன, அரை ஏக்கர் முருங்கைக்கு இடையில ஊடுபயிராவும் தீவனச்சோளத்தை விதைச்சுருக்கேன்'' என்ற செந்தில்குமார், அரை ஏக்கரில் அதை பயிரிடும் முறை பற்றி பாடமாகவே சொல்ல ஆரம்பித்தார்.

ஊடுபயிருக்கும் ஏற்றது!

கோ.எஃப்.எஸ்-29 ரக தீவனச்சோளத்துக்கு அனைத்துப் பட்டங்கள் மற்றும் அனைத்து மண் வகைகளும் ஏற்றவை. வசதிக்கு ஏற்றபடி தனிப் பயிராகவோ... ஊடுபயிராகவோ சாகுபடி செய்து கொள்ளலாம்.

தனிப்பயிராக சாகுபடி செய்யும் முறைகளைப் பற்றி பார்ப்போம். அரை ஏக்கர் நிலத்தில் ஒன்றரை டன் தொழுவுரத்தைக் கொட்டிக் களைத்து, இரண்டு சால் உழவு ஓட்டி, மண்ணைப் புழுதியாக்க வேண்டும். தண்ணீர்கட்ட ஏதுவாக வாய்க்கால் வரப்புகள் அமைத்துக் கொண்டு, ஓரடி இடைவெளியில் ஐந்து ஐந்து விதைகளாக ஊன்ற வேண்டும். அரை ஏக்கருக்கு இரண்டரை கிலோ விதை தேவைப்படும்.

ஆண்டுக்கு ஆறு அறுப்பு!

தொடர்ந்து நிலம் காயாத அளவுக்கு தண்ணீர் கட்டி வர வேண்டும். சொட்டுநீர்ப் பாசனமாக இருந்தால்... 5 அடி இடைவெளியில் தண்ணீர் சொட்டுவதுபோல அமைத்து, தினமும் ஒரு மணி நேரம் பாசனம் செய்தால், போதுமானது.

விதைத்த 7-ம் நாளில் முளைப்பு வரும். 20 மற்றும் 40-ம் நாட்களில் களைகளை அகற்ற வேண்டும். அதற்கு மேல் செடிகள் படர்ந்து விடுவதால் களைகள் முளைக்காது. அவ்வப்போது சாணம், மாட்டுச் சிறுநீர் ஆகியவற்றை பாசன நீருடன் கலந்து விட்டாலே நன்கு வளர்ந்து விடும் (ஊடுபயிராக சாகுபடி செய்யும்போது, முதன்மைப் பயிருக்கு இடும் உரங்களே போதுமானதாக இருக்கும்).

வறட்சியிலும் வளமை காட்டும் மறுதாம்புச்சோளம் !

விதைத்த 60-ம் நாள் முதல்  அறுவடை செய்யலாம். தொடர்ந்து ஒன்றரை மாதத்துக்கு ஒரு முறை என ஆண்டுக்கு ஆறு முறை அறுவடை செய்யலாம். ஆறு முறையும் சேர்த்து, அரை ஏக்கரில் வருடத்துக்கு 60 டன் பசுந்தீவனத்தை அறுவடை செய்யலாம். அறுவடை செய்ய ஆட்கள் பற்றாக்குறை என்றால், வயலிலேயே மாடுகளை மேய விடலாம். மாடுகளின் கால்களால் மிதிப்பட்டாலும் தீவனப்பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படாது.

விதை உற்பத்தியும் செய்யலாம்!

விதை உற்பத்தி செய்ய வேண்டுமென்றால், 60-ம் நாளில் அறுவடை செய்யாமல் விட்டுவிட வேண்டும். 70-ம் நாளில் பூவெடுக்க ஆரம்பித்து, 110-ம் நாளுக்கு மேல் கதிர்கள் முற்றி விடும். அவற்றை அறுவடை செய்து காயவைத்து, குச்சியில் தட்டி விதைகளை தனியாக பிரித்து எடுத்துக் கொள்ளலாம். ஆண்டுக்கு மூன்று முறை இப்படி விதை எடுக்கலாம். ஒவ்வொரு முறைக்கும் அரை ஏக்கரில் இருந்து 75 கிலோ முதல் 100 கிலோ வரை விதை கிடைக்கும்.''

ஒரு கிலோ விதை 250 ரூபாய்!

சாகுபடிப் பாடத்தை முடித்த செந்தில்குமார், ''எங்கிட்ட இப்ப மொத்தம் 14 மாடுங்க இருக்கு. ஆரம்பத்துல மாட்டுக்கு 20 கிலோங்கிற கணக்குல அறுத்துதான் தீவனம் போட்டுக்கிட்டிருந்தேன். பிறகு, வயல்லயே கட்டி மேய்க்க ஆரம்பிச்சுட்டேன். மேயும்போதே சாணமும், மூத்திரமும் வயல்ல விழுந்துடுறதால தனியா உரம் கொடுக்குறதில்ல. 'மாடு மிதிச்சா... பயிர் துளிர்க்காது’னு சொல்வாங்க. ஆனா, இந்த ரக சோளத்தட்டைத் துளிர்த்து வந்துடுது. வருஷத்துல ரெண்டு தடவை மட்டும் விதை எடுப்பேன்.

அரை ஏக்கர்ல இருந்து, வருஷத்துக்குச் சராசரியா 150 கிலோ அளவுக்கு விதை கிடைக்கும். கிலோ 250 ரூபாய் வரைக்கும் விலை போகுது. அது மூலமாவும் தனியா வருமானம் பாத்துடலாம்.

எல்லாத்தையும்விட... வறட்சிக் காலத்துலயும் பசுந்தீவனத்துக்குக் கவலையே இல்லாம இருக்க முடியுதுங்கறதுதான் இதுல சந்தோஷமான விஷயமே'' என்றார் மிகுந்த உற்சாகத்துடன்!

 படங்கள்: க. தனசேகரன்
 
தொடர்புக்கு செந்தில்குமார்,
அலைபேசி: 99658-28641

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு