Published:Updated:

நான் நம்மாழ்வார் பேசுகிறேன் -39

இயற்கை அனுப்பிவெச்ச இணையற்ற மனுஷன்! 'மரம்’ தங்கசாமி ஓவியம்: ஹரன்

நான் நம்மாழ்வார் பேசுகிறேன் -39

இயற்கை அனுப்பிவெச்ச இணையற்ற மனுஷன்! 'மரம்’ தங்கசாமி ஓவியம்: ஹரன்

Published:Updated:

வரலாறு

நான் நம்மாழ்வார் பேசுகிறேன் -39

'இயற்கை வேளாண் விஞ்ஞானி' கோ. நம்மாழ்வார், இயற்கையுடன் கலந்துவிட்டார். அவருடன் நெருங்கிப்பழகி, அவரைப் பற்றி முழுவதுமாக அறிந்து வைத்திருக்கும் சிலர்... 'நான் நம்மாழ்வாருக்காகப் பேசுகிறேன்' என்ற தலைப்பில், அவருடைய வாழ்க்கைப் பாதை பற்றி இதழ்தோறும் பேசுகிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''புதுக்கோட்டை மாவட்டம், சேந்தன்குடியில் தங்கசாமி வசிக்கிறார். அவர் மரம் வளர்க்க ஆரம்பித்தபோது, என்னைப் பார்க்க வந்தார். முதலில் தேக்கு மரம் மட்டுமே வளர்த்து வந்தார். ஒரு வகை மரம் மட்டுமே வளர்த்துக் கொண்டிருக்கக் கூடாது. பல வகை மரங்களை வளர்க்க வேண்டும் என்ற நுட்பத்தைச் சொல்லி, இயற்கை வேளாண்மையில் ஈடுபட வைத்தோம். பத்து ஏக்கரில் 173 வகையான மரங் களை இப்போது வளர்க்கிறார். ஏர்க் கலப்பைக் கட்டுவதற்கே நிலத்தில் இடம் கிடையாது. ஊரில் அவரை 'கலப்பைக் கட்டாத விவசாயி’ என்றுதான் சொல்கிறார்கள். அந்த இடத்துக்கு 'கற்பகச் சோலை’ என்று பெயர் வைத்துள்ளோம். அங்கே யார், போனாலும் பசியோடு இருக்க வேண்டியதில்லை. ஏதாவது ஒரு பழம் காய்த்துக் கொண்டே இருக்கிறது''

- இப்படி 'மரம்’ தங்கசாமி பற்றி நம்மாழ்வார் ஒரு முறை குறிப்பிட்டிருந்தார். தமிழ்நாட்டில் மரம் வளர்ப்பில் முன்னோடியான 'மரம்’ தங்கசாமி, நம்மாழ்வார் பற்றி பேசுகிறார்....

நான் நம்மாழ்வார் பேசுகிறேன் -39

''மரம் வளர்ப்புல தீவிரமா இருந்த நான், அடிக்கடி விவசாயக் கூட்டங்களுக்குப் போவேன். இப்படி ஒரு கூட்டத்துல... 'மரம் வளர்ப்பு, இயற்கை விவசாயம்... பத்தியெல்லாம் கிள்ளுக்கோட்டையில இருக்கிற குடும்பம் அமைப்புல நிறைய கத்துக் கொடுக்கிறாங்க. அங்க நம்மாழ்வாருனு ஒருத்தர் இருக்காரு. அவரு விவசாயத்தைப் பத்தி பேச ஆரம்பிச்சா, நாள் முழுக்கக் கேட்டுட்டே இருக்கலாம்னு விவசாயிங்க பேசிக்கிட்டாங்க.

மறுநாளே கிள்ளுக்கோட்டைக்குக் கிளம்பிப் போனேன். 'குடும்பம்’ பண்ணையைச் சேர்ந்த நிறைய பேரு வேலை செய்துட்டு இருந்தாங்க. அதுல ஒருத்தர்கிட்ட போய், 'என் பேரு, தங்கசாமி, சேந்தன்குடியில இருந்து வர்றேன். நம்மாழ்வாரைப் பார்க்கணும்'னு  கம்பீர தோரணையில கேட்டேன். 'அங்க வேலை செஞ்சுக்கிட்டு இருக்கிறவங்கிட்ட கேளுங்க’னு சொன்னாரு. அவங்ககிட்ட போய், 'இங்க யாரு நம்மாழ்வாரு’னு கேட்டேன். 'அதோ, அங்க இருக்காரே அவருதான்னு’ சொன்னாங்க. சரியான கோவம் வந்துடுச்சு. ஏன்னா, அவருகிட்டதான் யாரு நம்மாழ்வாருனு முதல்ல கேட்டதே!

வேகவேகமா போய், 'ஏன் இப்படி அலைய விட்டீங்கனு?' கேட்டேன். 'முதல் சந்திப்பு மறக்க முடியாத மாதிரி இருக்கணும். அதனாலதான்’னு சொல்லி வயிறு குலுங்க சிரிச்சாரு. கள்ளம், கபடம் இல்லாத குழந்தை மாதிரி ஆழ்வார் அண்ணாச்சி தெரிஞ்சாரு. என்னோட கதையைப் பொறுமையா கேட்டாரு. மரம் வளர்ப்புக்கான முக்கிய நுட்பங்களை விளக்கமா சொன்னாரு.

நான் நம்மாழ்வார் பேசுகிறேன் -39

ஒரு நாள் என்னோட பண்ணைக்கு வந்து பார்த்தாரு. பண்ணைக்கு யாரு வந்தாலும், முதல்ல மரக்கன்று நடவு செய்யச் சொல்லுவேன். இந்த விஷயம் அண்ணாச்சிக்கு ரொம்பப் பிடிச்சிருந்துச்சி. 'தங்கம் அண்ணன், மாதிரி விவசாயிங்க இருந்துட்டா, விவசாயத்துல நஷ்டம் வராதுனு’ விவசாயிங்க மத்தியில பேசுவாரு. இத்தனைக்கும், அவர் என்னைவிட, வயசுல பெரியவரு. ஆனா, நான் மரியாதையை எதிர்பார்க்குற ஆளு, கொஞ்சம் அதட்டலா பேசுவேன். என் குணம் தெரிஞ்சி, தங்கம் அண்ணனுதான் கூப்பிடுவாரு. ஒவ்வொருத்தரோட குணத்துக்கும் தகுந்தபடி பக்குவமாதான் பேசுவாரு.

'இனி, எந்தக் கூட்டத்துக்குப் போனாலும், மரக்கன்னை நட்டு வெச்சுட்டுதான் பேச்சைத் தொடங்கணும்'னு ஒரு முறை கேட்டுக்கிட்டேன். கடைசி காலம் வரை யிலும் அதைச் செய்தாரு. அண்ணாச்சி இயற்கையோட கலந்துட்டாருங்கிற சேதி வந்ததும்... அழுகை ஒரு பக்கம் முட்டிக்கிட்டு வந்துது. ஆனாலும், அஞ்சி சந்தன மரக் கன்னை, நட்டு வெச்சுட்டுத்தான் மனம்விட்டு அழுது தீர்த்தேன்.

அண்ணாச்சி இல்லைனா, இயற்கை விவசாயமும், மரம் வளர்ப்பும் தமிழ்நாட்டுல இந்த அளவுக்கு வளர்ந்திருக்காதுனு சொல்லிடலாம். இதையெல்லாம் தாண்டி சிறுதானியம், பாரம்பரிய விதைகள், எளிய வாழ்க்கை முறைனு விவசாயம் சம்பந்தமான விஷயங்களுக்கு விரிவாவே அண்ணாச்சி வேலை செய்திருக்காரு. பல விஷயங்கள்  வெளியில தெரியல. அதுல ஒண்ணுதான் மாப்பிள்ளைச் சம்பா நெல் ரகத்தை மீட்டெடுத்தது.

இன்னிக்கு, மாப்பிள்ளைச் சம்பா நெல் ரகத்தைப் பத்தி பரவலா பேசிக்கிறாங்க. 25 வருஷத்துக்கு முன்ன அந்த நெல் ரகம் புதுக்கோட்டை மாவட்டத்துல அழியுற நிலையில இருந்திச்சி. ஒருதடவை வட்டமா உட்கார்ந்து பேசிட்டு இருந்தப்ப... மாப்பிள்ளைச் சம்பா பத்தி பேச்சு வந்துச்சு. அந்த பேரைக்கேட்டதும், துள்ளி எழுந்தவரு... 'மாப்பிள்ளைச் சம்பானு ஏன் பேரு வந்திச்சி?, இப்ப எங்கயாவது பயிர் செய்யறாங்களா?'னு கேட்டாரு. மட்டங்கால் பகுதியில இன்னும் ரெண்டு, ஒருத்தரு பயிர் செய்யறாங்கனு சொன்னேன். உடனே, ஜோல்னா பையை மாட்டிக்கிட்டு கிளம்பிட்டாரு.

ஒரு மாசம் கழிச்சி, புதுக்கோட்டை பக்கத்துல ஒரு கூட்டத்துல அண்ணாச்சி பேசினப்ப... 'இங்க மட்டங்கால் பகுதியில மாப்பிள்ளைச் சம்பாங்கிற பாரம்பரிய ரகத்தைப் பயிர் செய்றாங்க. அதைத் தேடிப்போனப்ப, அந்த ஊரு தலைவர் சாகுபடி செய்துக்கிட்டு இருக்கிறதா சொன்னாங்க. அங்க போய் பார்த்தேன். வயல்ல, ஆளுக்கு மேல பயிரு வளர்ந்து நின்னுச்சு. பார்க்கிறதுக்கு ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. ஊர் மக்கள்கிட்ட, மாப்பிள்ளைச் சம்பானு ஏன் பேரு வந்திச்சுனு கேட்டேன்.

நான் நம்மாழ்வார் பேசுகிறேன் -39

கல்யாணத்துக்குத் தயாரா இருக்கிற இளவட்ட பசங்க, கோயிலுக்குப் பக்கத்துல இருக்கிற இளவட்டக் கல்லைத் தூக்கி எறியணும். அந்தக் கல்லைத் தூக்குறதுக்கு முன்ன மாப்பிள்ளைச் சம்பா பழைய சோத்தையும், நீராகாரத்தையும் குடிச்சா... அத்தனை தெம்பு கிடைக்கும். இளவட்டக் கல்லை அலேக்கா தூக்கி போட்டுடலாம். இளவட்ட பசங்கள, மாப்பிள்ளையாக்குறது இந்த சம்பா நெல்லுதான். அதனாலதான் மாப்பிளைச் சம்பானு சொன்னாங்க. கூடுதலா இன்னொரு விஷயத்தையும் சொல்லி ஆச்சர்யப்படுத்தினாங்க.

ஒரு தடவை, மாப்பிள்ளைச் சம்பாவை மானாவாரியா விதைச்சிருக்காங்க. பயிரு நல்லா வளர்ந்திருக்கு. கதிர் புடிக்கிற நேரத்துல மழை வரல. சரி, மாட்டுக்கு வைக் கோலாவது  மிஞ்சும்னு பயிரை அறுத்துக்கிட்டு வந்துட்டாங்களாம். அந்த வருஷம் சித்திரை மாசம், கோடை மழை நல்லா பெஞ்சிருக்கு. ஒரு வாரம் கழிச்சி பார்த்தா, பயிர் அறுத்த கட்டையில இருந்து நெல்லு கதிருங்க வெளிய வந்திருக்கு. இப்படி வந்த நெல்லை அறுவடை செய்தப்ப, ஏக்கருக்கு மூணு மூட்டை கிடைச்சிருக்குனு சொன்னாங்க.

ஆக, பாரம்பரிய நெல் ரகத்தை நம்புனா, எந்த காலத்திலயும் நம்மைக் கைவிடாதுனு’ அண்ணாச்சி அழகா விளக்கிச் சொன்னாரு.

எந்த நல்ல விஷயம் தெரிஞ்சாலும், அதை அப்படியே மத்தவங்ககிட்ட கடத்தி, அதை செயல்படுத்தி வைக்கிற வித்தை அண்ணாச்சிகிட்ட அதிகமாவே இருந்துச்சு.

எனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. ஆனா, அண்ணாச்சியைப் பார்த்த பிறகு, 'நம்மைக் காப்பாத்தறதுக்கு இயற்கை இப்படிப்பட்ட மனுஷங்களை உருவாக்கி அனுப்புது. இப்படி இயற்கை தேர்வு செஞ்சி அனுப்புன மனுஷன்தான் அண்ணாச்சி'னு மனசுக்குள்ள கோயில் கட்டிக்கிட்டேன்!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism