Published:Updated:

பீர்க்கன் 1 லட்சம்... புடலை 3 லட்சம்... பாகல் 4 லட்சம்...

பணம் காய்க்கும் பந்தல்..! ஜி. பழனிச்சாமி படங்கள்: தி. விஜய், வீ. சிவக்குமார்

பீர்க்கன் 1 லட்சம்... புடலை 3 லட்சம்... பாகல் 4 லட்சம்...

பணம் காய்க்கும் பந்தல்..! ஜி. பழனிச்சாமி படங்கள்: தி. விஜய், வீ. சிவக்குமார்

Published:Updated:

பயிற்சி

 இயற்கை விவசாயிகளின் அனுபவப் பகிர்வு...  
சென்ற இதழ் தொடர்ச்சி...

'நம்மாழ்வாரின் இனியெல்லாம் இயற்கையே!’ என்ற தலைப்பில், இயற்கை விவசாயிகளின் அனுபவப் பகிர்வு, ஜூன் 15 அன்று, கரூரில் நடைபெற்றது. இந்த ஒருநாள் நிகழ்வை பசுமை விகடனுடன் இணைந்து கரூர் வள்ளுவர் கல்வி அறக்கட்டளை நிர்வாகிகள், கரூர் மாவட்ட முன்னோடி இயற்கை விவசாயிகள் ஏற்பாடு செய்திருந்தனர். நிகழ்ச்சி பற்றி கடந்த இதழில் எழுதியிருந்தோம். முன்னோடி இயற்கை விவசாயி 'கேத்தனூர்’ பழனிச்சாமி, இயற்கை முறை காய்கறி சாகுபடி பற்றி, மேடையில் பகிர்ந்தவை இங்கே இடம் பிடிக்கின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

25 ஆண்டுகள் தாங்கும் கல்தூண் பந்தல்!

''1968-ம்ஆண்டிலிருந்து பந்தல் விவசாயம் செய்து வருகிறேன். ஆரம்பத்தில் திராட்சையைத்தான் படர விட்டிருந்தேன். அடுத்து, கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் கழித்து 1987ல் காய்கறிக்கு மாறினேன். தற்போது, 14 ஏக்கரில், கல்தூண் பந்தல் அமைத்து... பாகல், பீர்க்கன், புடலை, கோவைக்காய் சாகுபடி செய்கிறேன். ஒரு ஏக்கர் நிலத்தில் பந்தல் அமைக்க, 115 கல் கால்கள் தேவைப்படும். பன்னிரண்டரை அடி வெளிச்சுற்றும், இருபத்தைந்து அடி உள்சுற்றும் வைத்து, கல் கால்களை நடவு செய்யவேண்டும். 4, 8, 16 'கேஜ்’ கட்டுக்கம்பிகளைக் கொண்டு பந்தல் வேயவேண்டும். கையோடு சொட்டுநீர்க் கருவிகளையும் பந்தலுக்குள் அமைத்துக் கொள்வது நல்லது. இன்றைய தேதியில் கல் பந்தல் அமைக்க ஏக்கருக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் செலவாகும். ஒரு முறை அமைத்து விட்டால், குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் தாக்குப்பிடிக்கும். சிக்கன செலவில் பந்தல் அமைக்க விரும்புபவர்கள், மூங்கில் பந்தலை அமைத்துக் கொள்ளலாம். இது 5 ஆண்டுகள் வரை பலன் தரும். ஏக்கருக்கு 75 ஆயிரம் ரூபாய் செலவாகும்.

பீர்க்கன்  1 லட்சம்... புடலை  3 லட்சம்... பாகல்  4 லட்சம்...

5 அடி இடைவெளி!

5 அடிக்கு 5 அடி இடைவெளியில் ஒரு குழி எடுத்து, பஞ்சகவ்யாவில் விதைநேர்த்தி செய்யப்பட்ட விதைகளை, குழிக்கு இரண்டு விதைகள் வீதம் ஊன்ற வேண்டும். விதைநேர்த்தி செய்வதால், வேரினைத் தாக்கும் நோய்கள் வராது. விதைகளை எக்காரணம் கொண்டும் குத்து வசமாக நடக்கூடாது. படுக்கை வசமாகத்தான் நடவேண்டும். அப்பொழுதுதான் சுலபமாக முளைத்து, மேலே வரும். முளைக்கும் கொடிகளை 30-ம் நாளில் பந்தலில் படரவிட வேண்டும். குழிக்கும் பந்தலுக்கும் இணைப்பாக கோணிச்சரடுகளைக் கட்டிவிட வேண்டும். விதைத்த 70-ம் நாளில் இருந்து காய்கள் பறிக்கலாம். பொதுவாக, பந்தல் காய்கறிகளின் மொத்த வயது 200 நாட்கள். இதில் மகசூல் காலம் 140 நாட்கள். நேர்த்தி செய்யப்பட்ட தரமான விதைகளை நடவு செய்து, சரியாகப் பராமரித்தால்... புடலையில் ஏக்கருக்கு 40 டன், பாகலில் 25 டன், பீர்க்கனில் 20 டன் என கிடைக்கும்.  

வளர்ச்சியைத் துரிதப்படுத்தும் பிண்ணாக்குக் கரைசல்!

நல்ல மகசூல் எடுக்கவேண்டும் என்றால், சரியான நேரத்தில் இடுபொருட்களைக் கொடுக்க வேண்டும். அதோடு, நோய்த்தடுப்பு முறைகளையும் சரியாகக் கையாளவேண்டும். குறிப்பாக, வேப்பம் பிண்ணாக்கு, பருத்தி விதைப்பிண்ணாக்கு, தேங்காய்ப்பிண்ணாக்கு இம்மூன்றையும் சமஅளவு எடுத்து, அவை மூழ்கும் அளவு தண்ணீரில் ஊறவைத்து, நான்கு நாட்கள் கலக்கிவிட வேண்டும். பிறகு இந்தக் கரைசலுடன் தலா ஒன்றரை கிலோ அசோஸ்பைரில்லம் மற்றும் சூடோமோனஸ் உயிர் உரங்களைக் கலந்து, தொடர்ந்து நான்கு நாட்கள் புளிக்க வைக்க வேண்டும். பிறகு, இதனுடன் 2 கிலோ ஹியூமிக் பவுடரைக் கலந்து, 20 நாட்களுக்கு ஒரு தடவை செடிக்கு முக்கால் லிட்டர் வீதம் நேரடியாக ஊற்ற வேண்டும். இப்படிச் செய்தால் பந்தல் கொடிகள் அபரிதமான வளர்ச்சியை எட்டுவதுடன், அதிகப் பூக்கள் பூத்து அனைத்தும் சேதாரமின்றி பிஞ்சு பிடிக்கும். பிண்ணாக்குக் கரைசல் மூலம், செடிகளின் வளர்ச்சிக்குத் தேவையான தழை, மணிச் சத்துக்கள் கிடைத்துவிடும்.

பீர்க்கன்  1 லட்சம்... புடலை  3 லட்சம்... பாகல்  4 லட்சம்...

பூச்சிகளுக்குப் பொறி!

காய் பருவத்தில் ஒருவித செங்குளவிகள், பந்தலில் தொங்கும் காய்களைச் சேதப்படுத்தும். 'இனக்கவர்ச்சிப் பொறி’களை பந்தலில் தொங்க விடுவதன் மூலம் இவற்றைக் கட்டுப்படுத்தலாம். இறக்குமதி செய்யப்பட்ட இனக்கவர்ச்சி மாத்திரைகளை இதற்கென வடிவமைக்கப்பட்ட சிறிய பிளாஸ்டிக் வாளிகளில் வைத்து... ஒரு ஏக்கருக்கு மூன்று வாளிகள் என்ற விகிதத்தில் தொங்கவிட வேண்டும். மாத்திரைகளின் வாசத்தில் ஈர்க்கப்படும் குளவிகள், வாளிக்குள் விழுந்துவிடும். இதேபோல், ஏக்கருக்கு மூன்று இடங்களில் 'விளக்குப்பொறி’களை தொங்கவிட்டால், தாய் அந்துப்பூச்சிகள் வந்து பொறியிலுள்ள சோப்பு மற்றும் எண்ணெய் கலந்த திரவத்தில் விழுந்து அழிந்துவிடும். தொடர்ந்து, 15 நாட்களுக்கு ஒரு முறை ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் ஜீவாமிர்தக் கரைசலை சொட்டுநீரில் கலந்து பாசனம் செய்தால், கொடிகள் ஊக்கமுடன் வளரும்.

அழுகிய பழங்களை ஒரு பாத்திரத்தில் இட்டு, 30 நாள் வைத்திருந்தால், அவை நொதித்து வரும். அந்தக் கரைசலை வடிகட்டி 10 லிட்டர் தண்ணீருக்கு 100 மில்லி வீதம் கலந்து கைத்தெளிப்பான் கொண்டு தெளித்தால், பூக்கள் உதிராது. கொடிகளைத் தாக்கும் இன்னொரு நோய் பூஞ்சண நோய். இதைக் கட்டுப்படுத்த... 10 லிட்டர் தண்ணீருக்கு

500 மில்லி புளித்தமோர், 100 கிராம் சூடோமோனஸ் என்ற விகிதத்தில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் 20 நாட்களுக்கு ஒரு முறை தெளிக்க வேண்டும்.

இஞ்சி-பூண்டுக் கரைசல்!

பயிர்களைப் பாதுகாத்திட பல எளிய முறைகளை நம் முன்னோர் கையாண்டுள்ளார்கள். இதில் முக்கியமானது, இஞ்சி-பூண்டுக் கரைசல். இது பயிர்களைத் தாக்கும் நோய்களைக் கட்டுப்படுத்துவதுடன், பூச்சிவிரட்டியாகவும் செயல்படுகிறது. இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் மூன்றையும் சம அளவில் எடுத்து நன்றாக நசுக்கி, ஒரு பாத்திரத்திலிட்டு... அவை மூழ்கும் அளவுக்கு மாட்டுச் சிறுநீரை ஊற்றி, இரண்டு நாட்கள் ஊற வைக்க வேண்டும். இக்கரைசலை வடிகட்டி

10 லிட்டர் தண்ணீரில் கலந்து, நோய் தென் படும்போதெல்லாம் அதிகாலை அல்லது மாலை வேளைகளில் கொடிகள் மீது தெளித்தால், பயிர்களுக்குத் தீமை செய்யும் அனைத்துப் பூச்சிகளும் கட்டுப்படும்'' என்ற பழனிச்சாமி,

''காய்கறி விவசாயம் என்றைக்கும் கைகொடுக்கும். பந்தல் விவசாயம் என்றைக்கும் பணம் கொடுக்கும்... அதற்கு கடின உழைப்பும், சரியான பராமரிப்பும் மிக அவசியம். என்னைப் பொருத்தவரை ஒரு ஏக்கர் பாகலில் சராசரியாக 4 லட்சம் ரூபாயும், புடலையில் 3 லட்சம் ரூபாயும், பீர்க்கனில் 1 லட்சம் ரூபாயும் ஆண்டு வருமானமாக எடுத்து வருகிறேன். தொழில்நுட்பம் தெரிந்து, பருவம் பார்த்து விதைத்து அர்ப்பணிப்புடன் விவசாயம் பார்த்தால், நிச்சயம் லாபம் கிடைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை'' என்றார் அழுத்தம் கொடுத்து!

நிகழ்வில் பேசப்பட்ட ஒருங்கிணைந்தப் பண்ணையம், மரம் வளர்ப்பு, இயற்கை வேளாண்மைச் சான்றிதழ் பெறும் விதம் போன்றவை

அடுத்தடுத்த இதழ்களில் இடம்பெறும்.

தொடர்புக்கு,
கேத்தனூர் பழனிச்சாமி,
செல்போன்: 99439-79791

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism