Published:Updated:

மண்புழு மன்னாரு

ஓவியம்: ஹரன்

மண்புழு மன்னாரு

ஓவியம்: ஹரன்

Published:Updated:

மாத்தி யோசி

ரோட்டுல ஆடு, மாடுகள ஏத்திக்கிட்டுப் போற காட்சியைப் பார்த்தா, கண்ணுல ரத்தம் வந்துடும்போல இருக்கு. குறைஞ்ச விலையில, கறவை மாடுங்க கிடைக்குதுனு ஒரு லாரியில இருபது மாடுகள ஏத்தி, பண்ணைக்குக் கொண்டு போற கொடுமையெல்லாம் சர்வசாதாரணமா நடக்குது. இப்படி ஆடு, மாடு, குதிரை மாதிரியான கால்நடைகளை ஓரிடத்துல இருந்து, இன்னோரிடத் துக்கு வாகனத்துல கொண்டு போறப்ப சில விதிமுறைகளைக் கடைப்புடிக்கணும். 'அதிகாரிங்ககிட்ட மாட்டிக்கிட்டா லஞ்சம் கொடுத்து தப்பிச்சுக்கலாம்'னு நினைக்காம, 'விதிமுறைங்களைக் கடைபிடிக்காட்டி நஷ்டம் நமக்குத்தான்'கிற எண்ணத்தோடயாவது கடைபிடிங்க... விலங்காபிமானத்தோட கடைபிடிங்க.

போக்குவரத்துக் கூலி மிச்சமாகும்னு ஒரே லாரியில அளவுக்கு மீறி மாடுகள ஏத்தினா... அதுங்களோட உடல்நலம் பாதிச்சி, ஒட்டுமொத்த முதலுக்கும் வேட்டு வெச்சுடும். அதனால, கறவையில இருக்கிற மாடுகளா இருந்தா, அதிகபட்சம் 6 மாடுகளதான் லாரியில ஏத்தணும். இதுக்கு மேல ஏத்திட்டுப் போனா, அரசாங்க அதிகாரிங்க அபராதம் போடலாம். ஆனா, நடைமுறையில இதை பின்பற்றுறது குறைவு. அதுக்காக இஷ்டம் போல ஏத்திட்டுப் போனா... மாடுங்களுக்குத்தான் பாதிப்பு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மாடுகள லாரியில ஏத்தறதுக்கு முன்ன, லாரி முழுக்க வைக்கோலைப் பரப்பிவிடுங்க. தென்னை நார்க்கழிவு கிடைச்சா, வண்டியில பரப்பிவிடலாம். வைக்கோலைவிட இது நல்லது. இதனால, மாடுங்களுக்கு மெத்தை செய்துகொடுத்த மாதிரி இருக்கும். கால்குளம்பு வழுக்காம இருக்கும். மாடுகளும் நிம்மதியா பயணம் பண்ணும்.

மாடுங்கள இன்ஜின் பகுதியை நோக்கி இருக்கிற மாதிரி நிற்க வைக்கணும். ஏன்னா, வண்டி ஓடறதுக்கு எதிர்ப்புறமா நிற்க வெச்சா,   மாடுங்களுக்குக் களைப்பு வந்துடும். ரயில்ல போறப்ப பயணம் செய்யுற திசைக்கு எதிர் திசையில இருக்கற இருக்கையில உட்கார்ந்தா, உடம்பு அசதியாகறத நீங்களேகூட உணர்ந் திருப்பீங்க.

மண்புழு மன்னாரு

எல்லா வயசு மாடுகளையும் ஓரே வண்டியில ஏத்தக் கூடாது. குறிப்பா... சினை மாட்டை, தனி வண்டியில வெச்சுதான் கூட்டிட்டுப் போகணும். சிலபகுதியில தொற்றுநோய் இருந்தா, குறைஞ்ச விலைக்கு மாடுகள விற்பனை செய்வாங்க. இந்த விஷயம் தெரியாம, நோய் தாக்குன மாட்டை வாங்கிடக் கூடாது. உஷாரா, கால்நடை மருத்துவரை வெச்சு, மாடுகளுக்கு நோய், நொடி ஏதாவது இருக்கானு பரிசோதனை செய்ங்க. பரிசோதனை செய்த அத்தாட்சி சீட்டையும் வாங்கிக்குங்க. ஏன்னா, மாவட்டம், மாநிலம்னு இடம்விட்டு இடம் கொண்டு போகும்போது, இந்த அத்தாட்சி சீட்டு பயன்படும்.

கறவை மாடுகள வாங்கும்போது, பத்து லிட்டர் கறக்கும், இருபது லிட்டர் கறக்கும்னு சொல்லுவாங்க. இதையெல்லாம் நம்பி, சட்டு புட்டுனு வாங்கிடாதீங்க. மாடு எவ்வளவு பால் கறக்குதுனு நாலுவேளை வரை கண்காணிச்சு, அதுக்குப் பிறகு விலைபேசி, வண்டியில ஏத்துங்க.

நம்மநாட்டு மாடுகள்லயே நல்ல பால் உற்பத்தி தர்ற மாடுங்களும் இருக்கு. இந்த மாடுங்க... நோய், நொடி அதிகமாக தாக்காமலும் இருக்கும். குறிப்பா வடமாநில மாடுங்க இப்படி கூடுதல் பால் கறக்கும். அதனால, அங்கிருந்து, கறவை மாடுகள வாங்கிட்டு வர்றதுக்கு விவசாயிங்க ஆர்வம் காட்டுறாங்க. லாரி மூலமாதான் பெரும்பாலும் அங்கிருந்து மாடுகள கொண்டு வர்றாங்க. லாரியைவிட, ரயில் மூலமா கொண்டு வந்தா செலவு மிச்சமாகுமேனு நினைக்கலாம். நடைமுறையில ஆயிரக்கணக் கான கிலோ மீட்டர் பயணத்துக்கு, ரயில்தான் உகந்தது. ஆனா, அதுல நடைமுறைச் சிக்கல் ஏராளம்.

குஜாரத்துல இருக்கிற குக்கிராமத்துல மாடு வாங்கி, அதை லாரியில ஏத்தி, ரயில் நிலையம் கொண்டு வந்து, அப்புறம், தமிழ்நாட்டுல இறக்கி, சொந்த ஊருக்குக் கொண்டு போறதுக்குள்ள 'சுண்டைக்காய் கால்பணம், சுமைக்கூலி முக்கால் பணம்’ கணக்குல வந்துடும். அதனால லாரி மூலமா கொண்டு வர்றது சுலபம். ஆனா, கவனமா கொண்டு வரணும். உதாரணத்துக்கு, உங்கள குஜராத் வரைக்கும் லாரியில போகச் சொன்னா... எப்படி இருக்கும்? ஏன்... பஸ்ல போகச் சொன்னாலே, 'அவ்வளவு தூரத்துக்கு பஸ்ஸுலயா?'னு பதறுவோம். அதுமாதிரிதானே மாடுகளுக்கும் இருக்கும். ஒரே அடியா, லாரியில ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்தா... மாடுகள் அலைக்கலைஞ்சி போயிடும். அதனால, எட்டு மணி நேர பயணத்துக்கு ஒரு முறை வண்டியை நிறுத்தி, நாலு மணி நேரம் ஓய்வு கொடுத்து, தீவனம், தண்ணி... கொடுத்து பாதுகாப்பா கொண்டுவரணும்.

முக்கியமா, 48 மணி நேரத்துக்கு ஒரு முறை மாடுகள இறக்கி, கொஞ்ச நேரம் மேய்ச்சலுக்கு விடணும். ஏன்னா, ஒரே இடத்துல நின்னுக்கிட்டு பயணம் செய்றதால, மாடுகளோட காலுக்கு போற ரத்த ஓட்டம் குறையும். அதனாலதான், காலாற மேய்ச்சலுக்கு விட்டோம்னா, அடுத்த பயணத்துக்கு மாடுங்க தயாராகிடும். குறிப்பா, வெயில் நேரத்துல பயணம் கூடாது. ஏன்னா மாடுங்க, வாடி, வதங்கிடும். மாடுகளுக்கு பாதுகாப்பும் இருக்காது. நமக்கு வருமானம் கொடுக்கப் போற காமதேனுவைக் கஷ்டப்படாம கொண்டுவர்றது நமக்குத்தானே நல்லது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism