Published:Updated:

முதல்வரின் தொகுதியில் பூச்சிக்கொல்லி பூதம்... கருகும் மல்லிகை... மருகும் விவசாயிகள்!

கு. ராமகிருஷ்ணன் படங்கள்: என். ஜி. மணிகண்டன்

முதல்வரின் தொகுதியில் பூச்சிக்கொல்லி பூதம்... கருகும் மல்லிகை... மருகும் விவசாயிகள்!

கு. ராமகிருஷ்ணன் படங்கள்: என். ஜி. மணிகண்டன்

Published:Updated:

பிரச்னை

விவசாயிகளின் அறியாமையையும் அப்பாவித்தனத்தையும் சாதகமாக்கிக் கொண்டு, 'கல்லா’ கட்டும் 'ரசாயனக் கொள்ளையர்'கள் பெருகிக் கொண்டே இருக்கின்றனர். இவர்களால், அப்பாவி விவசாயிகளுக்கு ஏற்படும் துயரங்கள், கொஞ்சநஞ்சமல்ல. இதற்கான சமீபத்திய உதாரணம்... திருச்சி, கரூர் மாவட்ட மல்லிகை விவசாயிகளின் சோகம்தான்!

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட போதாவூர், போசம்பட்டி, எட்டரை, இனாம்புலியூர், தாயனூர், கோப்பு உள்ளிட்ட கிராமங்கள் மற்றும் இவற்றுக்கு அருகிலிலுள்ள கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த கிராமங்களான சேப்பலாப்பட்டி, முதலைப்பட்டி, நெய்தலூர், சூரியனூர், குறிச்சிக் கவுண்டன்பட்டி, பாறைப்பட்டி என கிட்டத்தட்ட ஐம்பது கிராமங்களில்... இரண்டாயிரம் ஏக்கர் அளவில் மல்லிகை சாகுபடி நடக்கிறது. கிட்டத்தட்ட 10 ஆயிரம் விவசாயிகள் இதில் ஈடுபட்டுள்ளார்கள். பெரும்பாலானோர் 10 சென்ட், 20 சென்ட், அரை ஏக்கர், ஒரு ஏக்கர் எனச் சிறிய பரப்பில் சாகுபடி செய்து, வாழ்க்கையை நகர்த்தக்கூடிய ஏழை விவசாயிகள்தான். மல்லிகை மூலம் கிடைக்கும் சொற்ப வருமானத்தில், கணிசமான தொகையை ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மற்றும் ரசாயன பயிர் வளர்ச்சி ஊக்கிகளுக்கே செலவு செய்துவிடுவதால், பொருளாதார ரீதியாக, இவர்கள் பெரும் சவால்களைச் சந்தித்து வருகிறார்கள். இந்நிலையில், பேரிடியாக இந்தாண்டில், நோய் தாக்கி பாதி அளவுக்கு மகசூல் இழப்பு ஏற்பட்டிருப்பதால், மன உளைச்சலில் உறைந்திருக்கிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

முதல்வரின் தொகுதியில் பூச்சிக்கொல்லி பூதம்... கருகும் மல்லிகை... மருகும் விவசாயிகள்!

இதுபற்றிப் பேசிய முதலைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சதாசிவம், ''அரை ஏக்கர்ல மல்லிகை சாகுபடி செஞ்சுட்டு இருக்கேன். வழக்கமா, ஒரு அரும்புக்கு ஆறுல இருந்து ஒன்பது பூ வரை பூத்து எல்லாமே மலர்ந்து வரும். கொஞ்ச மாசமா, ஒரு அரும்புல ரெண்டு மூணு பூதான் மலர்ந்து வருது. மத்ததெல்லாம் உடனேயே சிகப்பு நிறத்துக்கு மாறி சொத்தைப் பூவாகிடுது. அதனால் ஏகப்பட்ட நஷ்டம்'' என்றார், நொந்து போனவராக.

பாளையத்தான்தோட்டம், வைரன் என்கிற ரஜினிகாந்த், ''ஒண்ணரை ஏக்கர்ல மல்லிகை சாகுபடி செஞ்சுட்டு இருக்கேன். பத்து, பதினைஞ்சு வருசத்துக்கு முன்னயெல்லாம், இதுமாதிரியான நோயெல்லாம் வந்ததேயில்லை. சில செடிகள்ல மட்டும் வரும். அதனால பாதிப்பு பெரிய அளவுல இருக்காது. இப்போ ரெண்டு, மூணு வருஷமா ஏப்ரல், மே, ஜூன், மாதங்கள்ல அதிகமா இந்த நோய் வருது. இந்த வருஷம் ரொம்ப கடுமையாவே தாக்கியிருக்கு. நோய் முத்துச்சுனா அரும்பு மட்டும் உருவாகி பூக்காமலே போயிடுது. விதம்விதமா ஏகப்பட்ட பூச்சிமருந்து, ரசாயன பயிர் வளர்ச்சிஊக்கி எல்லாம் அடிச்சுப் பாத்துட்டோம். ஆனாலும் பாதிப்புகளைக் கட்டுப்படுத்தவே முடியல'' என்றார், வேதனையுடன்.

முதல்வரின் தொகுதியில் பூச்சிக்கொல்லி பூதம்... கருகும் மல்லிகை... மருகும் விவசாயிகள்!

''ஒரு ஏக்கரிலிருக்கிற 2 ஆயிரம் மல்லிகைச் செடிகளுக்கு ஒரு மாதத்துக்கான உரச் செலவு 8,600 ரூபாய். பயிர் ஊக்கி, பூச்சிக்கொல்லிக்கான செலவு 4 ஆயிரம் ரூபாய். ஆக, மொத்தம் 12,600 ரூபாய். நடவு செய்த 3-ம் வருஷத்திலிருந்து ஒரு ஏக்கர்ல மாசம்தோறும் 200 கிலோவிலிருந்து 300 கிலோ மகசூல் கிடைக்கும். சராசரியா 250 கிலோ. கிலோவுக்கு 80 ரூபாய் வீதம், 20 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும். இதில் செலவு போக 7,400 ரூபாய் கையில் மிஞ்சும். இப்ப மாசத்துக்கு அதிகபட்சம் 80 கிலோ பூதான் தேறுது. கை பணத்தையே இழக்குற அளவுக்கு நஷ்டமாயிடுச்சு'' என்று சோகத்துடன் சொன்னார், இனாம்புலியூர், தங்கவேல்.

''சரி, இத்தனைப் பிரச்னை கள் இருக்கும்போது, இயற்கை முறை விவசாயத்துக்கு முயற்சிக்கலாமே...?'' என்கிற நம் கேள்விக்கு,

''தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் வந்து ஆய்வு செஞ்சு, 'வெப்பக்காத்து வீசுற சமயத்துல பூச்சிக்கொல்லி அதிகமா தெளிச்சதாலதான் பாதிப்பு’னு சொல்லிருக் காங்க. முன்னயெல்லாம், வீட்டுக்கு வீடு நிறைய மாடுகள் இருந்துச்சு. அதனால, அதிகமான தொழுவுரம் போட்டு... வேப்பம்பிண்ணாக்கு, கடலைப் பிண்ணாக்கு, கொட்டைப் பிண்ணாக்கு எல்லாம் தாராளமா போட்டு சாகுபடி செஞ்சோம். பூச்சிகள் தாக்கினா, வேப்பெண்ணெய்தான் தெளிப்போம். கோமியத்துல வேப்பிலை, அழுகிப்போன பழங்களை ஒரு வாரம் ஊறவெச்சு தெளிச்சாலும் பூச்சிகள் ஓடிடும். இப்போ மாடுகளை வளர்க்க முடியாம போயிடுச்சு. வேலையாட்களும் கிடைக்கிறதில்லை. அதனாலதான் சுலுவா கிடைக்கிற ரசாயனத்துக்கும், பூச்சிக்கொல்லிக்கும் மாறிட்டோம். எங்களை மாதிரியே, எங்க மண்ணும் ரசாயனத்துக்குப் பழகிடுச்சு'' என்று நிதர்சனம் சொன்னார் முதலைப்பட்டி,  .

முதல்வரின் தொகுதியில் பூச்சிக்கொல்லி பூதம்... கருகும் மல்லிகை... மருகும் விவசாயிகள்!

இதுபற்றி திருச்சி மாவட்ட தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் சந்திரசேகரிடம் கேட்டபோது, ''வீரியமான விஷத்தன்மையுடைய பூச்சிக்கொல்லிகளை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தியதுதான் பிரச்னை. 'பூச்சிக்கொல்லிகளை விருப்பத் துக்கு ஏற்ப, மனம் போன போக்கில் எல்லாம் பயன்படுத்தக் கூடாது’ என தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறோம். ஆனால், உரக் கடைக்காரர்கள் சொல்வதைத்தான் விவசாயிகள் அப்படியே கேட்கிறார்கள். எந்தப் பிரச்னைக்கு எந்த மருந்துகளைப் பயன்படுத்த வேண்டும். எவ்வளவு பயன் படுத்த வேண்டும் என்கிற ஆலோசனைகளை எங்களிடம் பெறுவதில்லை'' என்று வருத்தப்பட்டார்.

காவு வாங்கும் பூச்சிக்கொல்லிகள்!

முதல்வரின் தொகுதியில் பூச்சிக்கொல்லி பூதம்... கருகும் மல்லிகை... மருகும் விவசாயிகள்!

''பூச்சிக்கொல்லி நிறுவனங்கள் மற்றும் விற்பனையாளர்கள்தான் இதற்கெல்லாம் காரணம்'' என்று குற்றம்சாட்டுகிறார்... தோட்டக்கலைப் பயிர்கள் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் 'புலியூர்’ நாகராஜன்.

''இந்தப் பகுதிகளில், பூச்சிக்கொல்லிகளுக்கென்று பிரத்யேக கடைகள் நிறைய முளைத்துக்கொண்டே இருக்கின்றன. ஒவ்வொரு கிராமத்திலும்

5 கடைகளுக்குக் குறையாமல் உள்ளன. விதவிதமான பெயர்கள்ல பூச்சிக்கொல்லிகளை கையில் எடுத்துக்கொண்டு ஏகப்பட்ட விற்பனைப் பிரதிநிதிகள் சுற்றி வருகிறார்கள். ஏதேதோ ஆசை வார்த்தைகள் கூறி விவசாயிகளை ஏமாற்றுகிறார்கள். பலவிதமான பூச்சிக்கொல்லிகளை ஒன்றாகக் கலந்து தெளிக்கச் சொல்லி தவறாக வழிகாட்டுகிறார்கள். தவிர, இத்தகைய கடைகளில் விவசாயிகளுக்கு கடன் வசதியும் உண்டு. பத்தாயிரம் ரூபாய்க்கு பூச்சிக்கொல்லி வாங்கினால், ஒரு மாத வட்டி 600 ரூபாய். ஆனால், இதையெல்லாம் கணக்குப் பார்க்காமல் விருப்பம்போல வாங்கித் தெளிக்கிறார்கள். காலாவதியான பூச்சிக்கொல்லிகளைக்கூட விவசாயிகள் அடையாளம் காண்பதில்லை.

இயற்கை இடுபொருட்கள் மட்டுமே பயன்படுத்தி வந்தபோது, இந்தப் பகுதி விவசாயிகள் நிறைவாக வாழ்ந்தார்கள். இயற்கை முறை விவசாயத்தில் ஒரு தடவை மல்லிகைச் செடியை நட்டால், தொடர்ந்து பத்து, பதினைந்து ஆண்டுகளுக்கு பூ பூத்துக்கொண்டே இருக்கும். ஆனால், ரசாயனம் பயன்படுத்த ஆரம்பித்த பிறகு, 7 ஆண்டுகள்கூட செடிகள் தாக்குப் பிடிப்பதில்லை. இதெல்லாம் நன்கு தெரிந்திருந்தாலும் ரசாயனத்திலிருந்து விவசாயிகள் மாறுவதில்லை. வேலை சுலபம் என்கிற தப்பான எண்ணத்தாலும், சரியான ஆலோசனைகள் இல்லாததாலும் வீரியமான பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தி பெரும்பாதிப்புக்குள்ளாகி விட்டார்கள்.

இப்பகுதிகளில் வீடுதோறும் பலவிதமான வீரிய பூச்சிக்கொல்லிகள் இருப்பதால், தற்கொலைகளும் பெருகி வருகின்றன. சிறிய விஷயங்களுக்குக்கூட தற்கொலை முடிவெடுத்து விடுகிறார்கள். அரசாங்கம் இவ்விஷயத்தில் தனிக்கவனம் செலுத்தி பூச்சிக்கொல்லிகளுக்கு தடைவிதித்தால் மட்டும்தான் விவசாயிகள் நிம்மதியாக வாழ முடியும்.

இது, தமிழக முதல்வரின் தலையாய கடமை. அவருடைய ஸ்ரீரங்கம் தொகுதியில்தான் இந்தச் சோகம் நடந்து கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது'' என்று ஆதங்கப்பட்டார் 'புலியூர்’ நாகராஜன்

''விவசாயிகள் விவரமானவர்கள்''

'உரக்கடைக்காரர்கள், விவசாயிகளை ஏமாற்றி விற்பனை செய்கிறார்கள்' என்கிற குற்றச்சாட்டு பற்றி இப்பகுதியில் உரம், பூச்சிக்கொல்லி விற்பனை நிலையம் நடத்தி வரும் ராஜாவிடம் கேட்டபோது, ''விவசாயிகள் விவரமானவர்கள். பூச்சிக்கொல்லி டப்பாவில் உள்ள காலாவதியாகும் தேதியைப் படித்துப் பார்த்துத்தான் வாங்கிச் செல்வார்கள். எந்த ஒரு பூச்சிக்கொல்லியையும் அவர்களிடம் திணித்து, விற்பனை செய்வதில்லை. பெயர் சொல்லி கேட்கக்கூடியதைத்தான் எடுத்துத் தருகிறோம். புதிதாக, எந்த ஒரு பூச்சிக்கொல்லி அறிமுகம் ஆனாலும், உடனடியாக, விவசாயிகளுக்குத் தெரிந்துவிடுகிறது. விற்பனைப் பிரதிநிதிகள், விவசாயிகளை நேரடியாகச் சந்தித்து, பரீட்சார்த்த முறையில் பயன்படுத்திக் காட்டுகிறார்கள். 'அதிக விஷத்தன்மையுள்ள பூச்சிக்கொல்லிகளை செடிகளுக்கு அடிக்கக் கூடாது’ என நாங்கள் எடுத்துச் சொன்னாலும், விவசாயிகள் ஏற்பதில்லை. தெளித்த மறுநாளே பலன் தெரிய வேண்டும், என்பது அவர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. விஷத்தன்மையைப் பற்றியெல்லாம் அவர்கள் கவலைப்படுவதில்லை'' என்று சொன்னார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism