Published:Updated:

''மரங்கள் அல்ல... மகன்கள்!''

மூன்றே மாதத்தில் ஆறடி உயரம் இ. கார்த்திகேயன் படங்கள்: எல். ராஜேந்திரன்

முயற்சி

இந்தியாவில் 33% இருந்த காடுகள், இன்று 22% எனச் சுருங்கிவிட்டன. இழந்த 11% மரங்களை மீண்டும் அடையவேண்டுமென்றால், சுமார் 54 கோடி மரங்கள் நடவேண்டும். வனத்துறை மட்டும் இதனைச் செய்துவிட முடியாது, நாம் ஒவ்வொருவரும் செய்தாக வேண்டும். ஆனால், பலரும் ஆசை ஆசையாய் மரக்கன்றுகளை நட்டு, அது மரமாகும் வரை பராமரிக்க முடியாமல் விட்டு விடுகிறார்கள். இப்படிப்பட்டவர்களுக்காகவே, ஆறடி உயரம் வளர்ந்த மரங்களை மட்டுமே நடுவதைக் கடைபிடித்து வருகிறார், திருநெல்வேலி மாவட்டம், ராஜவல்லிபுரம், அர்ஜுனன்!

சாமியார் தோற்றத்திலிருக்கும் அர்ஜுனனை, தன்னுடைய வீட்டு மொட்டை மாடியில் மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்த வேளையில் சந்தித்தோம். அவர் நம்மிடம், ''எங்க அப்பா-அம்மாவுக்கு 13 குழந்தைகள். நான் பன்னிரெண்டாவது குழந்தை. எனக்கு ஆறு வயசு இருக்கும்போதே அப்பா இறந்துட்டாங்க, வீட்டுல ரொம்ப கஷ்டம். பத்தாவது வரைக்கும்தான் படிச்சேன். வருமானத்துக்காக கட்டில், சேர்களுக்கு வயர் பின்ற வேலை பாத்தேன். ஜங்ஷன் பஸ்டாண்டுல ஊக்கு, காது குடையுற பட்ஸ், ரேசன் கார்டு கவர்னு வித்தேன். இந்தக் காலகட்டத்துல எனக்கு கல்யாணமாகி ரெண்டு குழந்தைகள் ஆயிடுச்சு. நிரந்தரமா ஏதாவது தொழில் வேணும்னு முடிவு செஞ்சு, ரயில்வே ஸ்டேஷன்ல டீ, காபி விற்பனை செஞ்சேன். அல்வாவையும் கிண்டி வித்தேன். போஸ்டருக்கு ஒட்டுற பசையில சீனியையும், டால்டாவையும் சேர்த்த மாதிரிதான் அந்த அல்வா இருக்கும். ஒரு நாள்தான் அதை சாப்பிட முடியும். மறுநாள் சாப்பிட்டா வாந்தி வந்துடும். அவ்வளவு மோசமா இருக்கும்.

''மரங்கள் அல்ல... மகன்கள்!''

இந்தசமயத்துல திடீர்னு என் பையன் எதிர்பாராம இறந்துட்டான். 'தரமில்லாத அல்வாவை வித்து, மக்களை ஏமாத்தினதுக்குதான் இந்த தண்டனை'னு நினைச்சு புழுங்கிட்டு இருந்தேன். அப்போதான்,

80 வயசு பெரியவர் ஒருத்தர், 'உன் முன் ஜென்ம பாவத்துனாலதான் உன் பிள்ளை இறந்துடுச்சு. பணம் வரும் போகும். ஆனா, வாழ்க்கையில நிம்மதி நிலைக்கணும்னா... மரம் நடு, நல்லதுக்காக ஒரு மரம் வைக்க குழிதோண்டு. தண்ணீர் தன்னால வரும்’னு சொன்னாரு.  

அவர் சொன்ன அந்த வார்த்தை, எனக்கு நிம்மதியைத் தந்த மாதிரி இருந்துச்சு. முதல்ல ஒரு ஆலமரக்கன்றை எங்க வீட்டுக்குப் பக்கத் துல வெச்சு, தினமும் தண்ணீர் ஊத்தினேன். அப்படியே வருஷத்துக்கு 600 கன்னுனு ரெண்டு வருஷத்துல 1,200 கன்னுகளை ஊர் முழுக்க வெச்சேன். ஒரு கன்னு 20 ரூபாய்னு... மா, ஆல், அரசு, நாவல், தூங்குமூஞ்சி, வாதாங்கொட்டை(பாதாம்)னு வாங்கி நட்டேன். தினமும் சைக்கிள்ல தண்ணி எடுத்துட்டுப் போய் நெட்டுக்கும் ஊத்திட்டு வருவேன். ஆனா, ஊர்க்காரங்க ஒத்துழைப்பு கிடைக்கலை. 'நான் மரம் நட்ட இடங்களை சொந்தம் கொண்டாடிடுவேன்’னு நினைச்சு கன்னுகளைப் பிடுங்கிப் போட்டுடுவாங்க'' என்று சொல்லும் அர்ஜுனன், இதையடுத்து, கடந்த 2012-ம் ஆண்டு, 'செப்பறை வள பூமி பசுமை உலகம்' என்ற அறக்கட்டளையை நண்பர்களுடன் துவக்கியிருக்கிறார். அறக்கட்டளைக்கு நிறைய நிதி உதவிகளும் வர ஆரம்பிக்க, மரம் வைப்பதைத் தீவிரமாக்கி யிருக்கிறார்.

''மரங்கள் அல்ல... மகன்கள்!''

''யார் மரக்கன்னுகளைப் பிடுங்கி போட்டாலும் நான் கவலைப்படல. நூறு மரம் வெச்சா... அதுல அம்பது வளர்ந்தாகூட வெற்றிதான்னு என் வேலையைத் தொடர்ந்தேன். இப்படியே ரெண்டு வருஷம் உருண்ட நிலையில... மரக்கன்னு விலையைக் கூட்டிட்டாங்க. 'விலைக்கு வாங்கி நட்டுக்கிட்டிருந்தா நமக்கு கட்டாது’னு நினைச்சு நானே கன்னுகளை வளர்க்க ஆரம்பிச்சேன்.

'கன்னுகளை வாங்கி நட்டா ரொம்ப நாளைக்கு பராமரிக்க வேண்டியிருக்கும். அதனால மரமாவே உருவாக்கலாம்னு முயற்சி செஞ்சேன். அதுக்கு நல்ல பலன் கிடைச்சுது. எந்த மரம் தேவையோ, அந்த மரத்தில் நேரா இருக்குற கிளையில ஆறு அடி அளவுக்கு குச்சியை வெட்டி, இலைகளை உதிர்த்து வெச்சுக்கணும். சிமெண்ட் சாக்கில் முக் கால் பகுதிக்கு மண்ணையும் சாணத்தையும் கலந்து நிரப்பி, ரெண்டு நாள் தண்ணிவிட்டு... அந்தக் குச்சியை ஊன்றி, வெயில் அதிகம் படாத மாதிரி 14 நாள் வெச்சு தினமும் தண்ணி ஊத்தணும். அந்தக் குச்சியில அஞ்சாறு நாள்ல தளிர்விட்டு,

90 நாள்ல இலைகள் நிறைய வந்துடும். அதை அப்படியே மரமாவே நடவு செஞ்சுடலாம். ஆறடி உயரத்துக்கு நடவு செய்றதால ஆடு, மாடுகள் கிட்ட இருந்தும் காப்பாத்த முடியும். அப்படியும் மாடுகள் இலைகளைக் கடிக்க வந்தா, ஆட்டுப் புழுக்கை அல்லது மாட்டு சாணம் இதுல ஏதாச்சும் ஒண்ணை மரத்துல தடவி விட்டுடணும். இப்படி செஞ்சா ஆடு, மாடுகள் கடிக்க வராது'' என்ற அர்ஜூனன் நிறைவாக,

''தமிழகம் முழுவதும் இதுவரைக்கும் லட்சக்கணக்கான கன்னுகளை நட்டிருக்கேன். கன்னியாகுமரியிலிருந்து சென்னை வரைக்கும் 30 அடிக்கு ஒரு கன்னுனு வெச்சா கிட்டத்தட்ட 2 லட்சம் கன்னுகளை வைக்க லாம். அரசு அனுமதி கொடுத்தா, சென்னை யையும் குமரியையும் மரங்களால இணைச் சுடுவேன். தமிழகத்துல எங்க மரம் நடணும் னாலும் என்னைக் கூப்பிடலாம். இலவச மாவே நட்டுக் கொடுத்துடுவேன். ஏன்னா... அதெல்லாம் மரங்கள் அல்ல... என் மகன்கள்'' என்று விடைகொடுத்தார், அர்ஜுனன்.

தொடர்புக்கு,
அர்ஜுனன்,
செல்போன்: 97903-95796.

''நிழலுக்காக வளர்க்கலாம்!''

''மரங்கள் அல்ல... மகன்கள்!''

''கிளைகளைப் பதியன் போட்டு, எல்லா வகை மரங்களையுமே வளர்த்தெடுக்க முடியுமா... இவற்றால் எந்த அளவுக்குப் பயன் கிடைக்கும்?'' என்று தமிழக வனத் துறையின் முன்னாள் வன உதவிப்பாதுகாவலர் ரா. ராஜசேகரனிடம் கேட்டபோது, ''முருங்கை மரத்தின் கிளையை வெட்டி, அதன் நுனிப்பகுதியில் மாட்டு சாணத்தைத் தேய்த்து நட்டு வைப்பார்கள். சில நாட்களில் தளிர்விட்டு வளர ஆரம்பிக்கும். இந்த முறைக்கு 'போத்து நடவு’ என்று பெயர்.

முருங்கை, அரசு, ஆல், வாதநாராயணா, கிளரிசிடியா, பூவரசு என சில வகை மரங்களின் கிளைகளை இப்படி வெட்டி வைத்தால் எளிதாக வளரும். ஆனால், இது எல்லா மரங்களுக்கும் பொருந்தாது. அதுவும், மழைக் காலத்தைப் பொருத்துத்தான் போத்துகளின் வளர்ச்சி இருக்கும். போத்து களைப் பொறுத்த வரை அக்டோபர், நவம்பரில் நட்டால்தான் மழைப்பொழிவோடு சேர்ந்து வளர்ச்சி இருக்கும். வெயில் காலங்களில் வளர்ச்சி இருக்காது.

விதை போட்டு வளரும் கன்றுகளுக்கு, ஆணி வேர், பக்க வேர் என வேர்த் தொகுப்புதான் முதல் வளர ஆரம்பிக்கும். அதன் பிறகே அது கிளைத்து வரும். அதனால் விதை மூலம் வளரும் கன்றுகள்தான் உறுதியாக வளரும். 90 நாட்களில் போத்துகள் மூலமாக வளர்க்கப்படும் கன்றுகளில் இலைகள் நிறைய இருந்தாலும், வேர்கள் மண்ணில் ஊடுருவி வளர சில மாதங்கள் ஆகும். அதுவரை இந்த முறையில் வளர்க் கப்படும் மரங்களை மிகுந்த கவனத்தோடு பாதுகாக்க வேண்டும். மா, பலா, கொய்யா... போன்ற மரங்களுக்கு இந்த முறை அவ்வள வாகப் பொருந்தாது. நிழல் பெறவேண்டிய நோக்கத்தில் வளர்க்கப்படும் மரங்களுக்கு வேண்டுமானால், இந்த நுட்பத்தில் கன்றுகளை உற்பத்தி செய்யலாம்'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு