Published:Updated:

மீத்தேன் எமன்

கோபத்தில் கொதித்த மக்கள்... ஆடிப்போன அதிகாரிகள் ! கு. ராமகிருஷ்ணன் ஓவியம்: செந்தில், படங்கள்: கே. குணசீலன்

மீத்தேன் எமன்

கோபத்தில் கொதித்த மக்கள்... ஆடிப்போன அதிகாரிகள் ! கு. ராமகிருஷ்ணன் ஓவியம்: செந்தில், படங்கள்: கே. குணசீலன்

Published:Updated:

போராட்டம்

விளைநிலங்களின் ரத்த நாளங்களான வாய்க்கால்களையும், நீர்வரத்துப் பகுதிகளையும் வழிமறித்து நின்று மிரட்டும் வில்லன்களான பெட்ரோல்-கேஸ் கிணறுகளின் அடாவடித்தனம் பற்றி, கடந்த இதழில் பேசியிருந்தேன். இதன் தொடர்ச்சியாக இன்னும் பல்வேறு அவலங்களைப் பற்றியும் பேசலாம் என நினைத்திருந்த நேரத்தில்தான் பேரிடியாக வந்து தாக்கியிருக்கிறது... ஆந்திர மாநிலத்தில் நிகழ்ந்துள்ள கேஸ் குழாய் வெடிப்பு. அங்கு நிகழ்ந்துள்ள துயரச் சம்பவம், காவிரி டெல்டா மக்களையும்... தமிழகத்தின் மேற்கிலிருக்கும் கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய ஏழு மாவட்ட மக்களையும் மேலும் திகிலில் ஆழ்த்தியுள்ளது.

என்னைத் தொடர்பு கொண்ட வாசகர்கள் பலர், ''என்ன கொடுமை பாருங்க. ஒரு ஊரே பத்திக்கிட்டு எரியுது. நம்ம பகுதிகள்ல மீத்தேன் கேஸ் எடுத்தா, நமக்கும் அதே கதிதானே வரும்'' என படபடத்தார்கள். குறிப்பாக, திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில்... பெட்ரோல்-கேஸ் கிணறுகள், குழாய்கள், சேமிப்பு நிலையங்கள் அமைந்துள்ள கிராமங்களில் வசிக்கக்கூடிய மக்கள், நெஞ்சு பதைபதைக்க, ''ஆந்திராவுல நடந்த மாதிரி, இங்க எதுவும் நடந்துடக்கூடாதுனு ஆண்டவனை வேண்டிக்கிட்டு இருக்கோம்'' என்றார்கள், கவலையான குரலில்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மீத்தேன் எமன்

'பெட்ரோல்-கேஸ் கிணறுகள், குழாய்கள் மிகவும் பாதுகாப்பானவை. இவற்றால், மக்களுக்கு எந்த ஆபத்தும் நேர்ந்துவிடாது. மக்கள் அச்சப்படத் தேவையில்லை’ என்றெல்லாம் சத்தியம் செய்யாத குறையாக நீட்டிமுழக்கும் ஒ.என்.ஜி.சி-கெயில் அதிகாரிகள் மற்றும் ஆட்சியாளர்களின் முகத்தில் ஓங்கி அறைந்து கேள்வி எழுப்பியிருக்கிறது... ஆந்திர கேஸ் குழாய் வெடிப்பு!

கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் இருந்து கிருஷ்ணா மாவட்டத்துக்கு ஒ.என்.ஜி.சி- கெயில் நிறுவனங்களின் எரிவாயுக் குழாய் செல்கிறது. மாமிடிகுடுரு என்ற பகுதியில் உள்ள நகரம் என்ற ஊரில் கேஸ் குழாய்கள் மிகவும் பழுதடைந்த நிலையில் இருந்ததுதான்.... மிகப்பெரிய விபத்தை ஏற்படுத்தி, ஊரையே கபளீகரம் செய்திருக்கிறது.

மீத்தேன் எமன்

குழாய்களைப் பராமரிக்க வேண்டிய அதிகாரிகளின் அலட்சியமே இந்தப் பேராபத்தைக் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது. மீத்தேன் என்பதே ஒரு எமன்தான். இந்த எமனோடு விளையாட முடிவெடுத்துவிட்டவர்கள், குறைந்தபட்சம் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து வைத்திருப்பதுதானே முறை? ஆனால், ஒ.என்.ஜி.சி-கெயில் நிர்வாகங்கள் இதைத் துளிகூட செய்யவில்லை என்றே தெரிகிறது. குறைந்தபட்சம் இதனை உணரக்கூடிய உணர்வோ, விஞ்ஞானத் திறனோ இவர்களுக்கு இல்லை என்பதையே இச்சம்பவம் உறுதி செய்திருக்கிறது.

நகரம் எனும் அந்தப் பகுதி முழுக்க கேஸ் பரவி இருந்த நிலையில், மறுநாள் அதிகாலையில் டீக்கடைக்காரர் ஒருவர் அடுப்புக்கு நெருப்பு பற்ற வைத்துபோது, ஊரே தீக்காடாக மாறியிருக்கிறது. பதிக்கப்பட்டிருந்த கேஸ் குழாய்கள் வெடித்து சிதறி, பல நூறு அடி தூரத்துக்கு தீ பிழம்புகள், எழும்பிப் படர்ந்திருக்கின்றன. பதினைந்துக்கும் மேற்பட்டடோர் உடல் கருகி, உயிர் இழந்துள்ளார்கள்; கால்நடைகள் கருகியிருக்கின்றன; நூற்றுக்கணக்கான தென்னை மரங்களும், ஏராளமான வாழை மரங்களும், பல ஏக்கர் நெற்பயிர்களும் சாம்பலாகிவிட்டன; குடிசை வீடுகளும், கடைகளும் தீக்கிரையாயின.

மீத்தேன் எமன்

இந்தப் பேரவலங்களை, ஊடகங்களில் அதிர்ச்சியோடு அனைவரும் பார்த்துக் கொண்டிருந்த அதே தருணத்தில்... புதிய எண்ணெய் கிணறுகள் அமைப்பதற்கான கருத்துக் கேட்புக்கூட்டம் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்து கொண்டிருந்தது. நன்னிலம், கூத்தாநல்லூர், கோவில்களப்பால், அடியக்கமங்கலம் ஆகிய ஊர்களில் 20 இடங்களில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு எடுப்பதற்கான புதிய கிணறுகள் அமைப்பதற்காக, இந்தக் கூட்டம் நடத்தப்பட்டது. 'இதனால் எந்த பாதிப்பும் நிகழ்ந்துவிடாது’ என முழு பூசணிக்காயை அதிகாரிகள் சோற்றில் மறைக்க முயற்சித்தபோது... இந்தத் தொடரில் நான் ஏற்கெனவே பதிவு செய்துள்ள அவலங்களை ஆதாரங்களாக எடுத்துரைத்து, அதிகாரிகளின் வாயை அடைத்தார்கள், விவசாயிகள்.

பெட்ரோல்-கேஸ் குழாய் வெடிப்பில் சிக்கி, உயிருள்ள கரிக்கட்டையாக வாழ்ந்து கொண்டிருக்கும் உச்சிமேடு கிராமத்தைச் சேர்ந்த சேதுபதியை படம் பிடித்து, 'மீதேன் எமன்' தொடர் மூலமாக வெளிச்சத்துக்குக் கொண்டு வந்திருந்தேன். அந்த சேதுபதியை கருத்துக்கேட்பு கூட்டத்தில் கொண்டு வந்து நிறுத்தினார், மீத்தேன் எதிர்ப்புக் கூட்டமைப்பைச் சேர்ந்த வரதராஜன். சேதுபதியின் தோற்றத்தைக் கண்டு, அதிர்ச்சி அடைந்த மக்கள், உணர்ச்சிப் பிழம்பாக மாறி, ஒ.என்.ஜி.சி அதிகாரிகளுக்கு எதிராகவும், மாவட்ட ஆட்சியர் மதிவாணனுக்கு எதிராகவும் முழக்கிமிட்டு முற்றுகையிட்டார்கள். ஏதேனும் அசாம்பாவிதம் நிகழ்ந்துவிடும் என்கிற அச்சத்தில், கருத்துக்கேட்புக் கூட்டம் உடனடியாக ரத்து செய்யப்பட்டது.  

மீத்தேன் எமன்

ஆந்திராவில் கேஸ் குழாய் வெடிப்பினால் நிகழ்ந்துள்ள பயங்கரம்... டெல்டா மாவட்ட மக்களை மட்டுமல்லாமல் கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மக்களையும் கலக்கத்தில் ஆழ்த்தி உள்ளது. கேரளாவில் இருந்து மங்களூருக்கு தமிழகத்தைச் சேர்ந்த இந்த ஏழு மாவட்டங் கள் வழியாக, கேஸ் கொண்டு செல்வதற்காக, 3 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒரு திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்பகுதி விவசாயிகளின் கடும் எதிர்ப்பின் காரணமாக, விளைநிலங்களில் குழாய் பதிக்க தடை கோரி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந் துள்ளது, தமிழக அரசு. இந்நிலையில் ஆந்திர சம்பவம், இந்த ஏழு மாவட்ட மக்களை மேலும் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் சாதகமான தீர்ப்பு வரவில்லை என்றால், பெரும் அபாயத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்கிற கவலை அவர்களை ஆட்டிப் படைக்க ஆரம்பித்துள்ளது.

'ஆந்திராவில் நிகழ்ந்தது போல், இங்கு எதுவும் நிகழாது என்பதற்கு என்ன உத்தர வாதம் இருக்கிறது?’ என தமிழக மக்கள் எழுப்பும் கேள்விகளில் உள்ள நியாயத்தை ஆட்சியாளர்கள் இனியாவது புரிந்து கொள்வார்களா?

ஆட்சியாளர்கள் புரிந்து கொள்வது இருக் கட்டும்... தங்களின் ஓட்டு வங்கியாக இந்த மக்களை காலம்தோறும் அடிமைப்படுத்தி வைத்திருக்கும் அரசியல் கட்சிகள்கூட இந்த விஷயத்தில் மக்களுக்கு எதிராக இருப்பதுதான் கொடுமையிலும் கொடுமை. இதைவிடக் கொடுமை தன்னார்வ இயக்கங்களும்கூட புரிந்து கொள்ளவில்லை.

 - பாசக்கயிறு நீளும்...

விழிப்பு உணர்வு ஊட்டிய பசுமை!

திருவாரூரில் நடந்த கருத்துக்கேட்புக் கூட்டத்தில், கூடங்குளம் அணு உலைக்கு எதிராகப் போராடிவரும் முகிலன் பங் கேற்றார். இதைப் பற்றி நம்மிடம் பேசிய முகிலன், ''மீத்தேன் பற்றிய விழிப்பு உணர்வு டெல்டா மாவட்ட மக்களிடம் அதிகரித்துள்ளது. கருத்துக்கேட்புக் கூட்டத் தில் கலந்துகொண்ட பலர், பசுமை விக டனில் வெளிவரும் கட்டுரை தொகுப்பை வைத்திருந்தார்கள். 'கருத்துக்கேட்புக் கூட்டம் முறையாக நடக்கவில்லை. திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிற பகுதியின் அனைத்துப் பஞ்சாயத்துத் தலைவர்களையும் கூட்டத்துக்கு அழைத் திருக்க வேண்டும். ஆனால், இந்த நடைமுறைகள் எதுவுமே பின்பற்றப்படவில்லை' என நியாயங்களை எடுத்து வைத்தோம். இதை ஏற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர், தேதி குறிப்பிடாமல் கூட்டத்தை ஒத்திவைத்திருக்கிறார்'' என்று சொன்னார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism