Published:Updated:

மூலிகை வனம் - வீட்டுக்கொரு வைத்தியர்...

மாயம் செய்யும் கீழாநெல்லி... இது, மஞ்சள் காமாலைக்கு மட்டுமல்ல! ரா.கு. கனல் அரசு படங்கள்: வீ. சக்தி அருணகிரி

மூலிகை வனம் - வீட்டுக்கொரு வைத்தியர்...

மாயம் செய்யும் கீழாநெல்லி... இது, மஞ்சள் காமாலைக்கு மட்டுமல்ல! ரா.கு. கனல் அரசு படங்கள்: வீ. சக்தி அருணகிரி

Published:Updated:

தீர்வு

 மனிதனுக்கு ஏற்படும் பிணிகளை நீக்கும் அருமருந்துகளான மூலிகைகள், இயற்கையின் ஏற்பாட்டில், தேவையுள்ள பகுதிகளில், தேவையான மூலிகை என்கிற வகையில் தானாகவே விளைந்து கொண்டிருக்கின்றன. இதையெல்லாம் சரியாகக் கண்டுபிடித்து உண்டு, தங்களுக்கு ஏற்படும் நோய்களைத் தீர்த்துக் கொள்ளும் வித்தையை, ஒவ்வொரு உயிரினத்துக்கும் இயற்கையே கடத்தி வைத்திருக்கிறது. ஆனால், வியாபார நோக்கோடு, இதையெல்லாம் திட்டமிட்டு மறக்கடித்து விட்டனர்... கடந்த இருபது, முப்பது ஆண்டுகளில்..! அத்தகைய மூலிகைகளை மீண்டும் கையில் எடுக்கவும்... அவை பற்றிய புரிதலை உண்டாக்கவுமே...'மூலிகை வனம்’ எனும் இப்பகுதி இங்கே விரிகிறது.

பட்டிதொட்டி மட்டுமல்லாமல், சென்னை போன்ற பெருநகரங்களிலும் தெருக்களில், சாலையோரங்களில் எளிதாகக் கிடைக்கும் மூலிகைகள் ஏராளம் உள்ளன. அவற்றில் முதன்மையானது கீழாநெல்லி. அம்மா மதுக்கடையில் (டாஸ்மாக்) மதுபானம் அருந்தி, கல்லீரல் கெட்டுபோனால், அம்மா மருந்தகங்களில் மானிய விலையில் மருந்துகள் கிடைக்கும். ஆனால், கல்லீரல் பிரச்னைகளை எளிதாகத் தீர்க்கும் கீழாநெல்லி போன்ற மூலிகை மருந்துகள்...? இவையெல்லாம் இலவசமாகவே கிடைக்குமாறு வீதியெங்கும் விளைய வைத்திருக்கிறது இயற்கை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கீழாநெல்லி என்றாலே மஞ்சள் காமாலையைக் குணப்படுத்தும் மூலிகை என்பது பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்கும். ஆனால், மஞ்சள் காமாலையுடன் நின்று விடவில்லை இதன் சேவை. கிட்டத்தட்ட 2,000 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்பட்டு வரும் கீழாநெல்லியை இன்னமும் ஆய்வு செய்துகொண்டே இருக்கிறார்கள் விஞ்ஞானிகள். பைல் நிரூலின், நார் செக்குரினின், நிர் பைலின், தேலிக் அமிலம், எல்லாஜிக் அமிலம், ஹேலிக் அமிலம் போன்ற 50-க்கும் மேற்பட்ட மூலக்கூறுகள் இதில் இருப்பதைப் பார்த்து ஆச்சர்யத்தில் வாயடைத்துக் கிடக்கிறார்கள். சாதாரண களைச்செடியாக குப்பையில் வளரும் ஒரு சின்னஞ்சிறிய செடிக்குள், இத்தனை மருத்துவ குணங்களா எனக் கொண்டாடுகிறது உலகம். ஆனால், 'உள்ளூர் மாடு விலை போகாது’ என்பதுபோல அருகிலிருக்கும் அற்புதத்தை நாம் அவ்வளவாகக் கண்டுகொள்வதே இல்லை.

இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் வளரும் இதன் இலைகளின் அடிக்காம்பில் வரிசையாக காய்கள் காய்ப்பதால், கீழ்க்காய்நெல்லி என அழைக்கப்பட்டது. பேச்சு வழக்கில் கீழாநெல்லி, கீழ்வாய் நெல்லி, கீட்கா நெல்லி என அழைக்கப்படும் கீழாநெல்லியின் மருத்துவக் குணங்களைக் கேட்டால் மலைத்துப் போவீர்கள்.

மூலிகை வனம் - வீட்டுக்கொரு வைத்தியர்...

கீழா நெல்லிக் குணந்தான் கேளாய் மது மேகந்
தாழாக்கா மாலைகளைச் சண்ணுந்தாதேனழலுந்
தொக்கினனலுந் தொலைக்குந் தொன்மேகம் போக்கிவிடுத்
தக்கவிர ணங்கெடுக்குந் தான் - என்கிறது குணபாடம்.

கீழாநெல்லி, கண் சம்பந்தமான நோய்கள், சர்க்கரை வியாதி, நாள்பட்ட மேகப்புண் ஆகியவற்றைப் போக்கும் என்பதுதான் இப்பாடலின் சுருக்கமான பொருள். கீழாநெல்லி இலையுடன் சிறிது மஞ்சளைச் சேர்த்து அரைத்து உடலில் தேய்த்து, பதினைந்து நிமிடங்கள் ஊறவிட்டு, குளித்தால்... தோல் நோய்கள் குணமாகும். கீழாநெல்லிச் செடியை நன்றாக அரைத்து சொறி, சிரங்கு, படைகளில் பற்றுப்போட்டால் உடனே குணமாகும். கீழாநெல்லிச் செடியை நன்றாக மென்று பல்துலக்கி வந்தால் பல்வலி குணமாகும். மேலும் செடியை நன்றாக மென்று ஈறுகளில் சாறு நன்றாகப் படிய வைத்திருந்தால்... ஈறு நோய்கள் குணமாகும்.

கீழாநெல்லி செடியுடன் கரிசலாங்கண்ணி இலையை சமஅளவு எடுத்து பால்விட்டு அரைத்து, நெல்லிக்காய் அளவு பாலுடன் காலை, மாலை இருவேளை உட்கொண்டு வந்தால், ரத்தசோகை, ரத்தக்குறைவு நோய் நீங்கும். கல்லீரல் தொடர்பான நோய்களும் குணமாகும். கல்லீரல் பிரச்னைக்கு லட்சங்களில் பணத்தைச் செலவழித்து பெறும் வைத்தியத்தை, இலவசமாகவேத் தருகிறது கீழாநெல்லி. இன்றைக்கு மனிதர்களுக்குள்ள மற்றொரு பெரிய நோயான நீரிழிவு நோய்க்கும் தீர்வைச் சொல்கிறது இந்த சிறியச் செடி. இதை அரைத்து, பாலுடன் கலந்து தொடர்ந்து உட்கொண்டு வந்தால், ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும். இதுமட்டுமா குடல்புண், தொண்டை நோய்கள், வயிற்றுப் பிரச்னைகள், அதிக உஷ்ணம், கண்நோய்கள், மாதவிடாய்ப் பிரச்னைகள், பசியின்மை, தீராத அழுகிய புண்கள், வீக்கம் என எத்தனையோ பிரச்னைகளைத் தீர்த்து வைக்கிறது கீழாநெல்லி.

கீழாநெல்லி பொடி, நெல்லிக்காய் பொடி, கரிசலாங்கண்ணி பொடி ஆகிய மூன்றையும் சமஅளவு எடுத்து. தேனில் குழைத்து உண்டு வந்தால்... அடிக்கடி வரும் சளித்தொல்லை குறையும், ரத்த சோகை மாறும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

கீழாநெல்லி புற்றுநோய்க்கு எதிராகச் செயல்படுவதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மஞ்சள் காமாலை நோய்க்கு கீழாநெல்லியைவிட கைகண்ட மருந்து இல்லை என்றே சொல்லலாம். இதை ஆங்கில மருத்துவர்களும் ஒப்புக்கொள்கிறார்கள். நவீன மருத்துவ வசதிகள் இல்லாத அந்தக் காலத்திலேயே கண்களில் உள்ள வெண்கரு, மஞ்சளாக மாறுவதை வைத்து மஞ்சள் காமாலையைக் கண்டுபிடித்த முன்னோர்கள், கீழாநெல்லியையும் ஆட்டுப்பாலையும் மட்டுமே கொண்டு, அந்தக் காலத்தில் உயிர்க்கொல்லி நோயான மஞ்சள் காமாலையில் இருந்து காத்துக்கொண்டார்கள்.

கீழாநெல்லிச் செடி, கரிசலாங்கண்ணி இலை, தும்பை இலை, சீரகம், பொன்னாங்கண்ணி ஆகியவற்றை சமஅளவு எடுத்து, காய்ச்சிய பசும்பால்விட்டு அரைத்து, கோலிக்குண்டு அளவு காலை, மாலை இருவேளையும் பாலுடன் குடிக்கக் கொடுத்தால் ஏழு நாட்களில் மஞ்சள் காமாலை குணமாகும். இரண்டு கீழாநெல்லிச் செடி, நான்கு ஏலக்காய் அரிசி, ஒரு காசு எடை மஞ்சள்தூள், ஒரு சின்ன வெங்காயம் ஆகியவற்றை பால்விட்டு அரைத்து... காலை, மாலை இருவேளையும் பாலுடன் குடிக்கக் கொடுத்தாலும் மஞ்சள் காமாலை குணமாகும். அதே நேரத்தில் கிராமப்புறங்களில் இன்றைக்கும் கீழாநெல்லிச் செடியுடன், வெள்ளாட்டு பால்விட்டு அரைத்து, காலையில் வெறும்வயிற்றில் நெல்லிக்காய் அளவு, ஆட்டுப்பாலுடன் உட்கொண்டு, மஞ்சள் காமாலையில் இருந்து குணமாகிறார்கள்.

இந்த மூன்று முறைகளில் எந்த முறை உங்களுக்கு எளிதாக இருக்கிறதோ அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம். கீழாநெல்லி பொடி, சூரணம் ஆகியவை சித்தமருந்து கடைகளிலும், காதி கடைகளிலும் கிடைக் கின்றன.

மனிதகுலம் நோயின்றி வாழ்வதற்காகவே நம் காலடியில் கிடக்கும் கீழாநெல்லிக்கு இனியாவது மரியாதை செய்வோம். அனைத்து வீடுகளிலும் வளர்ப்போம்.

- வலம் வருவோம்...

பித்தப்பைக் கல்லைத் தடுக்கும்!

மூலிகை வனம் - வீட்டுக்கொரு வைத்தியர்...

கீழாநெல்லியின் மருத்துவக் குணங்கள் பற்றிப் பேசும் தேனி மாவட்டம் உத்தமப்பாளையம், சித்தமருத்துவர் அமுதா, ''இதன் தாவரவியல் பெயர் 'ஃபிலாந்தஸ் அம்ரஸ்’ அல்லது 'நிரூரி’ (Phyllanthus amrus or Niruri). கீழா நெல்லியைப் பொறுத்தவரை மஞ்சள் காமாலைக்கான மருந்துனுதான் பொதுவா நினைக்கிறாங்க. ஆனா, இது அருமையான கிருமிநாசினி. இந்த இலைகளைக் காய வெச்சு தயாரிச்ச கஷாயத்தை புண்களை கழுவப் பயன்படுத்தலாம். இது துவர்ப்பு சுவைகொண்ட மூலிகைங்கிறதால, பித்தப்பையில கல் உற்பத்தி ஆகிறதைத் தடுக்கும். கல்லீரல் தொடர்பான பிரச்னைகளுக்கும் கீழாநெல்லி நல்ல மருந்து'' என்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism