Published:Updated:

பி.டி.பருத்திக்கு டாட்டா,

இயற்கை முறையிலேயே இணையற்ற விளைச்சல் !பிரமிக்க வைக்கும் பெண் விவசாயி

பிரீமியம் ஸ்டோரி

ஜி.பழனிச்சாமி

 பளிச்... பளிச்...

குறைந்த இடுபொருள் செலவு. 
கட்டுப்படியான விலை.
ஒப்பந்த சாகுபடி.

ஒரு காலத்தில் பணப்பயிராக விளங்கிய பருத்தி, இன்று பிணப் பயிராக மாறி, அதைச் சாகுபடி செய்யும் விவசாயிகள் பலரின் உயிரைக் குடித்து வருகிறது. விலை உயர்ந்த பி.டி. விதைகள், ரசாயனப் பூச்சிக்கொல்லிகள் மற்றும் உரம் உள்ளிட்ட பயிர் பாதுகாப்புக்கானச் செலவுகள் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதேசமயத்தில் குறைவான விளைச்சல், கட்டுபடியாகாத விலை... போன்ற காரணங்களால் கடன்சுமை அதிகரித்து தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டு வருகிறார்கள், இந்தியப் பருத்தி விவசாயிகள்.

பி.டி.பருத்திக்கு டாட்டா,
##~##

இத்தகையச் சூழலில் பருத்தி விவசாயம் என்பதே தமிழகத்தில் மெள்ள பட்டுப் போய்க் கொண்டிருக்கிறது. இந்நிலையில்... ''உள்நாட்டுரக பருத்தியை இயற்கை முறையில் சாகுபடி செய்து வரும் எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை’' என்று உற்சாகம் பொங்கச் சொல்கிறார்கள் ஈரோடு மாவட்டம், பவானி வட்டம், வெள்ளித்திருப்பூர் பகுதியைச் சேர்ந்த பருத்தி விவசாயிகள் பலரும்!

இந்த விஷயத்தை உற்சாகம் பொங்க நம்மிடம் பகிர்ந்து கொண்ட முன்னோடி இயற்கை விவசாயியான கலைவாணியை, நேரில் சந்தித்தோம். பெண்கள் சிலருடன் சேர்ந்து, வெடித்தக் காய்களில் இருந்து லாவகமாக பருத்தியை எடுத்தபடியே நம்மிடம் பேசினார் கலைவாணி.

சாகுபடியைச் சாகடித்த இடுபொருள் செலவு!

''எனக்கு ஆறு ஏக்கர் பூமி இருக்கு. நல்ல வளமான செம்மண்பூமி. கிணத்துப் பாசனம் இருக்கறதால பிரச்னையில்ல. எங்க பகுதியில பருத்தி வெள்ளாமைதான் முக்கிய வெள்ளாமை. 'எம்.சி.யூ-5’ங்கற நாட்டுரகப் பருத்தியைத்தான் பெரும்பாலும் சாகுபடி செய்வாங்க.

அஞ்சு வருஷத்துக்கு முன்ன வரைக்கும் முழுக்க ரசாயன முறையிலதான் விவசாயம் நடந்திச்சு. அசுவிணி, இலைப்பேன், சாறு உறிஞ்சும் பூச்சி, காய்ப்புழு, வேர்ப்புழுனு விதைப்புல இருந்து மகசூல் வரைக்கும் ஏதாவது ஒரு தாக்குதல் இருந்துட்டே இருக்கும். லிட்டர் லிட்டரா பூச்சிக்கொல்லியைத் தெளிச்சிட்டே இருக்கணும். ஆரம்ப காலத்தில 15 நாளைக்கு ஒரு மருந்துங்கிற கணக்குல அடிச்சுட்டிருந்தோம். பிறகு, புதுப்புதுப் பூச்சியா புறப்பட்டு வர ஆரம்பிக்கவே, வாரம் ஒரு தடவைனு மருந்து அடிக்க ஆரம்பிச்சுட்டோம். இதனால உற்பத்திச் செலவு கூடுச்சே தவிர, பூச்சிகளைக் கட்டுப்படுத்த முடியல. விளைச்சலும் குறைஞ்சுக்கிட்டே போக... பருத்தி விவசாயத்தையே பலரும் கை விட்டு... மஞ்சள், மக்காச்சோளம், நிலக்கடலைனு மாறிகிட்டாங்க. ஒருகட்டத்துல 'இந்தப் பகுதியில பருத்தியே இல்லை’னு சொல்ற அளவுக்கு ஆகிப்போச்சு'' என்று கவலையோடு சொன்ன கலைவாணி, தொடர்ந்தார்.

மனதை மாற்றிய ஒப்பந்த சாகுபடி!

''அந்த நேரத்துலதான் 'மைராடா’ங்கிற தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவங்க, எங்க பகுதிக்கு வந்து இயற்கை வழி விவசாயம் செய்றதுக்கான பயிற்சி கொடுத்தாங்க. நானும் அதுல கலந்துகிட்டேன். பிறகு, நம்மாழ்வார் ஐயா, சுபாஷ் பாலேக்கர் ஐயா... இவங்களோட பயிற்சி வகுப்புகள்லயும் கலந்துகிட்டு பல விஷயங்களைத் தெரிஞ்சுகிட்டேன். என்னதான் இயற்கை விவசாயப் பயிற்சிகளை எடுத்திருந்தாலும் தக்காளி, மஞ்சள், கடலை மாதிரியான பயிர்கள்லதான் அதை செயல்படுத்தினேன். பருத்தி விவசாயம் பக்கம் எம் மனசு போகல.

பி.டி.பருத்திக்கு டாட்டா,

இந்த நிலமையில, கோயம்புத்தூர்ல இருக்கற தனியார் நூல் மில்லுக்காரங்க எங்கப் பகுதிக்கு வந்து, 'இயற்கை முறையில பருத்தியை விளைய வெச்சுக் கொடுத்தா... கட்டுப்படியாகுற விலையைக் கொடுத்து நாங்களே எடுத்துக்குறோம்’னு ஒப்பந்த சாகுபடிக்கு ஊக்கப்படுத்தினாங்க. உடனடியா ஒரு ஏக்கர்ல இயற்கைப் பருத்திச் சாகுபடியைத் தொடங்கினேன். கூடவே, இன்னும் சிலரும் ஆரம்பிச்சாங்க. மகசூலை மகிழ்ச்சியோட வந்து வாங்கிக்கிட்ட மில்லுக்காரங்க... சொன்னபடியே கட்டுப்படியான விலையைக் கொடுத்தாங்க. அதைப் பார்த்துட்டு இந்தப் பகுதியில இயற்கைப் பருத்தி சாகுபடி அதிகமா நடக்க ஆரம்பிச்சுடுச்சு.

காய்ப்புழுத் தாக்குதல்தான் பெரிய சவாலே! அதைச் சமாளிக்கவே முடியாதுனுதான் பலரும் பருத்தி விவசாயத்தைக் கைவிட்டாங்க. அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கிட்டு பி.டி. விதைகள் உள்ள புகுந்துடுச்சு. ஆனா, அந்த பி.டி-யும்கூட காய்ப்புழுத் தாக்குதலுக்கு பெரிய தீர்வா இல்லைங்கறது  இப்ப உண்மையாயிடுச்சு. நாங்க இயற்கை வழி விவசாயத்துக்கு மாறின பிறகு காய்ப்புழுத் தாக்குதல் பெருசா இல்லை. ஒண்ணு, ரெண்டு வந்தாலும்... கட்டுப்படுத்தறதுக்குண்டான வைத்தியம்... எங்க கையிலயே இருக்கு. '' பேச்சைச் சற்று நிறுத்திய கலைவாணி, நிழலில் கொட்டியிருந்த பருத்திக் குவியலைத் தரம் பிரித்துக் கொண்டே சாகுபடிக் குறிப்பைச் சொல்லத் தொடங்கினார்.

அது அப்படியே பாடமாக இங்கே...

அடியுரமாக பசுந்தாள் உரம்!

''எம்.சி.யூ.-5 ரகப் பருத்திக்கு சித்திரைப் பட்டம் ஏற்றது. இதன் வயது 130 நாட்கள். இது இறவையில் சாகுபடி செய்யக்கூடிய ரகம். சாகுபடி நிலத்தில் 2 டன் தொழுவுரம், 500 கிலோ மண்புழு உரம் ஆகியவற்றை கொட்டி நிலத்தை சமன்படுத்தி இரண்டு உழவு செய்ய வேண்டும்.

பிறகு, கம்பு, சோளம், ராகி, எள், தக்கைப்பூண்டு, சணப்பு ஆகிய விதைகளை மொத்தமாக 20 கிலோ அளவுக்கு எடுத்து விதைத்து, தண்ணீர் பாய்ச்ச வேண்டும். 45-ம் நாள் இவை நன்கு வளர்ந்திருக்கும். அவற்றை ரோட்டோவேட்டர் மூலம் மடக்கி உழவு செய்ய வேண்டும்.

ஏக்கருக்கு 3 கிலோ விதை!

பி.டி.பருத்திக்கு டாட்டா,

பிறகு, மண்கட்டிகள் உடையும்படி கலப்பையால் உழவு செய்து, டிராக்டர் மூலம் பார் பாத்தி அமைத்து ஒன்றரை அடி இடைவெளியில் இரண்டு பருத்தி விதைகளை விதைக்க வேண்டும். ஏக்கருக்கு மூன்று கிலோ விதைகள் தேவைப்படும். 10-ம் நாள் துளிர்க்கத் தொடங்கும். மண்ணின் தன்மையைப் பொறுத்து தண்ணீர் பாய்ச்ச வேண்டும். 15 நாட்களுக்கு ஒரு முறை 200 லிட்டர் ஜீவாமிர்தக் கரைசலைப் பாசன நீரில் கலந்துவிட வேண்டும்.

20-ம் நாளில் களை எடுத்து, இரண்டு லிட்டர் பஞ்சகவ்யாவை 100 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும். பிறகு, 50 கிலோ கடலைப் பிண்ணாக்கைத் தூளாக்கி  செடிகளின் தூரில் வைத்து தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.

புழுக்களை அழிக்கும் பிண்ணாக்கு!

40-ம் நாளில் இரண்டாவது களை எடுத்து, 50 கிலோ வேப்பம் பிண்ணாக்கைத் தூளாக்கி செடிகளின் தூரில் வைத்து தண்ணீர் பாய்ச்ச வேண்டும். வேர்களைத் தாக்கி சேதப்படுத்தும் வேர்புழுக்கள், தண்டுத் துளைப்பான், காய்களைத் தின்னும் எலி, அணில் போன்றவற்றை இது கட்டுப்படுத்தி விடும். 60-ம் நாளில் மூன்றாவது முறையாகக் களை எடுக்க வேண்டும். அதற்குப் பிறகு களை எடுக்கத் தேவையில்லை. இந்த சமயத்தில் செடி முழுதும் காய்கள் காய்த்து விடும். அப்போதுதான் காய்ப்புழுக்கள் தாக்க வாய்ப்பிருக்கிறது.

ஆமணக்குக் கரைசல் கவர்ச்சிப் பொறி, ஆமணக்கு அரண், கற்றாழை நார்க்கரைசல் போன்றவற்றின் மூலம் இவற்றைக் கட்டுப்படுத்தலாம். ஒட்டுண்ணிகள், இனக்கவர்ச்சிப் பொறிகளைப் பயன்படுத்தியும் காய்ப்புழுக்களைக் கட்டுப்படுத்தலாம். இவற்றைத் தவிர வேறு பராமரிப்போ... மேலுரங்களோ தேவையே இல்லை.’ சாகுபடிப் பாடத்தை முடித்த கலைவாணி தொடர்ந்து, 'ஏக்கருக்கு சராசரியா 15 குவிண்டால் வரைக்கும் மகசூல் கிடைக்கும். ரசாயன விவசாயத்திலும் இதே அளவு மகசூல் கிடைக்கும். ஆனா... இயற்கை முறையில பண்ணும்போது ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல லாபம் கிடைக்கும். இப்படி இயற்கைக்கு மிஞ்சி இணையற்ற லாபம் தர்றதுக்கு பி.டி-யால முடியுமா?'' என்று கேள்வி எழுப்பியவர், ரசாயனம் மற்றும் இயற்கை முறைகளுக்கான செலவு-வரவு கணக்கைப் பட்டியலிட்டு கையில் கொடுத்தார் மகிழ்ச்சித் துள்ளலோடு!

ஆமணக்குக் கரைசல் கவர்ச்சிப் பொறி!

 

தேவையான பொருட்கள்: ஆமணக்கு விதை-500 கிராம், மண்சட்டி-1, மண்பானை-6, தண்ணீர் - தேவையான அளவு.

ஆமணக்கு விதையை நன்றாக இடித்து, மண்சட்டியில் இட்டு, இரண்டு லிட்டர் தண்ணீர் விடவேண்டும். ஒரு வாரம் வரை அப்படியே நொதிக்க வைக்க வேண்டும். பிறகு, இந்தக் கரைசலை

6 மண்பானைகளில் பிரித்து நிரப்பி, வயலுக்குள் ஆங்காங்கே வைத்து விடவேண்டும். லார்வாக்களை உருவாக்கும் பறக்கும் தன்மை கொண்ட பூச்சிகள் இக்கரைசலின் வாசத்தில் ஈர்க்கப்பட்டு, பானையில் வந்து விழுந்து இறந்துவிடும். இதன் மூலம் புழுக்கள் உருவாவதை ஆரம்ப நிலையிலேயே தடுக்க முடியும்.

ஆமணக்கு அரண்!

பருத்தி விதைக்கும்போதே 20 அடி இடைவெளியில் ஆமணக்கு விதைகளை வயல் முழுவதும் நடவு செய்ய வேண்டும். பருத்தி, காய் பருவத்தில் இருக்கும்போது ஆமணக்குச் செடிகளும் 10 அடி உயரத்துக்கு மேல் வளர்ந்து நிற்கும். காய்களைத் தாக்க வரும் பெரும்பகுதிப் புழுக்களை ஆமணக்குச் செடிகள் ஈர்த்துக் கொள்வதால்... காய்களைச் சேதாரத்தில் இருந்து காக்கலாம்.

கற்றாழை நார்க்கரைசல்!

ஐந்து கிலோ வேலிக்கற்றாழையை எடுத்து நன்கு தட்டி, பத்து லிட்டர் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். பிறகு... நொச்சி, ஆடு தீண்டாப்பாலை, எருக்கு இலை, வேப்பிலை ஆகிய இலைகளில் சம அளவு எடுத்து, அவற்றை இடித்து கற்றாழைக் கரைசலில் இட்டு

2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

பிறகு, கரைசலை வடிகட்டி 100 லிட்டர் தண்ணீருக்கு 5 லிட்டர் வீதம் கலந்து தெளித்தால், கற்றாழை வாசத்துக்குக் காயப்புழுக்கள் காணாமல் போயவிடும். இந்தக் கரைசலைத் தெளிக்க வரைமுறையெல்லாம் கிடையாது. காய்ப்புழுக்கள் தென்படும்போது, புழுக்களின் நடமாட்டத்துக்கு ஏற்ப, கரைசலின் அளவைக் கூட்டியோ குறைத்தோ தெளிக்கலாம்.

 தொடர்புக்கு
கலைவாணி, அலைபேசி: 98654-85221.
படங்கள்: க. தனசேகரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு