Published:Updated:

குறைந்த மழைக்கு சோளம்... நல்ல மழைக்கு பருத்தி !

குறைந்த மழைக்கு சோளம்... நல்ல மழைக்கு பருத்தி !

பிரீமியம் ஸ்டோரி

வழிகாட்டி

 ஆறுச்சாமி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வரும் துறைகள் ஒவ்வொன்றைப் பற்றியும் இதழ்தோறும் பார்த்து வருகிறோம். இந்த இதழில் 'வேளாண் வானிலை ஆராய்ச்சி மையம்'! பற்றிப் பேசுகிறார் அதன் பேராசிரியர் மற்றும் தலைவர், முனைவர். வி. கீதலட்சுமி.

''தமிழ்நாட்டில் 224 இடங்களில் தானியங்கி வானிலைத் தகவல் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. தினமும் ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை மாநிலம், மாவட்டம், வட்டாரம்வாரியாக வானிலை பற்றிய தகவல்களை www.tawn.tnau.ac.in என்ற இணையதளத்தில் வெளியிட்டு வருகிறோம். எங்களுடைய தகவல்களையெல்லாம் முறையாகப் பின்பற்றினால்... 10% வரை உரம், பூச்சிமருந்து போன்ற இடுபொருட்கள் செலவு குறையும். 15% சதம் வரை மகசூல் கூடுதலாக எடுக்கலாம்!

குறைந்த மழைக்கு சோளம்... நல்ல மழைக்கு பருத்தி !

எப்போது, விதைக்க வேண்டும், எந்த நேரத்தில் பூச்சிமருந்து தெளிக்கக் கூடாது, எப்போது அறுவடை செய்ய வேண்டும்... என்பது போன்ற விஷயங்களில் வானிலையை வைத்தே முடிவு எடுக்க வேண்டும். உதாரணத்துக்கு, நெல் வயலில் சாறு உறுஞ்சும் பூச்சியின் நடமாட்டம் இருக்கிறது. உடனே, ஓடிச் சென்று பூச்சிமருந்து தெளிக்க நினைக்கிறீர்கள். அந்த சமயத்தில் மழை வருவதற்கான அறிகுறிகள் தெரிந்தால், கொஞ்சம் காத்திருக்கலாம். மழை மூலமாகவே... சுமார் 50 சதவிகிதம் வரையிலான பூச்சிகள் கட்டுப்பட்டுவிடும். மீதியிருக்கும் பூச்சிகளுக்கு மட்டும் மருந்து தெளித்தால் போதும். இதன் மூலம் 50% மருந்து செலவு மிச்சமாகிவிடும்.

ஒவ்வொரு ஆண்டும் மழை பொழிவு எப்படி இருக்கும் என்பதையும் வெளியிடுகிறோம். அதை வைத்தே என்ன வகையான பயிர் செய்யலாம் என்பதை விவசாயிகள் எளிதாக முடிவு எடுக்கலாம். உதாரணத்துக்கு வழக்கத்தை விட மழை குறைவு என்றால், சோளம் விதைக்கலாம். சுமாரான மழை என்றால், மக்காச்சோளம் போடலாம். நல்ல மழை கிடைக்கும் என்றால், பருத்தி பயிர் செய்யலாம்.

வானிலைத் தகவல்கள் வழங்குவதோடு, பருவநிலைக்குத் தகுந்தபடி, விவசாயப் பணிகள் என்ன செய்ய வேண்டும். எதை செய்யக் கூடாது என்பதையும் அறிவிக்கிறோம். மேலும், தகவல்கள் தேவைப்படும் விவசாயிகள் எங்கள் துறையைத் தொடர்பு கொள்ளலாம்'' என்று அழைப்பு விடுத்தார்.

தொடர்புக்கு, தொலைபேசி: 0422-6611305; 0422-6611319.

- தொடர்ந்து சந்திப்போம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு