Published:Updated:

ஊரகத் திட்ட பணிகள்... இனி, விவசாய வேலைகளுக்கும்...

த. ஜெயகுமார்

பட்ஜெட்

ஊரகத் திட்ட பணிகள்... இனி, விவசாய வேலைகளுக்கும்...

2014-15-ம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையை ஜூலை 10-ம் தேதி நிதியமைச்சர் அருண் ஜெட்லி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். விவசாயத்துக்கென ஒதுக்கிய நிதி மற்றும் திட்டங்கள் குறித்தான நிதிநிலை அறிக்கையின் சாராம்சங்கள் இங்கே...

நடப்பு ஆண்டில் விவசாயத்துக்கு ரூ.8 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விவசாயத்துக்கு பிரத்யேகமான தனித் தொலைக்காட்சி இந்த ஆண்டில் தொடங்கப்படும்.

மொத்த விவசாய உற்பத்தியில் 4 சதவிகித வளர்ச்சியை எட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நிலத்துக்கேற்ற பயிர்களை சாகுபடி செய்ய அனைத்து விவசாயிகளுக்கும் மண்வள (பரிசோதனை) அட்டை 100 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும்.

விவசாய விளைபொருட்களைப் பாதுகாக்க 5 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் புதிய கிடங்குகளும், பழைய கிடங்குகளில் சீரமைப்புப் பணிகளும் நடைபெறும். மாநில அரசுகளின் ஒத்துழைப்போடு தேசிய அளவில் வேளாண் சந்தைகள் அமைக்கப்படும். சந்தைகளை ஒருங்கிணைக்க புதிய திட்டங்கள் தீட்டப்படும். நகரங்களில் விவசாயிகளே சந்தைகளை அமைத்துக்கொள்ள ஊக்குவிக்கப்படும்.

வங்கி அல்லாத சேமிப்பாக 'கிஸான் விகாஸ்’ பத்திரங்கள் அறிமுகப்படுத்தப்படும்.

நபார்டு வங்கி மூலம் நிலமில்லாதவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க ஏற்பாடு செய்யப்படும்.

வட்டியில்லாத மானியத் திட்டங்கள் இந்த நிதியாண்டிலும் தொடரும். கிராமப்புறத் தொழில்முனைவோருக்கு 100 கோடி ரூபாயும், குறுகிய கால மற்றும் ஊரக மறுசுழற்சி கடன் நிதிக்கு 5 ஆயிரம் கோடி ரூபாய் நிதியும் வழங்கப்படும்.

தமிழ்நாடு, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில், சூரிய மின்சக்தி தொடங்க 500 கோடி ரூபாயும், நாட்டின் விவசாயக் கட்டமைப்புகளை மேம்படுத்த 100 கோடி ரூபாயும் ஒதுக்கப்படும்.

ஆந்திரா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் புதிய வேளாண் பல்கலைக்கழகங்களும் தெலுங்கானா, அரியானா ஆகிய மாநிலங்களில் தோட்டக்கலைப் பல்கலைக்கழகங்களும் அமைக்கப்படும். அஸாம், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில், புதிய விவசாய ஆய்வு மையங்கள் அமைக்கப்படும்.

ஊரக வேலை உறுதித் திட்டத்துக்கு (மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டம்) 33 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். ஊரக வேலை உறுதித் திட்டப் பணிகள் விவசாய வேலைகளுக்கும் பயன்படுத்திக் கொள்ளப்படும்.

நீர்ப்பாசனத் திட்டங்களுக்கு 1,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். விவசாயத்துக்கு புதிய உரக் கொள்கை வகுக்கப்படும். அனைத்து கிராமங்களும் மின்வசதி பெற்ற கிராமங்களாக மாற்றப்படும்.

அடுத்த கட்டுரைக்கு