Published:Updated:

'தேவை, விவசாயிகள் வருவாய் கமிஷன்..!'

பிரதமர் மோடிக்கு ஒரு திறந்த மடல் அறச்சலூர் செல்வம்

 கோரிக்கை

மாண்புமிகு இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு, வணக்கம்...

கடந்த இருபது, முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகவே விவசாயிகளின் வாழ்க்கையில் ஏற்றம் என்பதே இல்லாமல் போய்விட்டது. 'ஏதாவது வித்தை காட்டி, நம் வாழ்க்கையில் ஒளியேற்றிவிடுவார் மோடி' எனும் தேர்தலுக்கு முந்தைய நாட்களின் நம்பிக்கை மாறாமல்... காத்துக் கொண்டிருந்தனர் விவசாயிகள். ஆனால், ஜூலை 10-ம் தேதியன்று நாடாளு மன்றத்தில் படிக்கப்பட்டிருக்கும் 2014-15-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை, அந்த நம்பிக்கையை முற்றாகத் தகர்த்தெறிந்திருக்கிறது. 'காங்கிரஸ் அரசு போட்டு வைத்திருக்கும் பாதையிலிருந்து இம்மியளவும் பிசகாமல்தான் நாங்களும் நடைபோடுவோம்' என்று பி.ஜே.பி-யும் 'தண்டோரா' போட்டிருக்கிறது என்றே சொல்லத் தோன்றுகிறது!

'ஆட்சிக்கு வந்து இரண்டு மாதங்கள்தான் ஆகின்றன. நிச்சயமாக மாற்றங்கள் இருக்கும். மோடி சாதிப்பார்' என்கிற குரல்களும் கேட்கின்றன. இதை மனதில் கொண்டு, மீண்டும் நம்பிக்கையை ஏற்றிக்கொண்டு, குறிப்பிட்ட சில விஷயங்களை மட்டும் உங்கள் முன்பாக வைக்கிறேன்.  

விவசாயத்தில் 'பட்டபாட்டுக்குப் பலன் வேண்டும்'! விவசாயிகளின் வருவாய் பற்றி ஆய்வுசெய்ய அமைக்கப்பட்ட அர்ஜுன் சென்குப்தா கமிட்டி, இந்திய விவசாயக் குடும்பத்தின் சராசரி மாத வருவாய்,

2 ஆயிரத்து 115 ரூபாய் என்று தன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் பண்ணை சாராத வேலைகள் மூலம் ஈட்டிய வருவாயும் உள்ளடக்கம். 60% விவசாயிகள் மற்றும் விவசாயக் கூலிகள், நூறு நாள் வேலையை (மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம்) நம்பியே உள்ளனர். ஏறத்தாழ

55% விவசாயிகள், இரவு உணவின்றிதான் ஒவ் வொரு நாளும் உறங்கச் செல்கிறார்கள்.  

இந்த அப்பாவிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த... விளைபொருட்கள் அளவுக்கு ஏற்ப வருவாயை உறுதிப்படுத்த வேண்டும். இதற்கு... 'தேசிய விவசாயிகள் வருவாய் கமிஷன்’ அமைக்க வேண்டும்.

'தேவை, விவசாயிகள் வருவாய் கமிஷன்..!'

உணவுப் பயிர்களுக்கு உயிரூட்டுங்கள்!

ஒவ்வொரு விவசாயிக்கும் குறைந்தபட்ச மாத வருவாயை, உற்பத்தியின் அடிப்படையில் உறுதி செய்யவேண்டும். பணவீக்கம் அதிகமாகும்போது அரசு ஊழியர்களுக்கு பஞ்சப்படி உள்ளிட்ட படிகள் அதிகரிக்கப்படுகின்றன. சில ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதியக் கமிஷன் அமைக்கப்பட்டு, ஊதிய உயர்வும் வழங்கப்படுகிறது.

தனியார் நிறுவனங்களிலும் இத்தகைய சம்பள உயர்வுகள் நடக்கின்றன. இதுபோல, குறைந்தபட்ச விலையை, சூழலுக்கு ஏற்ப அதிகரிக்க வேண்டும். அடுத்து, பணப்பயிருக்கும் உணவுப்பயிருக்குமான வருவாயை இணையாக்க வேண்டும். அப்போதுதான் தண்ணீர் அதிகம் தேவைப்படும் பணப்பயிர் சாகுபடியைக் கைவிட்டு, உணவுப் பயிருக்கு பலரும் மாறுவார்கள். உணவுப்பயிரிலும் கூடுதல் விளைச்சல், கூடுதல் வருவாய் கிடைக்கும் என்கிற நிலையை உருவாக்க வேண்டும்!

கங்கை மட்டுமல்ல!

இந்தியா சுதந்திரம் அடைந்தபோது குடிநீர் இல்லாத கிராமங்கள் ஒன்றுகூட இல்லை. இன்று நிலைமை நேர்மாறாக உள்ளது. அன்றைக்கும், இன்றைக்கும் கிடைத்த மழை அளவில், ஒன்றும் பெரிய வித்தியாசமில்லை. ஆனால், மழைநீர் நிலத்தடி நீராக மாறவில்லை. தீவிர ரசாயன விவசாயத்தின் காரணமாக, நீர்ப்பிடிப்புத் தன்மையை இழந்துவிட்டது நம் மண். தண்ணீர் பயன்பாடு அதிகமாகி இருப்பினும்... முறையான, சரியான, சிக்கனமான பயன்பாடு இல்லை. தண்ணீர் பயன்படுத்தப்படும் ஒவ்வொரு இடத்திலும் நீர்ச்சேமிப்பைக் கட்டாயப்படுத்த வேண்டும்.

வெறும் 200 மில்லி மீட்டர் அளவே மழை பெய்யும் மகாராஷ்டிராவின் ராலேகான்சித்தி, ஹிவ்ரே பஜார் மற்றும் ராஜஸ்தானின் ஆல்வார் பகுதிகளில்கூட, ஓடைகளிலும் நதிகளிலும் தண்ணீர் ஓடும்போது... அதிக மழைபெறும் பகுதிகளில் எளிதாக நீர்நிலைகள் உயிர்பெற முடியும். கங்கை மட்டுமல்ல... இந்தியாவில் ஓடும் ஒவ்வொரு சிற்றோடையுமே புனிதமானதுதான் என்கிற புரிதல் அனைவருக்குமே வேண்டும்!

இந்தியச் சந்தை, இணையற்றச் சந்தை!

125 கோடி மக்கள் உள்ள இந்தியச் சந்தையைவிட பெரிய சந்தை உலகில் இல்லை. எனவே, இடைத்தரகர்கள் இல்லாமல் விளைபொருட்களை விற்பதற்கு ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களை வலுப்படுத்த வேண்டும். நாடு முழுவதும் கூடுதல் விற்பனைக் கூடங்களை உருவாக்க வேண்டும். உள்ளூர் உற்பத்தி, உள்ளூர் சந்தை, உள்ளூர் நுகர்வு என்பதுதான் கிராமப் பொருளாதாரத்தை மேம்படுத்த உதவும்.

'தேவை, விவசாயிகள் வருவாய் கமிஷன்..!'

சட்டீஸ்கர் மாநிலத்தில் இத்தகு திட்டத்தின் மூலம் கிராம மக்களின் பொருளாதாரம் மேம்பட்டுள்ளதைக் கவனத்தில் கொண்டு, நாடு முழுவதும் இதைப் பரவலாக்க வேண்டும்.

ஆந்திராவில், 35 லட்சம் ஏக்கர் நிலம், பூச்சிக்கொல்லிகள் இல்லாத நிலமாக மாறமுடியும்போது, நாடு முழுவதையும் ஏன் மாற்ற முடியாது?. அங்கெல்லாம் விளைச்சல் உயர்ந்துள்ளதே தவிர குறையவில்லை. பூச்சிகளின் தாக்கமும் குறைந்துள்ளது. ஆகவே, நாடு முழுவதும் பூச்சிக்கொல்லி இல்லா விவசாயத்தைக் கையிலெடுக்க வேண்டும்.

விவசாயம் வெறும் தொழில் அல்ல!

விவசாயத்தை உணவு உற்பத்திக்கான ஒரு தொழிலாகவோ, தொழிற்சாலைகளுக்கான மூலப்பொருட்களை விளைவித்துத் தரும் தொழிற்கூடங்களாகவோ பார்க்கக்கூடாது. ஒவ்வொரு பண்ணையையும் கிராமத்தின் சூழலியலின் தொகுப்பாகப் (Village ecosystem) பார்த்திட வேண்டும். விவசாயத்துக்குள் வெளி இடுபொருட்கள் வருவதைக் குறைக்க வேண்டும். இது, விவசாயத்தையும், கிராமப் பொருளாதாரத்தையும் மேம்படுத்துவதுடன், சுற்றுச்சூழல் கேடுகளையும் குறைக்கும்.

உணவுப்பண்டங்கள் இறக்குமதி என்பது, இந்திய கிராமங்களில் வேலையில்லாமையை உருவாக்கும் என்பதை மறந்து விடக்கூடாது. ஆகவே, இந்திய விவசாயிகள் விளைவித்த பிறகு ஏற்படும் பற்றாக்குறையைப் பூர்த்தி செய்வதற்காக மட்டுமே உணவுப் பொருட்கள் இறக்குமதியை அனுமதிக்க வேண்டும். (2010-ம் ஆண்டு கணக்குப்படி, ஆண்டுக்கு 60 ஆயிரம் கோடி மதிப்பில் வேளாண் விளைபொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன).

பயிர்வாரி சுழற்சி... காலத்தின் கட்டாயம்!

மிகப்பெரிய சவால்... காலநிலை மாற்றம். உலகின் காலநிலை மாற்றம் இந்திய விவசாயத்தை வெகுவாகப் பாதிக்கும். உள்ளூர் அளவிலான சிற்சில மாற்றங்கள் மூலம் இந்தப் பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள முடியும்.

வெப்பநிலையை அதிகரிக்கும் வகையிலான விவசாயத்திலிருந்து மாறுவதே, இந்தியாவின் உள்ளூர் சூழலை வெகுவாகக் காப்பாற்றுவதோடு, விவசாயத்தையும் காப்பாற்றும். இதற்கு பயிர்வாரி சுழற்சிமுறை அவசியம். ஆம், அரிசி, கோதுமை, கரும்பு, தென்னை என்று தண்ணீரையும், பராமரிப்பையும் அதிகமாக இழுக்கும் ஒரேமாதிரியான பயிர்களில் மட்டுமே கவனம் செலுத்தாமல், சிறு தானியங்கள் போன்ற சத்துமிக்க தானியங்களின் பக்கமும் கவனம் திருப்பப்பட வேண்டும்.

பல்லாயிரம் ஆண்டுகள் சிறப்பாகவும் சிரமமின்றியும் இயங்கிய இந்திய விவசாயம், இன்று மிகுந்த சிக்கலில் உள்ளது. ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான விவசாயிகள், தற்கொலை செய்கிறார்கள். ஆயிரக்கணக்கான விவசாயிகள், விவசாயத்தை விட்டு வெளியேறுகிறார்கள். '125 கோடிக்கு மேல் மக்கள் தொகை கொண்ட நாட்டின் உணவு இறையாண்மை’யைக் காக்க விவசாயத்தைக் காக்கவேண்டும்’ என்று முழங்கப்படுகிறதே ஒழிய, 'விவசாயிகளைக் காக்க வேண்டும்’ என்கிற பார்வை எழவே இல்லை.

விவசாயம் என்றாலே, பசுமைப் புரட்சியின் மாமன், மச்சான்களை அழைத்து வைத்து ஆலோசனைக் கேட்பதைத்தான் இத்தனை காலமாக காங்கிரஸ் அரசு செய்து கொண்டிருந்தது. உங்கள் அரசும் இதே ஆலோ சனைகளைத்தான் பெற்றுக் கொண்டிருக்கிறது. பசுமைப் புரட்சியின் தோல்விதான், இன்றைக்கு இந்தியாவில் விவசாயம் மற்றும் விவசாயத்தைப் பீடித்திருக்கும் மிகப்பெரிய நோய்க்கு அடிப்படை என்பதை உணராமல், மீண்டும் மீண்டும் அதையே தொடர்ந்தால்... உங்களால் மட்டுமல்ல, வேறு யாராலுமே நம் விவசாயத்தைக் காப்பற்ற முடியாது.

மொத்தத்தில் கழுகுப் பார்வையில் இந்திய விவசாயச் சிக்கல்களைப் பார்க்காமல், புதிய கண்ணோட்டத்தை உருவாக்க வேண்டும். உள்ளூர் அளவிலிருந்து விவரங்களையும் திட்டமிடல்களையும் தொடங்கவேண்டும்.

காத்திருக்கிறேன் மாற்றங்களுக்காக?!

பின்குறிப்பு: இக்கடிதத்தின் ஆங்கில வடி வம், பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு