Published:Updated:

1,000 ரகங்களைத் தேடி...

ஒரு ஆசிரமத்தின் பாரம்பரிய பயணம்! காசி. வேம்பையன் படம்: தி. குமரகுருபரன்

 பாரம்பரியம்

 'விதைகளே பேராயுதம்’ என்பார், 'இயற்கை வேளாண் விஞ்ஞானி' நம்மாழ்வார். ஆம்... அத்தனைக்கும் அடிப்படை ஆதாரம், விதைகள்தான். மண்ணுக்கேற்ற, தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப விளையும் விதைகள்தான் நமது விவசாயத்தின் ஜீவாதாரம். ஆனால், பாட்டன், பூட்டன் காலம் முதல் 'வாழையடி வாழையாய்’ பயிர் செய்யப்பட்டு வந்த பாரம்பரிய நெல் ரகங்கள் பலவும் கால ஓட்டத்தில் மறைந்து போக... அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த சில ரகங்களும், நம் கையை விட்டுப்போகும் நிலையில் இருக்கின்றன. இப்படிப்பட்ட பாரம்பரிய ரக நெல் விதைகளைச் சேகரித்துப் பாதுகாக்கும் பணியில், பல அமைப்புகள் களமிறங்கி இருக்கின்றன. விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை, ஸ்ரீசாரதா ஆசிரமும் இந்த இயற்கைப் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறது.

1,000 ரகங்களைத் தேடி...

'இறையியலோடு உழவியலும்... சாதனை படைக்கும் சாரதா ஆசிரமம்’ என்ற தலைப்பில் 10.2.2012 தேதியிட்ட 'பசுமை விகடன்’ இதழில் வெளியான கட்டுரை மூலம் ஏற்கெனவே வாசகர்களுக்கு அறிமுகமான ஆசிரமம்தான் இது! இங்கே கிட்டத்தட்ட 150 பாரம்பரிய நெல் ரகங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. இந்த விதைகளைப் பெருக்கி, விவசாயிகளுக்குக் கொடுத்து வருகிறார்கள்.

இதைப் பற்றி நம்மிடம் பேசிய 'அக்ஷய க்ருஷி கேந்திரா' (வேளாண்மை மையம்) உதவி இயக்குநர் சத்திய பிரானா. ''பாரம்பரிய நெல் ரகங்கள் நம்முடைய தேசத்துக்குத் தேவைனு இங்க இருக்குற எல்லா சகோதரிகளும் உணர்ந்திருக்கிறோம். இதுக்காக, எங்களுடைய கேந்திரா மூலமா, ஆரம்பத்துல 27 பாரம்பரிய நெல் ரகங்களோட விதைகளைச் சேகரிச்சு, விளையவெச்சு, ஒவ்வொரு வருஷமும் 500 விவசாயிகளுக்கு விதைகளைக் கொடுத்துட்டிருந்தோம்.

1,000 ரகங்களைத் தேடி...

நாங்க, விவேகானந்தரின் போதனைகளைப் பின்பற்றுறோம். அதனால, அவரோட 150-வது ஜெயந்திக்கு சாரதா ஆசிரமத்தில் இருக்குற எல்லா துறைகளுக்கும் பல்வேறுவிதமான பணிகளைப் பிரிச்சுக் கொடுத்தாங்க. அதன்படி எங்க மையத்துக்கு விவேகானந்தரின் 150-வது ஜெயந்தியை குறிக்கிறவிதமா 150 பாரம்பரிய நெல் ரகங்களோட விதைகளைச் சேகரிச்சு, பயிர் பண்ணி, 1,500 விவசாயிகளுக்கு விதைகளைக் கொடுக்கச்  சொல்லியிருந்தாங்க. இதுக்காக ஒரு வருஷமா தமிழ்நாட்டுல இருக்குற பல கிராமங்களுக்குப் போய் விதைகளைச் சேகரிச்சோம். இதுல சில ரகங்கள் அழியுற நிலையில இருக்கிறதையும் பார்த்தோம்.

1,000 ரகங்களைத் தேடி...

விதைகளோடு விருதும்!

இப்படிக் கிடைச்ச விதைகளை ஆசிரமப் பண்ணையில விதைச்சு, ஒவ்வொரு ரகத்தோட சாகுபடி காலம், மகசூல் அளவு, ஏற்ற மண் இதுமாதிரியான விஷயங்களைத் தெரிஞ்சுக்கிட்டோம். இதுல கிச்சிலி, தூயமல்லி, சீரகச்சம்பா, பாசுமதி, மாப்பிள்ளைச் சம்பானு ஐந்து நெல் ரகங்கள் இந்தப் பகுதி விவசாயிகளுக்கு ஏற்றதா இருக்கு. இந்த ஐந்து ரகங்களோட விதைகளைப் பெருக்கி, 1,500 விவசாயிகளுக்குக் கொடுத்தோம். இதில்லாம வெளியூர் விவசாயிகள் தினமும் விதை வாங்கிட்டுப் போறாங்க. அவங்களயெல்லாம் கணக்குல சேர்க்கல.

விதைகளோடு, தேவையான ஆலோசனைகளையும் விவசாயிகளுக்குக் கொடுக்கிறோம். ஒவ்வொரு வருஷமும் சிறப்பா விவசாயம் பார்க்குற 12 விவசாயிகளுக்கு 'பலராமர்’ விருது கொடுக்கிறோம். இது பல விவசாயிகளுக்கு ஊக்கமா இருக்கு. ஆசிரமத்துல இருக்குற பெரியவங்க, அடுத்த 3 ஆண்டுகள்ல ஆயிரம் பாரம்பரிய நெல் ரகங்களைச் சேகரிக்கச் சொல்லியிருக்குறாங்க. இதுக்கான தேடுதல்ல இறங்கப் போறோம். ஆசிரமத்தோட விருப்பமெல்லாம், இப்படி சேகரிச்ச பாரம்பரிய நெல் ரகங்களை விவசாயிகளிடம் பரவச் செய்றதுதான். வருங்காலத்துல விழுப்புரம் மாவட்டத்தைச் சுற்றி இருக்குற விவசாயிகள்கிட்ட பலவிதமான நெல் ரகங்கள் கிடைக்கும்கிற நிலையை உருவாக்க நினைக்கிறோம். இதுக்காக 3 ஆயிரம் விவசாயிகளுக்கு பாரம்பரிய நெல் ரகங்களைக் கொடுக்க இருக்கிறோம். விதைநெல் தேவைப்படுற விவசாயிகள், எங்கள் ஆசிரமத்தை அணுகலாம்'' என்று சொன்னார் ஆர்வத்துடன்!

1,000 ரகங்களைத் தேடி...

பங்களித்த பசுமை விகடன்!

ஆசிரமத்தின் பண்ணை மேலாளர் சிவக் குமார் பேசும்போது, ''150 நெல் விதைகளைச் சேகரிக்கச் சொன்னதும், ஒரு வருஷம் முழுக்க மதுரை, தஞ்சாவூர், திருவாரூர், வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, திருவண்ணாமலை, கல்வராயன்மலை, செங்கல்பட்டுனு பல ஊர்களுக்கும் போனோம். ஒவ்வொரு பகுதிக்குப் போகும்போதும், பசுமை விகடன் அறிமுகப்படுத்திய நெல் விவசாயிகளோட தொடர்பு எண்களை எடுத்துக்கிட்டுப் போனோம். அவங்க எங்களுக்கு சில ரகங்களைக் கொடுத்ததோட, வேற நெல் ரகங்கள் வெச்சுருக்கிற விவசாயிகளையும் அறிமுகப்படுத்தினாங்க.

1,000 ரகங்களைத் தேடி...

ஒவ்வொரு ரகத்துலயும் 50 கிராம் விதையில இருந்து, 2 கிலோ விதை வரைக்கும் வாங்கிட்டு வந்தோம். இந்த 150 நெல் ரகத்தையும், மொத்தம் 6 ஏக்கர்ல தனித்தனியா சாகுபடி செஞ்சு, அறுவடை செஞ்சு வெச்சிருக்கோம். இப்போ, 80 ரக விதைகள் வினியோகத்துக்கு தயாரா இருக்கு.

உளுந்தூர்பேட்டை சுற்றுவட்டார விவசாயிகளுக்கு இலவசமா கொடுக்கிறோம். மற்ற பகுதி விவசாயிகளுக்கு கிலோ 40 ரூபாய்ங்கிற விலையில விற்பனை செய்கிறோம்'' என்று சொன்னார்.

தொடர்புக்கு,
சத்திய பிரானா,
செல்போன்: 97868-91110
சிவக்குமார்,
செல்போன்: 99430-64596

பாதுகாப்பிலிருக்கும் பாரம்பரிய ரகங்கள்!

1,000 ரகங்களைத் தேடி...

தற்போது ஆசிரமத்தில்... அறுபதாங்குறுவை, பூங்கார், கேரளா ரகம், குழியடிச்சான், குள்ளங்கார், மைசூர்மல்லி, குடவாழை, காட்டுயானம், காட்டுப்பொன்னி, வெள்ளைக்கார், மஞ்சள் பொன்னி, கருப்புச் சீரகச்சம்பா, கட்டிச்சம்பா, குருவிக்கார், வரப்புக் குடைஞ்சான், குறுவைக் களஞ்சியம், கம்பஞ்சம்பா, பொம்மி, காலா நமக், திருப்பதிசாரம், அனந்தனூர் சன்னம், பிசினி, வெள்ளைக் குருவிக்கார், மொழிக்கருப்புச் சம்பா, காட்டுச் சம்பா, கருங்குறுவை, தேங்காய்ப்பூச்சம்பா, காட்டுக் குத்தாளம், சேலம் சம்பா, பாசுமதி, புழுதிச் சம்பா, பால் குடவாழை, வாசனை சீரகச்சம்பா, கொசுவக் குத்தாளை, இலுப்பைப்பூச்சம்பா, துளசிவாச சீரகச்சம்பா, சின்னப்பொன்னி, வெள்ளைப்பொன்னி, சிகப்புக் கவுனி, கொட்டாரச் சம்பா, சீரகச்சம்பா, கந்தசாலா, பனங்காட்டுக் குடவாழை, சன்னச் சம்பா, இறவைப் பாண்டி, செம்பிளிச் சம்பா, நவரா, கருத்தக்கார், கிச்சிலிச் சம்பா, கைவரச் சம்பா, சேலம் சன்னா, தூயமல்லி, வாழைப்பூச் சம்பா, ஆற்காடு கிச்சலி, தங்கச்சம்பா, மணல்வாரி, கருடன் சம்பா, கட்டைச் சம்பா, ஆத்தூர் கிச்சிலி, குந்தாவி, சிகப்புக் குருவிக்கார், கூம்பாளை, வல்லரகன், கௌனி, பூவன் சம்பா, முற்றின சன்னம், சண்டிக்கார், கருப்புக் கவுனி, மாப்பிள்ளைச் சம்பா, மடுமுழுங்கி, ஒட்டடம், வாடன் சம்பா, சம்பா மோசனம், கண்டவாரிச் சம்பா, வெள்ளை மிளகுச் சம்பா, காடைக் கழுத்தான், நீலஞ்சம்பா, ஜவ்வாதுமலை நெல், வைகுண்டா, கப்பக்கார், கலியன் சம்பா, அடுக்கு நெல், செங்கார், ராஜமன்னார், முருகன் கார், சொர்ணவாரி, சூரக்குறுவை, வெள்ளைக் குடவாழை, சூலக்குணுவை, நொறுங்கன், பெருங்கார், பூம்பாளை, வாலான், கொத்தமல்லிச் சம்பா, சொர்ணமசூரி, பயகுண்டா, பச்சைப் பெருமாள், வசரமுண்டான், கோணக்குறுவை, புழுதிக்கார், கருப்புப் பாசுமதி, வீதிவடங்கான், கண்டசாலி, அம்யோ மோகர், கொள்ளிக்கார், ராஜபோகம், செம்பினிப் பொன்னி, பெரும் கூம்பாழை, டெல்லி போகலு, கச்சக் கூம்பாழை, மதிமுனி, கல்லுருண்டையான், ரசகடம், கம்பம் சம்பா, கொச்சின் சம்பா, செம்பாளை, வெளியான், ராஜமுடி, அறுபதாம் சம்பா, காட்டு வாணிபம், சடைக்கார், சம்யா, மரநெல், கல்லுண்டை, செம்பினிப் பிரியன், காஷ்மீர் டால், கார் நெல், மொட்டக்கூர், ராமகல்லி, ஜீரா, சுடர்ஹால், பதரியா, சுதர், திமாரி கமோடு, ஜல்ஜிரா, மல் காமோடு, ரட்னசுடி, ஹாலு உப்பலு, சித்த சன்னா, வரேடப்பன சேன், சிட்டிகா நெல், கரிகஜவலி, கரிஜாடி, சன்னக்கி நெல், கட்கா, சிங்கினிகார், செம்பாலை ஆகிய பாரம்பரிய ரகங்கள் உள்ளன. இவற்றில் சில வேறு மாநிலங்களைப் பூர்விகமாகக் கொண்டவை.

அடுத்த கட்டுரைக்கு