Published:Updated:

தொழுவுரத்துக்குப் பதிலாக... வைக்கோல் உரம் !

அற்புத மகசூல் தரும் அசத்தல் அடியுரம்!

பிரீமியம் ஸ்டோரி

கு.ராமகிருஷ்ணன்

 பளிச்... பளிச்...

 அற்புதம் செய்யும் அமுதக்கரைசல்.
அனைத்துப் பயிர்களுக்கும் பயன்படுத்தலாம்.
15 நாளில் அருமையான அடியுரம்.

ஆராய்ச்சிக் கூடங்களில் பல லட்சங்களைக் கொட்டி கண்டுபிடிக்கப்படும் தொழில்நுட்பங்களை விட, சாமானியர்கள் தங்களது தேவைக்காகக் கண்டுபிடிக்கும் தொழில்நுட்பங்கள், உண்மையிலேயே அதிக பலன் அளிப்பவையாக இருக்கின்றன. விவசாயமும் இதற்கு விதிவிலக்கல்ல. அப்படி சூழலுக்கேற்றவாறு, குறைந்தச் செலவில் சிறப்பான தொழில்நுட்பம் ஒன்றைக் கண்டுபிடித்து பயன்படுத்தி வருகிறார், தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகில் உள்ள குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த திருஞானசம்பந்தம். வைக்கோலையும் அமுதக்கரைசலையும் மட்டுமே அடியுரத்துக்காகப் பயன்படுத்தி நெல் சாகுபடி செய்து வருகிறார்.  

தொழுவுரத்துக்குப் பதிலாக... வைக்கோல் உரம் !

மனிதக் கழிவிலும் எரிவாயு!

விஷயம் தெரிந்து திருஞானசம்பந்தத்தைச் தேடிச் சென்றோம். வயல் வேலைகளில் தீவிரமாக இருந்தவர், நம்மைக் கண்டதும் உற்சாகமாக பேச்சைத் தொடங்கினார்.

##~##

''எனக்கு 16 ஏக்கர் நிலமிருக்கு. அதுல 10 ஏக்கர்ல நெல்லு; மூன்றரை ஏக்கர்ல தென்னை; கால் ஏக்கர்ல கோ-4 புல்; ஒன்றரை ஏக்கர்ல தேக்கு, வேம்பு, பூவரசு... மாதிரியான மரங்களை சாகுபடி பண்றேன்.  இதில்லாம நாலு பசு மாடுகளையும் வளக்குறேன். அதோட சாணத்தை வெச்சு எரிவாயு தயாரிச்சு வீட்டுச் சமையலுக்குப் பயன்படுத்திக்கிறேன். வீட்டுல இருக்குற கழிவறைக் கழிவுகளையும் குழாய் மூலமா சாண எரிவாயு கலன்ல கலக்குற மாதிரி அமைச்சிருக்கேன். சாண எரிவாயு கலன்ல மீதம் கிடைக்கிற கசடுகள்ல இருந்து அமுதக்கரைசலையும் (பார்க்க, பெட்டிச் செய்தி), மண்புழு உரத்தையும் தயாரிச்சுக்கிறேன்.

வைக்கோலே அடியுரமாக!

இப்ப பெரும்பாலும் மெஷின் வெச்சுதான் நெல்லு அறுவடை பண்றாங்க. அறுவடை வேலை சுலபமா இருந்தாலும், அதன் மூலமா கிடைக்கிற வைக்கோலை மாடுக விரும்பி சாப்பிடுறதில்லை. வயல்ல போட்டாலும், அடுத்த போகத்துக்குள்ள மக்கவும் மக்காது.

அதனால, பல விவசாயிக வயல்ல தீ வெச்சுதான் வைக்கோலை அழிக்கிறாங்க. அதனால தீமைகள்தான் அதிகம். சரி, இந்த வைக்கோலை என்னதான் பண்றதுனு யோசிச்சப்பதான்... அதையே அடியுரமா பயன்படுத்திப் பாக்கலாம்னு தோணுச்சு. தொழுவுரத்தோட விலை... நாளுக்கு நாள் அதிகமாயிட்டே இருக்கு. அதை வயல்ல கொண்டு வந்து சேர்க்கறதுக்கும் ஆள் கிடைக்காம கஷ்டமா இருக்கு. வைக்கோலைப் பயன்படுத்திப் பார்க்கலாம்னு முடிவெடுத்ததுக்கு இதுவும் ஒரு காரணம்.

தொழுவுரத்தைத் தொடுவதேயில்லை!

உடனடியா களத்துல இறங்கின நான், அந்த போகத்துலயே தொழுவுரத்தைப் பயன்படுத்தாம, வயல்ல கிடந்த வைக்கோலையே மக்க வெச்சு அடியுரமா போட்டு சாகுபடி செய்தப்போ... நெல் அருமையா விளைஞ்சுது.

அதுல இருந்து தொழுவுரம் பயன்படுத்துறதையே நிறுத்திட்டேன். நெல் சாகுபடிக்கு வைக்கோலைத்தான் அடியுரமாப் பயன்படுத்திக்கிட்டுருக்கேன்'' என முன்கதை சொன்ன திருஞானசம்பந்தம், வைக்கோலை அடியுரமாகப் பயன்படுத்தும் தொழில்நுட்பம் பற்றிச் சொல்லத் தொடங்கினார்.

15 நாளில் மக்கிவிடும்!

தொழுவுரத்துக்குப் பதிலாக... வைக்கோல் உரம் !

அறுவடைக்குப் பிறகு வயலில் கிடக்கும் வைக்கோல் மீது பசும் இலை, தழைகளைப் பரவலாகப் போட்டு, வயலில் உழவு ஓட்டும் அளவுக்கு தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.

அப்படிப் பாய்ச்சும்போது ஏக்கருக்கு 200 லிட்டர் அளவுக்கு அமுதக்கரைசலைத் தண்ணீரில் கலந்துவிட வேண்டும். பிறகு, ரோட்டாவேட்டர் மூலமாக மண்ணோடு மண்ணாக வைக்கோலை அழுத்திவிட வேண்டும்.

அடுத்த 15 நாட்களில் மண்ணின் நிறத்தில் மாற்றம் தெரியும். மண்ணைக் கிளறிப் பார்த்தால்... ஒரு சிறு துண்டு வைக்கோல்கூட இல்லாத அளவுக்கு மட்கி விடும். சாதாரணமாக வயலில் அறுத்துப் போட்ட வைக்கோல் மட்குவதற்கு 45 நாட்கள் பிடிக்கும்.

பூச்சிகளுக்கு அமுதக்கரைசல்!

சூரிய வெப்பம், ஒளி, காற்று, ஈரம், பச்சையம் எல்லாம் சேர்ந்து வைக்கோலை நல்ல அடியுரமாக மாற்றியிருக்கும். 20-ம் நாள் மீண்டும் ஒரு சால் உழவு ஓட்டி விட்டு நடவுப் பணிகளைத் தொடங்கலாம்.

நடவு செய்த 15 மற்றும் 45-ம் நாட்களில் ஏக்கருக்கு 100 லிட்டர் தண்ணீரில் 10 லிட்டர் அமுதக்கரைசல் என்ற கணக்கில் கலந்து பயிர்கள் மீது தெளிக்க வேண்டும். இது பூச்சி மற்றும் நோய்த் தாக்குதலைக் கட்டுப்படுத்தும்.

அடுத்த போகத்துக்கு அதிக அவகாசம் இருந்தால்... இலை, தழைகளைப் போடுவதற்குப் பதிலாக... சணப்பு, தக்கைப்பூண்டு போன்ற பசுந்தாள் உரங்களை உற்பத்தி செய்தும் வைக்கோலை மக்க வைக்கலாம்.

இதற்கு, வைக்கோலில் நீர் பாய்ச்சி, ஏக்கருக்கு 20 கிலோ தக்கைப்பூண்டு விதையைத் தூவி விடவேண்டும். பிறகு, ஏக்கருக்கு 10 லிட்டர் அமுதக்கரைசலை 100 லிட்டர் தண்ணீரில் கலந்துத் தெளிக்க வேண்டும். 45-ம் நாள் தக்கைப்பூண்டை மடக்கி உழுது சாகுபடியைத் தொடங்கலாம்.

ஏக்கருக்கு 1,800 கிலோ நெல்!

தொழுவுரத்துக்குப் பதிலாக... வைக்கோல் உரம் !

தொழில்நுட்பங்களை விவரித்த திருஞானசம்பந்தம், ''மொத்தமுள்ள 10 ஏக்கர் நிலத்துல, எட்டு ஏக்கர்ல வைக்கோல்தான் அடியுரம். மீதியிருக்கற ரெண்டு ஏக்கர்ல ஆட்கள் மூலமா அறுவடை செய்து, அதுல கிடைக்கிற வைக்கோலை மாடுகளுக்குத் தீவனமா பயன்படுத்திக்கிறேன்.

அதனால இந்த ரெண்டு ஏக்கர்ல மட்டும் ஏக்கருக்கு 500 கிலோ அளவுக்கு மண்புழு உரத்தை அடியுரமாவும், மேலுரமாவும் போடுறேன்.

வைக்கோலை அடியுரமா பயன்படுத்துற வயல்ல கிடைக்கிற அதே அளவு மகசூல் (ஏக்கருக்கு 1,800 கிலோ), மண்புழு உரம் போடற வயல்லயும் கிடைக்குது. இதிலிருந்தே மண்புழு உரத்துக்கு நிகரா வைக்கோல் உரமும் வேலை செய்யும்கிறது தெளிவாகுது.

வைக்கோல் ஒரு வரப்பிரசாதம்!

வைக்கோலோட மகத்துவம் தெரியாம பல விவசாயிக, தீ வெச்சுக் கொளுத்தி மண்ணுக்குக் கிடைக்க வேண்டிய சத்தான உரத்தை இழந்துடறாங்க.

தொழுவுரம் கிடைக்காதவங்களுக்கும் மெஷின் மூலமா நெல் அறுவடை செய்றவங்களுக்கும் வைக்கோல் ஒரு வரப்பிரசாதம். இதை நெல்லுக்கு மட்டும் இல்லாம... எல்லாப் பயிர்களுக்குமே மண்ணை வளமாக்குறதுக்குப் பயன்படுத்தலாம்'' என்று சொன்ன திருஞானசம்பந்தம், ''நாலு வருசமா இந்த மாதிரிதான் சாகுபடி பண்ணிட்டிருக்கேன்.

ஒவ்வொரு தடவையும் மகசூல் முன்ன பின்ன இருந்தாலும்... சராசரி மகசூல் 1,800 கிலோவுக்குக் குறையுறதில்லை'' என்றார் பெருமை பொங்க!

படங்கள்: கே. குணசீலன், ர. அருண் பாண்டியன்

 தென்னனயில் ஆண்டுக்கு 200 காய்கள்

தொழுவுரத்துக்குப் பதிலாக... வைக்கோல் உரம் !

 தென்னை சாகுபடி பற்றி பேசும் திருஞானசம்பந்தம், ''தென்னையைப் பொறுத்தவரைக்கும் நான் எப்போதுமே ரசாயன உரங்கள் பயன்படுத்துனதில்ல. தென்னை மட்டை, கொட்டாங்குச்சி, தேங்காய் மட்டை உள்பட எல்லா தென்னைக் கழிவுகளையும் வாய்க்கால்ல போட்டு, 15 நாளுக்கு ஒரு தடவை தண்ணீர் பாய்ச்சுவேன். அவ்வளவுதான். இந்தக் கழிவுகள்தான் மக்கி உரமா மாறிடுது. வருஷத்துக்கு ரெண்டு தடவை ஒவ்வொரு தென்னை மரத்தைச் சுத்தியும் ரெண்டு லிட்டர் அமுதக்கரைசலைத் தெளிச்சி விடுவேன். ஒரு மரத்துல இருந்து வருஷத்துக்கு 200 காய்கள் கிடைக்குது'' என்கிறார்.

 வீரியமான அமுதக்கரைசல்!

சாணத்தைக் கொண்டுதான் அமுதக்கரைசல் தயாரிப்பது வழக்கம். ஆனால், திருஞானசம்பந்தம் சாண எரிவாயு கலனில் இருந்து வெளிப்படும் கசடுகளைக் கொண்டு அமுதக்கரைசல் தயாரிக்கிறார்.

தொழுவுரத்துக்குப் பதிலாக... வைக்கோல் உரம் !

''எரிவாயுக்கலன் கசடு -5 கிலோ, மாட்டுச் சிறுநீர்-5 லிட்டர், வெல்லம்-500 கிராம் இவற்றை 40 லிட்டர் தண்ணீரில் கலந்து 24 மணி நேரம் வைத்திருந்தால்... அமுதக்கரைசல் தயாராகி விடும். 100 லிட்டர் தண்ணீரில் 10 லிட்டர் கரைசலைக் கலந்து ஒரு ஏக்கரில் உள்ள பயிர்கள் மீது தெளிக்கலாம். இந்த முறையில் தயாரிக்கும் அமுதக்கரைசல் அதிக வீரியமாக இருக்கிறது'' என்று அனுபவப் பாடம் சொல்கிறார் திருஞானசம்பந்தம்.

 தொடர்புக்கு
திருஞானசம்பந்தம்,
அலைபேசி: 94429-33912.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு