பிரீமியம் ஸ்டோரி

'வீட்டு மூலிகை... விரட்டும் நோய்களை!’

நாட்டு நடப்பு
##~##

மதுரை, சேவா நிறுவனத்தின் கால்நடைகளுக்கான பாரம்பரிய மருத்துவப் பயிற்சி முகாம், திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம், நடராஜன் பண்ணையில் ஆகஸ்ட் 13, 14 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. 'பசுமை விகடன்’ ஊடக ஆதரவுடன் நடைபெற்ற இந்த முகாமில், தமிழகம் முழுவதிலும் இருந்து வந்திருந்த விவசாயிகள் பங்கேற்றனர். சேவா அமைப்பைச் சேர்ந்த விவேகானந்தன் பேசும்போது, ''வீட்டுத் தோட்டத்தில் சோற்றுக்கற்றாழை, நொச்சி, ஆடாதொடை, யானைநெருஞ்சி, எலும்புஒட்டி, செம்பிரண்டை, துளசி... போன்ற மூலிகைச் செடிகளை வளர்த்து வந்தால், மனிதர்களுக்கும், கால்நடைகளுக்கும் ஏற்படக்கூடிய நோய்களை மூலிகை வைத்தியம் மூலமாகவே எளிதில் தடுத்துவிட முடியும்'' என்றார்.

காய்ச்சல், ரத்தக் கழிச்சல், குடற்புழுக்கள், ஜீரணக் கோளாறு போன்ற கால்நடைகளைத் தாக்கும் நோய்களுக்கான வைத்திய முறைகள்; மூலிகைகளைக் கண்டறிதல்; மூலிகை உருண்டை தயாரித்தல்; குடற்புழு நீக்க மருந்து தயாரித்து கால்நடைகளுக்குக் கொடுத்தல்... போன்ற பயிற்சிகள் செய்முறை விளக்கத்தோடு அளிக்கப்பட்டன.

காசி. வேம்பையன்.

இயற்கை வழி வேளாண்மைக்கு சான்றிதழ் படிப்பு!.

இந்தியாவில் முதல்முறையாக இயற்கை உழவாண்மைக்காக திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழகம் சான்றிதழ் படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. பல்கலைக்கழகத்தின் கரூர் மாவட்ட வழிகாட்டி வேலைவாய்ப்பு மேம்பாட்டு நிறுவனமாக இயங்கி வரும், கரூர் அருட்பெருஞ்சோதி கல்வி அறக்கட்டளையில் தற்பொழுது இந்த வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

நாட்டு நடப்பு

அறக்கட்டளையைச் சேர்ந்த குமரநித்யானந்த சோதி இத்திட்டம் பற்றி பேசும்போது, ''இந்தப் படிப்பு இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ. நம்மாழ்வார் அவர்களின் வழிகாட்டுதலுடன் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும்தான் பயிற்சி வகுப்புகள் நடைபெறும். இதில் சேர்வதற்கு கல்வித் தகுதி, வயது வரம்பு எதுவும் தேவையில்லை. மூன்று மாதப் பயிற்சி முடிந்த பிறகு பல்கலைக்கழகத்தில் இருந்து 'இயற்கை வழி வேளாண்மை’ என்ற சான்றிதழ் வழங்கப்படும்.

இந்தப் படிப்பில் செய்முறைப் பயிற்சியும் உண்டு. மண்புழு வளர்ப்பு, தேனீ வளர்ப்பு, கால்நடை வளர்ப்பு, மரம் வளர்ப்பு பற்றியும் செயல்முறையோடு பயிற்சி வழங்கப்படுகிறது. இயற்கை வேளாண்மையின் முன்னோடிகள் பற்றியும் மரபணு மாற்றுப் பயிர்களால் விளையும் தீமைகள், எண்டோஃசல்பான் உயிர்கொல்லியால் ஏற்படும் தீமைகளைப் பற்றியும் கற்றுத் தருகிறோம். இயற்கை விளைபொருட்களை சந்தைப்படுத்துதல் பற்றிய வழிகாட்டுதலும் வழங்கப்படுகிறது. படிப்புக்கான கட்டணம் 1,950 ரூபாய்.

இயற்கை விவசாயம் பற்றிய ஐந்து நாள் குறுகியப் படிப்பும் வழங்கப்படுகிறது. அனைத்துப் பயிற்சியின் இறுதியிலும் செய்முறைத் தேர்வும் எழுத்துத் தேர்வும் நடத்தி அதில் மாணவர்கள் பெற்றுள்ள மதிப்பெண்களின் அடிப்படையில் சான்றிதழ் வழங்கப்படுகிறது'' என்று சொன்னார்.

நா. சிபிச்சக்கரவர்த்தி

புதன்கிழமையில் 'பிரின்ட் அவுட்' இல்லை!

சென்னையில் ஆகஸ்ட் 19-20 தேதிகளில் 'வளம் குன்றா வணிக வளர்ச்சியை நோக்கி பசுமை’ என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. இந்திய நிறுவன செயலர்கள் பயிற்சி மையத்தின் (The Institute of Company Secretaries of India) தென்மண்டல அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.

நாட்டு நடப்பு

மையத்தின் தலைவர், அனில் முராகா பேசும்போது, ''வணிக வளர்ச்சி வேகமாக நடந்து வருகிறது. இதைக் காரணம் காட்டி, சுற்றுச்சூழலுக்குக் கேடு ஏற்படுத்தக் கூடாது. இங்கு கூடியிருக்கும் நீங்கள், வணிக நிறுவனங்களில் உயர்பதவிகளில் இருப்பீர்கள். நிறுவனம் எந்தக் கொள்கை முடிவு எடுத்தாலும், அது சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்காமல் பார்த்துக் கொள்வது முக்கியம்.

எங்கள் மையத்தில் காகிதத்தின் பயன்பாட்டை வெகுவாகக் குறைத்து வருகிறோம். தேர்வு அனுமதி அட்டை, மதிப்பெண் சான்றிதழ் போன்றவை இணையதளத்தில் வெளியிடுகிறோம். தகவல் தொடர்புகள் அனைத்தும் மின்னஞ்சல் மூலமே நடைபெறுகின்றன. வாரத்தில் புதன்கிழமை அன்று, 'பிரின்ட் அவுட் எடுப்பதில்லை' என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இப்படி, வாய்ப்பு கிடைத்த இடங்களில் எல்லாம், சூழலைக் காக்கும் நடவடிக்கைகளை எடுக்கிறோம்'' என்று அருமையான யோசனைகளை முன் வைத்தவர், ''இதேபோன்று நீங்கள் அனைவரும் செயல்பட வேண்டும்'' என்று வேண்டுகோள் வைத்தார்.

ஆன்மிகச் சொற்பொழிவாளர் சுகி. சிவம், ''நாம் வாழும் பூமி, மகத்தானது. பணத்துக்காக, மண்ணையும், சூழலையும் கெடுக்கும் செயல்களில் ஈடுபட வேண்டாம். அப்படிச் செய்வது என்பது, பெற்ற தாயையே பலாத்காரம் செய்வதற்குச் சமம். நம் பேரப் பிள்ளைகளுக்கு சுத்தமானக் காற்றையும், சுகாதாரமான தண்ணீரையும்... உருவாக்கிக் கொடுப்பததுதான் உண்மையானச் சொத்து'' என்று உணர்ச்சிவசப்பட்டுச் சொன்னார்.

ஆறுச்சாமி
படங்கள்: சொ. பாலசுப்ரமணியன்

வருகிறது... விவசாய 100 நாள் வேலைத் திட்டம் !

நாட்டு நடப்பு

திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலத்தில் ஆகஸ்ட் 20-ம் தேதி வேளாண்மைத்துறை, வேதபுரி வேளாண் அறிவியல் மையம் மற்றும் அன்னை தெரசா தொண்டு நிறுவனம் ஆகியவை இணைந்து வேளாண் கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்திருந்தன. நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் 'வேட்டவலம்' மணிகண்டன், ''விவசாயத்துக்கு ஆள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

100 நாள் வேலைத் திட்டத்தை, கேரளா போல் விவசாய வேலைகளுக்குப் பயன்படுத்தலாமா? என்று அரசு ஆலோசனை செய்து வருகிறது. கூடிய விரைவில் அதற்கான அறிவிப்பை தமிழக முதல்வர் வெளியிடுவார்'' என்று வரவேற்கத் தக்கதொரு செய்தியைச் சொன்னார்.

காசி. வேம்பையன்.
படம்: ச. வெங்கடேசன்.
 

 
'மான்சான்டோவே  வெளியேறு !'

'மண்ணை மலடாக்கி, நமது விவசாயிகளிடம் இருக்கும் பாரம்பரிய விதைகளை அழிக்கக்கூடிய ஆராய்ச்சிகளை, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்திலேயே நடத்தி வரும் மான்சான்டோ நிறுவனமே... அனைத்தையும் நிறுத்திவிட்டு நாட்டை விட்டே வெளியேறு'

-இப்படியரு முழக்கத்துடன் ஆகஸ்ட் 9-ம் தேதியன்று கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்பாட்டத்தை நடத்தியது பசுமைப் பாதுகாப்பு இயக்கம்.

நாட்டு நடப்பு

ஆர்ப்பாட்டத்தின்போது பேசிய அமைப்பின் இணைப்பாளர் உடுமலை ரவி, ''1942-ம் ஆண்டு, ஆகஸ்ட் 9-ம் தேதி காந்திஜி, 'வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தைத் தொடங்கினார். அதேபோல், இந்திய விவசாயிகளை அழிக்கும் அமெரிக்காவின் மான்சான்டோ நிறுவனத்தை விரட்டத்தான் இந்த நாளைத் தேர்ந்தெடுத்தோம். மரபணு மாற்றம் செய்யப்பட்ட மலட்டு விதைகளால், மண், மனிதன், கால்நடை, சுற்றுச்சூழல் என அனைத்துக்கும் ஆபத்து ஏற்படும். அத்தகைய வேலையை, இந்தியாவில் சத்தமில்லாமல் செய்துகொண்டிருக்கிறது மான்சான்டோ. இந்நிறுவனத்தை இந்தியாவை விட்டு விரட்டும் வரை எங்கள் போராட்டம் தொடரும்.

'காய்ப்புழுக்களைக் கட்டுப்படுத்தும்' என்று கூவிக்கூவித்தான் பி.டி. பருத்தியை இந்தியாவில் வியாபாரம் செய்து வருகிறது மான்சான்டோ. ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை என்பது குஜராத் மாநிலத்தில் நிரூபணமாகிவிட்டது. அதை ஒப்புக் கொண்டுவிட்ட மான்சான்டோ... போல்கார்டு-2. என்ற பெயரில் புதிதாக ஒரு பி.டி. ரக பருத்தி விதையை விற்பனை செய்ய ஆரம்பித்திருக்கிறது. இதுவும் ஒரு மோசடிதான். 'அணு ஆயுதங்களைக் கொண்டு இனி இந்தியாவை அடிமைப்படுத்தத் தேவையில்லை.

பாரம்பரிய விவசாய விதைகளை முடக்கி, உணவுத் தட்டுப்பாட்டை உருவாக்கி, விதைத் தேவைகளுக்கு தன்னிடம் இந்தியாவே கையேந்த வேண்டும்' என்பதுதான் மான்சான்டோவின் நோக்கம். அதற்கு இங்கிருக்கும் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் துணை போய் கொண்டுள்ளனர்'' என்று சாடினார்.

- ஜி. பழனிச்சாமி

ஜப்தி நடவடிக்கை... இனி இருக்காது !

நாட்டு நடப்பு

''கழுத்தை நெறிக்கும் டிராக்டர் கடன்.. கண்ணீர் விடும் விவசாயிகள்...' என்ற தலைப்பில் 25.7.2011-ம் தேதியிட்ட இதழில் விவசாயிகளின் துயரங்களைப் பதிவு செய்திருந்தோம். இந்த விஷயத்தை சட்டமன்றத்தில் எதிரொலித்த சிதம்பரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் கட்சி), ''தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும், முந்நூறுக்கும் மேற்பட்ட டிராக்டர்களை வங்கி அதிகாரிகள் ஜப்தி செய்திருக்கிறார்கள். கடன் பாக்கியை வசூலிக்கும்போது, மனிதநேயமற்ற முறையில் நடந்து கொண்டதால், கடந்த ஆட்சியில் விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு விவசாயி தற்கொலை செய்து கொண்டுள்ளார். வங்கிகள் தான்தோன்றித்தனமாகச் செயல்படுகின்றன. 'இனி, மாநில அரசின் அனுமதி இல்லாமல் ஜப்தி நடவடிக்கையில் இறங்கக்கூடாது’ என வங்கிகளை தமிழக அரசு கட்டாயப்படுத்த வேண்டும்' என்று வேண்டுகோள் வைத்தார்.

இதற்கு பதில் சொன்ன முதல்வர் ஜெயலலிதா, ''தற்போது தமிழ்நாட்டில் ஜப்தி நடவடிக்கைகள் முழுமையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மீறி நடைபெற்றால், தடுத்து நிறுத்தத் தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்கும்' என்று உறுதி கூறியிருக்கிறார்.

- காசி. வேம்பையன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு