Published:Updated:

மீத்தேன் எமன் - 'தனியார் தப்பு... அரசாங்கம் சரி...'

கு. ராமகிருஷ்ணன் ஓவியம்: செந்தில், படங்கள்: கே. குணசீலன்

மீத்தேன் எமன் - 'தனியார் தப்பு... அரசாங்கம் சரி...'

கு. ராமகிருஷ்ணன் ஓவியம்: செந்தில், படங்கள்: கே. குணசீலன்

Published:Updated:

போராட்டம்

பாலைவனமாகும் பரிதாப டெல்டா

'நிழல் நிஜமாகிறது’ என்ற திரைப்படத்தில் வரும் காட்சி இது... பேருந்திலிருந்து இறங்கும் கமல்ஹாசன், கீழே நின்று கொண்டிருப்பார். பேருந்தின் மீதிருந்து அவருடைய சூட்கேஸை எடுத்து கையில் தரும் கிளீனர் பையன், வயதான பெண்மணியின் பழக்கூடையைப் பேருந்திலிருந்து கீழே தள்ளிவிடுவார். கோபத்தோடு அவனுடைய பனியனைப் பிடிக்கும் கமல், பழங்களைப் பொறுக்கித் தரச்சொல்வார். கமலை வரவேற்பதற்காக வந்திருக்கும் சரத்பாபு, ''உனக்கு ஏண்டா இந்த வீண் வம்பு..?'' என்பார். ''வீண் வம்பாவது பாவம் கிழவி?'' என்று கமல் சொல்ல... ''சரி, ஊர் வம்பு.. அதான் உன்ன எல்லாரும்...'' என்று வார்த்தைகளை இழுப்பார் சரத்பாபு. உடனே, ''கம்யூனிஸ்டும்பாங்க... அக்கிரமம் செய்றவங்கள அதட்டிக் கேக்குறவன் கம்யூனிஸ்ட்னா... நான் கம்யூனிஸ்ட்தான்' என்பார், கமல். ஆனால், இன்றைய யதார்த்தம், நம்மை வேதனையில் ஆழ்த்துகிறது. தங்களை 'கம்யூனிஸ்டுகள்’ எனக் கம்பீரமாகச் சொல்லிக்கொள்ளும் பலர், நடைமுறை வாழ்க்கையில் உண்மையான கம்யூனிஸ்டாக வாழ விரும்புவதில்லை.

மீத்தேன் எமன் - 'தனியார் தப்பு... அரசாங்கம் சரி...'

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'பாட்டாளிகளின் பாதுகாவலன்’, 'ஏழைகளின் பங்காளன்’, 'ஒடுக்கப்படுபவர்களின் தோழன்’... என்றெல்லாம் அலங்கார வார்த்தைகளில் முழங்கக்கூடிய கம்யூனிஸ்டுகள், மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராகக் குரல் கொடுக்க மறுக்கிறார்கள். மக்களின் வாழ்வாதாரங்களை அழிக்கக்கூடிய ஆபத்தான திட்டங்களுக்கு வெளிப்படையாகவே தோள் கொடுக்கவும் தொடங்கி விட்டார்கள். கடந்த அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக, கம்யூனிஸ்ட் இயக்கங்கள் கோலோச்சுகின்ற திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்ட கிராமங்களில்தான் ஒ.என்.ஜி.சி நிறுவனத்தால், மக்கள் அடுக்கடுக்கான துயரங்களை அனுபவிக்கிறார்கள். ஆனாலும், கம்யூனிஸ்டுகளின் கண்கள் சிவக்கவில்லை. மக்களின் வாழ்வாதாரங்கள் அழிக்கப்பட்டு, அநீதி இழைக்கப்பட்ட போதிலும் கம்யூனிஸ்டுகளிடமிருந்து ஆவேசக்குரல்கள் ஓங்கி ஒலிக்கவில்லை. நிவாரணம், இழப்பீடு என்ற இரண்டு சொற்கள் மட்டுமே இவர்களிடமிருந்து அவ்வப்போது பெயரளவுக்கு ஒலித்து வருகிறது. 'விளைநிலங்களைப் பிளந்து, மீத்தேன், நிலக்கரி எடுத்தால், கடும் ஆபத்துகளைச் சந்திக்க நேரிடும்’ என்ற பதைபதைப்போடு மக்கள் போராட்டம் டெல்டா மாவட்டங்களில் அனல் பறக்கிறது. ஆனால், இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் பெரிய அளவிலான, ஆக்கப்பூர்வமான எந்த ஒரு போராட்டத்தையும் நடத்தவில்லை’ என விவசாயிகள் ஆதங்கப்படுகிறார்கள்.

'இக்கட்சிகளில் உள்ள உள்ளூர் தலைவர்கள், மீத்தேன் திட்டத்துக்கு எதிராகப் பேசினாலும்கூட, வீரியமாகப் போராட மறுப்பது ஏன்?’ என்ற குற்றச்சாட்டு காம்ரேட்டுகளை உலுக்கியெடுக்கிறது. கட்சியின் தலைமைக்குக் கட்டுப்பட்டு, கட்டுண்டு கிடக்கிறார்கள், இவர்கள். நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்துக்காக, மன்னார்குடிக்கு வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத், 'மீத்தேன் திட்டம் தொடர்பான மக்களின் அச்சத்தை அகற்றி, தெளிவுப்படுத்த ஆய்வுக்குழு அமைக்க வேண்டும்’ என்றார். இதனை நாம் எப்படி எடுத்துக் கொள்வது? 'மக்களுக்கு பயம் ஏற்படாத வகையில், மென்மையான, விஞ்ஞான வார்த்தைகளில் பேசி, மூளைச்சலவை செய்து சம்மதிக்க வைக்க வேண்டும்’ எனச் சொல்கிறாரா?

மீத்தேன் எமன் - 'தனியார் தப்பு... அரசாங்கம் சரி...'

'தனியார் நிறுவனம், மீத்தேன் எடுப்பதை அனுமதிக்க முடியாது’ என்கிறது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. 'மீத்தேன் வாயுவை, அரசு எடுத்தால் அனுமதிக்கலாம்’ என்ற விநோதமான நிலைப்பாட்டில் இருக்கிறார்கள். 'அரசாங்கம் பாம்பு, தேள் ஆகியவற்றை வளர்த்தால் அவை கடிக்காது’ எனச் சொல்வது எத்தனை அபத்தம்? பல ஆயிரம் அடி ஆழத்துக்கு விளைநிலங்களைத் தோண்டி, மீத்தேன் எடுத்தால், நிலத்தடி நீர் பாதிக்கப்படும். கொடிய நச்சுத்தன்மை வாய்ந்த ரசாயனக் கழிவுகளால், ஆபத்தான உயிர்க்கொல்லி நோய்கள் உருவாகி, மக்களை அழித்தொழிக்கும். பூமியில் ஏராளமான வெற்றிடங்கள் உருவாகி, பூகம்பம் உருவாகும். இப்படியாக இன்னும் பல பேராபத்துகளுக்கு அஞ்சிதான்... காவிரி டெல்டா மக்கள், மீத்தேன் திட்டத்தை எதிர்த்து, தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். மீத்தேன் வாயுவை, தனியார் நிறுவனமான 'தி கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி’ நிறுவனம் எடுத்தாலும்... மத்திய அரசு நிறுவனமான 'ஒ.என்.ஜி.சி’ எடுத்தாலும்... பேராபத்துகள் கண்டிப்பாக நிகழும். மீத்தேன் திட்டத்தை முழுமையாக விரட்டி அடித்தால்தான் மக்கள் நிம்மதியாக வாழ முடியும்.

தற்போது ஒ.என்.ஜி.சி நிறுவனம் புதிய கிணறுகள் அமைப்பதற்கான முயற்சிகளில் தீவிரமாக இறங்கியுள்ளது. இதனை எதிர்த்து மக்கள் போராட்டம் வலுவடைந்து வருகிறது. 'நாங்கள் மீத்தேன் எடுக்கவில்லை... வழக்கமான பெட்ரோல்-கேஸ்தான் எடுக்கப் போகிறோம்’ என்கிறார்கள், ஒ.என்.ஜி.சி அதிகாரிகள். ஆனால், இதனை ஏற்றுக்கொள்ள விவசாயிகள் தயாராக இல்லை. 'இதுவும் எங்களுடைய வாழ்வாதாரங்களை அழிக்கிறது. இதனால், நாங்கள் ஏற்கெனவே அனுபவித்து வரும் துயரங்கள் ஏராளம். இனி, பெட்ரோல்-கேஸ் கிணறுகள் அமைக்கவும் அனுமதிக்க மாட்டோம்’ எனப் போராடி வருகிறார்கள், இவர்கள்.

மீத்தேன் எமன் - 'தனியார் தப்பு... அரசாங்கம் சரி...'

இந்நிலையில்தான், நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி தாலூகாவில் உள்ள திருநகரி கிராமத்தில், மக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி, புதிய கிணறு அமைக்க அசுர வேகத்தில் களம் இறங்கியுள்ளது, ஒ.என்.ஜி.சி நிறுவனம். சாதி, மதம், கட்சி வேறுபாடுகளைக் கடந்து, இங்குள்ள மக்கள் ஒன்றுபட்டு உணர்வுப்பூர்வமான போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

''என் மனைவிதான் இப்ப ஊராட்சி மன்றத் தலைவி. ஒ.என்.ஜி.சி உயரதிகாரிகள், எங்க வீட்டுக்கே நேரடியா வந்து, எங்ககிட்ட பேசிப் பார்த்தாங்க. 'புதுசா ரோடு போட்டு தர்றோம். ஆஸ்பத்திரி, பள்ளிக்கூடம் கட்டித் தர்றோம். பெட்ரோல்-கேஸ் கிணறு அமைக்க ஒத்துழைப்பு கொடுங்க’னு கேட்டுப் பார்த்தாங்க. நாங்க மறுத்துட்டோம். தனிப்பட்ட முறையில எனக்கு பல லட்சம் ரூபாய் கமிஷன் கொடுக்கவும் அவங்க தயாரா இருந்தாங்க. அதுக்கெல்லாம் நாங்க ஆசைப்படல. ஒ.என்.ஜி.சி ஆசை காட்டிய வளர்ச்சித் திட்டங்களுக்கு எங்க ஊர் மக்களும் மயங்கல. இதுல பெருமைப்பட ஒண்ணும் இல்லை. எங்களோட வாழ்வாதாரத்தைக் காப்பாத்திக்க நாங்க போராடிட்டு இருக்கோம்.

நான் தி.மு.க ஒன்றியப் பொருளாளரா இருக்கேன். எங்க கட்சியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள்கூட என்கிட்ட பேசிப் பார்த்தாங்க. 'பெட்ரோல்-கேஸ் கிணறு அமைக்குறதுனால பாதிப்பு வராது. ஒ.என்.ஜி.சி-க்கு ஒத்துழைப்பு கொடுங்க’னு வெளிப்படையாவே சொன்னாங்க. அவங்க மேல, நான் நிறைய மதிப்பு வெச்சிருக்கேன். என்கிட்ட ரொம்ப நெருக்கமா, அன்பா இருப்பாங்க. ஆனாலும் கட்சியைவிட, எங்க ஊர் மக்களோட நிம்மதிதான் முக்கியம். எங்க ஊர் மக்களும் இதுல உறுதியா இருக்காங்க'' என்கிறார், திருநகரி ஊராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவர் கணேசன்.

''எங்க ஊர்ல ஆறு வருஷத்துக்கு முன்ன அமைச்ச பெட்ரோல்-கேஸ் கிணறால, ஏற்கெனவே நிறைய பாதிப்புகளை அனுபவிச்சுக்கிட்டு இருக்கோம். மறுபடியும் புதுசா இன்னொரு கிணறு அமைச்சா, எங்க ஊர் சுடுகாடா மாறிடும். அதனாலதான் கடுமையா எதிர்க்கிறோம். ஆனா, எங்களுக்குத் தோள் கொடுக்க வேண்டிய இந்திய கம்யூனிஸ்டு கட்சி, ஒ.என்.ஜி.சி-க்கு ஆதரவா நடந்துக்குது. அந்தக் கட்சியோட அதிகாரப்பூர்வ அரசியல் நாளிதழான, 'ஜனசக்தி’ நாளிதழ்ல, எங்க ஊர் மக்களோட போராட்டங்களைக் கொச்சைப்படுத்தி செய்தி வெளியிடறாங்க'' என ஆதங்கப்பட்டார், இப்பகுதியைச் சேர்ந்த விவசாயி கோபாலகிருஷ்ணன்.

ஜனசக்தி செய்தியைப் படித்துப் பார்த்தேன். மக்கள் போராட்டத்தை இவ்வளவு மோசமாகச் சித்தரிக்க முடியுமா? என கடும் அதிர்ச்சியடைந்தேன். அதுவும் போராட்டத்துக்குப் பெயர் போன கம்யூனிஸ்டுகளா விமர்சிப்பது? என்கிற ஆதங்கம் என்னுள் பொங்கியது. அந்தச் செய்தியை பற்றி அடுத்த இதழில் விரிவாகச் சொல்கிறேன்.

- பாசக்கயிறு நீளும்...

சேதி கேட்டீங்களா!

விவசாயிகளுக்கு இலவச 'ஐபேட்’... அசத்தும் ஆந்திரா!

மீத்தேன் எமன் - 'தனியார் தப்பு... அரசாங்கம் சரி...'

'ஆந்திர மாநிலத்தில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் 'ஐ-பேட்’ இலவசமாக வழங்கப்படும்’ என்று அறிவித்துள்ளார் முதல்வர் சந்திரபாபு நாயுடு. விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகளோடு நடைபெற்ற கலந்துரையாடலில் பேசியபோது, 'ஆந்திராவில் விவசாயத்தைப் பெருக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அவை உடனடியாக விவசாயிகளிடம் சென்றடைவதற்கு ஏதுவாக, அனைத்து விவசாயிகளுக்கும் 'ஐ-பேட்’ சாதனம் இலவசமாக வழங்கப்படும். இந்தச் சாதனத்தின் வழியாக நிலத்தின் காரத்தன்மை, ஏற்ற பயிர் எது...? எந்தப் பருவத்தில் என்ன விதமான பயிர் செய்தால், அமோக விளைச்சலைப் பெறலாம்...? தரமான விதைகளைத் தேர்ந்தெடுப்பது எப்படி...? விவசாயிகள் தாங்கள் விளைவித்த பயிர்களை எப்படி விற்பனைக்கு கொண்டு செல்வது...? என அடுக்கடுக்கான தகவல்களை 'ஐ-பேட்’ சாதனத்தின் வழியாக, விவசாயிகளுக்கு அனுப்பப்படும். இதன் மூலம் விவசாயிகள் நிலத்தின் தன்மைக்கேற்ப பயிரிட்டு, நல்ல விளைச்சலைப் பெறுவார்கள்’ என்கிறார்.             

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism