Published:Updated:

மண்புழு மன்னாரு

ஓவியம்: ஹரன்

மண்புழு மன்னாரு

ஓவியம்: ஹரன்

Published:Updated:

மாத்தி யோசி

 வாழ்நாள் முழுக்க சம்பாதிக்கிற முக்கால் பகுதி பணத்தை, குருவிக்கூண்டு மாதிரி (அப்பார்ட்மெண்ட்) வீடு கட்டுறதுக்கே செலவு செய்ற காலம் இது. ஆனா, இப்படி கட்டுற வீடுங்க, லேசா மழை தூறினாகூட சீட்டுக்கட்டு போல, சரிஞ்சி விழற கொடுமையும் நடக்குது. ஆறு அறிவு உள்ள மனுஷன், இயற்கைக்குத் தக்கப்படி வீட்டைக் கட்டி வாழற வித்தையை மறந்துட்டான். ஆனா, ஓர் அறிவு உள்ள கரையான், மண் வீடா இருந்தாலும், திறமையா கட்டி வாழுது. எப்பவாவது, அடைமழை அடிச்சி, கரையான் புத்து கரைஞ்சி போனதைப் பார்த்திருக்கீங்களா..? பூகம்பம் வந்து இடிஞ்சி விழுந்த கரையான் புத்துதான் கண்ணுல பட்டிருக்கா? இருக்கவே இருக்காது. ஏன்னா கரையான்தான், இயற்கையை முழுமையா படிச்சு வீடு கட்டி வாழற இன்ஜினீயர்.

கரையான் புத்து இருக்கிற இடம் எப்பவும் குளுமையா இருக்கும். காரணம்... நீரோட்டம் உள்ள இடத்துலதான் கரையான்கள் புத்து கட்டும். அதனாலதான் நம்ம பெரியவங்க 'புத்துக் கண்டு கிணறு’ வெட்டுனு சொல்லி வெச்சிருக்காங்க. புத்து இருக்கிற இடத்துல வெயில் முழுமையா படாது. எவ்வளவு வேகமா காத்து வீசினாலும், புத்துக்கு சேதம் வராது. குறிப்பா, மழை பெஞ்சா தண்ணி தேங்கி நிக்காது. அதாவது, படிச்சவங்க பாஷையில சொல்லணும்னா... 'ஏரோ டைனமிக்’ நுட்பத்துக்குத் தகுந்தபடிதான் கரையான்கள், புத்துகளை கட்டியிருக்கும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உயரமான கரையான் புத்தைக் கவனிச்சிப் பார்த்தா... அருமையான விஷயம் தெரியும். அதாவது, அடிப்பகுதி அகலமாவும், போக, போக குறுகியும் இருக்கும். பெரிய, பெரிய அணைக்கட்டுங்க... இந்த வடிவமைப்புலதான் கட்டியிருப்பாங்க. இதனால, நிலநடுக்கம், வேகமா மோதித்தள்ளுற நீரோடோ இழுவிசை இதையெல்லாம் தாங்குற சக்தி அணைக்கட்டுக்கு கிடைக்கும். இயற்கையா கிடைக்கிற மண், இலை, தழைகளை வெச்சித்தான் கரையானுக புத்துகட்டுதுங்க. வெளியில மண்டையை பொளக்கிற வெயில் அடிச்சாலும், கரையான் புத்துக்குள்ள குளுகுளுனுதான் இருக்கும்.

மண்புழு மன்னாரு

நம்ம நாட்டுல வெண்பன்றி இறைச்சி சாப்பிடற பழக்கம் இப்போதான் பரவிக்கிட்டு இருக்கு. ஆனா, ஐரோப்பா, சீனா மாதிரியான நாடுகள்ல வெண்பன்றி வளர்ப்பு சக்கைப்போடு போடுது. அங்க பன்றியை கொழுகொழுனு வளர்க்க ஒரு நுட்பத்தைச் செய்றாங்க. அதாவது, கொழுப்பு நீக்கின மாட்டுப் பாலை (ஸ்கிம் மில்க்), பன்றிகளுக்குக் கொடுக்கறாங்க. இந்தப் பாலைச் சாப்பிட்டா, அதிக பசி எடுக்குமாம் (கொழுப்பு நீக்காத பால் சாப்பிட்டா, பசி எடுக்காதாம்). அகோரப் பசியில நிறைய உணவைச் சாப்பிட்டு, கொழுகொழுனு பன்றிங்க வளர்ந்துடுதாம்.

விதைக்காகவும், உணவுக்காவும் சேமிச்சு வைக்கிற தானியத்துல பூச்சி புடிக்கிறது இயற்கை. பூச்சி புடிச்சா... அது நல்ல தானியம். சிலசமயம் குறிப்பிட்ட காலத்துக்கு முன்னயே, பூச்சிங்க நடமாட்டம் அதிகமா இருந்தா உஷாராயிடுங்க. குறிப்பா, ஆறு மாசம் சேமிப்புக் காலம்னா, நாலு மாசத்துக்குள்ளயே பூச்சிங்க தென்பட்டா... அது நம்ம சேமிப்புக்கு வேட்டு வைச்சுடும். அதனால, ஒரு கிலோ தானியத்தை எடுத்து, பூச்சி இருக்கானு பாருங்க. ரெண்டு பூச்சி இருந்தா, சாதாரண சேதம். மூணு பூச்சிக்கு மேல இருந்தா, சேதாரம் அதிகம்னு அர்த்தம். இதை கணக்கா வெச்சு கண்காணிங்க. பூச்சிகளால சேதாரம் இல்லாம இருக்கறதுக்கு, விதைகளை எண்ணெயில கலந்து சேமிச்சு வைக்கலாம். அதாவது, நூறு கிலோ தானியத்துக்கு, ஒரு லிட்டர் எண்ணெய்ங்கிற விகிதத்துல விலை குறைவா கிடைக்குற எண்ணெயில கலந்து சேமிக்கலாம்.

'உங்க பசங்க வேகமா வளரணும்னா, அதுக்கு இந்த மாவை தினமும் சாப்பிடுங்க’னு தினமும் டி.வி பொட்டியில விளம்பரம் வருது. இதை நம்பி கிராமத்துலகூட சத்துமாவு வியாபாரம் களைக்கட்டுது. உண்மையாவே, உங்க குழந்தைங்க வேகமா மட்டுமில்லீங்க.... திடமாவும் வளர்றதுக்கு புளியங்கொட்டை உதவுது. புளியங்கொட்டையை வறுத்து, ஊறவெச்சி, மறுநாள் சாப்பிட்டா... அற்புதமான சுவையா இருக்கும். வாசம் பக்கத்து வீடு வரைக்கும் அடிக்கும். சுவைக்கு, கொஞ்சம் அச்சு வெல்லம் சேர்த்துக்கலாம். புரதச்சத்து நெறைஞ்ச, புளியங்கொட்டையைச் சாப்பிட்டா சீக்கிரமா களைப்பு வராது. பால் கறக்குற மாட்டுக்கு தினமும் நூறு கிராம், புளியங்கொட்டையை ஊறவெச்சி கொடுக்கலாம். அரைச்சும் கொடுக்கலாம். இதனால, பாலும் கூடுதலா கிடைக்கும், மாடுகளும் ஆரோக்கியமா இருக்கும்.

காய்கறி, பழங்களை... அறுவடை செஞ்சவுடனே, காத்து புகாத சாக்குல கட்டி சந்தைக்கு எடுத்துக்கிட்டு போற பழக்கம் நிறைய பேர்கிட்ட இருக்கு. காய்கறிகள், பழங்களும் நம்மை மாதிரியே மூச்சு விடும். மூச்சுவிட முடியாதபடிக்கு அடைச்சுட்டா... சீக்கிரமாவே கெட்டுப் போயிடும். அதனால, காத்து உள்ளே போய் வர்ற மாதிரி இருக்குற பெட்டியிலயோ, சாக்கு பையிலயோதான் சேகரிச்சு எடுத்துக்கிட்டு போகணும். ஏன்னா, நம்மகிட்ட வாங்குன காய்கறிங்க... சீக்கிரமா கெட்டுப்போனா நமக்குத்தானே கெட்டப்பேரு.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism