மனிதனுக்கு ஏற்படும் பிணிகளை நீக்கும் அருமருந்துகளான மூலிகைகள், இயற்கையின் ஏற்பாட்டில், தேவையுள்ள பகுதிகளில், தேவையான மூலிகை என்கிற வகையில் தானாகவே விளைந்து கொண்டிருக்கின்றன. இதையெல்லாம் சரியாகக் கண்டுபிடித்து உண்டு, தங்களுக்கு ஏற்படும் நோய்களைத் தீர்த்துக் கொள்ளும் வித்தையை, ஒவ்வொரு உயிரினத்துக்கும் இயற்கையே கடத்தி வைத்திருக்கிறது. ஆனால், வியாபார நோக்கோடு, இதையெல்லாம் திட்டமிட்டு மறக்கடித்து விட்டனர்...கடந்த இருபது, முப்பது ஆண்டுகளில்! அத்தகைய மூலிகைகளை மீண்டும் கையில் எடுக்கவும்... அவை பற்றிய புரிதலை உண்டாக்கவுமே...’மூலிகை வனம்' எனும் இப்பகுதி இங்கே விரிகிறது.

மூலிகைகள் என்றாலே, கிடைப்பதற்கரிய ஒரு பொருள் என்கிற எண்ணம்தான் அநேகரிடம் இருக்கிறது. ஆனால், அது தவறான கருத்து. உண்மையில், நம் கண் முன்னால், கைக்கெட்டும் தூரத்தில், கடந்து போகும் பாதையில் வீதியெங்கும் வியாபித்திருக்கின்றன, மூலிகைகள். அவற்றில், குறிப்பிடத்தக்க மூலிகை, துத்தி. தமிழகத்தில் இது இல்லாத இடமே இல்லை. நிஜக்காடுகள் இருக்கும் கிராமங்கள் தொடங்கி, கான்கிரீட் காடுகளாக மாறிவிட்ட சென்னை போன்ற பெருநகரங்களிலும்கூட முளைத்துக் கிடக்கிறது துத்தி. இதன் மருத்துவப் பலன்களைக் கேட்டால் மலைத்துப் போவீர்கள்.

மூலிகை வனம் -  வீட்டுக்கொரு வைத்தியர்...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதய வடிவ இலைகள், மஞ்சள் நிறப் பூக்கள், தோடு வடிவ காய்கள் ஆகியவற்றைக் கொண்டது, துத்தி. இதன் இலைகளில் மென்மையான சுனை இருக்கும். இது உடலில் பட்டால் அரிக்கும். இது விதை மூலம் இனப்பெருக்கம் செய்யும் தாவரம். தெருவோரங்கள், தரிசு நிலங்கள், சுடுகாடுகள்... என அனைத்து இடங்களிலும் பார்க்கலாம். கிலோ கணக்கான காய்கறிகள், இறைச்சிகளில் உள்ள சத்துக்களை சில இலைகளில் அடக்கி வைத்திருக்கும் கீரைகள், இயற்கை மனித இனத்துக்கு அளித்த மகத்தான கொடைகளில் ஒன்று. தினமும் உணவில் கீரைகளை சேர்த்துக் கொள்பவர்களை அணுக அஞ்சுகின்றன, பிணிகள். அந்த வகையில் துத்திக்கீரை அதிக மருத்துவ குணம் வாய்ந்தது. உடல் புண்களை ஆற்றி, மலத்தை இளக்கி, உடலைத் தேற்றும் அதிசய மூலிகை, துத்தி.

'துத்தி மலரை நிதம் துய்க்கின்ற பேர்களுக்கு
மெத்த விந்து வும்பெருகும் மெய்குளிரும்சத்தியமே
வாயால் விழுமிரத்த மாறு மிருமலறுந்
தேயாமதி முகத்தாய் செப்பு’  என்கிறது குணபாடம்.

'துத்திப் பூவை தினமும் உட்கொண்டு வந்தால் ரத்தவாந்தி, காசநோய் நீங்கும். விந்து அதிகமாக உற்பத்தியாகும். உடல் குளிர்ச்சியடையும்’ என்பது இச்செய்யுளின் சுருக்கமான பொருள். பசும்பாலில் ஒரு கைப்பிடி துத்திப் பூவைப் போட்டு வேகவைத்து குழையும் பதத்தில் கடைந்து... சிறிது நாட்டுச் சர்க்கரை சேர்த்து உண்டு வந்தால், உடல் சூடு தணியும். விந்து கட்டும். ரத்தக் காசம் குணமாகும். துத்திப் பூவுடன் சுவைக்காக துவரம் பருப்பைச் சேர்த்து வேகவைத்தும் சாப்பிடலாம்.

மூலிகை வனம் -  வீட்டுக்கொரு வைத்தியர்...

துத்தி இருக்க, துன்பம் எதற்கு..?

அவசர யுகத்தில் உள்ளங்கைக்குள் உலகம் சுருங்கிய பிறகு... விஞ்ஞானத்தின் உதவியால், அலைச்சல் குறைந்து, அமர்ந்த இடத்திலேயே அனைத்துப் பணிகளையும் செய்து கொள்கிறோம். 'நடக்க நடக்க நோய் தள்ளிப் போகிறது’ என்பது மூத்தோர் மொழி. ஆனால், நடை குறைந்து, இருக்கையிலேயே அதிக நேரம் இருப்பதால், முக்கால்வாசி பேருக்கு மூலநோய் பாதிப்பு ஏற்படுகிறது. அப்படி மூலத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஆயிரக்கணக்கான மருத்துவமனைகள் இருக்கின்றன. அனைத்துப் பேருந்து நிலையங்களிலும் மூலத்துக்கு சிகிச்சையளிப்பதாகச் சொல்லும் மஞ்சள் நிற விளம்பரச் சுவரொட்டிகளைப் பார்க்கலாம். இப்படிப்பட்ட மருத்துவமனைகளில் ஆயிரக்கணக்கில் பணத்தை வாங்கிக்கொண்டு மூலத்துக்கு சிகிச்சை அளிக்கிறார்கள். இன்னும் பெரிய மருத்துவமனைகளிலோ, 'அறுவை சிகிச்சை இல்லாமல், எண்டாஸ்கோபி மூலமாக மூலத்தை குணமாக்குகிறோம்’ எனச் சொல்லி பல ஆயிரங்களைக் கறக்கிறார்கள். உண்மையில் மூலத்துக்கு அறுவை சிகிச்சையும் தேவையில்லை. எண்டாஸ்கோபியும் தேவையில்லை. மூலத்தை அறுவை சிகிச்சை செய்ய, இயற்கை அனுப்பி வைத்துள்ள மருத்துவன்தான் துத்தி. அதனால்தான் 'துத்தி, மூலத்துக்கு கத்தி’ எனச் சொல்லி வைத்தனர், முன்னோர்.

மூலத்துக்கு முற்றுப்புள்ளி!

துத்தி இலையை சிறிது விளக்கெண்ணெய் விட்டு கை பொறுக்கும் சூட்டில் வதக்கி... வாழை இலையில் வைத்து, ஆசன வாயில் துணியைக் கொண்டு கோவணம் போலக் கட்டிக்கொள்ள வேண்டும். இரவு படுக்கைக்குப் போகும் முன்பாக இப்படி ஓரிரு நாட்கள் செய்து வந்தால், கடுப்பு நீங்கிவிடும். சிறிது சிறிதாக மூலமும் குணமாகிவிடும். சூட்டுக்கட்டிகளில் இதைக் கட்டினால், கட்டிகள் உடையும். இதை செய்வது சிரமம் என நினைப்பவர்கள், இரண்டு கை அளவுக்கு துத்தி இலைகளைப் பறித்து, தண்ணீரில் கழுவி, சிறிதாக நறுக்கி, சிறிது மஞ்சள்தூள், 10 சின்ன வெங்காயத்தை அரிந்து போட்டு வதக்கி, சிறிது மிளகுத்தூள், உப்பு சேர்த்துக்கொள்ள வேண்டும். தொடர்ந்து

10 நாட்களுக்கு இதை உண்டு வந்தால், மூலநோய் குணமாகும். இலையை பருப்புடன் சேர்த்து வேக வைத்து, சாதத்துடன் கலந்து உண்டால், மலம் இலகுவாகப் போகும்.

மூலிகை வனம் -  வீட்டுக்கொரு வைத்தியர்...

உடல் வலி போகும்!

துத்தி இலையை நீரில் போட்டு வேகவைத்து, அந்த நீரில் துணியை முக்கி ஒத்தடம் கொடுத்தால், உடல் வலி நீங்கும். இந்த இலையை வதக்கியோ, பொடி செய்தோ அடிக்கடி உண்டு வந்தால், வாயு தொடர்பான நோய்கள் நீங்கும். துத்திப் பூவை உலர்த்தி பொடி செய்து அதனுடன் சமஅளவு சர்க்கரை சேர்த்து, கலந்து வைத்துக் கொள்ள வேண்டும். இதில், ஒரு தேக்கரண்டி எடுத்து, பசும்பாலில் கலந்து தினமும் குடித்து வந்தால், 'நுரையீரல் கபம், இருமல், இரைப்பு, காசநோய், ரத்த வாந்தி ஆகியவை குணமாகும்’ என்கிறது, சித்த மருத்துவம்.

முறிந்த எலும்புகளை இணைக்கும் இலை!

துத்தி இலைகளை அரைத்து, முறிவு கண்ட இடத்தில் கனமாகப் பூசி, துணியைச் சுற்றி, மூங்கில் தப்பைகளை வைத்து கட்டினால், முறிந்த எலும்புகள் கூடும். கால்நடைகள் கீழே விழுந்து, எலும்பு முறிவு ஏற்பட்டாலும், இதே முறையைக் கையாளலாம். விதையை லேசாக வறுத்து பொடி செய்து, கருப்பட்டி அல்லது நாட்டுச் சர்க்கரை கலந்து காலை, மாலை இருவேளைகளும் உண்டால், சர்க்கரை நோய் காரணமாக ஆறாத புண்கள், அழுகியத் தோல்கள் குணமாகும். பெரு வியாதி என்று பயத்தோடு பார்க்கப்படும் குஷ்ட நோயும் குறையும்.

விலையில்லாமல் வியாதிகளைக் குணமாக்கும் துத்தி, இனி, ஒவ்வொரு வீட்டிலும் வளரட்டும்!