நீர் மேலாண்மை

 'தாயைப் பழிச்சாலும் தண்ணியைப் பழிக்காதே’ என்பார்கள், முன்னோர். அது எத்தனை சத்தியமான வார்த்தை என்பதை, முகத்தில் அடித்துப் புரிய வைத்துக் கொண்டிருக்கின்றன, இன்றைய எதார்த்தங்கள்.

வீடுகள்தோறும் திண்ணைகள் கட்டி, அவற்றில் மண்பானைகளில் குடிநீர் வைத்தும்; சாலைகளில் ஆங்காங்கே தண்ணீர்ப் பந்தல் அமைத்தும் வழிப்போக்கர்களைக்கூட ஆற்றுப்படுத்தி அனுப்பிய சமூகம்... இன்றைக்கு தண்ணீருக்காக அண்டை வீட்டாருடன் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறது. அலட்சியம் ஒன்றுதான் இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நீரில் பிறந்து, நீரால் வாழ்ந்து, நீரில் கரையும் வாழ்க்கை முறையைக் கைகொண்ட நாம், அந்த நீரை மதிக்கக் கற்றுக் கொள்ளவேயில்லை. தாகம் கொண்ட தொண்டையைத் தவிர, தண்ணீரின் அருமையை உணர்ந்து கொண்டவர்கள் மிகச்சொற்பம் என்பதுதான் கசப்பான உண்மை.

மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சிகள் ஆகியவை, இரண்டு நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கி வந்த நிலை... வாரம் ஒரு முறை, பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை என மாறி, தற்போது சில இடங்களில் 50 நாட்கள்கூட ஆகின்றன. ஆனால், இயற்கையின் அருட்கொடையான வான்மழை, ஆண்டு முழுவதும் உங்களுக்கான குடிநீரை இலவசமாக இறைத்துவிட்டுப் போகிறது. அதை முறையாகச் சேமிக்கக் கற்றுக் கொண்டோமா... என்றால் இல்லை. பிறகெப்படி தண்ணீர் பஞ்சம் தீரும்.

மழைநீர்தான் மனிதனுக்கான சரிவிகித உணவு!

அரசாங்கம் ஆணை பிறப்பித்தால், மட்டும்தான் செய்யவேண்டும் என்ற நிலை மாறி, மழைநீர்ச் சேமிப்பு அமைப்புகளை வீடுகள்தோறும் அமைத்து விட்டாலே, குடிநீர்ப் பிரச்னையை முற்றாகத் தவிர்த்துவிடலாம்.

மழைநீர்ச் சேமிப்பு வல்லுநர் திருவாரூரைச் சேர்ந்த கி. வரதராஜன் சொல்லும் தகவல்கள் இங்கே...

''மழைநீர்தான் உயிர் நீர். திருக்குறளில் கடவுள் வாழ்த்துக்கு அடுத்து வான்சிறப்பைப் பற்றித்தான் வள்ளுவன் பாடினான். ஒவ்வொரு வீடுகளிலும் மழைநீரைச் சேமித்தால் குடிநீர்த் தட்டுப்பாடே இல்லாமல் போய்விடும். நீண்ட தூரம் நடந்து சென்று நீர் எடுத்து வர வேண்டிய அவலமும், காலி குடங்களுடன் சாலைகளில் அமர்ந்து போராட வேண்டிய அவசியமும் இருக்காது. 'கான்கிரீட்

மழைநீர்தான் மனிதனுக்கான சரிவிகித உணவு!

கட்டடங்களில்தான் மழைநீரைச் சேமிக்க முடியும்’ என்றில்லை. குடிசை வீடுகளிலும் சேமிக்கலாம். அதற்கு அடிப்படைத் தேவை, 'மழைநீரைச் சேமிக்க வேண்டும்’ என்கிற ஆர்வம் மட்டும்தான். தொடர்ந்து மழைநீரைப் பருகி வந்தால், நோய்கள் வருவது தடுக்கப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

தற்போது நாம் தண்ணீர் என்ற பெயரில் நோய் வளர்ச்சி ஊக்கியைத்தான் குடித்துக் கொண்டிருக்கிறோம். 'உலகில் வரும் நோய்களில் 80 சதவிகித நோய்கள் தண்ணீரால்தான் வருகின்றன’, என்கிறது, உலக சுகாதார நிறுவனம். மேலும், 'சுத்தமான குடிநீரில் 60 மில்லி கிராம் மினரல் இருக்க வேண்டும்’ என்கிறது, அந்த அமைப்பு. ஆனால், அந்த அளவு மினரல் உள்ள தண்ணீர், இந்தியாவில் எங்குமே இல்லை. உலகிலுள்ள 233 நாடுகளில் இருந்து தண்ணீரை எடுத்து சோதித்துப் பார்த்தது ஐ.நா. சபை. அந்த ஆய்வில் இந்திய தண்ணீருக்கு 220-ம் இடம்தான் கிடைத்துள்ளது.

நல்ல தண்ணீர் குடித்தால், 80 சதவிகித நோய்களில் இருந்து நம்மைக் காத்துக் கொள்ளலாம். அப்படிப்பட்ட சுத்தமான குடிநீர், மழைநீர் மட்டும்தான். மழைநீர், பூமியை அடையும் முன் நாம் அறுவடை செய்துவிட வேண்டும். வீடுகளின் மொட்டை மாடிகளில் விழும் தண்ணீரை முறையாகச் சேமித்தால், நான்கு பேர் உள்ள குடும்பத்துக்கு ஓராண்டு தேவையை அது பூர்த்தி செய்துவிடும். வீடுகளில் மழைநீர்ச் சேமிப்பு அமைப்பை நிறுவ அதிகம் மெனக்கெடத் தேவையில்லை. மாடிக்கும், மழைநீர்ச் சேமிப்புக் கலன்களுக்கும் இடையில், வடிகட்டி போன்ற அமைப்பை அமைத்துக் கொள்ளவேண்டும். மாடியில் இருந்து குழாய் மூலமாக வரும் மழைநீர், இந்த வடிகட்டியில் ஊடுருவி சேமிப்புக் கலனுக்குச் செல்லும்போது சுத்தமான நீராக மாறி இருக்கும். தற்போது சந்தையில் கிடைக்கும் பிளாஸ்டிக் காய்கறிப் பெட்டிகளில் கூட வடிகட்டும் அமைப்பை அமைத்துக் கொள்ளலாம். அந்தப் பெட்டிகளில் மணல், கூழாங்கற்கள், கரித்தூள் கொண்டு... வடிகட்டும் அமைப்பை அமைக்க வேண்டும்.

சேமிக்கும் கலன்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மழைநீரை வெள்ளை நிற சின்டெக்ஸ் டேங்க்களில்தான் சேகரிக்க வேண்டும். சூரிய ஒளியும், காற்றும் படாமல் இருந்தால், தண்ணீர் எத்தனை ஆண்டுகளானாலும் கெட்டுப் போகாது. இந்த வகை டேங்கில் உள்ள வெள்ளை நிறமானது, சூரிய கதிர்களை உள்ளே செல்லாமல் தடுத்துவிடும். அதேபோல காற்றும் உள்ளே போகாமல் மூடிவைத்து விட்டால், இந்த டேங்க்கில் உள்ள தண்ணீரை எட்டு வருடம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.

மழைநீர்தான் மனிதனுக்கான சரிவிகித உணவு!

'வெள்ளை டேங்க் கிடைக்கவில்லை’ என்பவர்கள் கருப்பு டேங்க் பயன்படுத்தலாம். ஆனால், அந்த டேங்க்கை சுற்றி சிந்தடிக் தெர்மாகோல் பேப்பரைச் சுற்றி வைக்கவேண்டும் என்பது முக்கியம். பெரிய மழை பெய்யும்போது டேங்க்கில் உள்ள தண்ணீரை வெளியேற்றிவிட்டு புது தண்ணீரைப் பிடித்துக் கொள்ளலாம். அதேபோல வீடுகளில் உள்ள கிணறுகளிலும் மழைநீரைச் சேமிக்கலாம். சிலர், செப்டிக் டேங்க் தோண்டுவது போல பூமிக்கடியில் பெரிய தொட்டி கட்டி, அதிலும் மழைநீரைச் சேகரிக்கிறார்கள். புதிதாக வீடு கட்டுபவர்கள் மழைநீர் சேமிக்கவும், ஒரு தொட்டி கட்டிக்கொள்வது நல்லது.  

நமது உடலுக்கு 18 வகையான மினரல்கள் தேவைப்படுகின்றன. ஒவ்வொரு மினரலும் ஒவ்வொரு உடல் உறுப்பின் செயல்பாட்டுக்குத் துணைபுரிகிறது. இவற்றில் ஏதாவது குறையும்போது உறுப்புகளின் செயல்திறன் குறைந்து, நோய் உண்டாகிறது. இந்த 18 மினரல்களின் கூட்டுத்தொகை 500 மில்லி கிராம் என்கிற அளவில் இருக்கவேண்டும். தற்போது நமது உடலுக்கு அதிகபட்சம் 100 மில்லி கிராம்கூட கிடைப்பதில்லை. ஆனால், அத்தனை மினரல்களும் மழைநீரில் அடங்கி இருக்கின்றன. சொல்லப்போனால் மழைநீர்தான் மனிதனுக்கான சரிவிகித உணவு'' என்று அழுத்தம் கொடுத்துச் சொல்கிறார், வரதராஜன்.

மழைநீர்தான் மனிதனுக்கான சரிவிகித உணவு!

வீடுகளில் மழைநீர்ச் சேமிப்புக் கலன் அமைக்க, 5 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும். இனி வரக்கூடியது மழைக்காலம். அதை வரவேற்கும் விதமாக வீடுகள்தோறும் வசதிக்கு ஏற்றாற்போல் மழைநீர்ச் சேமிப்பு அமைப்புகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். விவசாயிகள், பண்ணைக் குட்டை வெட்டுவதன் மூலமும், தங்கள் கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகளின் அருகே மழைநீர்ச் சேமிப்பு அமைப்பை ஏற்படுத்திக் கொள்வதன் மூலமும் மழைநீரைச் சேமித்து வறட்சியை விரட்ட வேண்டும் என்பதே, அரசாங்கம் மற்றும் இயற்கை ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.

- பொங்கிப் பாயும்...

சேதி கேட்டீங்களா!

இந்திய மிளகுக்குத் தடை போட்ட சவுதி அரேபியா!

மழைநீர்தான் மனிதனுக்கான சரிவிகித உணவு!

இந்தியாவில் இருந்து அனுப்பப்படும் மிளகில், அளவுக்கு அதிகமாக, பூச்சிகொல்லி விஷம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆகையால், இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் அனைத்து மிளகு ரகங்களின் இறக்குமதிக்கு, சவுதி அரேபியா தற்காலிமாகத் தடை விதித்துள்ளது. இது, மே மாதம் 30-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. மேலும், இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சில உருளைக்கிழங்கு பெட்டிகளில், பூச்சித் தொற்று இருப்பதை ரஷ்யா கண்டறிந்துள்ளது. இதையடுத்து, அதன் இறக்குமதிக்கு, பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்க நேரிடும் என, ரஷ்ய அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism