Published:Updated:

அதிக மகசூலுக்கு 5 லட்சம் விருது !

அரசின் அசத்தல் அறிவிப்பு!

பிரீமியம் ஸ்டோரி

ஆர்.குமரேசன்

தற்போது நடைபெற்று வரும் தமிழக சட்டப் பேரவைக் கூட்டத் தொடரில் வேளாண்மைத்துறை மானிய கோரிக்கையின்போது, புதிய அறிவிப்புகள் பலவற்றை வெளியிட்டிருக்கிறார் துறையின் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன். அவற்றில் பலவும் அசத்தலான அறிவிப்புகளாக இடம் பெற்றிருக்கின்றன. அத்தனையும் அப்படியே செயல்பாட்டுக்கு வந்துவிடும் என்ற நம்பிக்கையோடு அவற்றை இங்கே பார்ப்போமா!

அதிக மகசூலுக்கு  5 லட்சம் விருது !

புதிய உழவர் மையங்கள்!

##~##

புதிய வேளாண் தொழில்நுட்பங்கள் குறித்தத் தகவல்களை விவசாயிகள் உடனுக்குடன் ஒரே இடத்தில் பரிமாற்றம் செய்து கொள்ள வேண்டும். வேளாண்மைத் துறை மூலம் செயல்படுத்தப்படும் அரசின் திட்டங்கள் குறித்த சந்தேகங்களைத் தீர்க்கும் வகையில் வேளாண்மைத் துறையின் அனைத்துப் பிரிவுகளையும் ஒருங்கிணைத்து, முதல் கட்டமாக 15 கோடி ரூபாய் செலவில் 10 உழவர் மையங்கள் அமைக்கப்படும்.

பெருநகர மக்களுக்குக் காய்கறிகள்!  

பெருநகர மக்களின் அன்றாடக் காய்கறித் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் 17 கோடி ரூபாய் மதிப்பில் ஒரு புதிய திட்டம் செயல்படுத்தப்படும். இதன்படி, சென்னை, திருச்சி, மதுரை, கோவை ஆகிய பெருநகரங்களில் காய்கறி விற்பனை மையங்கள் தொடங்கப்பட்டு, பெருநகர மக்களுக்கு காய்கறிகள் நியாயமான விலையில் கிடைக்க வழிவகை செய்யப்படும். விவசாயிகள் தங்கள் விளைபொருள்களைச் சேமித்து, பாதுகாத்து விற்பனை செய்ய ஒழுங்குமுறை விற்பனைக்கூட சேமிப்புக் கிடங்குகள் உதவுகின்றன. 82 கோடி ரூபாய் செலவில் 50 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் நவீனக் கிடங்குகள் அமைக்கப்படும்.

பசுமைக் குடிலுக்கான பயிற்சி மையம்!

கிருஷ்ணகிரி மாவட்டம் தளி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அரசு தோட்டக்கலைப் பண்ணையில் 2 கோடி ரூபாய் மதிப்பில் மலர்கள் மற்றும் காய்கறிப் பயிர்களைப் பசுமைக் குடில்களில் சாகுபடி செய்வதற்கான 'மாதிரி செயல் விளக்க மையம்’ அமைக்கப்படும்.

அதிக மகசூலுக்கு  5 லட்சம் விருது !

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இயங்கி வந்த விதை சுத்திகரிப்பு நிலையங்கள் தற்போது சரிவர இயங்காத நிலையில் உள்ளன. விவசாயிகளுக்குத் தரமான விதைகளை உற்பத்தி செய்து உரிய காலத்தில் வழங்கும் வகையில், இந்த விதைச் சுத்திகரிப்பு நிலையங்கள் 5.25 கோடி ரூபாய் செலவில் நவீனப்படுத்தப்படும்.

தமிழகத்தில் உள்ள விவசாயிகள் குறித்த விவரங்களை, அவர்களது நிலங்களுக்கான மண் வளம், உரப் பரிந்துரை, இடுபொருள் விநியோகம், நுண்ணுட்டச்சத்துக்கள் போன்ற விவரங்கள் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த கையேடு முதல் கட்டமாக 4 கோடி ரூபாய் மதிப்பில் 21 லட்சம் விவசாயிகளுக்கு வழங்கப்படும்.

கிராமப்புற இளைஞர்கள் சுயதொழில் தொடங்கும் வகையில் வேளாண் பொறியியல் துறை மூலமாக 42.9 லட்சம் ரூபாய் செலவில் ஆண்டுதோறும் 600 கிராமப்புற இளைஞர்களுக்கு வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் பழுதுநீக்கம் மற்றும் பராமரிப்பு குறித்த ஆறு மாத பயிற்சி அளிக்கப்படும்.

5 லட்சம் பரிசு!

திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பத்தைக் கடைப்பிடித்து மாநிலத்தில் நெல் உற்பத்தி செய்யும் விவசாயிகளை ஊக்கப்படுத்தும் வகையில், அதிகளவு உற்பத்தி செய்யும் 5 விவசாயிகளுக்குச் சிறப்பு விருது, தலா 1 லட்ச ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்படும். ஒவ்வோர் ஆண்டும் குடியரசு தினத்தன்று இந்த விருது மற்றும் பரிசு வழங்கப்படும்.

பயிர்கள் வாரியாக குளிர்பதனக் கிட்டங்கிகள்!

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் பகுதியில் 4 கோடி ரூபாய் செலவில் வாழை மற்றும் இதரக் காய்கறிகளுக்காகவும், ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையம் பகுதியில் 4 கோடி ரூபாய் செலவில் காய்கறிகள் மற்றும் பழங்களுக்காகவும் குளிர்பதன வசதியுடன் கூடிய வணிக வளாகங்கள் அமைக்கப்படும். காய்கறி மற்றும் பழங்களுக்காக தேனி, திருச்சி, புதுக்கோட்டை, விருதுநகர், தூத்துக்குடி ஆகிய 5 மாவட்டங்களிலும்... புளிக்காக தருமபுரி மாவட்டத்திலும், மிளகாய் மற்றும் எலுமிச்சைக்காக திருநெல்வேலி மாவட்டத்திலும் 11 கோடி ரூபாய் மதிப்பில் குளிர்பதன வசதியுடன் கூடிய சேமிப்புக் கிடங்குகள் ஏற்படுத்தப்படும்.

பொருளீட்டுக் கடன்

அதிக மகசூலுக்கு  5 லட்சம் விருது !

2 லட்சம்!

விவசாயிகளையும் வியாபாரிகளையும் ஒருங்கிணைக்கும் வகையில், பயன்பாட்டில் இல்லாத ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் 4.8 கோடி ரூபாய் செலவில், வியாபாரிகளுக்கென தனியாக கடைகள் கட்டித் தரப்படும்.

விவசாயிகள் வேளாண் பணிகளை விரைந்து மேற்கொள்ளவும், உடனடித் தேவைகளை பூர்த்தி செய்யவும் இப்போது வழங்கப்படும் பொருளீட்டுக் கடன் 1 லட்சம் ரூபாயிலிருந்து 2 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும்.

சேலம் மாவட்டம்- ஆத்தூர், நாமக்கல் மாவட்டம் -திருச்செங்கோடு, ஈரோடு மாவட்டம்- பவானி ஆகிய இடங்களில் வாடகைக் கட்டடங்களில் இயங்கி வரும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களுக்கு சொந்தமாகக் கட்டடங்கள் கட்டப்படும்.

பார்த்தீனிய ஒழிப்பு ஆரம்பம்!

''விவசாயிகளையும், பயிர்களையும் பாதிக்கும் பார்த்தீனியம் எனும் விஷச்செடியை ஒழிப்பது... ஒரு இயக்கமாகவே செயல்படுத்தப்படும்''  என்று தமிழக முதல்வர் சட்டமன்றத்தில்அறிவித்திருந்தார். அமைச்சர்கள், அதிகாரிகள், சட்டமன்ற உறுப்பினர்கள் என்று அனைத்துத் தரப்பினர்களும் அதற்கான வேலையை ஜரூராக தொடங்கி விட்டனர்.

அதிக மகசூலுக்கு  5 லட்சம் விருது !

ஆகஸ்ட்-21 அன்று கோயம்புத்தூர் அருகேயுள்ள அரசூர் கிராமத்தில் அமைச்சர்கள் செங்கோட்டையன்,

சண்முகவேலு, வேலுமணி ஆகிய மூவரும் கைத்தெளிப்பான் மூலம் உப்பு-சோப்புக் கரைசலை தெளித்து, பார்த்தீனிய ஒழிப்புக்கு அச்சாரம் போட்டனர்.

அப்போது, ''ஆகஸ்ட்- 16-ம் தேதி முதல் நாடு முழுவதிலும் பார்த்தீனியம் ஒழிப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆஸ்துமா, அலர்ஜி மற்றும் தோல் நோய் உள்ளிட்ட பலநோய்கள் பார்த்தீனியம் மூலம் ஏற்படுகின்றன. ஆகவே, அதைக் கட்டுப்படுத்த இந்த அரசு வேகமாக நடவடிக்கை எடுத்து வருகிறது'' என்று குறிப்பிட்டார் கே.ஏ.செங்கோட்டையன்.

ஜி. பழனிச்சாமி, படம்: தி. விஜய்.
படங்கள்: சு. குமரேசன், வி. செந்தில்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு