Published:Updated:

'தீர்க்கதரிசி மாதிரி சொன்னாரு!'

'அரியனூர்' ஜெயச்சந்திரன் ஓவியம் : ஹரன்

'தீர்க்கதரிசி மாதிரி சொன்னாரு!'

'அரியனூர்' ஜெயச்சந்திரன் ஓவியம் : ஹரன்

Published:Updated:

வரலாறு

 நான் நம்மாழ்வார் பேசுகிறேன் - 39

 'இயற்கை வேளாண் விஞ்ஞானி' கோ. நம்மாழ்வார், இயற்கையுடன் கலந்துவிட்டார். அவருடன் நெருங்கிப்பழகி, அவரைப் பற்றி முழுவதுமாக அறிந்து வைத்திருக்கும் சிலர்... 'நான் நம்மாழ்வாருக்காகப் பேசுகிறேன்' என்ற தலைப்பில், அவருடைய வாழ்க்கைப் பாதை பற்றி இதழ்தோறும் பேசுகிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

புதுக்கோட்டை மாவட்டம், கொழிஞ்சிப் பண்ணையில் இருந்து, 1996-ம் ஆண்டு வெளியில் கிளம்பிய நம்மாழ்வார், காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு அருகில் உள்ள வல்லம் என்ற இடத்தில் கிங்ஸிலீ என்பவர் நடத்தி வந்த தொண்டு நிறுவனத்தில், இயற்கை விவசாயப் பணிகளை தொடர ஆரம்பித்தார்.

'தீர்க்கதரிசி மாதிரி சொன்னாரு!'

''செங்கல்பட்டின் வட எல்லை, சென்னையைத் தொட்டு நிற்கிறது. கிழக்கு எல்லையில் வங்கக்கடல் தழுவி நிற்கிறது. மலைகள் நிறைந்த நிலப்பகுதிதான் செங்கல்பட்டு வட்டாரம். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, இப்பகுதியை ஆண்ட பல்லவ, சோழ மன்னர்கள், நிறைய ஏரிகளை அமைத்து, கடலுக்குச் செல்லும் மழைநீரைச் சேமித்தார்கள். அதனால்தான், 'ஏரி மாவட்டம்’ என்று இதற்கு சிறப்புப் பெயர் வந்தது. 1760-ம் ஆண்டு, 2,000 ஊர்களில் விளைந்த விளைச்சல் பற்றி ஆங்கிலேயர் எழுதி வைத்த குறிப்புகள் கிடைத்துள்ளன. இதன்படி, 'ஒரு ஏக்கருக்கான சராசரி விளைச்சல் 25 குவின்டால்.... வளமான நிலங்களாக இருந்தால், 36 குவின்டால்' என்று விளைந்திருக்கிறது'' என்று செங்கல்பட்டுப் பகுதியைப் பற்றி பெருமையோடு குறிப்பிடுவார் நம்மாழ்வார். அவர், செங்கல்பட்டுப் பகுதியில் பணி செய்தபோது, அவருடன் தொடர்பில் இருந்தவர்களில் ஒருவர் 'அரியனூர்’ ஆர்.ஜெயச்சந்திரன். இங்கே, தன்னுடைய அனுபவங்களை ஜெயச்சந்திரன் எடுத்து வைக்கிறார்.

''நான், இயற்கை விவசாயம் செய்யத் தொடங்கின நேரம் அது. அப்போ, செய்தித்தாள்ல புதுச்சேரியில் 'இயற்கை வேளாண் விஞ்ஞானி' கோ. நம்மாழ்வார் கலந்துகொள்ளும், கருத்தரங்குனு செய்தி பார்த்தேன். ஏற்கெனவே, அவரைப் பத்தி கேள்விப்பட்டிருந்தேன். இயற்கை விவசாயத்தில சந்தேகங்கள் இருந்ததால... அவர்கிட்ட, கேட்டுத் தெளியறதுக்காக புதுச்சேரி புறப்பட்டேன். 300 ரூபாய் நுழைவுக் கட்டணமாக வெச்சிருந்தாங்க. அந்த சமயத்துல அது, பெரிய தொகையா இருந்தாலும், அதைக் கொடுத்துட்டு, உள்ளே போனேன். உணவு இடைவேளையின்போது, நம்மாழ்வார் அய்யாவைச் சந்திச்சேன். ரெண்டு கைகளையும் சினேகமா பிடிச்சுக்கிட்டு, என்னைப் பத்தி விசாரிச்சாரு. 'மதுராந்தகம் பக்கத்துல அரியனுரா... நம்ம பக்கத்துலதான் இருக்கீங்க. ஒருநாள் செங்கல்பட்டு வாங்க பேசுவோம்'னு சொன்னாரு. மறுநாளே, அவர் இருந்த பண்ணைக்குப் போனேன். சில மணி நேரத்துல, நான் கேள்வியைக் கேட்காமலே, அதற்கான பதிலை உரையாடல் மூலமா வெளிப்படுத்தினாரு.

'தீர்க்கதரிசி மாதிரி சொன்னாரு!'

பண்ணையைச் சுற்றி நடந்தபடியே பேசினோம். விடைபெற்று கிளம்பின சமயத்துல, 'கொஞ்சம், நில்லுங்க'னு சொன்னவர், உள்ளே போய், இயற்கை விவசாயம் சம்பந்தமான அரிய புத்தகங்களை எடுத்துக்கிட்டு வந்து கொடுத்தார். எனக்கு புத்தகம் படிக்கிறதுனா, தனிப்பிரியம். அதை என்னோட பேச்சுல கவனிச்சு, எனக்கு புத்தகத்தைக் கொடுத்த அவரோட நுட்பமான அறிவும், தோழமையும், திரும்பத்திரும்ப செங்கல்பட்டுக்கு பயணப்பட வெச்சுது. ஆரம்பத்துல, அவரை எப்படிக் கூப்பிடணும்கிறதுல தயக்கம் இருந்துச்சு. 'சார்’னு சொன்னா, கோவிச்சிக்குவாரு. அண்ணாச்சினுதான் எல்லாரும் கூப்பிடுவாங்க. நான் 'அய்யா'னு கூப்பிட ஆரம்பிச்சேன்.

சுற்றுவட்டாரப் பகுதியில இயற்கை விவசாயம் பத்தி பேசறதுக்கு அய்யாவைக் கூப்பிடுவாங்க. என்னையும் வரச்சொல்லி வற்புறுத்துவாரு. காரணம், அப்போ, இயற்கை விவசாயம் செய்யறவங்க ரொம்ப குறைவு. கூட்டத்துக்கு நூறு பேரு வருவாங்கனு சொல்வாங்க. ஆனா, அஞ்சி பேரு கூட இருக்கமாட்டாங்க. எனக்கு முகம் வாடிப்போகும். 'ஜெயச்சந்திரன், இதுக்கெல்லாம், கவலைப்படக் கூடாது. நம்ம முன்ன அஞ்சி பேரு இருந்தாலும், ஆயிரம் பேர் இருக்கிறதா நினைச்சு பேசுங்க. ஒரு காலத்துல, நாடு முழுக்க இயற்கை விவசாயத்துக்கு கூட்டம், கருத்தரங்குனு நடக்கும். அப்போ, உங்கள, என்னைகூட... மேடையில ஏத்தமாட்டாங்க. அப்பவும் கோவிச்சுக்கக் கூடாது. நாம வளர்த்த இயற்கை விவசாயம் இவ்வளவு வளர்ந்திருக்கேனு மகிழ்ச்சியா ஏத்துக்கணும்'னு அய்யா, தீர்க்கதரிசி மாதிரி சொன்னாரு.

'சூரிய ஒளி, நம்ம தலையில பட்டா, சூடாகுது. அதே ஒளி, பப்பாளி மரத்து இலையில பட்டா, காய்காய்ச்சி, பழமாகுது'னு விவசாய விஞ்ஞானத்தை இவ்வளவு எளிமையா பேசுன முதல் ஆள் அய்யாதான்.

'தீர்க்கதரிசி மாதிரி சொன்னாரு!'

அய்யாக்கிட்டா,  இயற்கை விவசாயம் பத்தி கேள்வி கேட்கணும்னா? நமக்கு நிறைய தெரிஞ்சிருக்கணும். ஒரு சில குறும்புக்காரங்க, கூட்டம் நடக்கும்போது, விதண்டாவாதமா கேள்வி கேட்பாங்க. உடனே, அவங்கள பக்கத்துல கூப்பிட்டு, 'உனக்கு நிறைய தெரிஞ்சிருக்கு. இனி, இந்த மாதிரி கூட்டத்துக்கு வந்து நேரத்தைச் செலவு செய்ய வேணாம்'னு நாகரிகமா சொல்லி வெளியில அனுப்பிடுவாரு.

ஒருமுறை, அய்யாவுக்கும் எனக்கும், ஒரு விஷயத்துல வாக்குவாதம். அதாவது, செங்கல்பட்டுப் பகுதியில, குட்டைரக மாடுங்க உண்டு. 'இதுங்க, நல்ல உழைக்கும்திறன் இல்லாத மாடுங்க'னு அய்யா சொன்னாரு.

உடனே நான், ஆந்திரா மாநிலம், சித்தூர் மாவட்ட பகுதியைச் சேர்ந்த புங்கனூர் இங்கிருந்து, நூறு மைல் தூரத்துல இருக்கு. அந்த புங்கனூர் பகுதியில இருந்துதான், இந்த குட்டைரக மாடுங்க இங்க வந்திருக்கு. அதனாலதான் புங்கனூர் குட்டை ரக மாடுகள் மாதிரி, இந்தப் பகுதி மாடுகளும் இருக்கு. பால் மூணு லிட்டர் கொடுக்கும். இந்த மாடு நல்லா வேலை செய்யும்'னு சொன்னேன். கவனமா கேட்டவரு, அடுத்த முறை சந்திக்கும்போது, 'சரியா சொன்னீங்கய்யா... குட்டைரக மாடுகள கவனிச்சு பார்க்கும்போதுதான் அதுகளோட பலம் தெரியுது'னு சொன்னாரு. அதோட விடல, அவர் கலந்துக்கிற கூட்டங்கள்ல குட்டை ரக மாட்டு இனத்தைப் பத்தி பெருமையா பேசவும் தொடங்கினாரு.

'தீர்க்கதரிசி மாதிரி சொன்னாரு!'

அது... 98-ம் வருஷம்னு நினைக்கிறேன். 'அவசரமா பார்க்கணும் வாங்க'னு அய்யாகிட்ட இருந்து ஒரு நாள் அழைப்பு வந்துச்சு. செங்கல்பட்டுக்குப் போய் அவரைப் பார்த்தேன். தான் வெச்சிருந்த அத்தனை புத்தகங்களையும் அள்ளி என்கிட்ட கொடுத்து, 'இது உங்க வீட்டுல இருக்கட்டும். நாளைக்கு காலையில

9 மணிக்கு வாங்க'னு சொன்னாரு. மறுநாள் 9 மணிக்குப் போனேன். எனக்கு முன்ன ரெண்டு, மூணு பேரு அங்க இருந்தாங்க. 'டி.இ.டி.இ ரங்கநாதன், திருப்போரூர் சேர்மேன், மாம்பாக்கம் வீரபத்திரன்'னு அவங்கள அறிமுகப்படுத்திட்டு, ஜோல்னா பையை எடுத்து மாட்டிக்கிட்டு, சரி, வாங்க வெளியில போகலாம்னு கூப்பிட்டாரு. டீக்கடையில வந்து டீ குடிக்கும்போதுதான், 'நம்மாழ்வாருக்கு, நாடு முழுக்க செய்ய வேண்டிய வேலை நிறைய காத்துக்கிட்டிருக்கு. அதான் இந்த தொண்டு நிறுவனத்து வேலையை விட்டுட்டேன்'னு சொன்னாரு (இந்தச் சம்பவத்துக்கு பிறகு, நம்மாழ்வார் எந்த அமைப்பிலும் பணியாற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது).

உடனே, 'எங்க வீட்டுக்கு வாங்கய்யா’னு கூப்பிட்டேன். நண்பர்களோட சேர்ந்து வீட்டுக்கு வந்தாரு. 'என்ன ஜெயச்சந்திரன், நான் வேலையை விட்டு வந்ததுக்கு விருந்து வெச்சு சாப்பாடு போடுறீங்களா'னு கிண்டலா கேட்டாரு.

'அய்யா, இன்னிக்கு யுகாதி (தெலுங்கு வருடப்பிறப்பு) அதுதான், வீட்டுல சாப்பாடு தடபுடலா இருக்கு'னு சொன்னேன். சாப்பிட்டு முடிச்ச கையோட, 'இன்னிக்கு ஜெயச்சந்திரன் வீட்டுல சாப்பிட்டிருக்கோம். அதுக்கு தகுந்த வேலையைச் செய்யணும்'னு சொல்லிக்கிட்டே, வீட்டுத் தோட்டத்துல வேலை செய்ய தொடங்கினாரு அய்யா. அடுத்த நாள், காலையில மூணு, நாலு விவசாயிங்க வந்திருந்தாங்க. கேளம்பாக்கம் நோக்கி அய்யா புறப்பட்டாரு...''

- பேசுவார்கள்
சந்திப்பு: பொன். செந்தில்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism