Published:Updated:

கம்பெனிகளுக்கு சாமரம்... விவசாயிகளுக்கு சாவுமணி!

தூரன் நம்பி

கம்பெனிகளுக்கு சாமரம்... விவசாயிகளுக்கு சாவுமணி!

தூரன் நம்பி

Published:Updated:

சாட்டை

 ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுக்கு இடையே நரேந்திர மோடி தலைமையிலான பி.ஜே.பி அரசு மத்தியில் பதவி ஏற்றபோது... 'பொருளாதார வளர்ச்சி மட்டுமல்ல, விவசாயிகள் வாழ்க்கையிலும் புதிய ஏற்றமும், மாற்றமும் ஏற்படும்' என்கிற நம்பிக்கை ஒளிகள், நன்றாகவே பரவின. ஆனால், தற்போது அரசாங்கத்திடம் இருந்து வந்துகொண்டிருக்கும் அல்லது கசியவிடப்படும் அறிவிப்புகள் எல்லாம், அந்த நம்பிக்கைகளைத் தகர்த்துக் கொண்டிருக்கின்றன.

தேவலோகத்தில் ஒரு நாள் இந்திர சபை கூடியிருந்தது. வழக்கம்போல, கலகமூட்டும் வேலையைச் செய்துகொண்டிருந்தார் நாரதர். கோபம்கொண்ட இந்திரன், 'நாரதரே... நீ இப்படியே அடங்காமல் திரிந்தால், உன்னை இந்தியாவில் விவசாயியாகப் பிறக்கும்படி சபித்துவிடுவேன்' என்று மிரட்ட... 'நமோ நாராயணா' என்றபடியே, வாலைச் சுருட்டிக் கொண்டார் நாரதர். இப்படி ஒரு கதை விவசாயிகளிடம் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தளவுக்கு இந்திய விவசாயிகள் சபிக்கப்பட்டவர்களாகவே வாழ்க்கையை நகர்த்திக் கொண்டுள்ளனர். ஆனால், எத்தனை ஆட்சிகள் மாறினாலும், விவசாயிகளின் வாழ்க்கை மட்டும் மாறாதுபோல. 'நாட்டையே கூறுபோட்டு விற்றுக் கொண்டிருந்த காங்கிரஸ் ஒழிந்தது. நாடு பிழைத்தது. நம் வாழ்வு இனி மலரும்' என்று எண்ணிய விவசாயிகளின் இதயத்தில், இடியை இறக்கிக் கொண்டிருக்கிறது மோடியின் புதிய அரசு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கம்பெனிகளுக்கு சாமரம்... விவசாயிகளுக்கு சாவுமணி!

ஆங்கிலேய அரசு, தங்கள் விருப்பப்படி இந்தியர்களை அடக்கி ஆள்வதற்காக, தங்களுக்கு வேண்டிய நிலங்களைக் கையகப்படுத்துவதற்காக, 1864-ல் ஒரு சட்டம் கொண்டு வந்தது. அடிமை இந்தியாவில் இயற்றப்பட்ட சட்டம் என்பதால், இதற்கு எதிரான விவசாயிகளின் குரல் எடுபடவே இல்லை. சட்டத்தின் அனைத்து ஷரத்துகளும், அரசுக்கு சாதகமாகவும், விவசாயிகளுக்குப் பாதகமாகவும் இருந்ததில் ஆச்சர்யமில்லை. பல்லாண்டுகளாக படாதபாடு பட்ட விவசாயிகள், நாடு சுதந்திரமடைந்த பிறகும் விடுபட முடியவில்லை. ஆம்... அன்றைக்கு ஆங்கிலேயேர்கள் விவசாயிகளைச் சுரண்டினார்கள். அதைத் தொடர்ந்து பெரும்பெரும் தொழிலதிபர்கள் எல்லாம், 'வளர்ச்சி' என்கிற பெயரில் விவசாயிகளின் நிலங்களைச் சுரண்டிக் கொண்டுள்ளனர்.

இந்த இழிநிலையிலிருந்து விடுதலை பெறுவதற்காக பல ஆண்டுகளாக பெரும்போராட்டங்கள் வெடித்தன. வேறு வழியே இல்லாமல், 'நிலம் கையகப்படுத்துதல் மற்றும் மறுவாழ்வு, மறுகுடி அமர்வுச் சட்டம்-2013' (Land acquisition rehabilitation and resettlement act 2013)எனும் புதிய சட்டத்தைக் கொண்டுவந்தது மன்மோகன் சிங் அரசு. ஆனால், இதற்கும் வேட்டு வைக்கும் வேலைகளை புதிய பி.ஜே.பி அரசு ஆரம்பித்திருப்பதுதான் கொடுமை! 'இந்தச் சட்டத்தை மேலும் வலுபடுத்தப் போகிறேன்' என்றபடி, மொத்தமாக சட்டத்தையே நீர்த்துப்போகச் செய்யும் செயலில் இறங்கியிருக்கிறார் மத்திய ஊரக வளச்சித்துறை பொறுப்பை கையில் வைத்திருப்பவரும், மகாராஷ்டிர மாநிலத்தின் பெரும் தொழிலதிபர்களில் ஒருவருமான நிதின் கட்கரி. கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு சாதகமாக இந்தச் சட்டத்தில் சில மாற்றங்களைச் செய்து, பிரதம மந்திரியின் பார்வைக்குப் பரிந்துரை செய்து இருக்கிறார். இவை ஏற்கப்படுமேயானால், 100 ஆண்டுகளுக்கு மேல் போராடி, விவசாயிகள் பெற்ற உரிமை, ஒரே நாளில் பறிபோய்விடும். மீண்டும் இந்திய விவசாயிகள் அடிமைகளாக்கப்படுவார்கள்.

அப்படி என்னதான் சொல்கிறது புதிய சட்டமும், மாற்றமும்?

'எந்த நிலத்தை வேண்டுமானாலும், எதற்கு வேண்டுமானாலும் நினைத்தபோது விவசாயிகளிடம் இருந்து அரசாங்கம் பறித்துக் கொள்ளமுடியும். இதற்கு ஆட்சேபனை தெரிவிக்கலாம். அதிக இழப்பீடு கோரலாம். ஆனால், தடுக்கவே முடியாது' இதுதான் ஆங்கிலேயர் காலத்து நிலம் கையகப்படுத்துதல் சட்டம். இதற்கு மாற்றாக, சுதந்திரம் அடைந்து கிட்டத்தட்ட 65 ஆண்டுகளுக்குப் பிறகு, கடுமையான போராட்டங்களுக்குப் பிறகு, 2013-ம் ஆண்டில் பிறந்ததுதான் புதிய சட்டம். ஆட்சியின் அந்திம காலத்தில் மன்மோகன் சிங் இயற்றியதுதான் இந்தச் சட்டம். இதுவும்கூட விவசாயிகளுக்கு முழுமையான பலனைக் கொடுத்துவிடவில்லை. என்றாலும், 'வெறும் விரலைச் சூப்புவதைவிட, சர்க்கரையில் நனைத்த விரலைச் சூப்புவது சற்று சுவையாக இருக்கும்' என்பதுபோல, நிலத்தை ஒரேயடியாக பறிகொடுக்கும் விவசாயிகளுக்கும் அவர்களுடைய குடும்பத்தாருக்கும் சில உரிமைகள், சில சலுகைகள் உண்டு என்கிற வகையில் ஆறுதல் தரும் சட்டமே! ஆனால், இதற்கும்கூட இந்த பி.ஜே.பி ஆட்சியில் ஆபத்து என்பதுதான் கொடுமை!

கம்பெனிகளுக்கு சாமரம்... விவசாயிகளுக்கு சாவுமணி!

1. கையகப்படுத்தப்படும் நிலம், நகர எல்லைக்குள் இருக்குமேயானால், அரசின் வழிகாட்டி மதிப்பைப் போல், இரண்டு மடங்கு தொகை இழப்பீடாகக் கொடுக்க வேண்டும். கிராம எல்லைக்குள் இருக்குமேயானால் 4 மடங்கு தொகை இழப்பீடாகக் கொடுக்க வேண்டும்.

2. நிலத்திலிருந்து வெளியேற்றப்படும் மக்களுக்கும், விவசாயிகளுக்கும், மறுவாழ்வு, மறு குடியமர்வு செய்து தரவேண்டும்.

3. பறிக்கப்படும் நிலம், அரசின் சொந்தப் பயன்பாட்டுக்கு என்றால், வெளியேற்றப்படும் மக்கள் மற்றும் விவசாயிகளிடம் ஒப்புதல் பெறத் தேவை இல்லை.

4. பொதுத்துறை மற்றும் தனியார்துறை இணைந்து செயல்படும் திட்டங்களாக இருந்தால் (PPP-Public Private Partnership)70 சதவிகித விவசாயிகளிடம் ஒப்புதல் பெறவேண்டும். மேலும் இந்தத் திட்டத்துக்காகக் கையகப்படுத்தப்படும் நிலம் மற்றும் அதன் மீதான உரிமை அரசிடம்தான் இருக்க வேண்டும்.

5. நிலம் தனியாருக்கு தாரை வார்க்கப்படுவதாக இருந்தால், 80 சதவிகித விவசாயிகளிடமிருந்து ஒப்புதல் பெறவேண்டும்.

இப்படி மிகமுக்கியமான ஐந்து அம்சங்களை உள்ளடக்கியதுதான் புதிய சட்டம். விவசாயப் பிரதிநிதிகள் அடங்கிய பல்வேறு குழுக்கள் எல்லாம் சிறிதுசிறிதாக செதுக்கி உருவாக்கியதுதான் இச்சட்டம். இந்தக் குழுக்களில் ஒன்றில் இடம்பிடித்து, கடந்த 5 ஆண்டுகளாக டெல்லிக்கும் சென்னைக்கும் பத்து, பதினைந்து முறை சென்றுவந்த வலிகூட இன்னும் மறையவில்லை. அதற்குள், சட்டத்துக்கு சமாதி என்றால்... மனது பதைபதைக்கிறது... வலி, இதயத்தைப் பிசைகிறது.

'கிராமப் பஞ்சாயத்துக்குள் வரும் நிலங்களுக்கு, 30 மடங்கு கூடுதலாகக் கொடுக்க வேண்டும்' என்றுதான் முதலில் பேச்சுவார்த்தையைத் துவக்கினோம். அதில் இருக்கும் நியாத்தை எடுத்து வைத்தோம். நகர்ப்புறத்தில் அரசாங்கத்தின் வழிகாட்டி மதிப்பு, சதுர அடிகளில் கணக்கிடப்படுகிறது. கிராமப் பஞ்சாயத்தில் ஏக்கர் அளவில் கணக்கிடப்படுகிறது. இது மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடு என்று வலியுறுத்தினோம். அப்போது, ஜெய்ராம் ரமேஷ் என்கிற நல்ல மனம் படைத்த மந்திரி மத்தியில் உட்கார்ந்திருந்ததால், இறுதியில் 10 மடங்கு தொகைக்கு ஒப்புக்கொண்டார். இதன்படியே சட்ட முன்வரைவு தயாரானது. ஆனால், இதைக் கண்டு கொதித்தெழுந்த கார்ப்பரேட் கம்பெனிகள் பல வழிகளில் நெருக்குதல் கொடுக்க... '6 மடங்கு' என்று குறைக்கப்பட்டது. கடைசியில், மந்திரி சபைக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டு வெளிவந்தபோது, '4 மடங்கு' என்று ஒரேயடியாகச் சுருங்கிப்போனது. உள்மனது ஏற்க மறுக்க... 'அந்திம காலத்தில் இருக்கும் இந்த மன்மோகன் சிங் அரசு, இதையாவது செய்கிறது. இந்த வாய்ப்பையும் நழுவ விட்டால், நூற்றாண்டு அடிமைச் சட்டமே தொடரக்கூடிய அபாயம் இருக்கிறது' என்றெல்லாம் போட்டுக் குழப்பிக் கொண்டு... ஆழ்கடலுக்கும், பிசாசுக்கும் (Between deep Sea and devil) இடையில் சிக்கித் தவிப்பவர்களைப் போல் தவித்தோம். அரை மனதுடன் ஒப்புக் கொண்டோம். சட்டம், முழுவடிவம் பெற்றது.

நெடிய போராட்டங்களுக்குப் பிறகு பிறந்திருக்கும் இந்த சட்டத்தை, மோடியின் அரசு, சட்டென்று உடைக்கப் பார்ப்பது என்ன நியாயம்?

எந்த அறிவிப்பும் இல்லாமல், விவசாயிகளைக் கலந்து பேசாமல், சட்டத்தில் இருக்கும் 5 ஷரத்துகளில், முதல் ஷரத்தை விட்டுவிட்டு, மீதியுள்ள 4 ஷரத்துகளையும் காலி செய்யத் துணிந்துவிட்டது புதிய அரசு.

'ம்’ என்று மோடி தலையை ஆட்டினால், விவசாயிகள் காலி. இருக்கிற ஒட்டுக் கோவணமும் பறிபோய், நாளையே கார்ப்பரேட் கம்பெனிகளின் கூலி!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism