Published:Updated:

30 சென்ட் நிலம்... 1,40,000...

மணக்கும் மல்லியில் அசத்தும் விவசாயி! த. ஜெயகுமார் படங்கள்: ஆ. முத்துக்குமார்

30 சென்ட் நிலம்... 1,40,000...

மணக்கும் மல்லியில் அசத்தும் விவசாயி! த. ஜெயகுமார் படங்கள்: ஆ. முத்துக்குமார்

Published:Updated:

தொடர்ந்து வருமானம் தரும் பயிர்களே, விவசாயிகளை வெகுவாகக் கவர்கின்றன. இந்த வரிசையில் மலர் சாகுபடிக்கு முக்கிய இடம் உண்டு. இதிலும், விவசாயிகளுக்கு வஞ்சனை இல்லாமல், வருமானம் கொடுப்பதில் முன்னணியில் நிற்கிறது, மணம் வீசும் மல்லிகைப்பூ! இதில் நல்ல வருமானம் பார்த்து வருகிறார், திருவள்ளூர் மாவட்டம், பாகல்மேடு கிராமத்தைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன்.

''பெரும்பாலான பூக்களுக்கு சீசன் உண்டு. ஆனா, மல்லி குளிர்காலத்தைத் தவிர, எல்லா சீசன்லயும் தொடர்ந்து மகசூல் கொடுக்கும். வருமானமும் தடையில்லாமல் கிடைக்கும். இதனாலதான் மல்லி சாகுபடியை விடாம செய்துட்டிருக்கேன்'' என்று மணக்க மணக்கப் பேசுகிறார்... ஹரிகிருஷ்ணன்.

செங்குன்றத்தை அடுத்திருக்கும் தாமரைப்பாக்கம் கூட்டுரோட்டிலிருந்து, பெரியபாளையம் செல்லும் சாலையில் 2 கிலோ மீட்டர் பயணித்தால் பாகல்மேடு. இங்கிருக்கும் தனது தோட்டத்தில், மல்லி அறுவடையில் குடும்பத்தோடு குஷியாக ஈடுபட்டிருந்த ஹரிகிருஷ்ணன், நமக்கு வரவேற்பு சொல்லி, தனது சாகுபடிக் கதையை ஆரம்பித்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''எனக்கு பூர்விகம் சென்னையிலிருக்கிற புரசைவாக்கம். பெரம்பூர் பி அன்ட் சி மில்லுல வேலை செஞ்சுக்கிட்டிருந்தேன். 94-ம் வருஷம் திருமணத்துக்குப் பிறகு, வேலையிலிருந்து விலகி, மனைவியோட ஊருக்கே வந்து செட்டில் ஆயிட்டேன். இங்க வந்து கையிலிருந்த பணத்தை வெச்சி 30 சென்ட் நிலத்தை வாங்கிப் போட்டேன்.

30 சென்ட் நிலம்... 1,40,000...

இந்த மாவட்டத்துல நெல்லுக்கு அடுத்து மல்லிப்பூவுதான் அதிகமா சாகுபடியாகுது. அதனால நானும் முதல்ல மல்லியை நடவு போட்டேன். தொடர்ந்து, செஞ்சதுல வருமானம் ஓரளவுக்கு வர ஆரம்பிக்கவே, கொஞ்சம் கொஞ்சமா பக்கத்துல நிலம் வாங்க ஆரம்பிச்சு, இப்போ 2 ஏக்கர் வரை வளந்திருக்கு. இன்னிக்கு என் பையனை ஆர்மேனியா நாட்டுல மருத்துவம் படிக்க வெச்சுட்டிருக்கேன். இதுக்குக் காரணமே இந்த மல்லிப்பூ தர்ற வருமானம்தான்'' என்று மல்லியை மெச்சியவர், தொடர்ந்தார்.

''80 சென்ட்ல நெல், 70 சென்ட்ல மல்லி, 40 சென்ட்ல ரோஸ், 10 சென்ட்ல கத்திரி போட்டிருக்கேன். இந்த ரெண்டு ஏக்கர் நிலத்துல, ஒண்ணரை ஏக்கர் களிமண் நிலமாவும், அரை ஏக்கர் நிலம் மணல் கலந்த களிப்பாவும் இருக்குது. முழுக்க ரசாயன முறை விவசாயம் செஞ்சாலும், 30 சென்ட் மல்லிக்கு மட்டும் இயற்கை, ரசாயனம் ரெண்டையும் கலந்து செஞ்சுட்டு வர்றேன்'' என்று ஹரிகிருஷ்ணன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே குறுக்கிட்ட அவருடைய மனைவி கோகிலா, தங்களுக்கு இயற்கை விவசாயம் அறிமுகமானது பற்றி சொன்னார்.

''மூணு வருஷத்துக்கு முன்ன, 'மெட்ராஸ் சோசியல் சர்வீஸ்' தொண்டு நிறுவனம் மூலமா இயற்கை விவசாயப் பயிற்சி கொடுத்தாங்க. அப்போதான் 'மண்புழு விஞ்ஞானி’ பேராசிரியர் சுல்தான் அகமது இஸ்மாயிலை சந்திச்சேன். அவர்தான் இயற்கை விவசாயத்தைப் பத்தியும், மண்புழு உரத்தோட அவசியத்தையும்,தேவையையும் பத்தி சொல்லிக் கொடுத்தாரு.

மண்புழு உரம் தயாரிக்கறதுக்காக 10 தொட்டிகளை எங்க வீட்டுக்குப் பக்கத்திலேயே தொண்டு நிறுவனம் மூலமா அமைச்சு கொடுத்தாங்க. ஜீவாமிர்தம், பஞ்சகவ்யா மாதிரியான இயற்கை வளர்ச்சி ஊக்கிகள் பத்தியும் பயிற்சி கொடுத்தாங்க. இதுக்குப் பிறகு, மண்புழு உரம், ஜீவாமிர்தம், இஞ்சி-பூண்டுக் கரைசல் எல்லாம் தயார் பண்ணி, பயிர்களுக்குக் கொடுக்க ஆரம்பிச்சுட்டோம். தினமும் பூ அறுவடை வேலை, சந்தைக்கு விற்பனைக்குப் போறது இதுலயே நேரம் போயிடுது. அதனால, எல்லா நிலத்துக்கும் இயற்கை விவசாயத்தைச் செய்ய முடியல. இந்த 30 சென்ட் மல்லிக்கு மட்டும் விடாம இயற்கை இடுபொருட்களைக் கொடுத்துட்டு வர்றோம்'' என்று கோகிலா நிறுத்த, தொடர்ந்தார், ஹரிகிருஷ்ணன்.

30 சென்ட் நிலம்... 1,40,000...

''ஆரம்பத்துல ஜீவாமிர்தத்தைப் பாசன தண்ணியில கலந்து விட்டுட்டு இருந்தேன். அதுக்கு பெரியளவுல பிளாஸ்டிக் டிரம் தேவைப்பட்டுச்சு. குழாய்கள்ல சாணக் கரைசல் அடைச்சுக்கிற பிரச்னையும் இருந்துச்சு. இதைப் பார்த்துட்டு, '10 கிலோ பச்சை சாணத்தோடு, 150 மில்லி பஞ்சகவ்யாவைக் கலந்து பிசைஞ்சி, சணல் கோணியில கட்டி, தண்ணி போற கால்வாயில வெச்சுடலாம். இந்தக் கரைசல் பாசனத் தண்ணியில கொஞ்சம் கொஞ்சமா கரைஞ்சு போய், நிலம் பூராவும் சமமா பரவிடும். பயிருக்குத் தேவையான சத்துக்கள் கிடைச்சுடும்’னு பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில் சார் விளக்கமா சொன்னார். இதை அப்படியே செஞ்சதுல நல்ல பலன் கிடைச்சுட்டிருக்கு. ரசாயன முறை விவசாயத்துல இருக்கிற பயிர்களுக்கும் இந்தக் கரைசலைப் பயன்படுத்திட்டு வர்றேன்.

ரசாயன முறையில அறுவடை செய்யுற மல்லிகைப்பூ, சாயந்தரத்துக்குள்ள வாடி, வதங்கிடும். ஆனா, இயற்கை முறையில அறுவடை செய்ற பூ, ராத்திரி 9 மணி வரை தாங்குது. பூவும் அடர்த்தியா இருக்குது. நல்லா எடை கட்டுது. இதனால, ரசாயனத்துல விளையுற பூவைக் காட்டிலும், சில நேரங்கள்ல 2 ரூபா, 5 ரூபா கூடுதலா விலை கிடைக்குது. சந்தையில வாங்க வர்றவங்க, பூவை எடுத்துப் பாத்து, உடனே வாங்கிட்டுப் போயிடறாங்க. ரசாயன விவசாயத்துல அதிகமா பூக்கும். சில நேரங்கள்ல பூவே இல்லாமலும் போயிடும். ஆனா, இயற்கை விவசாய வயல்ல இருக்கிற மல்லிச் செடியில எப்பவுமே பூ அறுவடை இருந்துட்டே இருக்கும்'' என்ற ஹரிகிருஷ்ணன், 30 சென்ட் நிலத்தில் இயற்கை முறையில் மல்லிப்பூ சாகுபடி செய்வது பற்றி பகிர்ந்த தகவல்கள், இங்கே பாடமாக இடம்பெறுகின்றன.

''மல்லிகைப்பூ நடவுக்கு ஆடி, தை பட்டங்கள் ஏற்றவை. தைப் பட்டமென்றால், தாராள தண்ணீர் வசதி தேவை. ஆனால், ஆடிப் பட்டத்தில் நடவு போட்டால், மழையிலேயே நன்கு வேர் பிடித்து, சித்திரையில் அறுவடை ஆரம்பிக்கும் அளவுக்கு வளர்ந்துவிடும். நடவுக்கு முன்பாக நிலத்தை 4 சால் உழவு ஓட்டி மண்ணைப் பொலபொலப்பாக்கி, 4 டன் எருவைக் கொட்டி, நிலம் முழுவதும் பரப்பிவிட வேண்டும். வரிசைக்கு வரிசை 4 அடி, செடிக்கு செடி 4 அடி இடைவெளி இருக்குமாறு அரை அடி ஆழத்துக்கு குழிகள் எடுக்க வேண்டும் (30 சென்ட்டில் சுமார் 817 குழிகள் எடுக்கலாம். ஏக்கருக்கு 2,722 குழிகள் வரை எடுக்க முடியும்).

மட்கிய எரு 100 கிலோவில், தலா 2 கிலோ சூடோமோனஸ், அசோஸ்பைரில்லம், பாஸ்போ-பாக்டீரியா ஆகியவற்றை முதல் நாளே நன்றாகக் கலந்து வைத்துக் கொள்ளவேண்டும்.

மறுநாள், இந்தக் கலவையை குழிக்கு 2 கைப்பிடி வீதம் வைத்து, இரண்டு நாற்றுக்களை வைத்து, மண் அணைத்துத் தண்ணீர் விடவேண்டும். நடவு செய்து ஒரு வாரம் கழித்து, தண்ணீர் கொடுக்கவேண்டும். தொடர்ந்து மண்ணின் ஈரப்பதத்தைப் பொறுத்து தண்ணீர் கொடுக்க வேண்டும்.

15-வது நாளில் முதல் களையெடுத்து, பாசன நீரில் 100 லிட்டர் ஜீவாமிர்தத்தைக் கலந்துவிடலாம். அல்லது, 10 கிலோ பச்சைச் சாணத்துடன் 150 மில்லி பஞ்சகவ்யாவைக் கலந்து, சணல் கோணியில் வைத்துக் கட்டி, பாசனநீர் செல்லும் கால்வாயில் போட்டுவிட வேண்டும். இதை 15 நாட்களுக்கு ஒரு தடவை செய்யவேண்டும். இதேபோல, 10 லிட்டர் தண்ணீருக்கு, 100 மில்லி பஞ்சகவ்யா வீதம் தெளித்து வரவேண்டும்.

மூன்று மாதங்களுக்கு ஒரு முறை 60 கிலோ மட்கிய எரு, 10 கிலோ மண்புழு உரம், தலா 2 கிலோ கடலை, வேம்பு, ஆமணக்கு, எள் பிண்ணாக்குகளுடன், பயோ உரக்கலவை (தலா 1 கிலோ பாஸ்போ-பாக்டீரியா, அசோஸ்பைரில்லம், ரைசோபியம், சூடோமோனஸ் கலந்தது) ஆகியவற்றை நன்றாகக் கலந்து, செடிக்கு 2 கைப்பிடி வீதம் கொடுத்து, தண்ணீர் கட்டிவர வேண்டும். 10-வது மாதத்தில் (ஏப்ரல்) பூ அறுவடைக்கு வரும்.

30 சென்ட் நிலம்... 1,40,000...

மேகமூட்டம் மற்றும் வெயில் குறைவாக இருக்கும் காலங்களில் பூ வளர்ச்சி அவ்வளவாக இருக்காது. அதேசமயம் பூச்சித் தாக்குதலுக்கு வாய்ப்பு உண்டு. இதற்கு, பரிந்துரைக் கப்பட்ட பூச்சிவிரட்டிகளைத் தெளிக்கலாம். பனிக்காலங் களில் பூ அறுவடை குறைவாகத்தான் இருக்கும். ஆனால், அப்போதுதான் விலையும் கூடுதலாக இருக்கும். இந்த சமயங்களில் செடிகளைக் கவாத்து செய்து விடலாம். ஆகஸ்ட், டிசம்பர் என ஆண்டுக்கு இரண்டு முறை கவாத்து செய்வது நல்லது.

18 ஆண்டுகளாக அதே செடி!

சாகுபடி முறைகளைப் பகிர்ந்த ஹரிகிருஷ்ணன், ''முறையா களையெடுத்து, முறையா பராமரிப்பு செய்றதால... நடவு செஞ்சு 18 வருஷமாகியும், அதே செடியில இருந்தே தொடர்ந்து பூ அறுவடை செய்துட்டிருக்கோம். நடவு போட்ட மொத வருஷத்துல

1 கிலோ, 2 கிலோ பூதான் கிடைச்சுது. செடி வளர்ந்த பிறகு, ரெண்டாவது வருஷத்திலேருந்து மகசூல் கூட ஆரம்பிச்சுது.

பொதுவா, பிப்ரவரி தொடங்கி அக்டோபர் வரைக்கும் மகசூல் இருக்கும். இதுல மார்ச், ஏப்ரல், மே, ஜூன், ஜூலை மாதங்கள்லதான் விளைச்சல் நல்லா இருக்கும். பிப்ரவரி, ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர்ல குறைவா இருக்கும். 30 சென்ட் நிலத்திலிருந்து ஒவ்வொரு மாசமும் சராசரியாக 300 கிலோ வரை மகசூல் கிடைக்கும். இதன்படி பார்த்தா மார்ச்-ஜூலை வரைக்குமான 5 மாசத்துக்கு 1,500 கிலோ மகசூல் எடுக்கலாம். இதுல நூறு, இரு நூறு கிலோ கூடுதலாவோ, குறைவாவோ கிடைக்கும். மீதியிருக்கிற நாலு மாசத்துல ரொம்ப குறைவாத்தான் மகசூல் இருக்கும். அதேசமயம், நல்ல விலை கிடைக்கும். இந்த நாலு மாச வருமானத்தை கணக்குல எடுத்துக்க முடியாது.  

30 சென்ட் நிலம்... 1,40,000...

வாரிக்கொடுக்கும் வருமானம்

கோயம்பேடு மார்க்கெட்டுக்குத்தான் பூ கொண்டு போறேன். சாயந்தரம் 5 மணி வரை விவசாயிகள் பூ கொண்டு போகலாம்.  எப்போ போனாலும் பூவைப் போட்டுட்டு பணம் வாங்கிட்டு வந்துடுவேன்.

இந்தத் தடவை, மார்ச்-ஜூலை வரையிலான 5 மாசத்துல எனக்கு 1,400 கிலோ மகசூல் வந்துச்சு. ஒரு கிலோ பூ,

60 ரூபாய்ல இருந்து 180 ரூபாய் வரைக்கும் விலைபோச்சு. சராசரியா கிலோ 100 ரூபாய்னு கணக்குப் போட்டா...

1 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் வருமானமா கிடைச்சிருக்கு. செலவு 65 ஆயிரம் ரூபாய் போக, 75 ஆயிரம் ரூபாய் லாபம். இப்பதான் நெல்லு நடவு போட்டிருக்கேன். ரோஸ், நவம்பர் மாசம்தான் அறுவடைக்கு வரும்'' என்று மலர்ந்த முகத்துடன் சொன்னார், ஹரிகிருஷ்ணன்!

தொடர்புக்கு, ஹரிகிருஷ்ணன்,
செல்போன்: 94446-08672.

 இயற்கையிலும் பூச்சிகளை விரட்டலாம்!

 மல்லிகைப்பூவைத் தாக்கும் பூச்சிகளை விரட்டுவதற்கு ரசாயனங்களையே பயன்படுத்துகிறார் ஹரிகிருஷ்ணன். இந்தப் பூச்சிகளை இயற்கை முறையிலும் விரட்ட முடியும் என்பதே உண்மை. இதைப் பற்றி பூச்சியியல் வல்லுநர் நீ. செல்வத்திடம் கேட்டபோது, எளிமையான தகவல்களைச் சொன்னார். அவற்றை அப்படியே ஹரிகிருஷ்ணனிடம் சொன்னபோது, ''எனக்கு ரசாயன பூச்சிக்கொல்லி தெளிக்க மட்டும் 30 சென்ட் நிலத்துக்கு

30 சென்ட் நிலம்... 1,40,000...

10 ஆயிரம் செலவு ஆகிறது. இயற்கை பூச்சிவிரட்டி தெளித்தால், செலவு குறையும் என்று தெரிகிறது.  மல்லித் தோட்டத்துல இயற்கைப் பூச்சிவிரட்டியைப் பயன்படுத்திப் பார்த்துட்டு, உங்களுக்குச் சொல்றேன்'' என்று சொன்னார்.

செல்வம் சொன்ன இயற்கை பூச்சிவிரட்டி இதோ...

''பூச்சித்தாக்குதலுக்கு முன்பாகவே பூச்சிவிரட்டியைத் தெளித்து வைக்கலாம். அதாவது, வேப்பங்கொட்டை 5 கிலோ, வெள்ளைப் பூண்டு அரை கிலோ இரண்டையும் சேர்த்து, அம்மியில் அரைத்தெடுத்து, ஒரு வெள்ளைத் துணியில் கட்டி, 10 லிட்டர் நாட்டு மாட்டு கோமியத்தில் ஒருநாள் ஊறவைக்க வேண்டும். பிறகு, வடிகட்டி, 100 கிராம் காதிசோப்பை கரைத்து, 90 லிட்டர் தண்ணீரில் கலந்து பயிருக்குத் தெளிக்க வேண்டும். கவாத்து செய்தபிறகு வரும் தளிர் மீதும் தெளிக்கலாம். இல்லை என்றால், பூ அறுவடை செய்த பிறகு தெளிக்கலாம்.

30 சென்ட் நிலம்... 1,40,000...

இதுவே பூச்சித் தாக்குதல் ஆரம்பித்துவிட்டால், 'பச்சை மிளகாய் 3 கிலோவை காம்பு கிள்ளி அரைத்து எடுத்து, தண்ணீரில் ஊற வைக்கவேண்டும். கால் கிலோ வெள்ளைப் பூண்டை அரைத்து, 100 மில்லி. மண்ணெண்ணெயில் கலந்து ஊறவைக்க வேண்டும். இந்த இரண்டு ஊறல்களையும் 10 லிட்டர் தண்ணீரில் கலந்துவிட வேண்டும். இதில் அரை லிட்டரை எடுத்து, 1 டேங்க் (10 லிட்டர்) தண்ணீரில் கலந்து, பயிர்களுக்குத் தெளிக்க வேண்டும். வேப்பங்கொட்டையின் கசப்புத் தன்மைக்கும், பச்சை மிளகாயின் காரத்துக்கும் புழுக்கள், இலைப்பேன், தண்டுத் துளைப்பான் என மல்லிப்பூவைத் தாக்குகிற எல்லா பூச்சிகளும் கட்டுப்படும்.

மல்லியில் 'சிவப்பழுகல்’ நோய் விவசாயிகளைப் படாதபாடு படுத்துகிறது. இது நோயா அல்லது பூச்சி, புழுக்களால் வரக்கூடியதா என்பதை அறுதியிட்டு சொல்லமுடியவில்லை. ஆனால், இது எந்தெந்த மாதங்களில், எந்தெந்தப் பருவங்களில் வரும் என்பது விவசாயிகளுக்குத் தெரியும். பொதுவாக நோய் என்பது மண், காற்று மூலம் பரவும். அதற்கேற்ப தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். நோயாக இருக்கும்பட்சத்தில் பின்வரும் முறைகளைக் கையாளலாம். செடியின் வேர்ப்பகுதியில் 1 லிட்டர் தண்ணீருக்கு, 5 கிராம் டிரைக்கோடெர்மா விரிடியைக் கலந்து ஊற்றிவிட வேண்டும். இலை வழியாகக் கொடுப்பதாக இருந்தால், 1 லிட்டர் தண்ணீரில் 10 கிராம் சூடோமோனஸை கலந்து தெளித்துவிட வேண்டும்.''

தொடர்புக்கு, பூச்சி. நீ.செல்வம், செல்போன்: 94435-38356

சேதி கேட்டீங்களா!

விவசாயிகளின் பையை நிரப்பும் அளவுக்கு பணம்!

சமீபத்தில் டெல்லியில் நடத்தப்பட்ட வேளாண் துறை ஆராய்ச்சி கவுன்சில் மாநாட்டில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ''இயற்கை வளம் குறைந்து கொண்டே வருவது, காலநிலை மாற்றம் என தற்போது, பல சவால்கள் உருவாகி உள்ளன. இந்த சவால்களை முறியடித்து, குறைந்த அளவுள்ள நிலத்தில், குறுகிய காலத்தில், அதிக அளவில் விளைச்சலை உற்பத்தி செய்ய வேண்டும். இதற்கு, அறிவியல் தொழில்நுட்பத்தை அதிக அளவில் பயன்படுத்த வேண்டும். பசுமைப் புரட்சி மற்றும் வெண்மைப் புரட்சி வரிசையில், மீன் வளத்தை அதிகரிக்க, 'நீலப்புரட்சி’யையும் ஏற்படுத்த வேண்டும்.

இரண்டு அம்சங்களை, நாம் நிரூபித்துக் காட்ட வேண்டும். ஒன்று, நாட்டுக்கும், உலகுக்கும் உணவு அளிக்கும் வகையில், விவசாயிகளை நாம் தயார் செய்ய வேண்டும். மற்றொன்று, விவசாயிகளின் பை நிரம்பும் வகையில், நாம் விவசாய உற்பத்தியை மேம்படுத்த வேண்டும்'' என்று கூறியிருக்கிறார்.

செவ்வட்டை பிரச்னையைத் தீர்க்கும் புதிய திராட்சை ரகம்!

திராட்சை விவசாயிகளுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி வந்த, செவ்வட்டை மற்றும் சாம்பல் நோய் தாக்காத புதிய திராட்சை ரகத்தை, கம்பத்தில் இருக்கும் திராட்சை ஆராய்ச்சி நிலையம் அறிமுகம் செய்துள்ளது. இதைப் பற்றிப் பேசிய ஆராய்ச்சி நிலையத்தின் பேராசிரியர் பார்த்திபன், ''பனிக்காலம் மற்றும் மழைக்காலங்களில் பன்னீர் திராட்சையில் செவ்வட்டை மற்றும் சாம்பல் நோய் தாக்கி, மகசூல் கடுமையாகப் பாதிக்கும்.  விவசாயிகள் பெரிய அளவில் முயற்சிகள் எடுத்தும் தாக்குதலைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இந்நிலையில், புனேயில் உள்ள தேசிய திராட்சை ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து, ஏ 18-3 என்ற ரகத்தை வாங்கி வந்து நான்கு சீசன்களில் சோதனை செய்து பார்த்தோம். தற்போது நமது பகுதியில் சாம்பல் மற்றும் செவ்வட்டை தாக்காமல் இருக்க, இதுவே ஏற்ற சரியான ரகமாக இருக்கிறது. ஒரு கொடியில் 150 முதல் 200 திராட்சைக் கொத்துக்கள் வரை உள்ளன. மற்ற ரகங்களில்

50 முதல் 70 கொத்துக்கள் மட்டுமே இருக்கும். இலைகள் அகலமாகவும், கரும்பச்சை நிறத்திலும் இருக்கும். விவசாயிகளுக்கு மிகவும் ஏற்ற ரகம்'' என்று சான்று தருகிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism