மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மரத்தடி மாநாடு : மீண்டும் தென்னையைக் குறி வைக்கும் ஈரியோபைட்!

ஓவியம்: ஹரன்

'ஏரோட்டி’ ஏகாம்பரத்துடன் காலையிலேயே தோட்டத்துக்கு வந்துவிட்ட 'வாத்தியார்’ வெள்ளைச்சாமி, ஸ்டூலில் அமர்ந்து நாளிதழ் வாசித்துக் கொண்டிருந்தார். நாற்றங்காலில் தூவுவதற்காக ஆட்டுப்புழுக்கைகளைத் தயார்படுத்திக்கொண்டிருந்தார் ஏரோட்டி. சற்றுநேரத்தில் வந்துசேர்ந்த 'காய்கறி’ கண்ணம்மா, ''ஆடி மாசம் வந்தாலே கோழி விலையெல்லாம் ஏறிடுது. நாட்டுக் கோழிக்கறி ஒரு கிலோ நானூறு ரூபாய் வரைக்கும் விலை போகுது'' என்று சொல்லி மாநாட்டைத் துவக்கிவைத்தார்.

''நீ எதுக்கு கோழிக்கறி வாங்குறே? அதான் வீட்டுலயே வளக்குறீயே... அதை அடிச்சு சாப்பிட வேண்டியதுதானே'' என்று கேட்டார், ஏரோட்டி.

''நமக்குப் பிரச்னையில்லைய்யா... வளர்க்க முடியாதவங்களுக்கு என்ன பண்றது? அதுவும் நிறைய இடங்கள்ல பண்ணைகள்ல வளக்குற நாட்டுக் கோழியைத்தான் விக்கிறாங்க. பண்ணையில... அலகு வெட்டுன கோழி, கம்பெனி தீவனம்போட்ட கோழினு சொல்லி விலையைக் குறைச்சு, ஒரு கிலோ உயிர் எடைக்கு எண்பது ரூபாய் வரைக்கும் கொடுத்து வாங்குற வியாபாரிங்க, கறியாக்கி நானூறு ரூபாய்னு விக்கிறாங்க. அவங்க காட்டுல கொள்ளை மழைதான்'' என்றார், காய்கறி.

''அதுவும் சரிதான்'' என்று ஆமோதித்த வாத்தியார், தான் ஒரு செய்தியைச் சொன்னார்.

மரத்தடி மாநாடு : மீண்டும் தென்னையைக் குறி வைக்கும் ஈரியோபைட்!

''ஈரோடு மாவட்டத்துல, வங்கிகள்ல கடன் வாங்கியிருக்குற விவசாயிகளெல்லாம் சேர்ந்து, 'தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன்பெற்ற விவசாயிகள் சங்கம்’ ஏற்படுத்தியிருக்காங்க. இந்த சங்கத்துல 1,500 உறுப்பினர்கள் இருக்காங்க. ஏதாவது காரணத்தால கடனைக் கட்ட முடியாமப் போறப்போ... டிராக்டர், விவசாய நிலங்களை வங்கி அதிகாரிகள் ஜப்தி பண்ண வருவாங்கள்ல. அந்தமாதிரி சமயத்துல இந்த சங்கம் மூலமா பேச்சு வார்த்தை நடத்தி, ஜப்தியைத் தடுக்குற வேலைகளைச் செஞ்சுட்டு இருக்காங்க. இதுவரை 250 டிராக்டர்களை மீட்டு விவசாயிகள்கிட்ட ஒப்படைச்சிருக்காங்க. ஜூலை மாசம் 22-ம் தேதி... இவங்கள்ல கொஞ்சபேரு சங்கத்தோட ஒருங்கிணைப்பாளர் நந்திவர்மன் தலைமையில, டெல்லிக்கு போனாங்க. மத்திய வேளாண்துறை அமைச்சர் ராதாமோகன் சிங்கைப் பாத்து... 'எல்லா விவசாயக் கடன்களையும் தள்ளுபடி செய்யணும்’னு கோரிக்கை மனு கொடுத்திருக்காங்க. 25 நிமிஷம் ஒதுக்கிப் பேசின அமைச்சர், 'பிரதமர்கிட்ட விஷயத்தைக் கொண்டு போறேன்’னு உறுதி கொடுத்திருக்காராம்'' என்றார்.

மரத்தடி மாநாடு : மீண்டும் தென்னையைக் குறி வைக்கும் ஈரியோபைட்!

''பேசி நல்ல முடிவெடுத்தா சரி'' என்ற காய்கறி, தான் கொண்டு வந்திருந்த கொய்யா பழங்களை ஆளுக்கு ஒன்றாக எடுத்துக் கொடுத்தார்.

அதைச் சாப்பிட்டுக் கொண்டே ஒரு செய்தியைச் சொல்ல ஆரம்பித்தார், ஏரோட்டி.

''கொஞ்ச வருஷத்துக்கு முன்ன தென்னையில ஈரியோபைட் சிலந்தி தாக்கி, விவசாயிகளை நிலைகுலைய வெச்சுட்டு இருந்துச்சு. இப்ப கொஞ்ச நாளா திரும்பவும் பெரிய அளவுல ஈரியோபைட் சிலந்தி நோய் தாக்கிட்டு இருக்கு. செழிம்பா மழை பெய்ஞ்சாலே இந்த நோய் ஓடிப்போயிடும். ஆனா, போதுமான மழை இல்லாததால, வேகமா பரவிட்டிருக்கு. பெரும்பாலான விவசாயிகள் ரசாயன மருந்தைத்தான் பயன்படுத்திட்டு இருக்காங்க. இந்த மருந்தை அரசாங்கமே இலவசமா கொடுத்துட்டு இருந்துச்சு. இப்போ 50 சதவிகித மானிய விலையிலதான் கொடுக் கிறாங்க. அதிக விலைங்கறதால நிறைய விவசாயிகளால வாங்கிப் பயன்படுத்த முடியல. மொத்தமா எல்லாரும் ஒரே நேரத்துல இந்த மருந்தைப் பயன்படுத்தினாதான் பலன் இருக்கும். இல்லாட்டி நோய் பரவுறதைத் தடுக்க முடியாது. ஏற்கெனவே, வறட்சியால ஏகப்பட்ட மரங்கள் காலியாகிடுச்சு. இந்த நோய் பரவுனா, இருக்குற மரங்களும் வீணாகிடும். அதனால எல்லா விவசாயிகளும் ஒரே நேரத்துல அந்த மருந்தை அடிக்கிற வகையில இலவசமா கொடுக்கணும்னு கோரிக்கை வெச்சுருக்காங்க'' என்று சொன்னார்.

''தேங்காய் உற்பத்தி பெருகறதுக்கு  அரசாங்கம் இதைச் செய்யுறதுல தப்பே இல்ல'' என்ற வாத்தியார், தொடர்ந்தார்.

மரத்தடி மாநாடு : மீண்டும் தென்னையைக் குறி வைக்கும் ஈரியோபைட்!

''இந்த வருஷம் 2 ஆயிரம் சோலார் மோட்டார்களை, 80 சதவிகித மானியத்துல விவசாயிகளுக்குக் கொடுக்கப் போறதா அறிவிச்சிருக்காங்க. ஆனா, ரெண்டு வருஷத் துக்கு முன்ன 2 ஆயிரத்து 500 பேருக்கு சோலார் மோட்டார் கொடுக்க ஆரம்பிச்ச திட்டமே இன்னும் முடியலையாம். அதனால, வேளாண்மை, தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் எல்லாம் ரொம்ப அதிருப்தியில இருக்குறாங்களாம். 2013-14-ம் வருஷத்துல 1,400 விவசாயிகள்கிட்ட விருப்ப விண்ணப்பங்கள் வாங்கியிருக்காங்க. அதுல, 425 பேருக்குத்தான் மோட்டார் பொருத்துறதுக்கான பணி ஆணை வழங்கியிருக்காங்க. மொத்தமே 160 மோட்டார் மட்டும்தான் பொருத்தியிருக்காங்க. அதே வருஷமே 'நுண்ணீர்ப் பாசன அமைப்புகளுடன் இணைத்து செயல்படுத்தும், 2 ஆயிரம் சோலார் மோட்டார்கள் விவசாயிகளுக்கு வழங்கப்படும்’னு சட்டசபையில முதல்வர் அறிவிச்சிருக்காங்க. ஆனா, அரசாங்கம் போட்ட விதிகள்லாம் பொருந்தி வராததால, பெருசா விவசாயிகள் ஆர்வம் காட்டலை. ஆயிரம் பேர் அளவுக்குத்தான் விண்ணப்பமே கொடுத்திருக்காங்க. அவங்களுக்கு இன்னமும் பணி ஆணைகூட கொடுக்கலை.

இப்படி இருக்குறப்போ, எந்த விதியையும் மாத்தாம இந்த வருஷமும் 2 ஆயிரம் மோட்டார் கொடுக்கப் போறோம்னு அறிவிச்சுட்டாங்களாம். ஏற்கெனவே இப்படி மோட்டார் வெச்சதுல பாதி அளவுகூட சரியா ஓடறதில்லையாம். அதனால திட்டத்தை மறுபரிசீலனை பண்ணணும்னு அதிகாரிகள் தரப்புல பேசிட்டு இருக்காங்க'' என்றார்.

''நாம கேட்டு நடக்குறதை விரல்விட்டு எண்ணிடலாம். அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் சேர்ந்துக்கிட்டு கொண்டுவர்ற திட்டங்களை எழுதி மாளாது. இப்படியெல்லாம் உருப்படாத திட்டங்கள் போட்டாத்தானே, இதுல கிடைக்கிறத வெச்சு, வேற நாலு விஷயங்களுக்கு செலவழிக்க முடியும்'' என்று ஏரோட்டி சொல்லிக் கொண்டிருக்கும்போதே சில தூறல்கள் விழ ஆரம்பிக்க...

''நாத்தங்கால்ல ஆட்டுப் புழுக்கையைப் போட்டுட்டு வந்துடறேன்'’ என்று ஏரோட்டி எழுந்து ஓட, அத்துடன் அன்றைய மாநாடு முடிவுக்கு வந்தது.