பிரீமியம் ஸ்டோரி

 அனைவருக்கும் பசுமை வணக்கம்!

'அணு ஆயுதங்களைவிட ஆபத்தானது, உயிரியல் தொழில்நுட்பம். அரசாங்கத்தின் சார்பில் இருக்கும் உரிய அமைப்புகளிடம் அனுமதி வாங்கிய பிறகே, உயிரியல் தொழில்நுட்பம் சார்ந்த ஆய்வுகளில் ஈடுபட வேண்டும்' என்று சட்டம் போட்டு வைத்திருக்கிறார்கள் இந்தியாவில். ஆனால், அவையெல்லாம் அரசு அமைப்புகளின் துணையோடு அப்பட்டமாக மீறப்படுவதுதான் இங்கே வாடிக்கை. குறிப்பாக, மரபணு மாற்று ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் பன்னாட்டு நிறுவனமான மான்சான்டோ இந்த விஷயத்தில் எல்லை மீறிக் கொண்டிருக்கிறது’.

##~##

-இப்படிப்பட்ட குற்றச்சாட்டுகள் சில பல ஆண்டுகளாகவே சூழல் ஆர்வலர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்களால் முன் வைக்கப்படுகின்றன.

ஆனால், 'அதெல்லாம் வெறும் பிரமை. அப்படியெல்லாம் இங்கே எந்த விதி மீறலும் இல்லை. அனைத்தும் சட்டப்படியேதான் நடக்கிறது. சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் என்ற பெயரில் என்.ஜி.ஓ. அமைப்புகள்தான் தேவையில்லாமல் பிரச்னை கிளப்புகின்றன' என்று சப்பைக்கட்டு கட்டிக் கொண்டிருக்கின்றன உயிரியல் தொழில்நுட்ப ஆய்வுகளை முறைப்படுத்த வேண்டிய பொறுப்பிலிருக்கும் அரசு அமைப்புகள்.

அதிகாரத்திலிருக்கும் மக்கள் பிரதிநிதிகளும் இதுபோன்ற ஜீவாதாரமான பிரச்னைகளில் போதுமான அறிவு பெற்றிருக்காததோடு, அக்கறையும் காட்டாததால்... அதிகாரிகள் தங்கள் இஷ்டத்துக்கு புகுந்து விளையாடிக் கொண்டிருக்கின்றனர். இதனால், மரபணு மாற்றுத் தொழில்நுட்ப விஷயத்தில் இங்கே என்ன நடக்கிறது என்பது மூடுமந்திரமாகவே இருக்கிறது.

இந்நிலையில், ''மான்சான்டோ நிறுவனம் இந்தியாவில் எந்தத் துறையிடமும் அனுமதி பெறாமலே கத்திரி விதைகளில் மரபணு மாற்று ஆராய்ச்சியை மேற்கொண்டிருக்கிறது'' என்று அண்மையில் பகிரங்கமாக குற்றம் சாட்டியிருக்கிறது இந்தியாவின் தேசிய பல்லுயிர்ப்பெருக்க ஆணையம்.

இதற்கு அரசாங்கமும்... அதிகாரிகளும் தரப்போகும் பதில் என்ன?

நேசத்துடன்,
ஆசிரியர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு