Published:Updated:

'வெறும் சாணம் 1 ரூபாய்... மதிப்புக் கூட்டினால் 6 ரூபாய்!'

ஜி. பழனிச்சாமி படங்கள்: வீ. சிவக்குமார்

'வெறும் சாணம் 1 ரூபாய்... மதிப்புக் கூட்டினால் 6 ரூபாய்!'

ஜி. பழனிச்சாமி படங்கள்: வீ. சிவக்குமார்

Published:Updated:

கருத்தரங்கு

'நம்மாழ்வாரின் இனியெல்லாம் இயற்கையே!’ என்ற தலைப்பில், இயற்கை விவசாயிகளின் அனுபவப் பகிர்வு, ஜூன்

15 அன்று, கரூரில் நடைபெற்றது. இந்த ஒரு நாள் நிகழ்வை பசுமை விகடனுடன் இணைந்து கரூர், வள்ளுவர் கல்வி அறக்கட்டளை நிர்வாகிகள், கரூர் மாவட்ட முன்னோடி இயற்கை விவசாயிகள் ஏற்பாடு செய்திருந்தனர். நிகழ்ச்சியில், 'அபிநவம்’ ஜெயராமன், ஒருங்கிணைந்த பண்ணையம் குறித்து, சொன்ன விஷயங்கள் இங்கே இடம்பிடிக்கின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''மாடா உழைச்சு ஓடாய் தேய்ஞ்சாலும் கட்டுபடியாகாத தொழிலாத்தான் விவசாயம் இருக்கு என்பதுதான் பெரும்பாலான விவசாயிகளின் ஆதங்கம். ஆனால், அப்படியெல்லாம் கிடையாது. மாடாக உழைத்தாலும் அதை உபயோகமாக உழைத்து, விவசாய முறைகளையும் கொஞ்சம் மாற்றிக் கொண்டால், உழுதவன் கண்டிப்பாக லாபம் அடைய முடியும்'' என்று எடுத்ததுமே நம்பிக்கை பகிர்ந்த ஜெயராமன், தொடர்ந்தார்.

'வெறுமனே பயிர் வெள்ளாமையை மட்டும் நம்பக்கூடாது. அது லாபகரமாவும் இருக்காது. ஒருங்கிணைந்த பண்ணையம்தான் லாபத்துக்கான வழி. நான் ஒருங்கிணைந்த பண்ணையம் மூலமாக 9 ஏக்கர் நிலத்தில் ஆண்டுக்கு 9 லட்ச ரூபாய் வருமானம் எடுத்து வருகிறேன். தென்னந்தோப்புக்குள் பாக்கு, வாழை, தீவனப்பயிர் என நான்கு அடுக்கு விவசாயம் செய்கிறேன். மாடு, ஆடு, கோழி, வான்கோழி, தேனீ, மீன் என வளர்க்கிறேன். இவற்றின் கழிவுகள் மூலம், மண்புழு உரம், சாண எரிவாயு உற்பத்தி செய்கிறேன். அசோலா வளர்த்து வருகிறேன். வரப்புகளில் நீண்ட காலப்பயிராக தேக்கு மரங்களை வளர்த்து வருகிறேன். சாணத்தை விற்றால், ஒரு கிலோவுக்கு ஒரு ரூபாய்தான் கிடைக்கும். அதையே மதிப்புக்கூட்டி சாண எரிவாயுவாக மாற்றினால், ஒரு கிலோ சாணம் மூலம் 6 ரூபாய் வருமானம் கிடைக்கும். இப்படி நம் பண்ணையில் கிடைக்கும் கழிவுகளையே மதிப்புக்கூட்டினால் கணிசமான லாபம் பார்க்க முடியும். விவசாயத்தை வணிகரீதியாக செய்தால், கண்டிப்பாக லாபம் கிடைக்கும்.

'வெறும் சாணம் 1 ரூபாய்... மதிப்புக் கூட்டினால் 6 ரூபாய்!'

மாடுகள் மூலமாக பால், சாணம், பஞ்ச கவ்யா, சாண எரிவாயு, மண்புழு உரம் என்று ஐந்து வருமானம் எடுக்க முடியும். ஆடுகள் மூலமாக ஆட்டு எரு, குட்டிகள் விற்பனை மூலம் வருமானம் எடுக்கலாம். கோழிகள் மூலமாக முட்டை, கோழி விற்பனை மூலம் வருமானம் எடுக்கலாம். தேனீக்கள் மூலமாக தேன் கிடைப்பதோடு, பண்ணையில் மகசூலும் கூடும். அசோலா தீவனச்செலவைக் குறைக்கும்.  அத்தனையையும் ஒருங்கிணைத்து நம் பண்ணையில் மேற்கொள்ளும்போது ஏதோ ஒரு காரணத்தால் ஒன்றில் வருமானம் குறைந்தாலும், மற்றொன்று ஈடுகட்டி விடும். இதுதான், ஒருங்கிணைந்த பண்ணையத்தின் தாரக மந்திரம்.

மூன்று ஏக்கர் நிலம் வைத்திருக்கும் சிறு விவசாயிகள்கூட, ஒருங்கிணைந்த பண்ணைய முறையில், வெற்றிகர விவசாயியாகத் திகழ்கிறார்கள். ஒரு ஏக்கரில் மல்பெரி செடிகளை வளர்த்தால், பட்டுப்புழு மூலமாக மாதம்

20 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்க முடியும். அதே மல்பெரி கறவை மாடுகளுக்கான அற்புதமான தீவனம். அதன் மூலம் பால் உற்பத்தியைக் கூட்டலாம். அரை ஏக்கரில் பந்தல் அமைத்து, காய்கறிகள் வளர்த்தால், தினசரி வருமானம் ஈட்ட முடியும். ஒருங்கிணைந்த பண்ணையம் அமைக்க, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன் வசதியும் கிடைக்கிறது. சொட்டு நீர், கறவை மாடு, பட்டுப்புழு போன்றவற்றுக்கு மானியமும் கிடைக்கிறது'' என்றெல்லாம் விளக்கிய ஜெயராமன், விளக்கப்படங்களையும் திரையிட்டுக் காட்டினார்.

'வெறும் சாணம் 1 ரூபாய்... மதிப்புக் கூட்டினால் 6 ரூபாய்!'

குறைந்த செலவில் இயற்கைச் சான்றிதழ்!

அடுத்ததாக, 'இயற்கைவழி வேளாண்மைச் சான்றிதழ்' பெறும் வழி முறைகளைப் பற்றி 'குடும்பம்’ அமைப்பைச் சேர்ந்த சுரேஷ்கண்ணா  பேசியபோது, ''இயற்கை வேளாண்மை குறித்த விழிப்பு உணர்வு மக்களிடையே அதிகரித்து வருகிறது. ஆனால், இதற்கான சான்றிதழைப் பெற விவசாயிகள் அதிக செலவு செய்கிறார்கள். இப்படி சான்றிதழ் அளிக்கும் வேலையை பல நிறுவனங்கள் தொழிலாகச் செய்து வருகின்றன. நுகர்வோர்க்கும் உழுவோர்க்கும் சம்பந்தமேயில்லாத மூன்றாம் நபர், நம் நிலத்தை ஆய்வு செய்து சான்றிதழ் வழங்கும் முறைதான் நடைமுறையில் உள்ளது. ஆனால், செலவே இல்லாமல் 'பங்கேற்பு முறை உறுதியளிப்புச் சான்றிதழ்’ மூலம் குழுவில் உள்ள உள்ளூர் மக்களே இயற்கை வேளாண் சான்றிதழ் கொடுக்கும் எளிய முறையும் உண்டு.

விவசாயிகள், நுகர்வோர், மாணவர்கள் உள்ளிட்ட பொதுமக்களை உள்ளடக்கிய அங்கீகரிக்கப்பட்ட உள்ளூர் குழுக்கள் மூலம் இயற்கை வேளாண்மைச் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ள முடியும். ஐ.நா சபையின் கீழ் செயல்படும் 'ஐ ஃபார்ம்’ என்கிற 'இன்டர்நேஷனல் பெடரேஷன் ஃபார் ஆர்கானிக் அக்ரிகல்சுரல் மூவ்மெண்ட்’ என்ற அமைப்புக்கு உலகளவிலான இணைப்பு உண்டு. இந்த அமைப்பின் வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி குழுக்கள் அமைத்துக் கொண்டு பெயர் சூட்டிக்கொண்டு... தேசிய அளவில் உள்ள ஆர்கானிக் கவுன்சிலில் பதிவு செய்துகொள்ள வேண்டும். 5 முதல், அதிக பட்சம் 20 உறுப்பினர்கள் வரை ஒரு குழுவில் இருக்கலாம். இக்குழுவினரே இக்குழுவில் உள்ள மற்ற விவசாயிகளுக்கு சான்றிதழ் வழங்க முடியும். சான்றிதழ் தேவைப்படும் விவசாயிகளின் நிலத்தை இக்குழுவில் உள்ள இரண்டு நபர்கள் நேரில் சென்று மதிப்பீடு செய்து, சான்றிதழ் வழங்கலாம். இச்சான்றிதழை மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும்.

'வெறும் சாணம் 1 ரூபாய்... மதிப்புக் கூட்டினால் 6 ரூபாய்!'

சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைக்கவேண்டும் என்பதற்காக, ஐஃபார்ம் சில வழிகாட்டுதல்களைத் தந்துள்ளது. ஒரே பயிரை சாகுபடி செய்யக் கூடாது; இயற்கை வழி வேளாண்மை மேற்கொள்ளப்படும் நிலத்தின் அருகே ரசாயன விவசாய நிலங்கள் அல்லது மரபணு மாற்று விதைகள் விதைக்கப்படும் நிலங்கள் இருப்பின் தகுந்த இடைவெளி இருக்க வேண்டும்; 'இயற்கை வேளாண்மைச் சான்றிதழ் பெற்ற நிலத்தில் விளையும் விளைபொருட்கள் உள்ளூரிலேயே சந்தைப்படுத்தப்பட வேண்டும்’ என்றெல்லாம் வலியுறுத்தப்படுவதால், இந்தச் சான்றிதழ் மூலம் ஏற்றுமதி செய்ய முடியாது. ஏற்றுமதி செய்ய விரும்பாத விவசாயிகள், அதிக செலவில்லாமல் நமக்கு நாமே குழுக்கள் அமைத்து இந்த இயற்கை வேளாண்மைச் சான்றிதழைப் பெறுவதுடன், இயற்கை அங்காடிகளையும் நடத்தலாம்'' என்றார்.

கருத்தரங்கின் நிறைவாக, நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விவசாயிகள் மேடையேறி தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்தனர்.

தொடர்புக்கு,

'அபிநவம்’ ஜெயராமன்,
செல்போன்: 99424-43055
'குடும்பம்’ சுரேஷ்கண்ணா,
செல்போன்: 99420-99925

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism