Published:Updated:

உயிரித் தொழில்நுட்பமே... உயர்வு தரும் !

காசி. வேம்பையன் படங்கள்: கா. முரளி

உயிரித் தொழில்நுட்பமே... உயர்வு தரும் !

காசி. வேம்பையன் படங்கள்: கா. முரளி

Published:Updated:

பயிற்சி

 பசுமை விகடன் மற்றும் திருவண்ணாமலை, அருணை பொறியியல் கல்லூரியின் உயிரித் தொழில்நுட்பவியல் துறை ஆகியவை இணைந்து, 'உயிரித் தொழில்நுட்பமும் இயற்கை வேளாண்மையும்' என்கிற தலைப்பில், ஆகஸ்ட் 2-ம் தேதியன்று, கல்லூரி வளாகத்தில் ஒரு நாள் பயிற்சிப் பட்டறையைச் சிறப்பாக நடத்தின. இதில் பல்துறை வல்லுநர்கள் கலந்துகொண்டு பயிற்சி அளித்தனர். இதைப் பற்றி கடந்த இதழில் எழுதியிருந்தோம். பயிற்சிப் பட்டறையில் பகிரப்பட்ட பயனுள்ள தகவல்கள் இங்கே இடம்பிடிக்கின்றன!

மண் அரிப்பைத் தடுக்கும் சிறுதானியம்!

'உயிரித் தொழில்நுட்பத்தில் சிறுதானிய சாகுபடி’ என்ற தலைப்பில் பலவிதமான அரிய தகவல்களை அடுக்கினார், திருவண்ணாமலையில் இயங்கிவரும், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக சிறுதானிய மகத்துவ மையத்தின் பேராசிரியர் நிர்மலகுமாரி.

உயிரித் தொழில்நுட்பமே... உயர்வு தரும் !

''சோளம், கம்பு, கேழ்வரகு, சாமை, தினை, பனிவரகு, வரகு, குதிரைவாலி, கானை பயிர் ஆகியவைதான் சிறுதானியங்கள். மக்காச்சோளம் என்பது சிறுதானிய வகையில் சேராது. சிறுதானியப் பயிர்களின் வேர்கள், சல்லிவேராகவும், சல்லடை போலவும் இருப்பதால் மண் இறுக்கத்தைக் குறைத்து, பொலபொலப்பாக்குகிறது. இதனால், மழை நீர் முழுவதும் மண்ணுக்குள் இறங்குவதோடு, வேர் பகுதிக்குத் தேவையான காற்றோட்டமும் கிடைக்கிறது. மானாவாரி நிலங்களில் சிறுதானியங்கள் மண்ணுடன் கூட்டு வாழ்க்கை நடத்துவதால், 80% அளவுக்கு மண் அரிமானம் தடுக்கப்படுகிறது. பருத்தி, மக்காச்சோளம் ஆகியவற்றுக்குக் கொடுப்பதைப்போல சிறுதானியங்களுக்கு அதிக ஊட்டம் கொடுக்கத் தேவையில்லை. பாஸ்போ-பாக்டீரியா, அசோஸ்பைரில்லம், வேம் மாதிரியான உயிரி உரங்களைப் பயன்படுத்தினால், மண்வளம் பெறும்.

நெல், கோதுமை, மக்காச்சோளம் போன்ற பயிர்கள் பகலில் பூப்பவை. இவற்றில் மகரந்தச் சேர்க்கை நடைபெறும் சமயங்களில் ஒரு டிகிரி அளவுக்கு வெப்பம் அதிகரித்தாலே, ஒரு ஏக்கருக்கு 250 கிலோ முதல், 300 கிலோ வரை மகசூல் குறையும். இதற்குக் காரணம் பயிர் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதுதான். ஆனால், சிறுதானியப் பயிர்கள் அனைத்தும் இரவு 12 மணி முதல் அதிகாலை 4.30 மணிக்குள் மகரந்தச் சேர்க்கையை முடித்துக்கொள்வதால் வெப்பநிலைப் பிரச்னைகள் இல்லாமல், முழு அளவில் மகரந்தச் சேர்க்கை நடந்து, மகசூல் இழப்பு என்பதே இல்லை'' என்று அற்புதத் தகவல்களைப் பகிர்ந்தார்.

மகசூலைக் கூட்டும் தேனீக்கள்!

'வருமானம் கொட்டும் தேனீ வளர்ப்பு’ பற்றிப் பேசிய ஜோஸ்பின் ஆரோக்கியமேரி, ''பயிர்களில், மலர்களுக்கு மணமுடிக்கும் வேலையை (மகரந்தச் சேர்க்கை) தேனீக்கள் செய்கின்றன. இப்படிப்பட்ட தேனீக்களை வளர்க்க, வாரம் ஒரு நாள் நாம் செலவிட்டால் போதும். அவை தினமும் உழைத்து நமக்கு வருமானம் கொடுக்கும். தென்னை, மா, சூரியகாந்தி மாதிரியான பயிர்களுக்கு இடையில் தேனீப்பெட்டிகளை வைக்கும்போது 15% முதல் 60% வரை மகசூல் கூடுகிறது.

உயிரித் தொழில்நுட்பமே... உயர்வு தரும் !

ஒரு தேனீ, கிட்டதட்ட 50 ஆயிரம் பூக்களில் இருந்து தேனைச் சேகரிக்கிறது. தேனீக்களில்... பல வகை இருந்தாலும், அடுக்குத்தேனீ மற்றும் இத்தாலியத்தேனீ இனங்கள் பெட்டிகளில் அடைத்து வளர்க்க ஏற்றவை. ஒவ்வொரு தேன் கூட்டிலும்,

30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் தேனீக்கள் வரை இருக்கும். தற்போது மார்க்கெட்டில் ஒரு தேனீப்பெட்டி (தேனீக்களுடன்) 1,700 ரூபாய் விலையில் கிடைக்கிறது. 'தேசியத் தோட்டக்கலைத் திட்டம் மூலம் ஒரு விவசாயிக்கு 5 முதல் 20 பெட்டிகள் 50% மானியத்தில் கிடைக்கிறது. கதர் வாரியம் மூலம், 5 முதல் 20 பெட்டிகள் தேனீப்பெட்டிகளை இலவசமாகக் கொடுப்பதற்கான பணிகள் நடக்கின்றன'' என்று தகவல்கள் பகிர்ந்தார்.

களையைக் கட்டுப்படுத்தும் அசோலா!

'பால்வளம் கூட்டும் அசோலா வளர்ப்பு’ என்ற தலைப்பில் பேசினார், 'அசோலா’ பாலகிருஷ்ணன். ''அசோலாவை 'அட்சயத் தாவரம்' என்று சொல்லலாம். அள்ள அள்ள வளர்ந்து மகசூல் கொடுத்துக்கொண்டே இருக்கும். இதைக் 'கம்மல் பாசி’ என்றும் சொல்வார்கள். இப்பாசியில் வாழும் 'அனபீனா அசோலா’ என்ற பாக்டீரியா, காற்றில் இருக்கும் தழைச்சத்துகளை கிரகித்துக் கொடுக்கிறது. இந்த அசோலாவை நெல் வயல்களிலும், நிழற்பாங்கான இடங்களிலும் வளர்க்கலாம். நெல் வயல்களில் வளர்க்கும்போது, பயிருக்குத் தேவையான தழைச்சத்துகள் முழுமையான அளவில் கிடைப்பதுடன், களைகளும் கட்டுப்படும்.

உயிரித் தொழில்நுட்பமே... உயர்வு தரும் !

மாடு, கோழி, மீன்கள் ஆகியவற்றுக்கு அசோலாவை தீவனமாகப் பயன்படுத்தும்போது... செலவு குறைவதோடு, தரமான பால், அதிக எடையுள்ள கோழி, மீன் ஆகியவற்றை உற்பத்தி செய்யலாம். மாடுகளுக்கு அடர்தீவனத்தைக் குறைத்துக் கொண்டு, ஒரு மாட்டுக்கு தினமும் ஒரு கிலோ அசோலா எனக் கொடுக்கலாம். கோழிக்கு தினமும் 20 கிராம் முதல் 50 கிராம் வரையும், ஆட்டுக்கு 50 கிராம் முதல் 200 கிராம் வரையும் தீவனமாகக் கொடுக்க லாம்'' என்ற பாலகிருஷ்ணன், அசோலா பாத்தி அமைக்கும் முறையை நேரடியாகச் செய்து காட்டினார்.

காசு கொட்டும் காளான் வளர்ப்பு!

காளான் வளர்ப்புப் பற்றிப் பேசிய சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகில் உள்ள அப்பம்மசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த சக்கரவர்த்தி, ''100% இயற்கை முறையில் விளையும் உணவுப்பொருளுக்கு உதாரணமாக காளானைச் சொல்லலாம். காளானில்... சிப்பிக் காளான், பால் காளான், ரோஸ் காளான் (ஏ.பி.கே.) என மூன்று வகைகள் தமிழ்நாட்டில் வளர்கின்றன. சமவெளிப்பகுதிக்கு சிப்பிக் காளான் மற்றும் பால் காளான் ரகங்கள் ஏற்றவை. காளான் வளர்ப்பில் இறங்குவதற்கு முன்பு, முறையான தொழில்நுட்பப் பயிற்சி எடுத்துக் கொள்வது அவசியம். நம்மைச் சுற்றியுள்ள விற்பனை வாய்ப்புகளையும் தெரிந்து கொள்ள வேண்டும். காளான் வளர்ப்பில் இறங்கியதும் எடுத்த எடுப்பில், 50 கிலோ, 100 கிலோ என உற்பத்தி செய்யக்கூடாது. குறைவான அளவில் உற்பத்தி செய்து, வாடிக்கையாளர்களைப் பழக்கிய பிறகு, உற்பத்தியைக் கூட்ட வேண்டும்.

காளான் வாளர்ப்புக்கு கீற்றுக்கொட்டகைதான் சிறந்தது. 30 அடி நீளம், 15 அடி அகலத்தில் கொட்டகை அமைத்தால், 300 படுக்கைகள் அமைக்கலாம். இந்தப் படுக்கைகளில் இருந்து தினம் 5 கிலோ அளவுக்கு காளான் எடுக்கலாம். தினமும் 250 ரூபாய் உற்பத்திச் செலவு செய்து, 500 ரூபாய் லாபம் ஈட்ட முடியும். படுக்கை தயார் செய்த 20-ம் நாளில் மொட்டுகள்விட ஆரம்பித்து, 23-ம் நாள் முதல் 25-ம் நாளுக்குள் 500 கிராம் காளானை முதல்தடவை அறுவடை செய்ய முடியும். பிறகு, 8 நாட்கள் முதல் 10 நாட்கள் இடைவெளியில் மீண்டும் மீண்டும் அறுவடை செய்யலாம். ஒரு படுக்கையில் இருந்து, சராசரியாக 2 கிலோ வரை காளான் கிடைக்கும்'' என்ற சக்கரவர்த்தி காளான் படுக்கை அமைக்கும் முறையை செய்து காட்டினார்.

காய்ப்புழுவை விரட்டும் கூட்டுக்கரைசல்!

'இயற்கை இடுபொருள் தயாரிப்பு’ என்ற தலைப்பில் பேசிய ஏகாம்பரம்... பஞ்சகவ்யா, அமுதக்கரைசல், மீன் அமினோ அமிலம் போன்ற இடுபொருட்களையும் மூலிகைப் பூச்சிவிரட்டியையும் நேரடியாகச் செய்து காட்டியதோடு, ''பூச்சிவிரட்டி மூலம் கத்திரியில்கூட காய்ப்புழுக்களை விரட்ட முடியும். இஞ்சி-200 கிராம், பூண்டு-200 கிராம், சின்ன வெங்காயம்-500 கிராம், பச்சை மிளகாய்-200 கிராம், பெருங்காயம்-50 கிராம் ஆகியவற்றை ஒன்றாக அரைத்து, 10 லிட்டர் பூச்சிவிரட்டிக் கரைசலுடன் கலந்து வடிகட்டி, 10 லிட்டர் தண்ணீருக்கு 1 லிட்டர் கரைசல் என்று தெளித்தால், காய்ப்புழுக்களைக் கட்டுப்படுத்தலாம்'' என்று பலவிதமான பூச்சிவிரட்டிகள் பற்றியும் பேசினார். முடிவில், பயிற்சியில் பங்கேற்ற விவசாயிகள் நன்றிகூற பயிற்சி இனிதே நிறைவுபெற்றது.

.

தொடர்புக்கு,
நிர்மலகுமாரி, செல்போன்: 99949-16832
ஜோஸ்பின் ஆரோக்கியமேரி, செல்போன்: 98655-55047
'அசோலா’ பாலகிருஷ்ணன், செல்போன்: 97903-69233
சக்கரவர்த்தி, செல்போன்: 94433-82856
ஏகாம்பரம், செல்போன்: 90959-74287