Published:Updated:

''இந்தியாவில் பஞ்சங்கள், உருவாக்கப்படுபவையே..!''

அதிரடி கிளப்பிய வேளாண் அமைச்சர் த. ஜெயகுமார் படங்கள்: கு. பாலசந்தர்

''இந்தியாவில் பஞ்சங்கள், உருவாக்கப்படுபவையே..!''

அதிரடி கிளப்பிய வேளாண் அமைச்சர் த. ஜெயகுமார் படங்கள்: கு. பாலசந்தர்

Published:Updated:

கூட்டம்

 'பட்டினியில்லா உலகத்தை உருவாக்க வேண்டும்' என்றபடி பற்பல திட்டங்களைத் தீட்டி செயல்பட்டு வருகின்றன, ஐ.நா. (ஐக்கிய நாடுகள்) சபை உறுப்பு நாடுகள். இதன் ஒருகட்டமாக, 2014-ம் ஆண்டை 'குடும்பப் பண்ணைய ஆண்டு (International Year of Family Farming -2014) என அறிவித்துக் கொண்டாடி வருகிறது, ஐ.நா.

இதைப் பற்றிய விழிப்பு உணர்வை ஏற்படுத்தும் வகையில், '21-ம் நூற்றாண்டில் குடும்பப் பண்ணையத்தின் பங்கு... 2025-ம் ஆண்டுக்குள் பட்டினியில்லா உலகம்' என்கிற கருத்துக்களை மையமாகக் கொண்டு ஆசியா-பசிபிக் நாடுகளுக்கிடையேயான சர்வதேச கலந்தாய்வுக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. தரமணியில் உள்ள எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி மையத்தில், ஆகஸ்ட் 7-ம் தேதி தொடங்கி, நான்கு நாட்கள் நடைபெற்ற இக்கலந்தாய்வில் ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம், பூடான், இந்தோனேஷியா, கம்போடியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த வேளாண் அமைச்சர்கள், கல்வியாளர்கள், வல்லுநர்கள் என பலரும் பங்கேற்றனர்.

''இந்தியாவில் பஞ்சங்கள், உருவாக்கப்படுபவையே..!''

வேளாண் அமைச்சர்களுக்கான கலந்தாய்வில் பேசிய, தமிழகத்தின் வேளாண்துறை அமைச்சர் அக்ரி எஸ். எஸ். கிருஷ்ணமூர்த்தி, ''இந்தியாவில் பஞ்சங்கள் உருவாக்கப்படுபவையே. உற் பத்திக் குறைவினால் அல்ல என்று கூறுகிறார் நோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதை அமர்த்தியா சென். 2005-ம் ஆண்டிலிருந்து 2013-ம் ஆண்டு வரை 1 லட்சத்து 94 ஆயிரம் மெட்ரிக் டன் உணவுப் பொருள்களை வீணாக்கி இருக்கிறோம். கதிர் அறுப்பு தொடங்கி, இலையில் உணவாகப் பரிமாறப்படும் வரை ஓர் ஆண்டுக்கு 1.3 பில்லியன் டன் உணவுப் பொருள்கள் வீணாகின்றன. இதனால், நாட்டின் உணவு உற்பத்தியின் தேவையை 70% அளவுக்குப் பெருக்க வேண்டிய கட்டாயத்துக்கு நாம் வந்திருக்கிறோம். இதோடு, உணவு தானியங்களையும், உணவு வகைகளையும் வீணாக்காமல் பயன்படுத்தக்கூடிய கட்டாயத்தில் இருக்கிறோம்'' என்று கவலையை வெளிப்படுத்திய அமைச்சர்,

''இந்தியாவில் பஞ்சங்கள், உருவாக்கப்படுபவையே..!''

''இயற்கை வேளாண்மை உலகின் பாரம்பரியமான ஒன்று. இது, காலப்போக்கில் உலகம் முழுவதும் அழிக்கப்பட்டு வருகிறது. நவீன விவசாயத்தில் மண்வளம் குறைந்துகொண்டே போகிறது. மனச்சுமையும், பணச்சுமையும் விவசாயிகளை வாட்டிவதைக்க ஆரம்பித்துவிட்டன. இச்சூழலில் 'குடும்பப் பண்ணையம்’ பற்றிய கருத்தரங்குகள் நடத்தப்படுவது முக்கியமானது. இது எதிர்காலத்தில் வறுமையில்லா உலகத்தை உருவாக்கத் தூண்டுகோலாக இருக்கும்'' என்று அழுத்தம் திருத்தமாக சொன்னது... கூட்டத்தினரை வெகுவாக ஈர்த்தது.

விவசாய அபிவிருத்திக்கான சர்வதேச நிதியத்தின் தலைவர் கனாயோ வான்ஸீ பேசும்போது, ''விவசாயக் கொள்கை வகுப்பாளர்கள் குடும்ப விவசாய முறையை ஆதரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. குடும்ப விவசாயப் பண்ணைகள் மீது மக்களுக்கு ஈர்ப்பு வரும்படி புதிய விவசாயக் கொள்கைகளை வகுக்க வேண்டும். சிறிய அளவிலோ, பெரிய அளவிலோ எந்த அளவில் விவசாயம் மேற்கொண்டாலும், அதுவும் ஒரு வணிகம்தான் என்கிற அங்கீகாரம் வேண்டும்'' என்ற கருத்தை வலியுறுத்தினார்.

நிகழ்வின் துவக்கத்தில் பேசிய வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன், ''குடும்பப் பண்ணையம்தான் விவசாயத்தில் இன்று சந்தித்துக் கொண்டிருக்கும் சவால்களுக்கு வலிமையான பொருளாதாரத் தீர்வைக் கொடுக்கும். கலோரி அளவில் உள்ள உணவைக் குறைத்து, சத்தான உணவுப் பாது காப்புக்கு வழி வகுக்கும். உலகம் முழுவதும் 500 மில்லியன் (5 கோடி) குடும்பப் பண்ணையங்கள் இருக்கின்றன. இதில் 2 பில்லியன் (200 கோடி) மக்கள்தான் சத்தான உணவுப் பாதுகாப்பில் இருக்கிறார்கள்.

விவசாயப் பாதுகாப்பு, அறுவடை, நுகர்வு, பொருளாதாரம் மற்றும் தொடர்பு கொள்ளுதல் ஆகிய இந்த ஐந்து அம்சங்களையும் கைகொண்டால், பசியில்லா உலகம் நோக்கி செல்வதற்கான பாதையை நம்மால் அமைக்க முடியும். குடும்ப விவசாயிகளே வருங்காலத்தில் சமூக மற்றும் அரசியல் பலத்தோடு தொழில்நுட்பத் திறனையும் பெற்றிருப்பார்கள்' என்று எதார்த்தம் சொன்னார்.

''இந்தியாவில் பஞ்சங்கள், உருவாக்கப்படுபவையே..!''

கலந்தாய்வின் ஒரு பகுதியாக 'விவசாயத்தில் இளைஞர்களை ஈர்த்தல் மற்றும் தக்கவைத்தல்’ என்ற ஆங்கில நூல் வெளியிடப்பட்டது. முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டு பேசிய நடிகர் சரத்குமார், 'ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு விவசாயியை உருவாக்க வேண்டும். அப்படி உருவாக்கினால்தான் விவசாயம் நிலைத்து நிற்கும். இளைஞர்களை விவசாயத்தின் பக்கம் ஈர்க்க, பல வழிகள் இருக்கின்றன. அதை நாம் முறையாகக் கையாளலாம். பண்ணை விவசாயத்திலும் உரிய வருமானம் கிடைத்தால் நிலைத்து நிற்க முடியும். விவசாயத்தை வண்ணமயமாக்க அனைவரும் விவசாயத்தின் மீது ஆர்வம் காட்டுங்கள்'' என்று அழைப்பு விடுத்தார்.

நிறைவாக, 'இந்தியா உள்ளிட்ட ஆசிய பசிபிக் நாடுகளின் அரசுகள், குடும்ப விவசாயம் தொடர்பாக புதிய செயல்திட்டங்களைக் கொண்டு வர வேண்டும்' என்கிற மிகமுக்கியமான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இத்தீர்மானத்தை சம்பந்தபட்ட நாடுகளின் அரசுகளுக்கு அனுப்பி வைக்கவும் முடிவு செய்யப்பட்டது!

தடுக்கும் தண்ணீர் தொட்டி!

 பயன்படுத்தப்படாமல் சுருட்டிப்போட்டு வைத்திருக்கும் சொட்டு நீர்க் குழாய்கள், வெயிலில் கிடந்தால் சீக்கிரமே வீணாவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இதைப் போக்குவதற்கு பயன்பாடு இல்லாத சொட்டுநீர்க் குழாய்களை தண்ணீர் தொட்டி அல்லது குளங்களில் போட்டு வைக்கலாம்.

 சேதி கேட்டீங்களா!

நிலத்துக்கு ஒரு வரப்பு!

மரங்கள், காய்கறித் தோட்டம் என்று எந்த நிலமாக இருந்தாலும், குறிப்பிட்ட நிலத்துக்கு ஒரு வரப்பு அமைப்பது நல்லது. இந்த வரப்புகள் மழைக் காலத்தில் தண்ணீர் ஓட்டத்தைத் தடுத்து நிறுத்தி வைப்பதால், மண் அரிப்பு தடுக்கப்பட்டு, நிலத்தின் வளமும் அப்படியே இருக்கும். தண்ணீரும் அதே நிலத்தில் தேங்கி நிற்கும்போது, மண்ணில் நீண்ட நாட்களுக்கு ஈரப்பதம் இருக்கும்.