Published:Updated:

பாரம்பரிய உணவுக்கு ஜே..!

திருச்சியில் ஒரு திருவிழா! சி. ஆனந்தகுமார், க. கவின் பிரியதர்ஷனி படங்கள்: தி. கௌதீஸ்

பாரம்பரிய உணவுக்கு ஜே..!

திருச்சியில் ஒரு திருவிழா! சி. ஆனந்தகுமார், க. கவின் பிரியதர்ஷனி படங்கள்: தி. கௌதீஸ்

Published:Updated:

திருவிழா 

 ''சிறுதானியங்களின் சிறப்பு குறித்து, பொதுமக்களிடம் விழிப்பு உணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ஆண்டுதோறும் பாரம்பரிய சிறுதானிய உணவுத் திருவிழா நடத்தும்படி கடந்த 2013-ம் ஆண்டின் தமிழக முதல்வர் உத்தரவிட்டார். அதன்படிதான் இந்த உணவுத் திருவிழாவை நடத்திக் கொண்டிருக்கிறோம். மக்களின் ஏகோபித்த ஆதரவு, எங்களுக்கு உற்சாகத்தைக் கூட்டுகிறது''

- ஆகஸ்ட் 9-ம் தேதியிலிருந்து 16-ம் தேதி வரை திருச்சியில் அரசு சார்பில் நடத்தப்பட்ட பாரம்பரிய உணவுத் திருவிழாவின் ஊடே மகிழ்ச்சி பொங்க இப்படி நம்மிடம் பேசினார், நிகழ்வுக்கான ஏற்பாடுகளைச் சிறப்புற செய்திருந்த மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெயஸ்ரீ முரளிதரன்.

சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச் சித் திட்டம் ஆகிய துறைகள் சார்பில் நடத்தப்பட்ட இந்த விழாவை, அமைச்சர் பூனாட்சி தொடங்கி வைத்தார். வழக்கமான அரசு விழாவாக இல்லாமல், மிகச்சிறப்பாக இந்த உணவுத் திருவிழா நடந்தது என்பதற்கு சாட்சி... மக்களின் வேண்டுகோளுக்கிணங்க மேலும் ஒரு நாள் நீட்டிக்கப்பட்டதுதான். திருச்சி மட்டுமல்லாமல் அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் இருந்தும் குடும்பம் குடும்பமாக விழாவில் பங்கேற்றனர்.

பாரம்பரிய உணவுக்கு ஜே..!

அங்கன்வாடி ஊழியர்கள், மகளிர் சுய உதவிக்குழுக்கள், தனியார் கேட்டரிங் நிறுவனங்கள், அரசு கேட்டரிங் கல்லூரி, சிறுதானிய உணவகங்கள் ஆகியவற்றின் சார்பாக அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு நாளும் தினைப் பாயாசம், சாமை அரிசித் தயிர் சாதம், வரகரிசி புலாவ், குதிரைவாலி பிரியாணி, மாப்பிள்ளைச் சம்பா கொழுக்கட்டை, கேழ்வரகுப் புட்டு, இருங்குசோளக் கஞ்சி, பனிவரகு சாம்பார் சாதம், கம்பு அல்வா... என தினுசுதினுசாக சிறுதானியங்களில் அசத்தினர். இந்த பண்டங்களுக்கெல்லாம் பத்து ரூபாய் மட்டுமே விலை நிர்ணயிக்கப்பட்டிருந்தது... அனைவரையும் ஈர்த்தது.

சிறுதானிய உணவுகளைச் சமைக்கும் விதங்களையும் சொல்லிக் கொடுத்ததோடு... கலைநிகழ்ச்சி, யோகா பயிற்சி, சொற்பொழிவு, குழந்தைகளுக்கான போட்டிகள், சமையல் போட்டி, கோலப் போட்டி என கலக்கலாக இருந்தது நிகழ்வு. வருகை தந்த அனைவருக்கும் இலவசமாக சிறுதானியப் பாயாசம் வழங்கப்பட்டது.

''ஃபாஸ்ட்ஃபுட், பாக்கெட்டில் அடைத்த ஸ்நாக்ஸ் போன்றவற்றை குழந்தைகளுக்குக் கொடுப்பதைத் தவிர்த்து, இதுபோன்ற பொருட்களைச் சாப்பிடப் பழக்க வேண்டும். இதன் மூலம், சிறுதானியத் தேவை அதிகரித்து, விவசாயிகளும் பயனடைவர்'' என்று சொன்ன மாவட்ட ஆட்சியர் ஜெயஸ்ரீ முரளிதரன், ''இந்தத் திருவிழாவில் 10 லட்சத்து 43 ஆயி ரத்து 702 ரூபாய்க்கு சிறுதானியப் பொருட்கள் விற்கப்பட்டுள்ளன'' என்கிற கணக்கையும் மறக்காமல் சொன்னார்!

தொடரட்டும், இந்த நற்சேவை!