Published:Updated:

மீத்தேன் எமன் - இது வளைகுடா நாடல்ல... வயல்வெளி நாடு..!

கு. ராமகிருஷ்ணன் ஓவியம்: செந்தில், படம்: க. சதீஸ்குமார்

மீத்தேன் எமன் - இது வளைகுடா நாடல்ல... வயல்வெளி நாடு..!

கு. ராமகிருஷ்ணன் ஓவியம்: செந்தில், படம்: க. சதீஸ்குமார்

Published:Updated:

பாலைவனமாகும் பரிதாப டெல்டா

'அநீதியின் உச்சம் எது?’ என நீதி தேவதையிடம் ஒரு சாமான்யன் கேட்டான். 'தவறு இழைப்பதைக் காட்டிலும், அதற்குத் துணை நின்று, நியாயப்படுத்துவதுதான் மிகப்பெரும் அநீதி’ என்றாள், நீதி தேவதை.

இந்த நீதி நெறித் தத்துவம், இங்குள்ள நிகழ்கால கம்யூனிஸ்டுகளுக்குத் தெரியாமலா இருக்கும்? இதை விடவும் இன்னும் ஆழமான தத்துவங்களை, ஏராளமாக வாரி வழங்கியிருக்கிறது, மார்க்ஸியம்... அவற்றையெல்லாம் கண்டிப்பாக உள்வாங்கித்தான் இருப்பார்கள், நம்முடைய தோழர்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

காவிரி டெல்டா கிராமங்களில் வசிக்கும் மக்கள்... தங்களுக்குச் சொந்தமான நிலத்தடி நீரையும், தூய்மையான காற்றையும், விளைநிலங் களையும் பாதுகாப்பதற்காக பரிதவித்து நிற்பது பெரும் துயரம்! இவர்களுடைய அத்தியாவசியத் தேவைகளையும், அடிப்படை உரிமைகளையும் ஒ.என்.ஜி.சி நிறுவனம் அழித்தொழிப்பது பெரும்அநீதி. இதற்கு கம்யூனிஸ்டு கட்சிகள் துணை நிற்பதுதான் அநீதியின் உச்சம்.

நாகப்பட்டினம் மாவட்டம் திருநகரி கிராமத்தில், பெட்ரோல்-கேஸ் கிணறு அமைப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, இங்குள்ள மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு போராடி வருகிறார்கள். சாலை மறியல், கருப்புக்கொடிப் பேரணி, உண்ணாவிரதம் என இவர்கள் நடத்தும் தொடர் போராட்டங்கள் மிகவும் உணர்வுப்பூர்வமானவை. சமரசமற்றவை. இதை நாம் வெட்டவெளிச்சமாக உணர்ந்து கொள்ள, ஏராளமான சாட்சியங்கள் அணிவகுக்கின்றன. ஆனாலும், கொஞ்சமும் மனசாட்சி இல்லாமல் இவர்கள் மீது சேற்றை வாரி இறைக்கிறது, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் அதிகாரப்பூர்வ அரசியல் நாளேடான ஜனசக்தி. 'மீத்தேன் பூச்சாண்டி’ என்ற தலைப்பில் இந்நாளேடு வெளியிட்ட அதிர்ச்சிக் கட்டுரையின் சாரம் இதோ...

மீத்தேன் எமன் - இது வளைகுடா நாடல்ல... வயல்வெளி நாடு..!

'எண்ணெய் எரிவாயு கமிஷன் தங்களை கவனிக்கவில்லை என்ற காரணத்தால்... தி.மு.க, பா.ம.க கட்டப்பஞ்சாயத்துக் கும்பல் மக்களைத் தூண்டிவிட்டு, ஒ.என்.ஜி.சி. சோதனைக் கிணறு பணிகளை திருநகரியில் முடக்கிய செயல், மாவட்ட நிர்வாக இருப்பைக் கேள்விக்குறியாக்கி உள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம், திருநகரியில் எண்ணெய் வளம் இருப்பதை உறுதி செய்யும் வகையில் இரண்டாவது பரிசோதனைக் கிணறு தோண்டும் பணி துவக்கப்பட்டது. அப்போது திருநகரி ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் மற்றும் பா.ம.க பிரமுகர்கள் ஒ.என்.ஜி.சி. பொறியாளர் களை அணுகியுள்ளதாகத் தெரிகிறது.

பொதுத்துறை நிறுவனமான ஒ.என்.ஜி.சி. கைவிரித்து விட்டது. ஆத்திரமுற்ற உள்ளூர் கும்பல், 'ஒ.என்.ஜி.சி. மீத்தேன் வாயு எடுக்கிறது’ என்ற பிரசாரத்தை மக்களிடையே பரப்பத் தொடங்கியது. இதில் உதிரி நக்ஸலைட் கும்பல்களும் சேர்ந்து கொண்டன. மீத்தேன் பூச்சாண்டி மக்களை கிலியடையச் செய்தது. சாலை மறியல் நடந்தது. ஒ.என்.ஜி.சி.க்கும் மீத்தேன் எரிவாயுத் திட்டத்துக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்பதை யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. மயிலாடுதுறையில் மாவட்ட ஆட்சியர் முனுசாமி தலைமையில் சமாதானக் கூட்டம் நடந்தது. திருநகரி பிரமுகர்கள் கண்மூடித்தன மாக எதிர்ப்பு தெரிவித்து, நிர்வாகத்துடன் ஒத்துழைக்க மறுத்துவிட்டதாகக் கூறப் படுகிறது.

பெருகிவரும் எண்ணெய் மற்றும் எரிவாயுத் தேவைகளை உள்நாட்டு உற்பத்தியைப் பெருக்குவதின் மூலமே நிவர்த்தி செய்ய முடியும். காவிரிப்படுகையில் மேற்கொள்ளும் முயற்சிகளை சில அடாவடி அராஜகக் கும்பல்கள் தடுத்து நிறுத்துவது, உயிர்ப்புள்ள அரசுக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தலாகவே கருத நேரிடுகிறது. இத்தகைய நிகழ்வுகளை அனுமதிக்கும்பட்சத்தில், மற்ற பகுதிகளுக்கும் இது முன்மாதிரியாக அமைந்துவிடும்.'

மீத்தேன் எமன் - இது வளைகுடா நாடல்ல... வயல்வெளி நாடு..!

''நிதி வாங்கும் தோழர்கள்!''

இங்குள்ள கம்யூனிஸ்டுகள் ஏன் ஒ.என்.ஜி.சி-க்கு ஆதரவாகச் செயல்படுகிறார் கள்?

ஆறுபாதி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி விஷ்ணுகுமார், ''விவசாயிகளை இன்றைக்கும் நிலவுடமையாளர்களாவே பார்க்கிறார்கள், இங்குள்ள கம்யூனிஸ்டுகள். அதனால்தான் விவசாயிகள் நலனில் அவர்கள் அக்கறை காட்டுவதில்லை. தற்போது, தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான விவசாயிகள் சிறு, குறு விவசாயிகளாகத்தான் இருக்கிறார்கள். இதனை இங்குள்ள கம்யூனிஸ்டுகள் உணர வேண்டும். ஒ.என்.ஜி.சி நிறுவனம் இப்பகுதிகளில் பெட்ரோல்-கேஸ் எடுப்பதால், 'இங் குள்ள கிராம மக்களுக்கு வேலை கிடைக்கிறது’ என்கிறார்கள், கம்யூனிஸ்டுகள். இது ஏற்புடையதல்ல. விவசாயத் தொழிலாளர்கள், ஒ.என்.ஜி.சி-யின் ஒப்பந்தத் தொழிலாளர்களாக, அதுவும் ஆபத்தான வேலைகளைச் ஏற்கக்கூடிய கடைநிலை தொழிலாளர்களாகத்தான் பயன்படுத்தப்படுகிறார்கள். இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகளின் தொழிற்சங்கங்கள் இங்கு செயல்படுகின்றன. இத்தொழிலாளர்கள் மூலமாகவும், ஒ.என்.ஜி.சி-யின் நிர்வாகத்தின் மூலமாகவும் இந்த இரண்டு கட்சிகளுக்கும் ஏராளமான நிதி கிடைக்கிறது. இக்காரணங்களால்தான் ஒ.என்.ஜி.சி-க்கு ஆதரவாக இவர்கள் செயல்படுகிறார்கள். ஒரு பிரச்னைக்காக கம்யூனிஸ்டுகள் போராடினால், அது நியாயமான போராட்டம் என்பதும்... மற்றவர்கள் போராடினால் இப்படி சேற்றை வாரி இறைப்பதும் அவர்களுக்கு வாடிக்கையே'' என வெடிக்கிறார்.

உண்மையான கம்யூனிஸ்டுகள் எதிர்க்க மாட்டார்கள்!

இந்திய கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்த, நாகப்பட்டினம் நாடாளுமன்றத் தொகுதி முன்னாள் உறுப்பினரும், ஒ.என்.ஜி.சி நிலைக்குழுவின் முன்னாள் உறுப்பினருமான செல்வராஜிடம் இதுகுறித்துக் கேட்டேன். இந்த விஷயத்தில் கம்யூனிஸ்டுகள் கொண்டுள்ள பார்வைக்கு ஒரு சோறு பதமாகவே பேசினார் அவர். ''ஒ.என்.ஜி.சி-யால் இப்பகுதிகளில் பெரிய அளவில் பாதிப்புகள் எதுவுமில்லை. சரியான புரிதல் இல்லாதவர்கள்தான் இதனை எதிர்ப்பார்கள். தேசத்தின் மீது பற்றுள்ள கம்யூனிஸ்டுகள் எதிர்க்க மாட்டார் கள். இந்தியாவின் மிகப்பெரிய, லாபகரமான பொதுத்துறை நிறுவனமான ஒ.என்.ஜி.சி-யை எதிர்த்தால், பெட்ரோல்-டீசல் விலை அதிகரித்து, பற்றாக்குறையும் அதிகரிக்கும்.

2008-ம் ஆண்டு இந்தப் பகுதிகளில் வெள்ளம் வந்தபோது, கிணறுகளில் இருந்து எண்ணெய் படலங்கள் வெளியேறி, விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்ட போது, நாங்கள்தான் போராடி, பல கோடி ரூபாய் இழப்பீட்டைப் பெற்றுத் தந்தோம். ஒ.என்.ஜி.சி நிர்வாகத்திடமிருந்து நாங்கள் நிதி பெறுவதாகச் சொல்வது பொய் பிரசாரம். எங்களுடைய தொழிற்சங்கத்தால் பயன் அடைகிறோம் எனச் சொல்வதும் பொய்யானது'' என்றார்.

அரசாங்கத்தை அனுமதிக்கலாம்!

'மீத்தேன் திட்டத்தில் உங்கள் கட்சியின் நிலைப்பாடுதான் என்ன?’ என, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் தா. பாண்டியனிடம் கேட்டேன். ''தனியார் நிறுவனம், மீத்தேன் எடுப்பதாக இருந்தால்... ஒற்றை வார்த்தையில் 'நோ’ அனுமதிக்க மாட்டோம். அரசாங்கமே எடுப்பதாக இருந்தால்... நிலம் கொடுக்கும் விவசாயிகளின் அனுமதி பெற்றுதான் எடுக்கவேண்டும். 'இதனால், அரசாங்கத்துக்கு பெரிய லாபம் கிடைக்கும். பொதுமக்களுக்குப் பயன்படும்’ என விஞ்ஞானிகள் சொன்னால்... 'இதை, எப்படி எடுக்கப் போகிறோம்’ என விளக்கிவிட்டு, நிலம் கொடுக்கும் விவசாயிகளின் அனுமதி பெற்று எடுக்கலாம். அல்லது பொதுத்துறை நிறுவனம் மூலமாக மீத்தேன் எடுப்பதாக இருந்தால்... இதில், அரசாங்கத்துக்கு எவ்வளவு கிடைக்கும்? மக்களுக்கு எவ்வளவு கிடைக்கும்? விவசாயிகளுக்கு எவ்வளவு கிடைக்கும்? என விஞ்ஞானிகளைக் கொண்டு ஆய்வு செய்து, பரிசிலிக்கலாம்'' என்றார்.

அரசாங்கம் மட்டுமல்ல... யார் வந்தாலும், எதிர்ப்போம்!

இவரின் கருத்துக்கள் இப்படி இருக்கிறது. ஆனால், இவருடைய கட்சியின் மாநிலக் குழு உறுப்பினரான திருவாரூர், பி.எஸ். மாசிலாமணி, சொல்வதோ.. வேறு மாதிரியாக இருக்கிறது. கடந்த இதழில், வெளியான கட்டுரையைத் தொடர்ந்து மாசிலாமணி அனுப்பியிருக்கும கடிதத்தின் சாராம்சம் இதோ...

'திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த கருத்தறியும் கூட்டத்தில்தான் மீத்தேன் வாயுத் திட்டம் குறித்து முதன்முதலாக விளக்கம் அளிக்கப்பட்டது. 'தொடக்கத்திலேயே... அனுமதிக்க முடியாது. ரத்து செய்ய வேண்டும்’ என எதிர்ப்புக் காட்டி கூட்டத்தை ரத்து செய்ய வைத்தோம்.

அடுத்து, 2010-ம் ஆண்டு மன்னார்குடியில் நாங்கள் நடத்திய மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம்தான், மீத்தேன் வாயுவுக்கு எதிராக தமிழகத்தில் நடந்த முதல் போராட்டம். இத்திட்டத்தை நிரந்தரமாக ரத்து செய்திட வேண்டி, எங்கள் கட்சியின் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், உயர் நீதிமன்றத்தில் போடப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது. கட்சியின் மாநிலக் குழு கூட்டத்தில் மீத்தேன் எடுக்கும் திட்டத்துக்கு எதிராக தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. எனவே, மீத்தேன் எடுக்கும் திட்டத்தை அரசு நிறுவனங்கள் மட்டுமல்ல, யார் அமல்படுத்த வந்தாலும், எதிர்க்கும் முதல் வரிசையில் கம்யூனிஸ்டுகள்தான் இருப்பார்கள்.

பொதுத்துறை நிறுவனம் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்கிறது. இத்திட்டத்தை 'மீத்தேன் வாயு எடுக்கும் திட்டம்’ என தவறாக விவசாயிகளிடம், பொதுமக்களிடம் சிலர் அச்சத்தை ஏற்படுத்தி விளம்பரம் தேடுகின்றனர். தவறாக பிரசாரம் செய்து மக்களை குழப்பமடையச் செய்வதைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம்'' என்கிறார் மாசிலா மணி.

மீத்தேன் விஷயத்தில் கம்யூனிஸ்டுகளின் பார்வை என்ன என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. உங்களுக்கு ஏதாவது புரிந்தால்... எழுதி அனுப்புங்கள் எனதருமை விவசாயச் சொந்தங்களே!

எரிபொருள் தேவை அவசியமானதுதான். ஆனால், அதைவிடவும் உணவு உற்பத்தி அத்தியாவசியமானதல்லவா! இது வளைகுடா நாடு அல்ல... இது வயல்வெளி நாடு. உலகின் மிகப்பெரிய விவசாய நாடுகளில் ஒன்றான இந்தியா, உள்நாட்டில் விளைநிலங்களை வீணடித்து விட்டு உணவுப்பொருட்களுக்காக வெளிநாடுகளிடம் கையேந்தினால், அது எவ்வளவு பெரிய ஆபத்து?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism