Published:Updated:

10 மாதங்களில் 1.5 லட்சம்

இனிப்பு மரவள்ளியில், இருக்குது... வெகுமானம்! ஜி. பழனிச்சாமி படங்கள்: க. தனசேகரன், ரமேஷ் கந்தசாமி

10 மாதங்களில் 1.5 லட்சம்

இனிப்பு மரவள்ளியில், இருக்குது... வெகுமானம்! ஜி. பழனிச்சாமி படங்கள்: க. தனசேகரன், ரமேஷ் கந்தசாமி

Published:Updated:

பாரம்பரிய விவசாயத்தின் ஆணி வேர் நாட்டு ரகங்கள்தான். இதைவிட, முற்காலத்தில் ஒவ்வொரு பகுதிக்கும் புவிசார் குறியீடாக விளங்கியவையும் அந்தந்தப் பகுதிக்கான பிரத்யேகமான நாட்டு ரக விளைபொருட்கள்தான். வீரிய ஒட்டு ரகங்களின் வரவால், நாட்டு ரகங்கள் பலவும் காணாமல் போனதால், பல ஊர்களின் அடையாளமே மறைந்து போய் விட்டது. இத்தகையச் சூழ்நிலையிலும் சிலர் மட்டும் விடாமல், நாட்டு ரகங்களைக் காப்பாற்றி பயிர் செய்து வருகிறார்கள்.

சேலம் மாவட்டம், தாரமங்கலம் அடுத்துள்ள பவளத்தானூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயத் தம்பதிகளான ராமசாமி-சாந்தி ஆகியோரும், அத்தகையோரில் அடங்குவர். இவர்கள், நாட்டு ரக கம்பு மற்றும் இனிப்பு மரவள்ளி ஆகியவற்றைத் தொடர்ந்து பயிர் செய்து வருகிறார்கள். இவர்கள், ரசாயன விவசாய முறையை மேற்கொண்டாலும் பாரம்பரிய ரகங்களைத்தான் சாகுபடி செய்கிறார்கள். ஒரு காலைப்பொழுதில், அவர்களது தோட்டத்துக்குச் சென்றோம்.

கதிர் பிடித்திருந்த கம்புக்காட்டில் தவிட்டுக்குருவிகள் வட்டமடிக்க... அவற்றை வாயால் சத்தம் எழுப்பி, விரட்டி விட்டு, நம்மோடு பேச ஆரம்பித்தார், ராமசாமி.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

10 மாதங்களில் 1.5 லட்சம்

உழவும் தொழுவுரமும் மிகவும் அவசியம்!

''பரம்பரையா நமக்கு விவசாயம்தாங்க. இந்த ஊர்ல கிணத்துப்பாசனத்தோட ஆறு ஏக்கர் தோட்டம் இருக்கு. வாழை, மரவள்ளிக்கிழங்கு, மக்காச்சோளம், தக்காளி, வெண்டைனு மாத்தி மாத்தி வெள்ளாமை செஞ்சுட்டிருக்கேன். இதுபோக, மூணு கறவை மாடுகளும் இருக்கு. அதுக்கு தனியா தீவனமும் பயிர் பண்ணியிருக்கேன். தினமும் 30 லிட்டர் அளவுக்கு பால் கிடைக்குது. சொசைட்டிக்குத்தான் ஊத்திக்கிட்டிருக்கேன். மாடு இருக்கிறதால தொழுவுரத்துக்குப் பஞ்சமில்லை. செழிம்பா தொழுவுரம் போடுறதால மண்ணுல போட்டதெல்லாம் பொன்னா விளையுது. அதில்லாம, வெள்ளாமை முடிஞ்சதுமே ரெண்டு மூணு தடவை நல்லா உழுது விட்டுடுவேன். அதனால மண் எப்பவும் 'பொலபொல’னே இருக்கும். அடிக்கடி உழவு ஓட்டுறதால களைகளும் வராது. மண்ணுல வேர் பிடிச்சு செடிகள் வளர்றதால மகசூலும் நல்லா இருக்கும். இப்போதைக்கு 80 சென்ட்ல கம்பு இருக்குது. ஒரு ஏக்கர்ல வாழையும், ஒரு ஏக்கர்ல மரவள்ளியும் இருக்குது'' என்ற ராமசாமி தொடர்ந்தார்.

10 மாதங்களில் 1.5 லட்சம்

வீட்டுக்கு, தெம்பு தரும் கம்பு!

''முன்ன எங்க ஏரியாவுல கம்பு, ராகி, தினை, சாமைனு மானாவாரியா சிறுதானிய வெள்ளாமை அதிகமா நடக்கும். ஆனா, கொஞ்சம் கொஞ்சமா அதெல்லாம் அருகிப்போச்சு. நாங்களும் அதை விட்டுட்டோம். டவுன் பக்கம் போறப்போ நிறைய பேர் கம்பங்கூழைக் குடிக்கிறதைப் பாத்து, எனக்கும் கம்பு விவசாயத்தைத் திரும்பவும் பண்ணணும்னு ஆசை வந்துடுச்சு. நாங்க கம்பை விக்கிறதில்லை. முழுக்க வீட்டு உபயோகத்துக்குத்தான் வெச்சுக்கிறோம். நாட்டு ரக கம்பு, 120 நாள்ல அறுவடைக்கு வந்துடும். ஆடிப்பட்டத்துல 80 சென்ட்ல 2 கிலோ நாட்டு ரக கம்பை விதைச்சு விட்டேன். இப்ப கதிர் பிடிச்சு நிக்குது. மழையை மட்டுமே நம்பாம பாசனமும் செய்றேன். தொழுவுரத்தோட ஒரு மூட்டை கலப்பு உரத்தையும் போட்டதால நல்லா விளைஞ்சிருக்கு. அறுவடை முடிஞ்ச பிறகு, கிடைக்கிற சக்கை, தட்டைகளை மாடுகளுக்குத் தீவனமா போட்டுடுவேன். அறுவடை செஞ்ச கம்பை மூட்டையில போட்டு நொச்சி இலைகளையும் போட்டு கட்டி வெச்சுட்டா... ஆறு மாசத்துக்கு அப்படியே வெச்சுப் பயன்படுத்தலாம். 80 சென்ட்ல 800 கிலோ வரைக்கும் எனக்கு கம்பு கிடைக்குது'' என்ற ராமசாமியைத் தொடர்ந்த சாந்தி, மரவள்ளி பற்றிச் சொல்ல ஆரம்பித்தார்.

10 மாதங்களில் 1.5 லட்சம்

சாப்பிடுவதற்கேற்ற இனிப்பு மரவள்ளி!

''எங்க பகுதியில மரவள்ளிக்கிழங்கை அதிகமா நடவு செய்வாங்க. இதைக் 'குச்சிக்கிழங்கு’னும் சொல்வாங்க. பெரும்பாலும் எல்லாரும் சேகோ ஃபேக்டரிக்கு அனுப்புறதுக்காக வீரிய ரக மரவள்ளியைத்தான் போடுவாங்க. நாங்க போட்டிருக்குறது இனிப்பு மரவள்ளிங்கிற நாட்டு ரகம். இதை ஜவ்வரிசி தயாரிக்க எடுத்துக்க மாட்டாங்க. அவிச்சு சாப்பிடுறதுக்குத்தான் பயன்படும். இதுல நிறைய மாவுச்சத்து இருக்கு. குழந்தைகளுக்கு நல்ல ஊட்டமான தின்பண்டம். நிறைய பேர் இதை விட்டுட்டாலும், நாங்க தொடர்ந்து 40 வருஷமா இதை சாகுபடி பண்ணிட்டு இருக்கோம். இது பத்து மாசப்பயிர். பத்து மாசம் காத்து கிடந்தாலும், அந்தளவுக்கு இதுல வருமானம் கிடைக்கிறதில்லை. இருந்தாலும், நாட்டு ரகம்ங்கிறதுக்காக நாங்க தொடர்ந்து பயிர் பண்றோம்'' என்றார் சாந்தி.

நாட்டுரகத்தை நோய்கள் தாக்காது!

ஒரு ஏக்கர் நிலத்தில் மரவள்ளி சாகுபடி செய்யும் முறை பற்றி ராமசாமி சொன்னதைப் பாடமாகத் தொகுத்திருக்கிறோம்.    

'மரவள்ளிக்கு கார்த்திகைப் பட்டம் ஏற்றது. நிலத்தை கோடை உழவு செய்து ஆறப்போட வேண்டும். விதைப்புக்கு முன், குறுக்கும் நெடுக்குமாக நன்கு உழுது, ஏக்கருக்கு 10 டன் என்ற கணக்கில் தொழுவுரத்தைக் கொட்டி ஓர் உழவு செய்ய வேண்டும். பிறகு 4 அடி விட்டத்தில் வட்டப்பாத்தி அமைத்து, அதில் மரவள்ளிக் கரணைக் குச்சிகளை செங்குத்தாக நடவு செய்ய வேண்டும். கூடவே, ஊடுபயிராக சின்ன வெங்காயத்தையும் விதைக்கலாம் (ஊடுபயிராக 2,000 கிலோ சின்ன வெங்காயத்தை அறுவடை செய்துவிட்டார்). நிலத்தின் ஈரப்பதத்தைப் பொறுத்து தொடர் பாசனம் செய்து வரவேண்டும். கோடை உழவு செய்து ஆறப்போட்டுவிடுவதால், பெரியளவில் களைகள் வராது. தேவையைப் பொறுத்து களைகளை அகற்ற வேண்டும்.

நடவு செய்த 10-ம் நாளில் பரிந்துரைக்கப்படும் கலப்பு உரத்தை 50 கிலோ அளவுக்கு தூவி, தண்ணீர் பாய்ச்ச வேண்டும். நடவு செய்த 3-ம் மாதத்தில், 50 கிலோ அளவுக்கு பரிந்துரைக்கப்படும் உரத்தை இட்டு, தண்ணீர் பாய்ச்ச வேண்டும். 7-ம் மாதத்தில் சாம்பல் சத்து அடங்கிய 50 கிலோ உரமிட வேண்டும். நாட்டு ரகத்தில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் என்பதால், நோய்கள் வருவதில்லை. அதேபோல, பூச்சிகளும் தாக்குவதில்லை. ஆனால், எலிகள் தொந்தரவு இருக்கலாம். அதற்கேற்ற தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து எலிகளை விரட்ட வேண்டும்.

10 மாதங்களில் 1.5 லட்சம்

10-ம் மாதத்தில் கிழங்குகள் அறுவடைக்குத் தயாராகி விடும். ஒரு செடியைப் பிடுங்கி வளர்ச்சியைத் தெரிந்துகொண்டு அறுவடையை ஆரம்பிக்கலாம். பாசனம் செய்து நிலத்தை ஈரமாக்கி செடிகளைப் பிடுங்கி எடுக்க வேண்டும். உடனே கிழங்குகளை மட்டும் வெட்டி, நிழலான இடத்தில் குவித்து, உடனடியாக விற்பனை செய்து விட வேண்டும். இலைகளை ஆடு, மாடுகளுக்குத் தீவனமாகக் கொடுக்கலாம். குச்சிகளை சீராக வெட்டி, சேமித்து வைத்து அடுத்த போகத்துக்கு நடவு செய்ய பயன் படுத்தலாம்.'

ஏக்கருக்கு 5 டன்!

சாகுபடிப் பாடம் முடித்த ராமசாமி, ''ஒரு ஏக்கர்ல 5 டன் அளவுக்கு கிழங்கு கிடைக்கும். ஒரு கிலோ 25 ரூபாய்க்கு விலை போகுது. மொத்தமா 1 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும். ஊடுபயிரா போட்டிருந்த வெங்காயத்துல 2 டன் மகசூல் கிடைச்சது. அது 30 ஆயிரம் ரூபாய்க்கு விலை போச்சு. அந்தப் பணம் முழுக்க மொத்த சாகுபடிச் செலவுக்கும் சரியா போயிடுச்சு. கிழங்குல கிடைக்கிற ஒண்ணே கால் லட்சம் அப்படியே லாபமா நிக்கும்' என்றவரிடம் 'பசுமை விகடன்’ பற்றியும் இயற்கை முறை விவசாயத்தைப் பற்றியும் சொன்னோம். அதோடு, மரவள்ளியை இயற்கை முறையில் சாகுபடி செய்து வரும் 'திருச்செங்கோடு’ நடேசனிடம் இயற்கை முறையில் சாகுபடி செய்யும் விதத்தைக் கேட்டு சொன்னோம்.

பொறுமையாகக் கேட்டுக்கொண்ட தம்பதியர், ''இதுவரைக்கும் பசுமை விகடன் புத்தகத்தைப் படிச்சது இல்லை. இனி அதைப் படிச்சு, நாட்டு ரகங்களை இயற்கை முறையில சாகுபடி செஞ்சு பாக்குறோம்'' என்று சொல்லி விடைகொடுத்தனர்.

 பீஜாமிர்தம்

தண்ணீர் 20 லிட்டர், பசு மாட்டுச் சாணம் 5 கிலோ, கோமியம் 5 லிட்டர், நல்ல நுண்ணுயிரிகள் இருக்கும் மண் ஒரு கைப்பிடி அளவு. இவற்றை ஒன்றாகச் சேர்த்து நன்றாக கலக்கவேண்டும். மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை நன்றாக ஊறவிட வேண்டும். இதுதான் பீஜாமிர்தம். அதன் பிறகு சுத்தமானச் சுண்ணாம்பு 50 கிராம் போட்டு அதைக் கலக்கவேண்டும். அதன்பிறகே விதையை அந்தக் கரைசலில் நனையவிட்டு, விதைக்கவேண்டும். கரைசலில் சுமார் 2 மணிநேரம் விதைகளை நனையவிட்டால் போதும். பயிர்களைத் தாக்கும் வேர் அழுகல், வேர்க் கரையான், வேர்ப்புழு நோய்கள் தடுக்கப்படுகின்றன.

ஜீவாமிர்தம்

பசுஞ்சாணம் 10 கிலோ, கோமியம் 10 லிட்டர், வெல்லம் 2 கிலோ, பயறு மாவு (உளுந்து, துவரை ஏதாவது ஒன்று) 2 கிலோ, தண்ணீர் 200 லிட்டர் இதனுடன் ஒரு கைப்பிடி உங்கள் நிலத்தின் மண் சேர்த்து பிளாஸ்டிக் கேனில் 48 மணி நேரம், அதாவது இரண்டு நாட்கள் வைத்திருக்கவேண்டும். பிளாஸ்டிக் கேனை மரத்தின் நிழலில் வைப்பது முக்கியம். காலை, மதியம், மாலை என்று மூன்று முறை கடிகாரச் சுற்றுப்படி குச்சி வைத்து, இதைக் கலக்கி விட்டு வந்தால் ஜீவாமிர்தம் தயார். இது ஒரு ஏக்கருக்கான அளவு. பாசன நீரிலேயே கலந்து விடலாம். ஒரு பங்கு ஜீவாமிர்த கரைசலுடன் பத்து பங்கு தண்ணீர் கலந்தும் பயிர்களுக்கு தெளிக்கலாம்.

பிரம்மாஸ்திரா

மூன்று கிலோ அளவிலான வேப்பங்குச்சிகளை விழுதாக அரைக்கவேண்டும். இதனுடன் சீத்தா, புங்கன், ஆமணக்கு, பப்பாளி, கொய்யா, ஊமத்தை, கருவேலம், பாகல் ஆகியவற்றின் இலைகளை தலா இரண்டு கிலோ வீதம் சேர்த்து அரைக்கவேண்டும் (ஏதாவது ஐந்து இலைகள் இருந்தால் கூட போதும். இலைகளை அப்படியே போட்டால், பிரம்மாஸ்திரம் தயாராவதற்கு நாள் பிடிக்கும்). இவற்றைப் பத்து லிட்டர் பசுமாட்டு சிறுநீரில் கலந்து அடுப்பில் 10 நிமிடம் கொதிக்க வைக்கவும். பின்பு 48 மணி நேரம் குளிர வைத்து, வடிகட்டி, பயிர்களுக்கு தெளிக்கலாம். இந்தக் கரைசலை ஆறு மாதம் வரை சேமித்து வைத்திருக்கலாம்.

நாற்றாக நடவு செய்தால், பழுதில்லாத மகசூல்!

சேலம் மாவட்டம் ஏத்தாப்பூரில் இயங்கும் மரவள்ளி மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி நிலையத்தின் பேராசிரியர் மற்றும் தலைவர் டாக்டர்.எஸ். மாணிக்கம், மரவள்ளி சாகுபடி பற்றி பகிர்ந்த தகவல்கள் இங்கே இடம்பிடிக்கின்றன.

'மரவள்ளியில் 'முள்ளுவாடி’ என்கிற நாட்டு ரகம் அதிக அளவில் பயிர் செய்யப்பட்டு வருகிறது. மாவுச்சத்துக்கள் அதிகம் உள்ள இதை பயிர் செய்த 8-ம் மாத்தில் அறுவடை செய்யலாம். இனிப்புத் தன்மை கொண்ட இதை முற்ற விட்டால், சுவை மாறி விடும். கோ-2, குங்குமரோஸ், என்கிற ரகங்களும் உண்டு. இவை 7-ம் மாதமே அறுவடைக்கு வந்துவிடும்.

10 மாதங்களில் 1.5 லட்சம்

மரவள்ளியை அதிகம் சேதப்படுத்துவது, மாவுப்பூச்சிகள்தான். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மூலம் வழங்கப்படும் ஒட்டுண்ணிகள் மூலம் அவற்றைக் கட்டுப்படுத்தலாம். மரவள்ளியில், இலைகளில் தேமல் நோய் மற்றும் கிழங்கு அழுகல் நோய் ஆகியவை வருவதுண்டு. தொடர்ந்து மூன்று போகத்துக்கு மேல் ஒரே நிலத்தில் மரவள்ளியை சாகுபடி செய்யக்கூடாது. டிரைகோடெர்மா விரிடி மற்றும் சூடோமோனஸ் ஆகிய உயிர் உரங்களை எருவுடன் கலந்து அடியுரமாக இட்டால், கிழங்கு அழுகல் நோய் வராது. அதேபோல, கரணை மூலம் விதைக்காமல் நாற்றுகளாக நடவு செய்யும்போது, பழுதில்லாமல் மகசூல் எடுக்கலாம்.  

சேலம், நாமக்கல், தர்மபுரி, ஈரோடு, திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களிலும், பச்சை மலை, கருமந்துறை, கொல்லிமலை போன்ற மலைப்பிரதேசங்களிலும் மரவள்ளி அதிகம் பயிர் செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் மட்டும் 1 லட்சம் ஹெக்டேர் பரப்பில் மரவள்ளி சாகுபடி நடக்கிறது. ஜவ்வரிசி, குளுக்கோஸ் போன்றவற்றின் மூலப்பொருள் மரவள்ளிதான். நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்கள் சமவெளிப்பகுதியில் நடவு செய்யவும்; ஜூன் மற்றும் ஜூலை மாதங்கள் மலைப்பகுதியில் நடவு செய்யவும் ஏற்றப் பருவங்கள்.

எங்கள் ஆராய்ச்சி நிலையத்தில் மரவள்ளியில் உயர் விளைச்சல் ரகம் ஒன்றை வெளியிட்டிருக்கிறோம். அந்த உயர் விளைச்சல் விதைக்குச்சிகள் வேண்டுவோர் அணுகலாம். அதற்கு முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்'' என்றார், டாக்டர். மாணிக்கம்.

தொடர்புக்கு, பேராசிரியர் மற்றும் தலைவர், மரவள்ளி மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி நிலையம், ஏத்தாப்பூர். தொலைபேசி: 0428-2293526.

இயற்கையிலும் சாகுபடி செய்யலாம்!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்த முன்னோடி இயற்கை விவசாயி நடேசன். இவர், ஜீரோ பட்ஜெட் முறையில் வாழை, கரும்பு, மரவள்ளி போன்றவற்றைத் தொடர்ந்து சாகுபடி செய்து வருகிறார். மரவள்ளியை இயற்கை முறையில் சாகுபடி செய்யும் விதம் பற்றி நடேசன் சொன்ன விஷயங்கள் இங்கே... ''வழக்கமான முறையில் உழுது பாத்திகள் எடுத்துக்கொண்டு, மரவள்ளிச் செடியின் குச்சிகளை நடவு செய்யும் முன்பாக பீஜாமிர்தக் கரைசலில் 2 மணி நேரம் ஊற வைத்து, விதைநேர்த்தி செய்ய வேண்டும்.

10 மாதங்களில் 1.5 லட்சம்

இப்படிச் செய்தால், வேர் சம்பந்தமான எந்த நோயும் தாக்குவதில்லை. பயிரின் வளர்ச்சியும் நன்றாக இருக்கும். ரசாயன உரங்களுக்குப் பதிலாக, ஜீவாமிர்தக் கரைசலைப் பயன்படுத்த வேண்டும். இது, மண்ணில் உள்ள நுண்ணுயிரிகளைப் பெருக்கி மண்ணை வளப்படுத்தும். அதனால், பயிர்கள் நன்கு வளரும். நிலத்துக்கு மண்புழுக்களை வரவழைக்கும். ஏக்கருக்கு 200 லிட்டர் ஜீவாமிர்தத்தை, மாதம் இரு முறை பாசன நீரில் கலந்துவிட வேண்டும். பூச்சித் தாக்குதல் ஏற்பட்டால்... 10 லிட்டர் தண்ணீருக்கு கால் லிட்டர் பிரம்மாஸ்திரக் கரைசல், 300 மில்லி மாட்டுச் சிறுநீர் என்று கலக்கித் தெளித்து பூச்சிகளை விரட்டலாம். விதைப்புக்கு முன்பாக அடியுரமாக ஆட்டு எருவைப் பயன்படுத்தும்போது, மரவள்ளியில் நல்ல மகசூல் கிடைக்கும்'' என்கிறார்.

எலிகளை விரட்டும் வரி ஊமத்தங்காய்!

விஷம் வைத்துத்தான் வயலில் நுழையும் எலிகளைக் கொன்று வருகிறார், ராமசாமி. விஷத்தைப் பயன்படுத்தாமல் இயற்கை முறையில் எலிகளைக் கட்டுப்படுத்தும் முறை பற்றி இங்கு விளக்குகிறார், இயற்கை வேளாண் ஆர்வலர் 'அன்னூர்’ பி.ஆர். சுப்பிரமணியம்.

10 மாதங்களில் 1.5 லட்சம்

''விஷம் வைக்கிறப்போ அது விளைபொருள்லயும் பரவுறதுக்கு வாய்ப்பிருக்கு. அதனால, விஷத்தைத் தவிர்க்கிறது நல்லது. புதர்கள்ல,  வேலிகள்ல கிரிக்கெட் பந்து அளவுல பச்சை நிறத்துல வெள்ளை வரிகள் ஓடுற காய்கள் காய்ச்சுக் கிடக்கும். இதுக்குப் பேரு வரி ஊமத்தங்காய். இது ரொம்ப கசப்புத்தன்மை கொண்டது. இந்தக் காய்களைப் பறிச்சு ரெண்டா வெட்டி... அதுக்குள்ள எலிக்குப் பிடிச்ச தின்பண்டத்தை வெச்சுட்டா ஆர்வமுடன் வர்ற எலிகள் அதை சாப்பிடும். அந்த கசப்புத்தன்மையைத் தாங்க முடியாம ஒரு நாள் முழுசும் எலிகள் அலையும். அப்பறம் அந்த ஏரியா பக்கமே எலிகள் வராது'' என்றார், சுப்பிரமணியம்.

தொடர்புக்கு, பி.ஆர். சுப்பிரமணியம், செல்போன்: 98945-05188.
தொடர்புக்கு, எஸ்.ராமசாமி, செல்போன்: 99948-58161.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism