Published:Updated:

மீத்தேன் எமன் - 'துபாய் ஆக மாறும் காவிரிப்படுகை?!'

கு. ராமகிருஷ்ணன் ஓவியம்: செந்தில், படம்: கே. குணசீலன்

மீத்தேன் எமன் - 'துபாய் ஆக மாறும் காவிரிப்படுகை?!'

கு. ராமகிருஷ்ணன் ஓவியம்: செந்தில், படம்: கே. குணசீலன்

Published:Updated:

 பாலைவனமாகும் பரிதாப டெல்டா

போராட்டம்

'மயிலாடுதுறை நகராட்சியின் குப்பைக் கிடங்கால் பாதிப்பு ஏற்படுகிறது’ என சென்னை உயர் நீதிமன்றத்தில் 12 ஆண்டுகளுக்கு முன்பு வழக்கு தொடர்ந்திருந்தார் ஒருவர். சமீபத்தில், இவ்வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற அமர்வு நீதிபதிகள், '15 நாட்களுக்குள் கிடங்கை அகற்ற வேண்டும். அல்லது நகராட்சி ஆணையர் நீதிமன்றத்தில் ஆஜராகி, நகராட்சி அலுவலகத்தைக் குப்பைக் கிடங்குக்கு அருகில் மாற்றுவதற்கான ஏற்பாடுகள் பற்றி எங்களிடம் தெரிவிக்க வேண்டும்’ என்று சாட்டையடி உத்தரவை வழங்கியுள்ளனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்தச் செய்தியைப் படித்தபோது... 'காவிரிப் படுகை கிராமங்களில், ஒ.என்.ஜி.சி- நிறுவனம் பெட்ரோல்-கேஸ் எடுப்பதால், மக்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது’ எனச் சொல்லிக் கொண்டிருப்பவர்களையெல்லாம், இதேபோல நாகப்பட்டினம் மாவட்டம், நரிமனம்-குத்தாலம், முட்டம், பனங்குடி சுற்றியுள்ள கிராமங்களில் குடியமர்த்த வேண்டும்' என்று உத்தரவிட்டால், என்ன என்று தோன்றியது.

தலைவலியும் திருகுவலியும் தனக்கு வந்தால்தானே தெரியும். ஒ.என்.ஜி.சி-யின் கோரத்தாண்டவத்தால் இந்த கிராமங்களில் குடிக்க தண்ணீர்கூட கிடையாது. பரம்பரைப் பரம்பரையாக இங்கு வாழ்ந்து வந்தவர்கள், ஊரை விட்டு வெளியேறி சொந்த நாட்டிலேயே அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் சூழலில்... கொஞ்சம்கூட மனசாட்சியே இல்லாமல், அரசியல் செய்து கொண்டிருப்பதை என்னவென்று சொல்ல?

''குத்தாலம், மத்தியக்குடி, வடகுத்தாலம், மண்டகமேடு, திட்டகச்சேரி, கோபுராஜபுரம், தேவன்குடி என சில கிராமங்களில் மட்டும் 60 பெட்ரோல்-கேஸ் கிணறுகள் உள்ளன. ஒவ்வொரு கிணறும் கிட்டத்தட்ட பத்தாயிரம் அடி ஆழமானவை. எங்கள் கிராமங்கள் எல்லாம் சபிக்கப்பட்ட கிராமங்களாகி விட்டன. இதனால் நாங்கள் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்து வருகிறோம்.

மீத்தேன் எமன் - 'துபாய் ஆக மாறும் காவிரிப்படுகை?!'

10 அடி, 15 அடியில் கிடைத்து வந்த நிலத்தடிநீர்... பல அடி ஆழத்துக்குக் போய்விட்டது.  அத்தனை அடி ஆழத்திலிருந்து நீரை எடுத்தாலும், அது உப்பாக மாறி, குடிக்கவே லாயக்கற்றதாகிவிட்டது. கச்சா எண்ணெய், எரிவாயுடன் சேர்ந்து வரக்கூடிய நச்சுத்தன்மை வாய்ந்த தண்ணீரை சுத்திகரிப்பு செய்து நிலத்துக்குள்ளேயே செலுத்துவதற்கான மாசுநீர் சுத்திகரிப்பு நிலையம் இங்குள்ளது.. இப்படி  சுத்திகரிக்கப்பட்டு செலுத்தப் படும் நீர், பூமிக்குள் நீரோட்டத்துடன் கலந்துவிடும். இந்த நீர் அருகில் உள்ள கிணறு மற்றும் ஆழ்துளைக் கிணறுகளில் உற்பத்தியாகும் நீருடன் சேர்ந்துவிடும். ஆனால், அப்படி சுத்திகரித்த நீரும் நச்சுத்தன்மையுடன்தான் இருக்கிறது'' என்று வெம்பி வெடிக்கிறார்கள் இப்பகுதியின் மக்கள்.

''சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து குழாய் மூலமாக, விளைநிலங்களின் வழியாகத்தான் அந்த நீரைக் கொண்டு சென்று நிலத்துக்குள் செலுத்துகிறார்கள். இந்தக் குழாயில் உடைப்பெடுத்து, தண்ணீர் பரவியதால், என்னுடைய விளைநிலத்தில் உள்ள மண் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல முறை மழை பெய்த பிறகும் நச்சுத்தன்மை குறைய வில்லை. நடவு செய்த நாற்றுகள் எல்லாமே கருகிவிடுகின்றன'' என்று வேதனை பொங்குகிறார்... குத்தாலம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மகேந்திரன்.

''இப்பகுதியில் கிடைக்கும் நீரைக் குடித்ததால், எனக்கு சிறுநீரகத்திலும் கல்லீரலிலும் பாதிப்பு ஏற்பட்டு விட்டது. அமிலத்தன்மை அதிகமாக இருந்த தண்ணீரைக் குடித்த 60 பேர் வாந்தி, பேதி மயக்கம் ஏற்பட்டு, மருத்துவமனையில அனுமதிக்கப் பட்டார்கள். 'தண்ணீரால்தான் பாதிப்பு' என்று மருத்துவர்கள் தெளிவாகச் சொல்லிவிட்டார்கள். அதனால், இங்கு கிடைக்கும் தண்ணீரை நாங்கள் குடிப்பதில்லை. ஊராட்சி நிர்வாகம், வெளியூர்களில் இருந்து கொண்டு வரும் தண்ணீரைத்தான் பயன்படுத்துகிறோம்'' என்று சொல்கிறார், முட்டம் கிராமத்தைச் சேர்ந்த ராஜா.

மீத்தேன் எமன் - 'துபாய் ஆக மாறும் காவிரிப்படுகை?!'

பெட்ரோல்-கேஸ் கிணறுகள் மட்டுமல்லாமல்... எண்ணெய்க்கிணறுகள் இணைப்பு நிலையம், பெட்ரோல்-கேஸ் பிரித்தெடுக்கும் நிலையம், மாசுநீர் சுத்திகரிப்பு நிலையம், பெட்ரோலியத்திலிருந்து டீசல், நாப்தா, தார் உள்ளிட்ட இன்னும் பல்வேறு பொருட்களைப் பிரித்தெடுக்கக்கூடிய சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் உள்ளிட்ட அனைத்துமே விளைநிலங்களில்தான் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் வாய்க்கால்கள் தடைப்பட்டு, ஏராளமான விளைநிலங்கள் பாசனத்தை இழந்து, பொட்டல் காடுகளாக காட்சி அளிக்கின்றன.

'விவசாய நிலங்களில் பெட்ரோல்-கேஸ் கிணறுகள் அமைக்கும் பணிகளை மேற்கொண்டிருக்கும், ஒ.என்.ஜி.சி நிறுவனத்துக்கு ஆதரவாகச் செயல்படுகிறார் நாகப்பட்டினம் தொகுதியின் முன்னாள் எம்.பி-யான ஏ.கே.எஸ். விஜயன் (தி.மு.க). இதனால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து, இவர் கொஞ்சமும் கவலைப்படுவதில்லை’ எனக் குமுறுகிறார்கள், இப்பகுதி விவசாயிகள்.

இதைப்பற்றி ஏ.கே.எஸ். விஜயனிடம் கேட்டேன். ''விவசாயத்துக்கு அரசாங்கம் இன்னும் நிறையச் செய்ய வேண்டும் என்பதுதான் என்னுடைய தரப்பும். இன்னும் 25 ஆண்டுகளில் விவசாயம் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடையும். அதேசமயம், பெட்ரோல் என்பதும் அத்தியாவசியம். பலருக்கு நன்மை கொடுக்கக் கூடியது... சிலருக்கு சங்கடங்களைக் கொடுக்கத்தான் செய்யும். இதனால், நாட்டுக்கு என்ன நன்மை என்றுதான் பார்க்க வேண்டும். இங்கு கிடைக்கும் கச்சா எண்ணெயை வைத்தே, உள்நாட்டுத் தேவையைச் சமாளிப்பது பெரும் சிரமமாக இருக்கிறது. இதையும் நிறுத்திவிட்டால், கூடுதலாகச் சிரமப்பட வேண்டியிருக்கும்.

மீத்தேன் எமன் - 'துபாய் ஆக மாறும் காவிரிப்படுகை?!'

கடந்த 30 ஆண்டுகளாக, டெல்டா மாவட்டங்களில் பெட்ரோல்-கேஸ் எடுக்கப்படுகிறது. இதனால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. பாதிப்புகள் ஏதும் ஏற்படுமோ என்கிற அச்சம் தற்போது மக்களிடம் எழுந்துள்ளது. எனவே, மக்களிடம் விழிப்பு உணர்வை ஏற்படுத்திவிட்டுதான் புதிய கிணறுகள் அமைக்க வேண்டும். விளைநிலங்களில் ஏற்படக்கூடிய பாதிப்புகளுக்கு ஒ.என்.ஜி.சி நிறுவனம் நிவாரணம் கொடுத்து வருகிறது. காவிரியில் தண்ணீர் இல்லை. மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கப் போக முடியவில்லை. இதற்கெல்லாம் எண்ணெய் வளம்தானே மாற்று'' என்று சொன்னார்.

விஜயன் இப்படி சொல்லி முடித்தபோது... என் மூளையில் 'கொசுவர்த்தி' சுழல ஆரம்பித்துவிட்டது. 'காவிரியில் தண்ணீர் இல்லை... கடலிலும் மீன்கள் இல்லை. பேசாமல், காவிரி டெல்டா முழுக்கவே பெட்ரோல் கிணறுகளாகத் தோண்டிவிட்டால்... ஒரே கல்லில் பல மாங்காய்கள் அடித்துவிடலாம்.

காவிரிப் பிரச்னைக்கு உடனடி தீர்வு; தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதற்கு அதிரடி தீர்வு; எல்லாவற்றுக்கும் மேலாக, தமிழர்கள் வேலை தேடி இனி துபாய் உள்ளிட்ட அரபு பூமிகளுக்குச் செல்லத் தேவையிருக்காது. பின்னே, காவிரி டெல்டாவே பாலைவன பூமியாக மாறிவிடும். இங்கிருப்போர் எல்லாம் அரபு ஷேக்குகளாக மாறிவிடுவார்கள். ஒவ்வொருவருக்கும் மாட மாளிகைகள், கூட கோபுரங்கள் எல்லாம் கிடைத்துவிடும். தனித்தனி ஹெலிகாப்டர்கள் கூட வந்துவிடும். இத்தனை காலமாக டெல்டா மக்களை வேலைக்காக அழைத்துச் சென்று, அடிமைகளாக நடத்திக் கொண்டிருந்த ஷேக்குகளை, இங்கே வேலைக்கு அழைத்து வந்து, அடிமைகளாக நாம் வதைக்கலாம்...'

''நேரமாச்சு, கிளம்பலாமா..?'' என்று புகைப்படக்காரர்தான் 'கொசுவர்த்தி'யை அணைத்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism