Published:Updated:

பேரீச்சை தொடரும் சர்ச்சை !

ஆர். குமரேசன், ஜி. பழனிச்சாமி

பேரீச்சை தொடரும் சர்ச்சை !

ஆர். குமரேசன், ஜி. பழனிச்சாமி

Published:Updated:

அடுத்தக் கட்டம்

 ''பேரீச்சை வளர்த்தால் பெருநஷ்டம்'' என்ற தலைப்பில் கடந்த இதழில் வெளியான கட்டுரை, விவசாயிகள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுதியுள்ளது. ''பேரீச்சை சாகுபடியைப் பத்துன உண்மையைத் தோலுரிச்சு காட்டிட்டீங்க. இதை இன்னமும் சில காலத்துக்கு முன்னமே எழுதியிருந்தா, எங்களைப் போல ஆளுங்க நஷ்டத்தைத் தவிர்த்திருப்போம். போனது போயிடுச்சு... இனி எங்களை மாதிரி யாரும் நஷ்டமடையாம இருந்தாலே சந்தோஷம்தான்'' என பல நூறு விவசாயிகள் 'பசுமை விகட’னைத் தொடர்புகொண்டு பேசி வருகிறார்கள்.

இதற்கிடையில், 'முறையாகப் பராமரிச்சா பேரீச்சை பெரியளவுல லாபம் தர்ற பயிர்தான். நாங்கள் வெற்றிகரமா சாகுபடி செஞ்சுட்டு இருக்கோம்'' என்று சொல்லும் சில விவசாயிகளும் இருக்கிறார்கள். அவர்கள், தங்களது அனுபவங்களை அஞ்சல் மற்றும் செல்போன் வழியாக நமக்குத் தெரியபடுத்தவே, அவர்களில் சிலரின் அனுபவங்கள் இங்கே இடம்பெறுகின்றன. இதையெல்லாம் படித்துவிட்டு, பேரீச்சை நடவு செய்யலாமா... வேண்டாமா... என்பதை நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பேரீச்சை தொடரும் சர்ச்சை !

தொழில்நுட்பத்தைத் தெளிவாகச் சொல்லவில்லை!

தமிழகத்தில் திசுவளர்ப்புக் கன்று மூலம் முதன்முதலில் பேரீச்சை சாகுபடி செய்து, மகசூல் எடுத்துக் காட்டியவர் திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த அன்பழகன். 25.07.2010 தேதியிட்ட 'பசுமை விகடன்’ இதழில் இவரைப் பற்றிய கட்டுரை வெளியாகியிருக்கிறது. கடந்த இதழ் கட்டுரையை அடுத்து நம்மைத் தொடர்புகொண்ட அன்பழகன், ''பேரீச்சையைப் பொறுத்தவரை நஷ்டம்னு சொல்றது உண்மைதான். ஆனா, இந்த நஷ்டம், விதை மூலம் உருவாக்கின கன்றுகளை நடவுசெய்த விவசாயிகளுக்குத்தான். திசு வளர்ப்புக் கன்றுகளை நடவு செஞ்ச விவசாயிகள் யாரும் நஷ்டப்படல. 10 வருஷமா தமிழ்நாட்டுல 3 லட்சத்துக்கும் அதிகமா நாட்டுக் கன்றுகளை சிலர் வித்திருக்காங்க. இதுல ஆண் மரங்கள்தான் அதிகம். பேரீச்சையில இயற்கையா மகரந்தச் சேர்க்கை நடக்காது. ஆண் மரங்கள்ல இருந்து மகரந்தத்தூளைச் சேகரிச்சு, பெண் மரங்கள்ல இருக்கற வெடிச்ச பாளைக்குள்ள நாமதான் வெக்கணும். இது சரியா நடந்தாத்தான் மகசூல் கிடைக்கும். 'இது பாலைவனத்துல வளர்ற பயிர். அதிக தண்ணி தேவையில்ல. வறட்சியிலயும் வளரும்’னு விளம்பரம் செய்றாங்க. இது, ரொம்ப தவறான தகவல். போதுமான தண்ணி கொடுக்காட்டி மரம் மட்டும்தான் நிக்கும். மகசூல் கிடைக்காது. உண்மையில் பேரீச்சைக்கு அதிக தண்ணி தேவை.

வறட்சியும் ஒரு காரணம்!

அடுத்து கவனிக்க வேண்டிய விஷயம் கூன்வண்டுத் தாக்குதல். இது ரொம்ப ஆபத்தானது. பல நேரங்கள்ல மொத்த மரங்களையும் அழிச்சுடும். இதுனால நானும் பல மரங்களை இழந்திருக்கேன். இதை ஆரம்பத்துலயே கவனிச்சுக் கட்டுப்படுத்தணும். முறையான தடுப்பு நடவடிக்கைகளை செஞ்சா, இதை சுலபமா கட்டுப்படுத்திடலாம். கூண்வண்டுத் தாக்குன மரங்களை எப்படி கண்டுபிடிக்கறதுங்கிற விஷயத்தை கன்று விக்கிறவங்க சொல்லித் தர்றதில்லை.

இது ஆண்டுக்காண்டு மகசூல் அதிகரிச்சுகிட்டே போற பயிர். ஆனா, கடந்த மூணு வருஷமா தமிழ்நாட்டுல மழையில்லாததால எந்த விவசாயமும் செய்ய முடியல. பல தோட்டங்கள் தரிசா கிடக்குது. பல லட்சம் தென்னை மரங்களை வெட்டிட்டாங்க. என்னோட பேரீச்சையிலயும் மூணு வருஷமா போதுமான மகசூல் இல்ல. காரணம், போதுமான தண்ணி இல்லாததுதான். இருக்கற தண்ணியை வெச்சு மரங்களைக் காப்பாத்திக்கிட்டு இருக்கேன். இதுதான் எல்லா பேரீச்சை விவசாயிகளோட நிலைமை. இத்தனை கடுமையான வறட்சியிலயும் இந்த வருஷம் ஒரு டன் மகசூல் கிடைச்சுது. கிலோ 350 ரூபாய் விலையில பண்ணையிலயே வித்துடுச்சு'' என்ற அன்பழகன்,

''சரியான வழிகாட்டுதல் இல்லாம, தரமில்லாத கன்னுகளை வாங்கி, நடவு செஞ்ச விவசாயிகள் பாதிக்கப்பட்டிருப்பது உண்மைதான். அதுக்காக, 'தமிழ்நாட்டுல பேரீச்சை விவசாயமே செய்ய முடியாதுனு பல்கலைக்கழகம் சொல்றது ஏற்புடையதா இல்லை. தரமான திசு கல்ச்சர் கன்றுகள், முறையான தொழில்நுட்பம், பக்குவமான பராமரிப்பு, போதுமான தண்ணீர் இருந்தால் பேரீச்சையும் லாபமான பயிர்தான்'' என்று சொல்கிறார்.

பேரீச்சை தொடரும் சர்ச்சை !

பராமரிப்புக்குத் தகுந்த பலன்!

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை திருமூர்த்தி அணை அருகேயுள்ள பொன்னாலம்மன் சோலையில் இருந்து நம்மைத் தொடர்பு கொண்ட கங்காதரன், ''2011-ம் வருஷம் ஒன்றரை ஏக்கர்ல திசுவளர்ப்பு பேரீச்சைக் கன்னுகளை நடவு செஞ்சோம். இந்த வருஷம் மகசூலுக்கு வந்திருக்கு. அவசர சிகிச்சை பிரிவுல இருக்கற நோயாளியைப் பாத்துக்கற மாதிரி பாத்துகிட்டாத்தான் இதுல மகசூல் எடுக்க முடியும். தென்னையைப் போல நாத்தை நட்டுட்டா அதுவா வந் திடாது'' என்றவரை இடைமறித்த மகன் ஹரிபிரசாத்,

''கன்றுகள் வளர வளர செங்கூன்வண்டு, காண்டாமிருகவண்டுத் தாக்குதல் இருக்கத்தான் செய்யும். அதைக் கட்டுபடுத்த இயற்கை முறையில் ஒருவழியும் உண்டு. அதுதான் ஆமணக்கு விதை வைத்தியம். 'அகண்ட வாய் உடைய சில மண்பானைகள்ல தண்ணீரை நிரப்பி, அரைக்கிலோ ஆமணக்கு விதைகளை நசுக்கி கலந்து... பேரீச்சை வயல் எல்லைப்பகுதிகள்ல அங்கங்க பானை பாதியளவுக்கு மண்ணுக்குள்ள இருக்குற மாதிரி புதைச்சுடணும். ஆமணக்கு விதைகளோட வாசத்துக்கு வர்ற செங்கூன்வண்டுகள், காண்டா மிருகவண்டுகள் தண்ணீருக்குள்ள விழுந்து மாண்டுபோகும். இந்த ஆமணக்கு வைத்தியத்தோட, இனக்கவர்ச்சிப் பொறி பக்கெட்டுகளையும் பல இடங்களில் கட்டி, தொங்க விட்டா நல்ல பலன் கிடைக்கும்.

2011 ஆகஸ்ட் 15-ம் தேதி நடவு செஞ்சோம். 2014-ம் மார்ச் மாசம் பாளை பிடிச்சது. ஜூன் மாசம், பழங்களை முதல் அறுவடை செஞ்சோம். மொத்தமிருக்குற 120 மரங்கள்ல ரொம்ப ஊக்கமா இருந்த 10 மரங்கள்ல மட்டும்தான் மகசூல் கிடைச்சுது. ஒரு மரத்துக்கு சராசரியா 25 கிலோ வீதம்

250 கிலோ கிடைச்சது. கிலோ 250 ரூபாய்னு நேரடியாகவே வித்துட்டோம். இனி வர்ற காலங்கள்ல, மகசூல் அதிகமாகும்னு எதிர்பாக்குறோம்'' என்றார்.

ஆனால், 'நாட்டுக் கன்றுகள் மட்டுமல்ல, திசு வளர்ப்புக் கன்றுகளாக இருந்தாலும், பேரீச்சை விவசாயத்தை ஊக்குவிக்க முடியாது என்பதுதான் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் கருத்தாக இருக்கிறது. பேரீச்சை மட்டுமல்ல, அறிமுகமில்லாத எந்தப் பயிராக இருந்தாலும், ஒரு தடவைக்கு, நான்கு தடவை யோசிக்க வேண்டும். ஏற்கெனவே பயிரிடப்பட்டிருக்கும் தோட்டங்கள் பலவற்றையும் சென்று பார்வையிட வேண்டும். அந்த விவசாயிகளின் அனுபவங்கள், தோட்டத்தின் நிலை என்று எல்லாவற்றையும் தெள்ளத் தெளிவாக அலசி ஆராய்ந்து, அதன் பிறகு சரியான நிபுணர்களிடம் ஆலோசனை பெற்று முடிவுக்கு வரவேண்டும் என்பதைத்தான் காட்டுகிறது... இந்தப் பேரீச்சை விவசாயம்!

தொடர்புக்கு,
அன்பழகன், செல்போன்: 96003-21911
ஹரிபிரசாத், செல்போன்: 95780-35100

வேளாண் துறை அமைச்சர் கவனத்துக்கு...

பேரீச்சை தொடரும் சர்ச்சை !

''பேரீச்சை தொடர்பாக தமிழக வேளாண்துறை மூலமாக, விவசாயிகளுக்குத் தெளிவான அறிவுறுத்தல்கள் தரப்பட வேண்டும். உண்மையிலேயே இது லாபம் தரும் பயிர்தானா... இல்லையா... என்பதை வேளாண்துறை உறுதியாக எடுத்துச் சொல்லி விவசாயிகளைக் காப்பாற்ற வேண்டும்'' என்று தமிழக வேளாண்துறை அமைச்சர் 'அக்ரி’ கிருஷ்ணமூர்த்தியிடம் நாம் கோரிக்கை வைத்தோம். இதற்கு, ''பசுமை விகடனுக்கு வாழ்த்துக்கள் இதுபோன்ற பிரச்னைகளைத் தொடர்ந்து சுட்டிக்காட்டுவதுடன், நல்ல மகசூல் எடுக்கும் விவசாயிகளையும் ஊக்கப்படுத்தி வருகிறீர்கள்'' என்று நம்மை உற்சாகப்படுத்திய அமைச்சர்,

''பேரீச்சைப் பயிருக்கான ஆராய்ச்சி தேவையா... இல்லையா? இதன் சாகுபடியில் உள்ள நிறை, குறைகள் போன்றவைக் குறித்து, பல்கலைக்கழக விஞ்ஞானிகளிடம் கலந்துரையாடிய பிறகு உங்களிடம் விளக்கமாகக் கூறுகிறேன். ஒருவேளை இது விவசாயிகளுக்கு நன்மை தரக்கூடிய பயிர் எனில், இதை ஊக்கப்படுத்த இந்த அரசு தயங்காது'' என்று சொன்னார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism