Published:Updated:

'அமுதக்கரைசல் எனும் அற்புதம், தமிழகம் வந்த கதை!'

'அமுதக்கரைசல் எனும் அற்புதம், தமிழகம் வந்த கதை!'

வரலாறு

'இயற்கை வேளாண் விஞ்ஞானி' கோ. நம்மாழ்வார், இயற்கையுடன் கலந்துவிட்டார். அவருடன் நெருங்கிப் பழகி, அவரைப் பற்றி முழுவதுமாக அறிந்து வைத்திருக்கும் சிலர்... 'நான் நம்மாழ்வாருக்காகப் பேசுகிறேன்' என்ற தலைப்பில், அவருடைய வாழ்க்கைப் பாதை பற்றி இதழ்தோறும் பேசுகிறார்கள். இந்த இதழில் 'டி.இ.டி.இ' ஆர். ரங்கநாதன் பேசுகிறார்...

செங்கல்பட்டு அருகில் உள்ள இயற்கை விவசாயப் பண்ணையில் இருந்து வெளியேறின, அண்ணாச்சி (நம்மாழ்வார்) மதுராந்தகம் பக்கத்தில் இருக்கும் ’அரியனூர்’ ஜெயச்சந்திரன் வீட்டில் ஒரு நாள் தங்கினார். அடுத்த நாள் காலையில், நானும், திருப்போரூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் வீரபத்திரன் உள்ளிட்ட சிலரும் போய், அவரை கேளம்பாக்கத்துக்கு அழைத்து வந்தோம். இயற்கை விவசாயத்தை மக்களோட மனசுல விதைக்கறதுக்காக, விவசாயிகளோட அழைப்பை ஏத்துக்கிட்டு, வாழ்நாள் முழுக்க பயணம் செய்றதையே அண்ணாச்சி வழக்கமாக்கிக்கிட்டது... இங்க வந்த பிறகுதான். இதுக்கான ஆரம்பப் புள்ளி, அந்தக் காலை நேரத்துலதான் விழுந்துச்சு.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அண்ணாச்சி, கொழிஞ்சிப் பண்ணையில இருந்த காலத்திலேயே எனக்கு நல்ல பழக்கம். செங்கல்பட்டு வந்த பிறகு அது இன்னும் வலுவாயிடுச்சு. என்னை, 'ரங்கு’னுதான் கூப்பிடுவாரு. கேளம்பாக்கத்துக்கு எங்களோட புறப்படும்போது, ரங்கு, இயற்கை விவசாயத்தை, விவசாயிகள்கிட்ட சேர்க்க இனி வேகவேகமா வேலை செய்யணும்’னு சொன்னாரு. அண்ணாச்சியோட வேகத்துக்கு நாங்களும் ஓடினோம்.

'அமுதக்கரைசல் எனும் அற்புதம், தமிழகம் வந்த கதை!'

கேளம்பாக்கத்துல எங்க பண்ணை இருக்கு. அதுலதான், மூடாக்கு, மண்புழு உரம், பூச்சிவிரட்டியெல்லாம்... தயாரிச்சு காட்டுவாரு அண்ணாச்சி. காலையில முழுக்க பண்ணையில வேலை செய்வாரு, ராத்திரி நேரத்துல... ஊர், ஊரா இயற்கை விவசாயப் பிரசாரத்துக்கு கிளம்புவாரு. அப்போ, சென்னை, புதுக் கல்லூரியில பேராசிரியரா இருந்த 'மண்புழு’ விஞ்ஞானி சுல்தான் இஸ்மாயில், வீரபத்திரன்னு படையா கிளம்பிப் போவோம். ஒவ்வொருத்தரும் இயற்கை விவசாயத்தைப் பத்தி பேசுவோம், பாடுவோம். சமயத்துல நாடகம்கூட போட்டு நடிச்சிருக்கோம். அண்ணாச்சி, குரல் எடுத்து பாடும்போது கேட்டுட்டே இருக்கலாம். அவ்வளவு அருமையா இருக்கும். இப்படித்தான் செங்கல்பட்டு சுற்றுவட்டாரப் பகுதியில ஊர்ஊரா பிரசாரம் செய்தோம்.

ஒருதடவை, இயற்கை விவசாய விழிப்பு உணர்வுப் பேரணியை சைக்கிள் மூலம் நடத்தினோம். மதுராந்தகத்துல சைக்கிளை நிறுத்தி, மைக் புடிச்சு அண்ணாச்சி பேச ஆரம்பிச்சாரு. கடைத்தெருவுல இருக்கிறவங்க கூடி நின்னு வேடிக்கை பார்க்கிறாங்க. சென்னைக்குப் போற அரசு பஸ்ல இருந்து இறங்கின ஒரு டிரைவர், ஓடிவந்து அண்ணாச்சி கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்கிட்டு... ஓரமா நின்னாரு. பஸ்ல இருந்த பயணிங்க... 'யோவ், டிரைவர் உனக்கு என்ன பைத்தியம் புடிச்சுருக்கா... வண்டியை நிறுத்திட்டு வேடிக்கை பார்க்கிறீயே'னு சத்தம் போடறாங்க. ஆமாம்யா, எனக்கு இயற்கை விவசாயப் பைத்தியம் புடிச்சுருக்கு. இந்த மனுஷனை சந்திக்கணும்னு தவம் கிடந்தேன். அது இன்னிக்குத்தான் கூடி வந்திருக்கு. நீங்களும் அவர் சொல்ற நுட்பத்தைக் கேளுங்கய்யா. என்னோட வேலையே போனாலும், அய்யா பேசுறதை கேட்காம வரமாட்டேன்’னு டிரைவர் பதில் சொன்னார். அது, திருச்சி-சென்னை நெடுஞ்சாலைங்கிறதால போக்குவரத்து நெரிசல் ஏற்பட ஆரம்பிச்சுருச்சு. அந்த டிரைவரைக் கட்டிப்புடிச்சுகிட்ட அண்ணாச்சி, 'கடமையைச் செய்யுங்க... இயற்கை உங்களை வாழ வைக்கும்'னு அங்க இருந்து உடனடியா அனுப்பி வெச்சாரு. அந்த டிரைவர், இப்ப மரம் வளர்ப்புல தீவிரமா இருக்கிற 'மரம்’ கருணாநிதிதான்.

'அமுதக்கரைசல் எனும் அற்புதம், தமிழகம் வந்த கதை!'

அண்ணாச்சியோட வெளிநாடுகளுக்குப் போயிருக்கேன். பிலிப்பைன்ஸ் நாட்டுல நடந்த இயற்கை விவசாயப் பயிற்சிக்குப் போயிருந் தோம். அண்ணாச்சிக்கு அதுதான் முதல் வெளிநாட்டுப் பயணம். ஆனா, பலமுறை வெளிநாட்டுக்குப் போயிட்டு வந்த மாதிரி, அவ்வளவு கச்சித்தமா புறப்பட்டு வந்தாரு. பல நாடுகள்ல இருந்தும், பயிற்சிக்கு வந்திருந்தாங்க. பயிற்சி நேரம் போக, மத்த நேரத்துல நம்ம தமிழ்நாட்டுல எப்படி இயற்கை விவசாயத்தைப் பரப்புறதுங்கறது பத்திதான் எங்ககிட்ட பேசுவாரு. அந்தப் பயிற்சிக்கு பெண்களும், வந்திருந்தாங்க. 'நம்ம ஊர்ப் பக்கமும், இதுமாதிரி இயற்கை விவசாயப் பயிற்சிக்கு பொண்ணுங்க வந்தா, இயற்கை விவசாயத்தை அவங்க கையில் குடுத்துடலாம். பொண்ணுங்க ஒரு விஷயத்தைக் கையில எடுத்துட்டா, இறுக்கமா புடிச்சுக்குவாங்க'னு சொன்னாரு.

வெளிநாட்டுப் பயணம் முடிஞ்சு ஊருக்கு வந்த பிறகு, ஒரு நாள் சென்னையில இருக்கிற அகிம்சா பவுண்டேஷன் அமைப்புல இருந்து ஒரு தகவல். 'சென்னையில் வெஜிடேரியன் காங்கிரஸ் மாநாடு நடக்கப் போகுது. மகாராஷ்டிராவுல இருந்து ஸ்ரீபாத தபோல்கர் வர்றார். அவர், ஒரு நாள் முன்னதாவே வர்ற மாதிரி பயணத் திட்டம் போட்டிருக்கோம். நீங்க அவரை வெச்சு இயற்கை விவசாயக் கூட்டம் நடத்தலாம்'னு சொன்னாங்க. அண்ணாச்சிக்கிட்ட இந்தத் தகவலைச் சொன்னதும், 'கணக்குப் பேராசிரியரா இருந்து, இயற்கை விவசாய ஆராய்ச்சி செய்யுற தபோல்கர்தானே, அவரைப் பத்தி கேள்விப்பட்டிருக்கேன். தாராளமா கூட்டம் நடத்தலாம் ரங்கு! அதுக்கான ஏற்பாடுகளைப் பாருங்க'னு முடுக்கிவிட்டாரு.

'அமுதக்கரைசல் எனும் அற்புதம், தமிழகம் வந்த கதை!'

அது, 1998-ம் வருஷம், டிசம்பர் 30-ம் தேதி, செங்கல்பட்டு, ஏழுமலையான் கல்யாண மண்டபத்துல ஏற்பாடு செய்த கூட்டத்துக்கு, எதிர்பாராத கூட்டம். அந்தக் காலகட்டத்துல, இயற்கை விவசாயக் கூட்டத்துக்காக மண்டபம் நிறைஞ்சு வழிஞ்சது... பெரிய விஷயம். அண்ணாச்சியும், நாங்களும் வேலை செய்ததுக்கான பலனை அதுல பார்த்தோம். தமிழ்நாட்டுல இன்னிக்கு பட்டித் தொட்டியெல்லாம் பரவியிருக்கிற அமுதக்கரைசல் நுட்பத்தை, அந்த மேடையிலதான் தபோல்கர் விளக்கமா சொன்னாரு. அதுக்கு முன்ன விவசாயிகளே தயாரிக்குற மாதிரி எளிமையான வளர்ச்சி ஊக்கி எதுவும் இங்க இல்ல.

'இதுக்கு 'அமிர்தபானி’னு பெயர் வெச்சிருக்கோம். ஒரு விவசாயி கண்டுப்புடிச்ச தொழில்நுட்பம் இது. இதைப் பயன்படுத்தினா நல்ல விளைச்சல் கிடைக்குது'னு சொன்ன தபோல்கர், தயாரிப்பு நுட்பத்தை விளக்கமா சொன்னாரு. அதை அப்படியே உள்வாங்கிக்கிட்ட அண்ணாச்சி, 'இன்னிக்கு, தமிழ்நாட்டு இயற்கை விவசாயத்துல முக்கியமான நாள். உங்களை கடன் சுமையில இருந்து மீட்டு எடுக்க, ஒரு தொழில்நுட்பம் கிடைச்சுடுச்சு. அதுக்கு இந்த செங்கல்பட்டு மண்ணுல நம்ம எல்லாருக்கும் புரியுற மாதிரி 'அமுதக்கரைசல்’னு பேர் வைப்போம்'னு சொல்லி, அதே மேடையிலயே பெயர் சூட்டினார்.

'அமுதக்கரைசல் எனும் அற்புதம், தமிழகம் வந்த கதை!'

கூட்டம் முடிஞ்ச கையோட தோட்டத்துக்கு வந்து அமுதக்கரைசல் கரைக்குற வேலையில அண்ணாச்சி இறங்கிட்டாரு. அதை பரிசோதனை செய்து பார்த்தவர், அதுக்குப் பிறகு விவசாயிகள பார்க்குறப்பவெல்லாம், 'அமுதக்கரைசல் அற்புதம்ய்யா... சாணம், மாட்டு மூத்திரம், வெல்லம் இதை தண்ணியில கலந்து 24 மணி நேரம் வெச்சிருந்து பயிருக்குத் தெளிக்கலாம். தண்ணியில கலந்துவிடலாம். இதனால செடிங்க நிறைய பூக்குது, நிறைய காய்க்குதுனு பேசிட்டே இருந்தார். அடுத்து வடமாநிலம் போக வாய்ப்பு கிடைச்சப்போ, தபோல்கரை அவரோட வீட்டிலேயே போய் பார்த்தாரு அண்ணாச்சி. இந்த நட்பு தபோல்கரோட இறுதிக்காலம் வரையிலும் நீடிச்சது. இன்னிக்கு தமிழ்நாட்டு விவசாயிங்க தலையில வெச்சு, கொண்டாடுற ஒற்றை நாற்று நடவு நுட்பமும் அண்ணாச்சி மூலமாத்தான் தமிழ்நாட்டுக்குள்ள வந்துச்சு. அதை, அடுத்த இதழ்ல சொல்றேன்''