Published:Updated:

தமிழக அரசின் நாட்டுக் கோழி திட்டம்...

பண்ணையில் வளர்த்தால், பயங்கர நஷ்டம்!இ. கார்த்திகேயன் படங்கள்: ரா. ராம்குமார்

தமிழக அரசின் நாட்டுக் கோழி திட்டம்...

பண்ணையில் வளர்த்தால், பயங்கர நஷ்டம்!இ. கார்த்திகேயன் படங்கள்: ரா. ராம்குமார்

Published:Updated:

பிரச்னை

பலவிதமான பிரச்னைகளும் விவசாயத்தை வாட்டி எடுக்கும் சூழலில்... அதற்கு மாற்றாக ஆடு, மாடு, கோழி என கால்நடைகளை வளர்க்க ஆரம்பிக்கிறார்கள், விவசாயிகள். இவற்றில் நாட்டுக் கோழிக்கு நல்ல தேவை இருப்பதால், பலரும் இதில்தான் கவனம் செலுத்துகிறார்கள். பிராய்லர் கோழிக்கறியை உண்பதால், ஏற்படும் பின்விளைவுகள் பற்றி ஏற்பட்டுவரும் விழிப்பு உணர்வு காரணமாக, பலரும் நாட்டுக் கோழிக்கறியைத்தான் நாடு கிறார்கள். இதனால், நாட்டுக் கோழி வளர்ப்புக்காக, மானியத்துடன் கூடிய நாட்டுக் கோழிப் பண்ணைத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது தமிழக அரசு. ஆனால், 'அரசின் இந்தத் திட்டத்தால் எதிர்பார்த்த பலன் இல்லை’ என்று விரக்தியுடன் பேச ஆரம்பித்துள்ளனர் கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகள்

பாம்பன்விளையைச் சேர்ந்த இயற்கை விவசாயி விசாககுமார், நம்மைத் தொடர்புகொண்டு அழைக்க, அவருடைய தோட்டம் தேடிச் சென்றோம். ''தமிழக அரசோட நாட்டுக் கோழிப் பண்ணைத் திட்டத்தின் கீழ், 5 மாசமா கோழி வளர்த்துட்டிருக்கேன். முதல் விற்பனையிலேயே பெருத்த நஷ்டம். இதுமாதிரி மத்தவங்களும் பாதிக்கப்படக்கூடாதுனுதான் பசுமை விகடனைக் கூப்பிட்டேன்'' என்று முன்னுரை கொடுத்தவர், தொடர்ந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தமிழக அரசின் நாட்டுக் கோழி திட்டம்...

''தமிழக அரசோட நாட்டுக் கோழி வளர்ப்புத் திட்டத்தின் கீழ, 250 கோழிகள் வரைக்கும் வளர்க்கிறதுக்காக வங்கியில கடன் கொடுக்கிறாங்க. இதை ஒவ்வொரு கட்டமா கொடுப்பாங்க. சம்பந்தபட்ட பகுதி கால்நடை மருத்துவர்கிட்ட மனுகொடுத்து, அவரோட ஆலோசனைப்படி கோழிப் பண்ணைக்கான கொட்டகையை அமைக்கணும். அவர் பார்வையிட்டதுக்கு அப்புறம், கால்நடைத்துறை அங்கீகாரம் பெற்ற குஞ்சு விற்பனையாளர்கள் மூலமா குஞ்சுகள், 3 தண்ணீர்த் தட்டுகள், 3 தீவனத்தட்டுகள், புரூடர் அட்டைகள், ஒரு மூட்டை குஞ்சுத் தீவனம், ஒரு மாசத்துக்கான மருந்து எல்லாம் கொடுப்பாங்க. குஞ்சுகளுக்கான பணத்தை (கிட்டத்தட்ட 12 ஆயிரம் ரூபாய்) நாம கொடுக்கணும். அதுக்கப்பறம், குஞ்சு களோட நின்னு போட்டோ எடுத்து கால்நடை மருத்துவர்கிட்ட கொடுத்தா, சம்பந்தப்பட்ட வங்கிக்குப் பரிந்துரை செய்வார். அதுக்கப்பறம்தான் அடுத்தக்கட்டமா வங்கியிலிருந்து பணம் கிடைக்கும். பிறகு, தமிழ்நாடு அரசாங்கத்தின் சார்புல 25 சதவிகித மானியத் தொகையை (29 ஆயிரத்து 250 ரூபாய்), நேரடியா வங்கியில செலுத்திடுவாங்க. மீதித்தொகைக்கு மட்டும் நாம வட்டி கட்டினா போதும். 3 வருஷத்துக்குள்ள இந்தக் கடனை அடைக்கணும். கட்டி முடிக்கிற நேரத்துல நபார்டு வங்கியோட 25 சதவிகித மானியம் கிடைக்கும். ஆரம்பத்துலேயே இந்த மானியம் கிடைச்சா, வட்டி ஓரளவுக்குக் குறையும்'' என்ற கோரிக்கை ஒன்றையும் இடையில் செருகிய விசாககுமார், தொடர்ந்தார்.

''குஞ்சு இறக்கின பிறகு, மருத்துவர் சொல்ற மாதிரி தீவனம், மருந்துகள் கொடுத்துப் பராமரிக்கணும். குறிப்பா, குஞ்சுகளுக்கு அலகுகளை வெட்டிவிடச் சொல்றாங்க. அதை செய்யாட்டி கோழிகள் ஒண்ணுக்கொண்ணு சண்டை போட்டு காயப்பட்டு இறக்க வாய்ப்பிருக்குனு காரணம் சொல்றாங்க. இப்படி மருத்துவர் சொல்றபடியெல்லாம் பராமரிச்சு, கம்பெனி தீவனங்கள கொடுத்து வளர்த்தா... 100 முதல் 110 நாள்ல ஒரு கோழி, ஒண்ணரை கிலோ வரை உயிர் எடைக்கு வருது. இந்தச் சமயத்துல கோழிகளை வித்துடணும்னு அறிவுறுத்தறாங்க. ஆனா, 'தோட்டத்துல உலாவற நாட்டுக் கோழிகள் மாதிரி வளர்க்காம, கொட்டகைப் போட்டு பண்ணையில வளர்க்கிற இந்தக் கோழியில, நாட்டுக் கோழிக்கான சுவையே இல்லை. அதனால பண்ணைக் கோழி வேணவே வேணாம்’னு கடைக்காரங்க வாங்க மாட்டேங்குறாங்க. சில வியாபாரிகள் இதை வாங்கினாலும், ஒரு கிலோ உயிர் எடைக்கு 80 ரூபாய்தான் கொடுக்குறாங்க. அதிகபட்சமா 100 ரூபாய் கிடைக்குது. ஆனா, நுகர்வோரை எப்படியாவது ஏமாத்தி, தோட்டத்துல வளர்க்கிற நாட்டுக் கோழிக்கு கிடைக்கிற 250 ரூபாய்க்கு வித்து, பணம் பார்த்துடறாங்க வியாபாரிங்க.

தமிழக அரசின் நாட்டுக் கோழி திட்டம்...

நாட்டுக் கோழிகள தோட்டத்துல உலாவ விட்டு வளர்த்தா... ஆறு மாசத்துலதான் ஒண்ணரை கிலோ எடை வரும். சரி, இந்த முறையில வளர்த்து வித்துடலாம்னு தோட்டத்துல உலாவவிட்டு ஆறு மாசம் கழிச்சி வித்தாலும், அலகு வெட்டுனதை வெச்சே... பண்ணையில வளர்த்ததை வியாபாரிங்க கண்டுபிடிச்சுடறாங்க. அலகு வெட்டாம இருந்தா... பேங்க்ல மேற்கொண்டு லோன் தரமாட்டாங்க. மொத்தத்துல நாட்டுக் கோழிகளை, பண்ணையில வளர்க்கச் சொல்ற இந்தத் திட்டத்தால, எங்க உழைப்புதான் வீணாயிட்டிருக்கு. எங்களுக்கு நஷ்டம்... வியாபாரிங்களுக்கு லாபம். இந்தத் திட்டம், வீணான திட்டமே. இதுக்கு பதிலா, வீட்டுக்கு 10 கோழிகளைக் கொடுத்து வளர்க்கச் சொன்னாலே, கிராமப்புறப் பொருளாதாரத்தை உயர்த்திடலாம்'' என்று விளக்கமாகச் சொன்னார் விசாககுமார்.

கிட்டத்தட்ட இதே அனுபவம்தான், மேலசங்கரன்குழி பஞ்சாயத்துத் தலைவர் புனிதாபாலனுக்கும். ''பண்ணையில வளர்க்கிற நாட்டுக் கோழியை சும்மா கொடுத்தாகூட யாரும் வாங்குறதில்லை. ஒரு குஞ்சு 37 ரூபாய்னு 250 குஞ்சுகள் வாங்கினேன். இதுல 50 குஞ்சுகள் முதல் வாரத்துலயே செத்துப் போச்சு, 3 மாசம் தீவனம் போட்டி ருக்கேன். எனக்கு இப்போதைக்கு ஐம்பதாயிரம் ரூபாய் நட்டம். உயிர் எடைக்கு கிலோ 90 ரூபாய்க்குகூட வாங்கமாட்டேங்குறாங்க. இந்தத் திட்டத்துல 3 பேட்ச் வளர்க்கணும். ஒரு பேட்ச் வளர்த்ததுக்கே ஐம்பதாயிரம் நட்டம். இன்னும் வளர்த்தா தலையில துண்டுதான். எப்படி கடனை அடைக்கிறதுனு தெரியல. அரசாங்கமா பார்த்து ஏதாவது உதவிப் பண்ணணும்’' என்று வேண்டுகோள் வைத்தார்.

தமிழக அரசின் நாட்டுக் கோழி திட்டம்...

இதைப் பற்றி மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை இணைஇயக்குநர் உமாமகேசுவரியிடம் கேட்டபோது, ''இந்த மாவட்டத்தில், இத்திட்டத்தின் கீழ் 211 யூனிட்டில் பயனாளிகள் வளர்த்து வருகிறார்கள். இன்னும் 29 நபர்களுக்கு வழங்க இருக்கிறோம். பல்கலைக்கழகத்தின் அறிவுறுத்தலின்படி தீவனத்தை முறையாகக் கொடுத்தால்

90 நாட்களிலேயே முழுக் கோழியாகிவிடும். 'மார்க்கெட்டில் பண்ணைக் கோழியின் விற்பனை விலை குறைவாக இருக்கிறது’ என்பது பற்றி இதுவரை யாரும் எங்களிடம் சொல்லவில்லை. இதைப் பற்றி முறையாக மனு கொடுத்தால், அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்வதோடு... 2014-15 ஆண்டுக்கான இத்திட்டத்தில் இதுபோன்ற பிரச்னைகள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று சொன்னார்.  

''மத்திய அரசுதான் முடிவெடுக்க வேண்டும்!''

நபார்டு வங்கியின் மானியம் பற்றி, கன்னியாகுமரி மாவட்ட நபார்டு வங்கி மேலாளர் மார்ட்டினிடம் பேசியபோது, ''ஆரம்பத்திலேயே மானியத்தைக் கொடுப் பதைத்தான் வழக்கமாக வைத்திருந்தோம். ஆனால், பல விவசாயிகள் திட்டத்தை முழுமையாகத் தொடர்வதில்லை. கடனையும் கட்டுவதில்லை. அதனால்தான், மானியத்தை இறுதியில் வழங்கும் திட்டத்தை, ஏற்கெனவே இருந்த மத்திய அரசு கொண்டு வந்தது. இதை மாற்ற வேண்டும் என்றால், மத்திய அரசுதான் முடிவெடுக்க வேண்டும்'' என்று சொன்னார்.

கம்பெனி தீவனத்தைக் கொடுக்காதீர்!

'நாட்டுக் கோழிக் குஞ்சுகளுக்கு, கம்பெனி தீவனம் கொடுப்பது சரியா?’ என, கன்னியா குமரி மாவட்டம் பறக்கையிலுள்ள தமிழ்நாடு கால்நடைப் பல்கலைக்கழக ஆராய்ச்சி மையத்தின் தலைவர் டாக்டர். நிஷாந்திடம் கேட்டோம். ''நாட்டுக் கோழிக் குஞ்சுகளுக்கென்று தனித்தீவனம் உள்ளது. அதைத்தான் கொடுக்கச் சொல்கிறோம். ஆனால், நாட்டுக் கோழி தீவனம் அதிகமாகக் கிடைப்பதில்லை. கிடைக்காத பட்சத்தில் மார்க்கெட்டில் பரவலாகக் கிடைக்கும் பிராய்லர் கோழிதீவனத்தைத் தான் பெரும்பாலானோர் வாங்கி குஞ்சுகளுக்குக் கொடுக்கிறார்கள்.

தற்போது பெரும்பாலான நாட்டுக் கோழிக் குஞ்சுகள் கலப்பினமாகத்தான் இருக்கின்றன. பிராய்லர் தீவனம் கொடுப்பதை மட்டும் வைத்து 'நாட்டுக் கோழிக்கான ருசி இல்லை. பிராய்லர் கோழி போன்று உள்ளது’ என்று கூறிவிட முடியாது. கலப்பினக் குஞ்சுகளாக இருந்தாலும், வளர்ச்சி இருக்கும். ஆனால், எடை மற்றும் நாட்டுக் கோழிக்கான ருசி இருக்காது. பெரும்பாலும் கடையில் தீவனத்தை வாங்குவதைத் தவிர்த்து, கம்பு, சோளம், பிண்ணாக்கு ஆகியவற்றைக் கலந்து கொடுத்தாலே நாட்டுக் கோழிகள் நன்கு வளரும்'' என்று சொன்னார்.

'நல்லா கேக்குறாங்கய்யா... டீடெயிலு!’

கோழி வளர்ப்புத் திட்டத்தில் இவ்வளவு குளறுபடிகள் இருந்தபோதும், கால்நடை பராமரிப்புத்துறையின் கன்னியாகுமரி மாவட்ட இணைஇயக்குநர் உமாமகேஸ்வரி, ''இந்தத் திட்டத்தால், விவசாயிகள் சுபிட்சமாக இருக் கிறார்கள்’' என்றே திரும்பத் திரும்ப நம்மிடம் சொன்னார்.

''அப்படி என்றால், இந்தத் திட்டத்தால் பயன்பெற்றிருக்கும் இரண்டு விவசாயிகளின் முகவரிகளைக் கொடுங்கள். அவர்களிடம் பேசி, அவர்களுடைய கருத்துக்களையும் எழுதுகிறோம்'' என்று கேட்டோம்.

உடனே, ''மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் என்னைத் தொடர்பு கொண்டு, 'விவசாயிகளின் முகவரியைக் கொடுக்கலாம்' என்று கூறினால் மட்டுமே நான் கொடுக்க முடியும்'' என்று கொஞ்சம் கடுகடுப்பாகவே கூறினார்.

நான், மக்கள் தொடர்பு அலுவலர் அண்ணாவைத் தொடர்பு கொண்டு விஷயத்தைச் சொன்னதும், ''நான், இணை இயக்குநரிடம் கேட்கமுடியாது. இயக்குநர் மேடம், என்னைத் தொடர்பு கொண்டு, 'பசுமை விகடன் இதழிலிருந்து கோழி வளர்ப்புத் திட்ட விவசாயிகளின் முகவரியைக் கேட்கிறார்கள். அதைக் கொடுக்கலாமா?' என்று கேட்டால், மட்டுமே, 'கொடுங்கள்' என்று சொல்ல முடியும்'' என்று சொன்னார்.

இந்தத் தகவலை இணை இயக்குநர் உமாமகேஸ்வரியிடம் தெரிவிப்பதற்காக பலமுறை தொடர்பு கொண்டபோதும், நமது செல்போன் அழைப்பை கடைசி வரை அவர் ஏற்கவில்லை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism