Published:Updated:

மண்புழு மன்னாரு

தேனீக்களுக்குப் பிடிக்காத வாசனை! ஓவியம்: ஹரன்

மண்புழு மன்னாரு

தேனீக்களுக்குப் பிடிக்காத வாசனை! ஓவியம்: ஹரன்

Published:Updated:

மாத்தி யோசி

 தேனீ வளர்த்தா, விவசாயத்துல 30% விளைச்சல் அதிகரிக்குதுனு நிரூபிச்சுட்டாங்க. இதனால, தேனீப் பெட்டியைத் தோட்டத்துல வெச்சு வளர்க்கிறவங்களோட எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்குது. அதேநேரம், தேனீ வளர்க்கறதுக்குத் தேவையான விஷயங்களைச் சரிவர கடைபிடிக்காம நஷ்டப்படறவங் களோட எண்ணிக்கையும் அதிகரிக்குது.

ஒரு உண்மைச் சம்பவத்தைச் சொல்றேன்... இதுல இருந்தே நீங்க புரிஞ்சுக்கலாம். காஞ்சிபுரம் பக்கத்துல இருக்கிற கிராமத்த சேர்ந்த அந்த விவசாயி, தேனீப் பெட்டியை வாங்கி வெச்ச ஒரு வாரத்துல... வெறும் பெட்டி மட்டும்தான் இருந்திருக்கு. தேனீக்கள் போன இடம் தெரியல. என்ன காரணம்னு புரியாம முழிச்சிருக்காரு. அப்புறம் விசாரிச்சு பார்த்த பிறகுதான் விஷயமே அவருக்கு விளங்கியிருக்கு. அதாவது, அவங்க வீட்டம்மாவுக்கு மல்லிகைப்பூ சென்ட் மேல கொள்ளைப் பிரியம்கிறதால, தினமும் அதை அடிச்சுக்கிட்டுத்தான் தோட்டத்துக்கு வருவாங்களாம். அய்யாவுக்கு டாஸ்மாக் சகவாசம் உண்டுங்கிறதால, அதை குடிச்சுட்டுத்தான் அவரும் தோட்டத்துக்கு வருவாராம். கூடவே, ரயில் இன்ஜின் கணக்கா குபுகுபுனு சிகரெட் புகையையும் விடுவாராம். ரெண்டு பேரும் இப்படியே தினமும் தேனீப் பெட்டியை சுத்தி வந்திருக்காங்க. ஆனா, இந்த வாசனையையெல்லாம் துளியும் ரசிக்காத தேனீங்க... தூர தேசத்துக்குப் பறந்துடுச்சுங்க. 'தேனீக்களுக்கு... சென்ட், புகை, மது இதுமாதிரியான வாசனை, துளியும் பிடிக்காது'ங்கிறத மனசுல ஏத்திக்கோங்க.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'வெளிநாட்டுல மூட்டுவலி, முதுகுவலியை யெல்லாம் விரட்டியடிக்கிறதுக்கு தேனீக்களைக் கொட்ட வைக்கிற வைத்தியம் பிரபலமா இருக்கு. இந்த வைத்தியத்தால, இன்னும் பல வலிகளும் பறந்து போயிடுதாம். இங்கேயும் இந்த வைத்தியத்த பத்தி பேச்சு அடிபடுது. இதை நம்பி தேனீக் கூட்டுல கை வெச்சா... உயிருக்கு உத்தரவாதம் இல்ல. அதுவும், பித்தம் அதிகமா இருக்குற ஆட்களை, தேனீங்க கொட்டுனா... அதிகமான பித்தம் உடம்புக்குள்ள பரவி, மூச்சு முட்டி மயக்கமாயிடுவாங்க. தேனீக்களோட கொடுக்குல பித்தத்தை அதிகமாக்குற பொருள் இருக்கிறதுதான் காரணம். தேனா இருந்தாலும், மருந்தா இருந்தாலும் அளவுக்கு மீறினா நஞ்சுதான். அதனால, விளையாட்டுத்தனமா தேனீ விஷயத்துல இறங்கிட வேணாம்.

மண்புழு மன்னாரு

'பாய் போட்டு படுத்தா... நோய் விட்டு போகும்’ங்குறது உண்மை. இதுமாதிரியான விஷயங்களை தாடி வெச்ச சாமியாருங்க யாராச்சும் சொன்னா, கையைக் கட்டிக்கிட்டு வரிசையில நின்னு ஆயிரக்கணக்குல தட்சணை கொடுத்துட்டு வர்றவங்க நிறையபேரு. ஆனா, நம்ம முன்னோருங்க சூழ்நிலைக்கு தக்கப்படி விதம்விதமான பாய்களைப் பயன்படுத்தியிருக்குற விஷயத்தை மறந்துட்டோம். நாள் முழுக்க கம்ப்யூட்டர் முன்ன உட்கார்ந்து வேலை செய்யறவங்களோட உடம்பு, அனல் மாதிரி கொதிக்கும். கவனச்சிதறல் உண்டாகும். வேலை செய்யறதுல சலிப்பும் வரும். இந்த அனல் உடம்புக்காரங்க கோரைப் பாயில படுத்தா... உடல் சூடு குறைஞ்சு குளிர்ச்சி உண்டாகும்.  'என்னமோ, போங்க’னு சோம்பலா சொல்லிக்கிட்டிருக்கிறவங்க, ஈச்சம் பாயில படுத்தா சுறுசுறுப்பாயிடுவாங்க. அதேசமயம், ஈச்சம் பாயில தொடர்ந்து படுத்தா, உடம்பு சூடு அதிகமாயிடும்ங்கிறதை மறக்க வேணாம். தாழம் பாயில படுக்கும்போது, தலைவலி, பித்தம் நீங்கும். எந்த வகையான பாயில படுத்தாலும், உங்களுக்கு முதுகு வலி வராது. முதுகுவலியில அவதிப்படுறவங்கள பார்த்தா, 'முதல்ல தரையில பாய் போட்டு படுங்க, வலி விட்டு போகும்’னுதான் மருத்துவர்களும் பரிந்துரை செய்யறாங்க.

'ஆமை புகுந்த வீடு உருப்படாது?’னு போற போக்குல யாராவது சொல்றதை காதுல வாங்கிட்டு, மிருகக் காட்சி சாலையில ஆமையைப் பார்த்தாகூட... கண்ணை மூடிக்கிற ஆளுங்க இப்பவும் இருக்காங்க. உண்மையில ஆமை நல்ல பிராணிங்க. பூமியில இப்போ நடக்குற இவ்வளவு சுற்றுச்சூழல், சீர்கேடுகளுக்கு நடுவுலயும் 150 வயது வரையிலும் சுகமா வாழத் தெரிஞ்ச ஜீவன் அது. அந்த அற்புத உயிரினத்தைப் பார்த்து, 65 வயசு வரைக்கும்கூட நோய், நொடியில்லாம வாழத் தெரியாத இந்த மனுஷன்... 'ஆமையைப் பார்த்தா அதிர்ஷ்டம் இல்லை’னு சொல்றதை என்னன்னு சொல்றது? ஆமையோட அதிகபட்ச வேகம், நிமிஷத்துக்கு, 14 அடி தூரம். இந்த வேகத்துல வர்ற ஒரு ஆமை... வீட்டோட சுற்றுச்சுவர், முகவாயில், திண்ணை, படிக்கட்டுனு ஏறி, அதுக்குப் பிறகு வீட்டுக்குள்ள நுழைய எவ்வளவு நேரம் ஆகும்? இதைச் சொன்னதுமே கணக்குப் போட ஆரம்பிச்சிடாதீங்க.

ஒரு ஆமை வீட்டுக்குள்ள நுழையற வரைக்கும் அதைக் கண்டுக்காம இருந்தா... அந்த வீட்டுல இருக்கிறவங்க படுசோம்பேறினு தானே அர்த்தம். அந்த வீடும், வீட்டுல உள்ளவங்களும் எப்படி முன்னேறுவாங்க? இதைச் சுட்டிக்காட்டத்தான், 'ஆமை புகுந்த வீடு உருப்படாது’னு உதாரணமா சொல்லி வெச்சுருக் காங்க நம்ம முன்னோருங்க.

இனியாவது, ஆமையைப் பார்த்தா உற்சாகமாகுங்க!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism