Published:Updated:

'இலந்தையைக் காப்பாற்றுங்கள்...'

பசுமைப் போராளியின் கோரிக்கை ஜி. பழனிச்சாமி படங்கள்: ரமேஷ் கந்தசாமி

'இலந்தையைக் காப்பாற்றுங்கள்...'

பசுமைப் போராளியின் கோரிக்கை ஜி. பழனிச்சாமி படங்கள்: ரமேஷ் கந்தசாமி

Published:Updated:

 இயற்கை

''இயற்கை வேளாண்மைங்கிறது... நாமளா விரும்பி மேற்கொள்ளுற ஒரு முறை. இதில் ஆதாயத்தைவிட, ஆத்ம திருப்தி போதும்னு நினைக்கிறவங்கதான் தொடர்ந்து, இதுலயே தீவிரமா இயங்கிக்கிட்டு இருக்காங்க. இந்த வகையில, இயற்கை இடுபொருட்களைப் பயன்படுத்தி, நஞ்சில்லா உணவு உற்பத்தி செய்து, இயற்கை விவசாயத்தை மேற்கொண்டிருக்கிறவங்க ஒரு ரகம். மரம், செடி, கொடினு வளர்த்து, இயற்கை நேசர்களா திகழ்றவங்க இன்னொரு ரகம்''

-தத்துவார்த்துவமாக வார்த்தைகளை அடுக்குகிறார், ஐம்பது வயதைக் கடந்து பயணித்துக் கொண்டிருக்கும் பட்டதாரி விவசாயி இரா. நாகராஜ். இவர், 'தற்போது வெகுவாக அருகி வரும், இலந்தை மரங்களை மீட்டெடுக்க வேண்டும்' என்று குரல் கொடுப்பதோடு, தன்னுடைய தோட்டத்தில் சுமார் 100 இலந்தை மரங்களைப் பராமரித்தும் வருகிறார். திருப்பூர் மாவட்டம், குன்னத்தூர் அடுத்துள்ள தொரவலூர் கிராமத்தைச் சேர்ந்த இவர், ஒரு விவசாயப் போராளியும் கூட! கடந்த 30 ஆண்டுகளாக விவசாயிகளின் உரிமைகளுக்காக பல்வேறு போராட்டங்களை முன்னின்று நடத்திவருபவர். ''இப்போது, என்னை இயற்கைப் போராளியாகவும் மாற்றிவிட்டது பசுமை விகடன்'' என்றபடி பச்சை மனிதராக நடைபோடும் நாகராஜை, குளுகுளுவென்றிருக்கும் அவருடைய தோட்டத்தில் சந்தித்தோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'இலந்தையைக் காப்பாற்றுங்கள்...'

தோட்டத்து மரங்களில் இருந்து பலவகை கனிகளையும் பறித்துக் கொடுத்து உபசரித்தபடி, உற்சாகமாகப் பேசியவர், ''இந்த இடத்துல எனக்கு 6 ஏக்கர் நிலம் இருக்கு. கிணத்துப் பாசனம்தான். இது, தென்னை, வாழை, மஞ்சள், கத்திரி, மிளகாய்னு செழிப்பான விவசாயம் நடந்த பூமி. பருவம் தப்பாது மழைபெஞ்சு, தண்ணீர் வத்தாம கிணத்துல ததும்பி நின்ன காலமும் இருந்துச்சு. இப்ப கதையே வேற. பல வருஷமா சரியான பருவ மழை கிடைக்கல. பாசனக் கிணறுகள் எல்லாம் வத்திப்போச்சு. கடுமையான வறட்சி. தென்னைமரங்கள்கூட பட்டுப்போச்சு. திருப்பூர் பக்கமா இருக்கிறதால, விவசாயிகள் பலரும் 'ரியல் எஸ்டேட்’காரங்களுக்கு நல்ல விலைக்கு பூமிய வித்துட்டு, ஈரோடு, திருப்பூர்னு டவுன் பக்கம் போயிட்டாங்க. எனக்கு இதுல உடன்பாடு இல்ல.

தினசரி வருமானம் கொடுத்த காய்கறிகள் இல்லை; ஆண்டு வருமானம் கொடுத்த மஞ்சளும் போச்சு; நிரந்தர வருமானம் தந்துட்டிருந்த தென்னையும் காய்ஞ்சு போச்சு. இந்த நிலையிலயும் என்னோட மண்ணை விட்டுப்போகாம என்னைக் காப்பாத்திட்டிருக்கிறது இந்த மரங்கள்தான். இந்த வறட்சியிலும் பசுஞ்சோலையா இருக்கிறது என்னோட தோட்டம் மட்டும்தான். இறைவன் கை விட்டாலும், இயற்கை நம்மை கைவிடாது. மன்னன் கை விட்டாலும், மரங்கள் கை விடாது'' என்று சிரித்தபடி சொன்ன நாகராஜ், தோட்டத்தில் வளரும் மரங்கள், செடிகளைப் பட்டியலிட்டபடி தொடர்ந்தார்.

''கருவேல், வெல்வேல், பீயன், புளியன், கொடுக்காய்புளி, பூவரசன், வேம்பு, சந்தனம், மலைவேம்பு, உள்பட பதினைந்துக்கும் மேற்பட்ட மரங்களுடன் இலந்தை, மா, கொய்யா, சீதா, ஆரஞ்சு, எலுமிச்சை, கொலுமிச்சை (சற்று பெரிதான எலுமிச்சை ரகம்), நாவல் உள்ளிட்ட பழ மரங்களையும், முல்லை, மல்லிகை, சாமந்தி, ரோஜா, செம்பருத்தி உள்ளிட்ட பூச்செடிகளை யும் வளர்க்கிறேன். என் ஜீவனத்துக்காக மூணு எருமை மாடுகள் வெச்சு, பால் உற்பத்தி செய்யுறேன். இதுல கிடைக்கிற சாணம் மூத்திரத்தைப் பயன்படுத்தி இயற்கை இடுபொருட்கள் தயாரிச்சு மரம், செடிகளுக்குக் கொடுக்கிறேன். முக்கியமா, ஜீரோ பட்ஜெட் முறை தொழில்நுட்பத்தின்படி கனஜீவாமிர்தம் தயாரிச்சு தொடர்ந்து நிலத்துக் குக் கொடுக்கிறேன். அதனாலதான், என் தோட்டத்துப் பழங்கள் ருசி மாறாமலும், பளபளனும் இருக்கு'' என்று சொல்லும் நாகராஜ், தற்போது கிட்டத்தட்ட அருகிக் கொண்டிருக்கும் இலந்தை மரங்களை வளர்த்தெடுப்பதை முக்கியப் பணியாகச் செய்து கொண்டிருக்கிறார். இரண்டு ஏக்கரில் நூற்றுக்கும் மேற்பட்ட இலந்தை மரங்களைப் பராமரித்து வருகிறார்.

'இலந்தையைக் காப்பாற்றுங்கள்...'

''இலந்தைனு சொன்னதுமே எல்லாருக்கும் சின்னவயசு ஞாபகம் வந்து அலைமோத ஆரம்பிச்சுடும். பள்ளிக்கூடத்து வாசல்ல கூறுகட்டி வித்துட்டிருப்பாங்க. 5 காசு, 10 காசுனு கொடுத்து, இலந்தைப் பழத்தை வாங்கி ருசிச்சது... இப்ப நினைச்சாலும் சப்புக் கொட்டுற விஷயம்தான். இலந்தைப் பழத்துக்கு அபூர்வ மருத்துவ சக்திங்க உண்டு. குறிப்பா, இதை சாப்பிட்டா சுறுசுறுப்பு கூடுத லாகும். எவ்வளவு பெரிய சோம்பேறியா இருந்தாலும்கூட, புத்துணர்வு கிடைக்கும். இந்தப் பழங்களை வளரும் குழந்தைங்க சாப்பிட்டா, நாள் முழுக்க சுறுசுறுப்பு கிடைக்கிறதோட, வயிறு சம்பந்தமான உபாதைகளும் நீங்கும். இலந்த வடை, ஊறுகாய், மிட்டாய்னு தயாரிச்சு கடைகள்ல விற்பனை பண்றதுக்கு இதுதான் காரணம். இலந்தைப் பழத்துக்கு எப்பவுமே நல்ல கிராக்கி இருக்கு. ஆனா, இப்பல்லாம் காடுகள்லயே இந்த மரங்கள அவ்வளவா பார்க்க முடியல.

என்னோட தோட்டத்துல இருக்கிற இலந்தைச் செடிகள் சுயம்பா வளர்ந்ததுதான். வருஷம்தோறும் தை மாசம் எல்லா செடியிலயும் இலந்தைப் பழங்கள் கனிஞ்சு, சரம்சரமா தொங்கும். கனிஞ்ச பழங்கள் கீழ விழுந்து கிடக்கும். அதை பலரும் பொறுக்கிக் கிட்டுப் போவாங்க. என் தோட்டத்துல விளையுற பழங்களை, அக்கம்பக்கத்து பள்ளிக்கூட குழந்தைகளுக்குக் கொடுத்துடுவேன். அவுங்களாவும் வந்து பொறுக்கிட்டுப் போயிடுவாங்க.

'இலந்தையைக் காப்பாற்றுங்கள்...'

இலந்தை முள், வேலிக்கு அருமையானதொரு பொருள். ஆடு, மாடுகள் பயிர்களை மேய்ஞ்சிடக் கூடாதுனு விவசாயிங்க பலரும் நிலத்தைச் சுத்தி இறுக்கமா வேலி அடைப்பாங்க. இதுக்கு முக்கியமா பயன்படுத்துறது இலந்தை முள் தாம்புகளைத்தான். 'கொக்கி’ மாதிரியான வடிவத்துல இருக்கிற இந்த முள், உடம்புல ஏறிட்டா, சுலபத்துல எடுக்க முடியாது. நங்கூரம் போல சதையில குத்திக்கும். பதமா எடுக்காட்டி, சதை கிழிஞ்சுடும். இப்படிப்பட்ட முள் இருக்கிறதாலதான், வருஷம் ஒருதரம் நிலத்தை சுத்தி, இலந்தைமுள் பயன்படுத்தி வேலி அடைப்பாங்க. மேய்ச்சல் நிலத்தை சுத்தியும்கூட இது இருக்கும். வெள்ளாமைக் காட்டை அழிக்க, வெளியிலிருந்து ஒரு எலிகூட உள்ள நுழைய முடியாது. மேய்ச்சல் காட்டைவிட்டு ஒரு ஆட்டுக்குட்டிகூட தப்பிப் போகமுடியாது.

வருஷத்துக்கு ஒருதடவை இலந்தை மரக்கிளைகளை வெட்டி கவாத்து செய்து, அந்த முள்ளுங்கள வெச்சுதான் தோட்டத் துக்கு வேலி போடுறோம். இப்படி கவாத்து செய்றதால, மரங்களும் அதிக உயரத்துக்கு வளராம இருக்கும். பழம் பறிக்கிறதும் சுலபம். வனத்தை ஒட்டிய பகுதியா இருந்தா... மூணடுக்கு முறையில, அதாவது 'ஜிக்ஜாக்’ முறையில் இலந்தை நாற்றுகளை நடுவு செய்துடலாம். வனப்பகுதிகள்ல போதிய மழை கிடைக்கிறதால மூணு வருஷத்துல தளதளனு வளர்ந்துடும்'' என்ற நாகராஜ்,

''காட்டையொட்டி இருக்கிற தோட்டங்கள்ல இந்த முள்வேலியைப் போட்டா... யானைங்க உள்ள வராமல் தடுக்க முடியும்கிறது என்னோட யோசனை. யானைங்க உள்ள நுழைஞ்சா... தும்பிக்கையில் முள்கொக்கி பாய்ஞ்சு காயப்படுத்தி, விரட்டி அடிச்சுடும். இதை விவசாயிகளும் வனத்துறையும் முயற்சி செஞ்சு பார்க்கலாம். மொத்தத்துல இலந்தை மரங்கள் அழியும் தருவாயில இருக்குது. இதுங்கள காப்பாத்த, வனத்துறை நட வடிக்கை எடுக்கணும்கிறதுதான் என் விருப் பம்'' என்று வேண்டுகோளாகச் சொன்னார்.

இலந்தைக் கன்றுகள்!

இலந்தையைப் பொறுத்தவரை தண்ணீர் பாசனம் செய்து வந்தால் ஆனி, ஆடி மாதங்களில் ஒரு முறையும், மார்கழியில் ஒரு முறையும் மகசூல் கிடைக்கும். இல்லையென்றால், தை மாதத்தில் மட்டும் மகசூல் கிடைக்கும். கிடைக்கும் பழங்களை எடுத்துச் சென்று, நேரடியாக முளைக்க வைக்கலாம். 10 அடிக்கு ஒரு விதை வீதம் நடவு செய்யலாம். விதை முளைத்து செடியாக வளர்வதற்கு 5 ஆண்டுகள் பிடிக்கும். பாலிதீன் கவர்களில் விதைகளை முளைக்கச் செய்து தண்ணீர்விட்டுப் பராமரித்து,

90 நாட்கள் நாற்றாகவும் நடவு செய்யலாம். இப்படிச் செய்யும்போது, மூன்று ஆண்டுகளில் பலன் கிடைக்கும். செடியாக இருக்கும்போது, செடிக்கு 15 முதல் 20 கிலோ பழங்கள் வரை ஆண்டு மகசூலாக கிடைக்கும். அதன் பிறகு, படிப்படியாக அதிகரிக்கும். இன்றைய தேதியில் இலந்தைப் பழம் கிலோ

60 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இந்த மரத்தைக் கொண்டு உலக்கை, மத்து, நுகம் போன்ற மரச்சாமான்களைச் செய்யலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism