Published:Updated:

வயல்வெளிப் பள்ளி

நெற்பயிரைத் தாக்கும் நோய்கள்... விரட்டியடிக்கும் வழிகள் !காசி. வேம்பையன்

வயல்வெளிப் பள்ளி

நெற்பயிரைத் தாக்கும் நோய்கள்... விரட்டியடிக்கும் வழிகள் !காசி. வேம்பையன்

Published:Updated:

கேள்விகளும்... பதில்களும்!

நெற்பயிரைத் தாக்கும் நோய்கள் அவற்றுக்கான தடுப்பு முறைகளைப் பற்றி விளக்குகிறார், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகப் பதிவாளரும், நோயியல் துறைப் பேராசிரியருமான முனைவர் ரபீந்திரன்.  

'நெல்லில் என்னவிதமான நோய்கள் தாக்குகின்றன?'

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''பெரும்பாலும் குலைநோய், இலையுரை அழுகல் மற்றும் கருகல் நோய், பாக்டீரியா இலைகருகல் நோய், நெற்பழ நோய், தானிய நிறமாற்ற நோய் ஆகிய நோய்கள் நெற்பயிரைத் தாக்குகின்றன. ஒவ்வொரு நோயைப் பற்றியும் அவற்றுக்கான தடுப்பு முறைகளையும் பார்ப்போம்.

குலைநோய்: பயிரில் உள்ள இலைகள், தண்டு, கணுப்பகுதி, கழுத்துப்பகுதி, கதிர் என அனைத்துப் பகுதிகளிலும் பூஞ்சணம் தாக்கி... இலைகளில் சாம்பல் மற்றும்   வெண்மை நிறப்புள்ளிகள் இருக்கும். காய்ந்த ஓரங்களுடன் கூடிய கண் வடிவப் புள்ளிகளும் காணப்படும். நோய் தீவிரமாக இருந்தால், பயிர் முழுவதும் எரிந்தது போல தோற்றமளிக்கும். கதிர்பருவ நிலைக்கு முன்பே கழுத்துப் பகுதியில் நோய் தாக்கினால் தானியங்கள் உருவாகாது. ஆனால், கதிர் பருவத்துக்கு பிறகு தாக்குதல் ஏற்பட்டால், தானியம் உருவானாலும், தரமிருக்காது. நடவு செய்த 40 நாட்கள் முதல் 50 நாட்களில் குலைநோய் அதிகமாகத் தாக்கும். இந்த நேரங்களில் நிலத்தில் நல்ல காற்றோட்டத்தை ஏற்படுத்த வேண்டும். குலைநோய்த் தாக்குதலைத் தவிர்க்க... சூடோமோனஸ் மூலம் விதைநேர்த்தி அவசியம். நோய் தாக்க ஆரம்பிக்கும்போதே... 10 லிட்டர் தண்ணீருக்கு 20 மில்லி வேப்பெண்ணெய், 2 கிராம் காதி சோப் என்ற விகிதத்தில் கலந்து தெளித்தால் நோய் கட்டுப்படும்.

வயல்வெளிப் பள்ளி

இலையுரை அழுகல் மற்றும் கருகல் நோய்: இலையுரை அழுகல் மற்றும் கருகல் நோய், பூவெடுக்கும் தருணத்தில் அதிகமாகத் தாக்கும். ஒரு லிட்டருக்கு 20 மில்லி வேப்பங்கொட்டைக் கரைசல் கலந்து தெளித்து இந்நோயைக் கட்டுப்படுத்தலாம்.

நெற்பழநோய் மற்றும் தானிய நிறமாற்ற நோய்: இந்நோய்கள், பூக்கும் பருவத்தில் தாக்குபவை. நோயினால், பாதிக்கப்பட்ட நெல்மணிகளின் மேல் கரும்பழுப்பு அல்லது சாம்பல் நிறத்திட்டுகள் காணப்படும். நெல்மணிகளின் வளர்ச்சி தடைபடுவதால், மணிகள் சிறுத்து சுருங்கிவிடும். அல்லது, பதராக மாறி, மகசூல் இழப்பு ஏற்படும். அரிசியின் வெளித்தோற்றம் பாதிக்கப்பட்டு கசப்புச் சுவையுடன் இருக்கும். இந்நோய் தாக்கிய விதைகளின் முளைப்புத்திறன் பாதிக்கப்படும். விதைநேர்த்தி செய்து விதைத்தால், இந்த நோய் வராது. மேலும், இந்நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டால்... 10 லிட்டர் தண்ணீருக்கு 20 மில்லி வேப்பெண்ணெய், 2 கிராம் காதி சோப் என்ற விகிதத்தில் கலந்து தெளித்தால், நோய் கட்டுப்படும்.

பாக்டீரியா இலைக்கருகல் நோய்: ஒரே நேரத்தில் அதிகமாக உரங்கள் கொடுத்தால், இந்நோய் வர வாய்ப்புண்டு. இந்த நோய் தாக்குதல் அதிகமாக இருக்கும் பகுதிகளில் நோய் எதிர்ப்புத் திறன் கொண்ட ரகங்களை சாகுபடி செய்யவேண்டும். நோயைக் கட்டுப்படுத்த, 5 சதவிகித வேப்பங்கொட்டை கரைசல்; 3 மில்லி வேப்பெண்ணெய் கரைசல்; 10 மில்லி வேலிக் கருவேல் இலைச்சாறு கரைசல்; 20 மில்லி  சாணக்கரைசல் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து 10 நாட்கள் இடைவெளியில் தொடர்ந்து தெளிக்கவேண்டும்.''

'அறுவடைக்காக நெல் வயலை எவ்வாறு தயார் செய்யவேண்டும்?'

''கதிர்கள் நன்றாக முற்றத் துவங்கியதும், 20 முதல் 30 நாட்களுக்கு முன்பு வயலில் தண்ணீர் கட்டுவதை நிறுத்தி தரைப்பகுதியைக் காயவிட வேண்டும். இயந்திர அறுவடை செய்யும் விவசாயிகள் நிலத்தில் ஈரப்பதம் இல்லாத அளவுக்கு காயவிட்டு, அறுவடை செய்யலாம். நெல் கதிர்கள் பொடிந்து தொங்குவதற்கு முன்பு, முற்றிய கதிர்களை அறுவடை செய்யவேண்டும். இலைகளில் பச்சை இருந்தாலும், கதிர்கள் முழுமையான வளர்ச்சி அடைந்திருந்தால், அறுவடை செய்யலாம் (இது சில ஆண்டுகளில் அனுபவத்திலேயே கைவந்துவிடும்).''

'நல்ல விளைச்சலா என்று எவ்வாறு தெரிந்துகொள்வது?'

''ஒரு சதுர மீட்டர் நிலத்தில் 350 கதிர்கள் முதல் 500 கதிர்களும், ஒவ்வொரு கதிரிலும் 100 முதல் 150 நெல்மணிகளும் இருந்தால் நல்ல மகசூல்.''

எளியமுறையில் எலி கட்டுப்பாடு...

வயல்களில் எலிகளைக் கட்டுப்படுத்தும் முறைப் பற்றி இங்கே விளக்குகிறார் வேதாரண்யம் அடுத்துள்ள 'கத்திரிபுலம்’ கிராமத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயி  வேணுகோபால்...  

ஆடு, மாடு, கோழி, எலி போன்ற விலங்குகளின் குடல் பகுதிகளைத் துண்டுத் துண்டுகளாக நறுக்கி, அவற்றை பிளாஸ்டிக் கலனில் இட்டு... மூழ்கும் அளவுக்கு மாட்டுச் சிறுநீரை ஊற்றி, 90 நாட்கள் மூடி வைத்திருக்க வேண்டும். இக்கலவைக்கு 'குணபஸ்தலம்’ என்று பெயர். நடவு செய்த 30 முதல் 40 நாட்களில்... ஒரு ஏக்கருக்கு 50 லிட்டர் தண்ணீரில் ஒரு லிட்டர் 'குணபஸ்தலம்’ என்ற கணக்கில் கலந்து வரப்பு ஓரங்களில் ஊற்றி விட்டால், எலிகள் வராது. மாதம் ஒரு முறை இக்கலவையைத் தெளித்து வர வேண்டும். இது, ஆடு, மாடுகளையும் கட்டுப்படுத்தும்.

வயல்வெளிப் பள்ளி

பப்பாளிக் காய்களைத் துண்டுகளாக வெட்டி, எலி வளைகள் இருக்கும் பகுதிகளில் வைத்தால், அதைச் சாப்பிட்டு, எலிகள் இறந்து போகும். தவிர, வரப்பு ஓரங்களில் புதினா செடி களை நடவு செய்தாலும் எலிகள் அண்டாது. தலா 100 கிராம் வேர்க்கடலை, பொட்டுக்கடலை, எள் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து வறுத்துப் பொடியாக்கி... அதனுடன் 100 கிராம் வெல்லப்பாகு, 100 மில்லி நெய், 150 கிராம் சிமெண்ட் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து மாத்திரை அளவுக்கு உருட்டி வரப்பு ஓரங்களில் இரண்டு முதல் மூன்று அடி இடைவெளியில் வைத்தால், அவற்றை எலிகள் சாப்பிட்டு இறந்துபோகும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism