Published:Updated:

தண்ணீர்... தண்ணீர்...

முடங்கிக் கிடக்கலாமா... முதல்வரின் முத்தான திட்டம்..! ஆர். குமரேசன்

பிரீமியம் ஸ்டோரி

 மிரட்டும் வறட்சியை விரட்டும் தொழில்நுட்பங்கள்...

நீர் மேலாண்மை

தண்ணீர்... தண்ணீர்...

''ஒவ்வொரு மனிதனின் தேவையையும் பூர்த்தி செய்ய, இந்த பூமியால் முடியும். ஆனால், மனிதர்களின் பேராசையைப் பூர்த்தி செய்ய, இந்த பூமியால் முடியாது'' என்றார் மகாத்மா காந்தி.

மனிதனின் பேராசையால் பூமிப் பந்து சூடாகி, பக்கவாதத்தில் முடங்கிக் கொண்டிருக்கிறது பருவநிலை. ஒரு காலத்தில் மாதம் மும்மாரி பொழிந்த மழை, மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை 'அய்யோ பாவம்' என எட்டிப் பார்த்துவிட்டுப் போகிறது. நீர்நிலைகள் எல்லாம், நீரின்றி நிர்வாணமாகக் கிடக்கின்றன. 'குளத்தில் குளித்த, ஆற்றில் ஆட்டம் போட்ட, கிணற்றில் குதித்து விளையாடிய, கடைசி தலைமுறை நாம் தான்’ என முகநூலில் பதிவிடுவதோடு முடிந்து விட்டதா நம் கடமை. அடுத்தத் தலைமுறை அனுபவிக்க வேண்டிய அத்தனை வளங்களையும் அழித்த தலைமுறையும் நாம்தான் என்பதை வசதியாக மறந்து போவது எந்த வகையில் நியாயம்?

மற்ற வளங்களையெல்லாம்கூட விட்டு விடுங்கள். உயிர் வாழ அடிப்படையான நீர்வளத்தை எப்படி சிதைத்திருக்கிறோம். எடுப்பது மட்டுமே நம் கடமை என ஆயிரம் அடிக்கு கீழே ஓடி ஒளியும் நிலத்தடி நீரைத் தேடிப் பிடித்து உறிஞ்சுகிறோமே... பதிலுக்கு நாமும் கொடுக்க வேண்டாமா? ஒருவருக்கு நாம் ஒன்று கொடுத்தால்தானே, அவர் ஒன்று தருவார். மாறாக நாம் எதையும் கொடுக்காமல், அவரிடம் இருந்து வாங்கிக் கொண்டே இருந்தால், ஒரு கட்டத்தில் கொடுப்பதை நிறுத்துவதுடன், நம்முடனான உறவையும் முறித்துக் கொள்வார் என்பதுதானே எதார்த்தம். இதே நிலைதான் நிலத்தடி நீர் விஷயத்திலும் நடந்துகொண்டிருக்கிறது. இனியேனும் திருப்பிக் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும். அதற்கான அருமையான வழிமுறைதான் மழைநீர்ச் சேமிப்பு.

தண்ணீர்... தண்ணீர்...

இதுவே காலம் கடந்த முயற்சிதான். என்றாலும், இப்போது இல்லையென்றால், இனி எப்போதும் இல்லை என்ற விளிம்பு நிலை முயற்சி. இது, இயற்கை மனிதனுக்கு அளித்திருக்கும் கடைசி வாய்ப்பு. இதை முறையாகப் பயன்படுத்தி, மழைநீரை முறையாக அறுவடை செய்தால், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதோடு நமக்கான நீர்த் தேவையையும் சுலபமாகப் பூர்த்தி செய்துகொள்ள முடியும்.

2003ம் ஆண்டு தமிழகத்தில் நிலவிய கடுமையான வறட்சி காரணமாக, மேட்டூர் நீர் சென்னைக்கு ரயிலேறி வந்து, வரலாறு படைத்ததை மறந்து இருக்க மாட்டீர்கள். அந்த ஆண்டு தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கொண்டு வந்த மழைநீர்ச் சேகரிப்புத் திட்டம் மிகப்பெரிய பலனைக் கொடுத்தது. சென்னையில் மழைநீர்ச் சேகரிப்பு அமைத்த வீடுகளில் 50% நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்திருந்தது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. 'நிலத்தடி நீர் மேம்படுத்துதல் மற்றும் மேலாண்மைச் சட்டம் 2003’ என்ற சட்டத்தின் மூலமாக மழைநீர்ச் சேகரிப்பைக் கட்டாயமாக்கியதால், அடுத்தடுத்த ஆண்டுகளில் குடிநீர்ப் பிரச்னை ஓரளவு தீர்ந்ததை மறுக்க முடியாது. ஆனால், அதைத் தொடர்ந்து செய்யத் தவறியதன் விளைவு, வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிவிட்டது.

தண்ணீர்... தண்ணீர்...
தண்ணீர்... தண்ணீர்...

அக்கறை காட்டுமா அடுக்குமாடிக் குடியிருப்புகள்!

தமிழகத்தில் கிணறுகளின் நீர்மட்டம் 3 அடி முதல் 340 அடி வரை குறைந்திருப்பதாகச் சொல்கிறது மாநில நிலத்தடி மற்றும் மேற்பரப்பு நீர் ஆதார தகவல் மையத்தின் 2014ம் ஆண்டு ஆய்வு முடிவு. இது மிக மோசமான நிலை. சென்னை போன்ற பெருநகரங்களில் அடுக்குமாடிக் குடியிருப்புகள், வணிக வளாகங்களைச் சுற்றி சிமெண்ட் தளங்கள் அமைத்து விடுவதால், பெய்யும் மழை முழுவதும் யாருக்கும் பயனில்லாமல் சாலைகளில் ஓடி, சாக்கடைகளில் கலந்து கடைசியாக கடலில் சங்கமிக்கிறது. இதையெல்லாம் தவிர்த்தாலே, கோடிக்கணக்கான லிட்டர் தண்ணீரை பூமிக்குள் அனுப்பி, நிலத்தடி நீரை செறிவூட்டம் செய்யலாம். இதற்கு அடுக்குமாடிக் கட்டடங்களை சுற்றி, 3 அடி ஆழம் 12 அங்குலம் விட்டம் கொண்ட துளைகளை அமைத்து, மணல் மற்றும் கூழாங்கற்கள் கொண்டு நிரப்பி, துளையிடப்பட்ட சிமெண்ட் சிலாப் கொண்டு மூடிவிட வேண்டும். ஒரு கிரவுண்ட் பரப்பில் கட்டப்பட்ட கட்டத்தில், இதுபோன்று ஆறு குழிகளை அமைக்கலாம். அடுக்குமாடிக் குடியிருப்புகளில் உள்ள குடியிருப்போர் சங்கங்கள் இதை உடனடியாகச் செயல்படுத்தலாம்.

உடனடி மழைநீர்ச் சேகரிப்பு!

தனி வீடுகளில் வசிப்போர் மொட்டை மாடியில் விழும் மழைநீரை, குழாய்கள் மூலம் அறுவடை செய்யலாம். தமிழ்நாட்டு ஆண்டு சராசரி மழையளவை வைத்து, 100 சதுர மீட்டர் மொட்டை மாடி பரப்பளவுள்ள இடத்திலிருந்து ஆண்டுக்கு 61 ஆயிரத்து 600 லிட்டர் மழைநீரைச் சேமிக்கலாம் என்கிறது பொதுப்பணித் துறையின் புள்ளிவிவரம்.

மழைநீர்ச் சேமிப்பு அமைப்பதற்குள் மழை வந்து விட்டது அல்லது எங்களால் மழைநீர்ச் சேமிப்பு அமைப்பை அமைக்க வாய்ப்பில்லை என்பவர்களுக்கு ஒரு சுலபமான வழியிருக்கிறது. மழை பெய்யும் பொழுது, திறந்தவெளியில் நான்கு மரக் கொம்புகளை நட்டு, அதில் ஒரு வெள்ளை வேஷ்டியை கொஞ்சம் தளர்வாக நான்கு முனைகளிலும் கட்டிக் கொள்ள வேண்டும். வேஷ்டியின் மையத்தில் இரண்டு கிலோ எடையுள்ள கருங்கல் ஒன்றை வைக்க வேண்டும். இப்போது வேஷ்டியின் மையத்தில் புனல் போன்ற அமைப்பு உருவாகி இருக்கும். பெய்யும் மழைநீர் அந்தப் புனல் வழியாக கீழே வழியும். கீழே பாத்திரத்தை வைத்து நீரைச் சேகரிக்கலாம்.  

காணும் இடமெல்லாம் மழைநீர்ச் சேமிப்பு!

தற்போது தமிழகம் எங்கும் தலைவிரித்தாடுகிறது, தண்ணீர் பஞ்சம். வாட்டர் ஏ.டி.எம். சென்டர்கள் வர ஆரம்பித்துவிட்டன. காலி குடங்களுடன், தவித்த தொண்டைகளுடன் வீதிகளில் அலைகிறார்கள் மக்கள். இனி, தமிழகத்தில் விழும் மழைநீரை ஒரு சொட்டு கூட வீணாக்காமல், பூமித் தாய்க்கு அர்ப்பணிக்க வேண்டும் என்கிற எண்ணம் நம் அனைவருக்குள்ளும் வரவேண்டும். இது ஒரு மக்கள் இயக்கமாக மாற வேண்டும். ஊர்கள்தோறும் மழைநீர்ச் சேகரிப்பு மன்றங்கள் உருவாக வேண்டும். மக்களுடன் அரசும் கைகோத்து இந்தப் பணியை மேற்கொண்டால்... இன்னும் சில ஆண்டுகளில் நிலத்தடி நீர்மட்டத்தைக் குறிப்பிட்ட அளவு உயர்த்திவிட முடியும்.

தண்ணீர்... தண்ணீர்...

தமிழகத்தில் இருக்கும் 36,486 கோயில்கள், 56 திருமடங்கள் அவற்றுடன் இணைந்த 58 கோயில்கள், அனைத்துக் கோயில் குளங்கள், பொதுப்பணித்துறை குளங்கள், நீராதாரங்கள், அரசு அலுவலகங்கள், கல்வி நிலையங்கள், தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் என அனைத்து இடங்களிலும் மழைநீர் அமைப்பை உண்மையாக நிறுவினால், நிலத்தடி நீர்மட்டத்தில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும்.

முதல்வர் முனைப்பு காட்ட வேண்டும்!

ஜெயலலிதா முதல்வராக இருந்த 2003ம் ஆண்டு காலகட்டத்தில் கடுமையான நடவடிக்கைகளால் மழைநீர்ச் சேகரிப்பை முன்னெடுத்துச் சென்றார். ஆனால், அந்த வேகம் தற்போது அவரிடம் இல்லாததால், பெயரளவில் மட்டுமே நடக்கிறது மழைநீர்ச் சேகரிப்பு. பழைய வேகத்துடனும், கண்டிப்புடனும் மழைநீர்ச் சேமிப்பைக் கட்டாயமாக்க வேண்டும். அனைத்து வீடுகளிலும் மழைநீர்ச் சேமிப்பு அமைப்பு, அமைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்யும் விதமாக அரசு அதிகாரி, சமூகசேவகர், உள்ளாட்சிப் பிரதிநிதி கொண்ட குழுவை அமைத்து ஆய்வு செய்ய வேண்டும். இவை போர்க்கால அடிப்படையில் நடைபெற வேண்டும். இல்லையென்றால், நாம் மிகப்பெரிய தண்ணீர் பஞ்சத்தை எதிர்கொள்ள வேண்டி வரும்.

தண்ணீர்... தண்ணீர்...

''சென்னையில் வரலாற்றில் இல்லாத அளவுக்கு கடுமையான குடிநீர்ப் பஞ்சம் நிலவுகிறது. சென்னையைக் காப்பாற்ற எங்களிடம் பணம் இல்லை. இதைச் சமாளிக்க உடனடியாக 700 கோடி ரூபாய் அளியுங்கள்'' என அன்றைய பிரதமர் வாஜ்பாய்க்கு, அன்று முதல்வராக இருந்த ஜெயலலிதா கடிதம் எழுதினார். மீண்டும் அந்த நிலை வராமல் இருக்க, உடனடியாக மழைநீர்ச் சேமிப்பைக் கட்டாயமாக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு!    

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு