Published:Updated:

மரண பூமியில், மலரும் இயற்கை விவசாயம் !

தூரன் நம்பி

நம்பிக்கை

விதர்பா... பல லட்சம் விவசாயிகளைக் காவு வாங்கிய, வாங்கிக் கொண்டிருக்கும் இந்தியாவின் மரண பூமி. இங்கிருந்து, ஒரு புதிய நம்பிக்கை இப்போது துளிர் விட்டிருக்கிறது. ஆம், சுடுகாட்டில் பூத்திருக்கும் நித்யகல்யாணி செடிபோல, நாசமாகிப் போன பூமியில், நம்பிக்கையை சாகுபடி செய்கிறது, இயற்கை விவசாயம்!

சர்வதேச விவசாயச் சங்கங்களின் கூட்டமைப்பான 'லா வியா கேம்பசினா'  (La-via-Campasina) அமைப்பின் தெற்காசிய நாடுகளின் கலந்தாய்வுக் கூட்டம், மகாராஷ்டிரா மாநிலம், வார்தாவில் உள்ள சேவா கிராமில் (காந்தி ஆஸ்ரமம்) 4 நாட்கள் நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில், 'மனிதகுலத்தின் மீது தொடுக்கப்பட்டிருக்கும் மரபணு மாற்று விதை யுத்தத்தை முறியடிப்பது', 'விவசாயிகளுக்கு எதிராகச் செயல்படும் உலக வர்த்தக அமைப்பை வீழ்த்துவது’ போன்ற முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. நிகழ்வின் ஒரு கட்டமாக, விதர்பா பகுதியின் இயற்கை விவசாய வயல்களுக்கு சென்ற குழுவில் அடியேனும் இடம்பெற்றேன்.

'விதர்பா... பரந்து விரிந்த பருத்தி சாகுபடிக்கு ஏற்ற கரிசல் பூமி. காலங்காலமாக விவசாயிகளுக்கு வாழ்வாதாரமாக இருந்த பூமி. இன்று எமனாக மாற என்ன காரணம்?' என்ற கேள்விக்கு, பதிலாக நிற்பவை, பேராசை பிடித்த மான்சான்டோ, மஹிகோ நிறுவனங்களின் மரபணு மாற்றப்பட்ட மரண விதைகள்தான். இந்தப் பூமியில் பி.டி. விதை விழுந்த நாள்தான், விவசாயிகளின் தற்கொலைக்கான ஆரம்ப நாள். அந்த மரண விதை, விவசாயிகளைக் கொத்துக் கொத்தாக காவு வாங்கிவிட்டது.

மரண பூமியில், மலரும் இயற்கை விவசாயம் !

'பாரம்பரிய நாட்டு ரக பருத்திகளை பூச்சிக் கடிக்கிறது... புழு தின்கிறது... இப்படியே இருந்தால், எப்படி பணக்காரனாவது? நாங்கள் உருவாக்கிய பி.டி. பருத்தியை, பூச்சிக் கடிக்காது. புழு தின்னாது. தும்பைப் பூ போல பருத்தி வெடிக்கும். வெள்ளைத்தங்கம் வீடு முழுக்க நிறையும்’ என்று விதை வியாபாரிகள் சொன்ன பொய்யை நம்பி, விவசாயிகள் மதிமயங்கி மாயவலையில் விழுந்தனர்.

400 கிராம் விதையை 1,800 ருபாய்க்கு வாங்கி பயிர் செய்தனர். சிலருக்கு விளைந்து குவிந்தது. பலருக்குப் பாதியிலேயே கருகி மாண்டது.

பி.டி. ரக பருத்திக்கு நீர்வளம், நிலவளம், உரம் ஆகியவை அவசியம். இந்த உண்மையை விதை நிறுவனங்கள் மறைத்து செய்த வணிக சூழ்ச்சியில், வகை தெரியாமல் சிக்கிக் கொண்ட விவசாயிகள், கைகளைச் சுட்டுக் கொண்டனர். 10 குவிண்டாலாக இருந்த மகசூல், ஒன்று இரண்டு எனச் சுருங்கிவிட்டது. சாகுபடி செலவுக்கு வாங்கிய கடனுக்கு வட்டிகூட கட்ட முடியாமல் கஷ்டப்பட்டவர்கள்... மானத்துக்கு அஞ்சி மரணத்தைத் தேர்ந்தெடுத்துவிட்டனர்.

இந்த சோக வரலாற்றை மனதில் அசை போட்டபடியே அந்தப் பகுதிக்குள் நுழைந்தோம். பச்சைக் கம்பளம் விரித்ததுபோல், பார்க்கும் திசையெல்லாம் பரந்து விரிந்து கிடக்கிறது, பி.டி பருத்திக் காடுகள், இப்போதும். அக்னி குண்டத்தில் குதித்த சீதை, ஆயிரம் கோடி சூரியனைப் போல் பிரகாசமாக ஒளிவிட்டு வெளிவந்தது போல, சுற்றிலும், பி.டி மரணப் பருத்திக் காடுகளுக்கிடையில், நம்பிக்கைச் சுடராய் காட்சியளித்தது, இயற்கை விவசாயத்தில் விளைந்து நின்ற நாட்டுப் பருத்தி வயல். இந்த பூமிக்கு சொந்தக்காரர் தீபக் பங்கஜ்!  

மரண பூமியில், மலரும் இயற்கை விவசாயம் !

''எனக்கு 5 ஏக்கர் பூமி இருக்கிறது. பி.டி. பருத்தி கடலுக்கு நடுவில், நான் மட்டும் சிறிய தீவாக நாட்டுப் பருத்தியைத் தொடர்ந்து பயிர் செய்கிறேன். ஏக்கருக்கு 4 குவிண்டால் முதல் 5 குவிண்டால் வரை மகசூல் கிடைக்கிறது. சாகுபடிச் செலவு என்பது எங்களுடைய உழைப்பு மட்டும்தான். மாடுகளின் சாணம் மட்டும்தான் உரம். இயற்கைப் பூச்சிவிரட்டிகளை மட்டுமே பயன்படுத்துகிறேன். பருத்தி நடவுக்கு இடையில், ஆங்காங்கே தட்டைப் பயறு பயிர் செய்துள்ளேன். இயற்கைப் பூச்சிவிரட்டிகளை மீறி வரும் ஒன்றிரண்டு பூச்சிகள், தட்டைப் பயறைச் சாப்பிட்டுக் கொள்கின்றன. அதனால், பருத்தி பங்கம் இல்லாமல் விளைகிறது. செலவு குறைவாக இருப்பதால், கஷ்டம் இல்லாமல் வாழ்க்கை உருள்கிறது. என் மகன், பக்கத்துக் கல்லூரியில் 3-ம் ஆண்டு டிகிரி படிக்கிறான். கல்லூரி நாட்கள் போக... எங்களோடு வயலுக்கு வந்துவிடுவான். குடும்பமே உழைப்பதால், வாழ்க்கைச் சிறப்பாக இருக்கிறது.

பக்கத்தில் இருப்பது பி.டி பருத்தி. மழை சரியாக வந்து, நல்ல உரம் கொடுத்தால், 10 குவிண்டால் வரை விளைச்சல் கிடைக்கிறது. மழை மோசம் செய்துவிட்டால், சாகுபடிச் செலவுகூட கிடைக்காது. பி.டி பருத்தி போட்டவர்களில் பல விவசாயிகள் கோடீஸ்வரர்களாக மாறியிருப்பது உண்மைதான். ஆனால், விவரம் தெரியாமல் பயிரிட்டு, தங்கள் வாழ்வைத் தொலைத்த விவசாயிகளின் சதவிகிதம் அவர்களைவிட பல மடங்கு அதிகம். எனக்கு அந்தக் கஷ்டம் இல்லை. ஆனால், பி.டி விதைகளால் இயற்கையும் சுற்றுச்சூழலும் கெட்டுப் போனதுதான் வேதனையாக இருக்கிறது.

இதோ பார்க்கிறீர்களே... இந்த மரத்தில் எப்போதும் பத்துப் பதினைந்து தேன் கூடுகள் இருக்கும். தேனீக்கள் ரீங்காரமிட்டுக் கொண்டே இருக்கும். இன்று மருந்துக்குக்கூட ஒரு தேனீ இல்லை. 'இன்று, தேனீக்களைத் துடைத்து எறிந்தது போல, ஒரு நாளைக்கு மக்களையும் சுத்தமாக துடைத்து எறிந்துவிடும், இந்த பி.டி எமன்' என்கிற அச்சம் என் அடிவயிற்றைப் பிசைகிறது'' என்று வேதனைக் குரலில் தீபக் பங்கஜ் சொன்னபோது, என் அடிவயிறும் பிசைய ஆரம்பித்துவிட்டது.

'இன்று, தேனீக்களைத் துடைத்து எறிந்தது போல, ஒரு நாளைக்கு மக்களையும் சுத்தமாகத் துடைத்து எறிந்துவிடும், இந்த பி.டி எமன்'

அடுத்த கட்டுரைக்கு