Published:Updated:

5 ஏக்கரில் 150 மூட்டை... ஒற்றை நாற்று தரும் ஒப்பற்ற வருமானம்!

ஒரு டாக்டரின் பலே முயற்சி! த. ஜெயகுமார் படங்கள்: ஆர். வருண்பிரசாத்

'வேலையில் இருந்துகொண்டே விவசாயத்தைக் கவனிப்பது எப்படி?' என்கிற கேள்வி, இன்றைக்குப் பலருக்கும் உண்டு. ஆர்வமும், அர்ப்பணிப்பும் இருந்தால், எந்த வேலையில் இருந்துகொண்டும் விவசாயத்தை நல்லமுறையில் செய்ய முடியும் என்பதை நிரூபித்து வருகிறார். காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் அருகே உள்ள மொறப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த டாக்டர். நரசிம்மன். 80 வயதைக் கடந்த நிலையிலும் மருத்துவம், விவசாயம் என மாறிமாறி அசத்திக் கொண்டிருக்கிறார்.

காஞ்சிபுரம்-வந்தவாசி சாலையில் உள்ள தென்னாங்கூர் கிராமத்தில் அமைந்திருக்கிறது, ஞானாந்தகிரி சுவாமிகள் மடம். இந்த மடத்தின் சார்பாக, சேவை அடிப்படையில் நடத்தப்படும் மருத்துவமனையில், தற்போது பணிபுரிந்து வருகிறார் நரசிம்மன். நாம் அங்கே சென்றிருந்தவேளையில் நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்துக் கொண்டிருந்தவர், நம்மை அன்புடன் வரவேற்றார். மருத்துவப் பணிகளை முடித்த பிறகு, நம்மிடம் பேசியவர், ''சென்னை, வெலிங்டன் மருத்துவமனையில டாக்டரா வேலை செஞ்சுட்டு இருந்தேன். 2003-ம் ஆண்டுக்குப் பிறகு கிராம பகுதியிலதான் வேலை செய்யணும்னு, வேறெங்கயும் வேலைக்குப் போகாம இருந்தேன். இந்த நேரத்துலதான் மடத்திலிருந்து டாக்டர் வேலைக்குக் கூப்பிட்டாங்க... புறப்பட்டு வந்துட்டேன்'' என்றவர்,

5 ஏக்கரில் 150 மூட்டை... ஒற்றை நாற்று தரும் ஒப்பற்ற வருமானம்!

''விவசாயத்துக்கு உடல்தான் மூலதனம். ஆனா, அதை எந்த விவசாயியும் புரிஞ்சு வெச்சுருக்கிற மாதிரி தெரியல. இங்க வைத்தியம் பார்க்க வர்ற பெரும்பான்மையான விவசாயிகளுக்கு சர்க்கரை வியாதி இருக்கு. அவங்களுக்கு வெறும் மாத்திரையை மட்டும் கொடுத்துட மாட்டேன். அவங்களோட உணவுப் பழக்கம், மற்ற பழக்க வழக்கங்களுக்கு ஆலோசனை கொடுத்த பிறகுதான் மருந்துகளையே பரிந்துரை செய்வேன். அடிப்படையில விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன்கிறதால, எங்க போனாலும், விவசாயத்த பத்தியும், விவசாயிகளோட நிலையைத் தெரிஞ்சுக்கிறதுலயும் ஆர்வமா இருப்பேன்'' என்றவர், தன்னுடைய விவசாயத்தின் பக்கம் பேச்சைத் திருப்பினார்.

மடத்தில் இயற்கைக் காய்கறி!

''மடத்தோட அன்னதான திட்டத்துக்கு காய்கறிகள விளைவிக்கிறதுக்குனு 40 சென்ட் நிலம் இருக்கு. கடந்த 2 வருஷமா என்னோட மேற்பார்வையில இயற்கை விவசாயம் செஞ்சுக்கிட்டு வர்றோம். இதுல கிடைக்கிற காய்கறிங்களை அன்னதானத்துக்கு அனுப்பிடுவோம். இப்போ முள்ளங்கி, முள்ளுகத்திரி நடவு போட்டிருக்கோம். வாழை, மல்லி, முல்லை எப்பவுமே தோட்டத்துல இருக்கும். உரம்னு பார்த்தா... தொழுவுரம், பஞ்சகவ்யாதான் முக்கியமா கொடுக்கிறேன். இதுக்குத் தேவையான சாணமெல்லாம் கோசாலாவிலிருந்து வந்துடும். பூச்சி-நோய் வந்தா, கடையில விற்பனை செய்யுற இயற்கைப் பூச்சிவிரட்டி, பூஞ்சண விரட்டிகளை வாங்கித்தான் தெளிக்கிறோம்'' என்று முன்னுரை கொடுத்த நரசிம்மன், மதுராந்தகத்திலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள மொறப்பாக்கம் கிராமத்திலிருக்கும் தன்னுடைய நிலத்துக்கு நம்மை அழைத்துச் சென்றார். ஆட்களோடு சேர்ந்து நாற்றங்காலில் விதைநெல்லை விதைத்து முடித்துவிட்டு, ''இவர் பேரு வேலுச்சாமி. இந்தப் பண்ணையில நடக்குற சாகுபடி வேலைகளை இவர்தான் பொறுப்பா பார்த்துக்கிறார்'' என்று வேலுச்சாமியை அறிமுகப்படுத்தினார்.

5 ஏக்கரில் 150 மூட்டை... ஒற்றை நாற்று தரும் ஒப்பற்ற வருமானம்!

ஒற்றை நாற்று நடவு

''இங்க மொத்தமா 7 ஏக்கர் நிலம் இருக்கு. நெல்லுதான் முக்கிய பயிர். மூணு வருஷமா இயற்கை முறையில பயிர் செஞ்சுக்கிட்டு வர்றோம் வருஷத்துக்கு ரெண்டு போகம் குறையாம விவசாயம் நடக்கும். போன தடவை ஏ.டி.டி-45, ஏ.டி.டி-49னு ரெண்டு ரகங்கள பயிர் செஞ்சோம். இந்தமுறை கிச்சிலிச் சம்பா, ஏ.டி.டி.-45 ரகங்கள நாத்து விட்டிருக்கோம். எல்லாமே ஒற்றை நாற்று நடவுதான்'' என்ற வேலுச்சாமி, சாகுபடித் தொழில்நுட்பங்களையும் விவரித்தார். அதை அப்படியே பாடமாகத் தொகுத்திருக்கிறோம்.

பாலிதீன் ஷீட் நாற்றங்கால்!

'திருந்திய நெல்சாகுபடி, ஒற்றை நாற்று நடவு என்றெல்லாம் அழைக்கப்படும் 'எஸ்.ஆர்.ஐ' (SRI-System of Rice Intensification)முறை நடவு என்றால், ஏக்கருக்கு 3 கிலோ விதை இருந்தாலே போதுமானது. சாதாரண நடவு என்றால் ஏக்கருக்கு 30 கிலோ வரையிலும் விதை தேவைப்படும். வயலிலேயே நாற்றங்கால் அமைக்கலாம். டிரே மூலமாகவும் விதைத்து நாற்றுகளை உற்பத்தி செய்யலாம். பாலிதீன் ஷீட் மூலமாகவும் நாற்று உற்பத்தி செய்யலாம். பாலிதீன் முறையில் நாற்றுவிடும்போது, பறிப்பது எளிதாக இருக்கும்.

5 ஏக்கரில் 150 மூட்டை... ஒற்றை நாற்று தரும் ஒப்பற்ற வருமானம்!

நாற்றங்காலுக்குத் தேர்ந்தெடுத்த நிலத்தை நன்றாக உழவு செய்து, மண்ணை சேற்றுக்குழம்பு மாதிரி ஆக்கிக் கொள்ளவேண்டும். நாற்றங்காலின் ஒரு முனையிலிருந்து இன்னொரு முனைக்கு பாலிதீன் ஷீட்டை பரப்பவேண்டும். அதன்மீது, மூன்றடி நீளம், ஒன்றேகால் அடி அகலம் கொண்ட இரண்டு இரண்டு மரச்சட்டங்களை வைத்து, பெட்டி மாதிரி உருவாக்கி, அதில் ஓர் அங்குல உயரத் துக்குச் சேற்றை அள்ளி, நிரப்ப வேண்டும். பிறகு, அதன்மீது விதைகளைப் பரவலாகத் தூவிவிட வேண்டும். இதேபோல அடுத்தடுத்து மரச்சட்டங்களை வைத்து சேற்றை நிரப்பி, விதைகளைத் தூவவேண்டும். ஒருநாள் விட்டு ஒருநாள், தண்ணீர் பாய்ச்சினால் போதுமானது. நாற்றைப் பறிக்கும்போது, பூ மாதிரி எளிதாக கைக்குள் வரும்.

5 ஏக்கரில் 150 மூட்டை... ஒற்றை நாற்று தரும் ஒப்பற்ற வருமானம்!

விதைப்புக்கு முன்பாக விதைநேர்த்தி செய்வது மிகவும் முக்கியம். தலா கால் கிலோ அசோஸ்-ஸ்பைரில்லம், பாஸ்போ- பாக்டீரியா, சூடோமோனஸ் ஆகியவற்றை ஒன்றரை லிட்டர் சோற்றுக்கஞ்சியில் கொட்டிக் கலக்க வேண்டும். இந்தக் கலவையை விதைநெல்லோடு நன்றாகக் கலக்க வேண்டும். இதை நிழலில் 1 மணி நேரம் காயவைத்து, சாக்குக் கோணியில் கட்டி 7 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவேண்டும். மறுநாள் 10 கிலோ தொழுவுரத்தோடு கலந்து, அப்படியே பாலிதீன் நாற்றங்காலில் தூவ வேண்டும்.

5 ஏக்கரில் 150 மூட்டை... ஒற்றை நாற்று தரும் ஒப்பற்ற வருமானம்!

ஆடி, மார்கழி, சித்திரைப் பட்டங்களில் நெல் நடவு செய்வது நல்ல பலனைத் தரும். முதலில் 2 சால் உழவு ஓட்டி, ஏக்கருக்கு 4 மூட்டை (50 கிலோ) மண்புழு உரத்தைக் கொட்டி, நிலத்தைத் தயார் செய்ய வேண்டும். அடுத்து 1 சால் உழவு ஓட்டி, நடவு போட வேண்டும். ஒரு குத்துக்கு அதிகபட்சமாக இரண்டு நாற்றுகள் இருந்தால் போதும். நாற்றுக்கு நாற்று 25 செ.மீ. இடைவெளி இருக்க வேண்டும். வயலில் 1 முதல் 2 அங்குல தண்ணீர் இருக்குமாறு, தண்ணீர் பாய்ச்சி வர வேண்டும். 15-20 நாட்களில் களையெடுத்து, ஏக்கருக்கு 2 லிட்டர் ஹியூமிக்காஸ் இயற்கை பயிர் வளர்ச்சி ஊக்கியை, வாய்க்கால் தண்ணீரில் கலந்துவிட வேண்டும். இவ்வாறு செய்தால் பயிரைத் தாக்கும் வேர்ப்பூச்சிகள் கட்டுப்படும். பயிர் வளர்ச்சியும் சிறப்பாக இருக்கும். நெல் கதிரில் பால் பிடிக்கும் பருவத்தில் குருத்துப் புழு, சோகைப் புழுக்களின் (இலைச் சுருட்டுப் புழு) தாக்குதல் வந்தால், 50 மில்லி சூடோமோனஸ், 50 மில்லி பவேரியா பேஸியானா, மெட்டாரைஸியம் கலந்த உயிர்உர திரவத்தை, 1 டேங்கில் (15 லிட்டர்) கலந்து தெளிக்க வேண்டும். இப்படி ஏக்கருக்கு 6 டேங்க் தெளித்துவிட வேண்டும். ஏடிடி-45, 49 ரகங்கள் 120 நாட்களில் அறுவடைக்கு வந்துவிடும். இயந்திரங்கள் மூலம் நெல்லை அறுவடை செய்து, இரண்டு நாள் காய வைத்தபின் மூட்டை பிடிக்க வேண்டியது தான்!'

வேலுச்சாமி, மகசூல் பாடத்தை முடிக்க, வருமானம் பற்றிப் பேசினார் நரசிம்மன்.

5 ஏக்கரில் 150 மூட்டை... ஒற்றை நாற்று தரும் ஒப்பற்ற வருமானம்!

வருமானம்

''கடந்த போகத்துல 5 ஏக்கருக்கு 150 மூட்டை (75 கிலோ) கிடைச்சுது. 68 மூட்டைய அரிசியாக்கிட்டோம். மீதி 82 மூட்டைய நெல்லா வெச்சிருக்கோம். 1 மூட்டை (75 கிலோ) நெல்லை அரிசியாக்கினதுல, 40 கிலோ அரிசி கிடைச்சுது. மொத்தமா, 68 மூட்டைக்கு 2,720 கிலோ அரிசி கிடைச்சது. 1 கிலோ அரிசி 50 ரூபாய்னு இயற்கை அரிசியை வாங்குவோரிடம் வித்ததுல 1 லட்சத்து 36 ஆயிரம் ரூபாய் கிடைச்சுது. மீதியிருக்கிற 82 மூட்டையை அரிசியாக்கினா... 3,280 கிலோ அரிசி கிடைக்கும். இதன்மூலமா 1 லட்சத்தி 64 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். மொத்த வருமானம்னு பாத்தா 3 லட்ச ரூபாய். இதுல ஏக்கருக்கு சுமார் 25 ஆயிரம் ரூபாய் செலவு செஞ்சுருக்கேன். 5 ஏக்கருக்கும் 1 லட்சத்து 25 ஆயிரம் போக, 1 லட்சத்து 75 ஆயிரம் லாபம்'' என்று விடைகொடுத்தார் நரசிம்மன்.

தொடர்புக்கு,  
டாக்டர். நரசிம்மன், செல்போன்: 94453-82725
வேலுச்சாமி, செல்போன்: 95665-91910

கைகொடுத்த மதிப்புக் கூட்டும் தொழில்நுட்பம்!

தன்னுடைய நிலத்தில் விளைந்த நெல்லுக்கு வந்த விலை பிரச்னை பற்றிப் பேசிய நரசிம்மன், ''5 ஏக்கர்ல 150 மூட்டை நெல் கிடைச்சுது. உள்ளூர்ல வியாபாரிகள் 1 மூட்டை (75 கிலோ) 900 ரூபாய்க்குக் கேட்டாங்க. அதாவது 1 கிலோ நெல் 12 ரூபாய்க்குக் கேட்டாங்க. இது கட்டுப்படியாகாது... நாமளே அரிசியாக்கி விப்போம்னு முடிவெடுத்தேன். சுத்தி இருக்கிற அரிசி ஆலைகள்ல விசாரிச்சேன். புது நெல்ல அப்படியே அரைச்சா, நிறைய நொய்யரிசி ஆயிடும். அதனால நெல்லை அவிச்சி, புழுங்கல் அரிசியா ஆக்கித் தர்றோம்னு சொன்னாங்க. அந்தமாதிரி வேண்டாம். பொட்டை மட்டும் நீக்கி, பச்சரிசியா கொடுங்கனு கேட்டேன். அப்படி யாரும் செய்றதில்லனு சொல்லிட்டாங்க. நிறைய இடங்கள்ல விசாரிச்சு, செய்யார்ல இருக்கிற தனியார் ஆலையில, நெல்லோட பொட்டை நீக்கி அரிசியாக்கிக் கொடுத்தாங்க. மூட்டைக்கு 120 ரூபாய்னு 68 மூட்டைக்கு 8,160 ரூபாய் கூலியா கொடுத்தேன். மொத்த மூட்டையில, 68 மூட்டை நெல்லை மட்டும்தான் அரைச்சேன். இதுல 2,720 கிலோ அரிசி கிடைச்சுது. விற்பனை செஞ்சதுல 1 லட்சத்தி 36 ஆயிரம் ரூபாய் கிடைச்சுது. இதுவே இந்த 68 மூட்டையை நெல்லா வித்திருந்தா... 61 ஆயிரம் ரூபாய்தான் கிடைச்சுருக்கும்'' என்ற நரசிம்மன்,

''இப்போ மெஷின் மூலமா அறுவடை பண்ற நெல்லை, நேரடியா ஆலையில கொடுத்தா, ஹீட்டர்ல காயவெச்சி அரிசியாக்கி தர்ற நவீன முறையெல்லாம் வந்துடுச்சி. என்னென்ன தொழில்நுட்பங்கள் வந்திருக்குனு கவனமா இருந்தா... விவசாயத்துல லாபத்தை அதிகப்படுத்திக்க முடியும்'' என்று சொன்னார்.

அடுத்த கட்டுரைக்கு