Published:Updated:

வாழை!

காசி. வேம்பையன்

வாழை!

காசி. வேம்பையன்

Published:Updated:

வயல்வெளிப் பள்ளி ! கேள்விகளும்... பதில்களும்!

பாடம்

 ஒவ்வொரு பயிரைப் பற்றியுமான அத்தனை கேள்விகளுக்கும் விடையாக மலரும் இப்பகுதியில், இதுவரை நெல் பயிர் பற்றி விதை முதல் விற்பனை வரையிலான பல்வேறு வினாக்களுக்கு விடையளித்தனர், துறை சார்ந்த அறிஞர்கள். இனி, வாழை சாகுபடி பற்றி தொடர்ந்து பார்ப்போம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'வலுத்தவனுக்கு வாழை... இளைச்சவனுக்கு எள்ளு’ என்பது கிராமத்துப் பழமொழி. அதாவது, 'வாழைக்கு அதிக பண்டுதம் பார்க்க வேண்டும். அதனால் பண வசதி இருப்பவர்கள் மட்டும்தான், வாழை சாகுபடி செய்ய முடியும்’ என்பதால், அப்படிச் சொல்லி வைத்திருக்கிறார்கள். ஆனால், சரியான தொழில்நுட்பங்கள் இருந்தால்... அப்பழமொழியைப் பொய்யாக்கி, இளைத்தவர்களும் வாழையில் வளமான வருமானத்தைப் பார்க்கலாம். அதற்குத் தேவையான நல்ல தொழில்நுட்பங்களைத் தொடர்ச்சியாக, தலைவாழை இலையிட்டுப் பரிமாறவிருக்கிறது, 'பசுமை விகடன்’. இந்த இதழில், வாழையின் சிறப்புகள், சாகுபடி செய்யப்படும் பகுதிகள், வாழை ரகங்கள் பற்றி பகிர்ந்து கொள்கிறார், திருச்சியில் உள்ள தேசிய வாழை ஆராய்ச்சி நிலையத்தின் முதன்மை விஞ்ஞானி வ. குமார்.

'வாழை சாகுபடிக்கு ஏற்ற பட்டங்கள் யாவை?'

''தண்ணீர் வசதி, மழை, மண் அமைப்பு இவற்றைப் பொறுத்து ஆண்டு முழுவதும் வாழை சாகுபடி செய்யப்படுகிறது. வாழை ரகங்கள் சிலவற்றுக்கு ஆடிப்பட்டமும், கார்த்திகைப்பட்டமும்தான் ஏற்றவை. அதாவது, குளிர் காலத்துக்கு முன்போ, அல்லது குளிர்காலத்துக்கு பிறகோ, குலை வருவது போன்ற பட்டத்தைத் தேர்வு செய்ய வேண்டும். இப்படிச் செய்தால்தான், பாக்டீரியா அழுகல் நோய் மாதிரியான நோய் தாக்குதல்களைத் தடுக்க முடியும்.''

வாழை!

'வாழைக்கு ஏற்ற மண் வகைகள் யாவை?'

''நல்ல வளமான, தண்ணீர் தேங்காத நிலங்கள் வாழை சாகுபடிக்கு ஏற்றவை. களர் மற்றும் உவர் நிலங்களில் சில வாழை ரகங்களை மட்டுமே சாகுபடி செய்ய முடி யும். களிமண் நிலங்கள், வேர்களின் வளர்ச்சியைத் தடுத்துவிடும். அதிக மணல்சாரியான நிலம் தண்ணீரைப் பிடித்து வைக்காது. அதனால், இந்த இரண்டு மண் வகைகள் இருக்கும் நிலங்களைத் தவிர்ப்பது சிறந்தது. அதிகமான குளிரோ, வெப்பமோ இருக்கும் பகுதிகள் வாழை சாகுபடிக்கு ஏற்றதல்ல.''

'தமிழ்நாட்டில் சாகுபடி செய்யப்படும் வாழை ரகங்கள் என்னென்ன?'  

''தமிழ்நாட்டில் பழம், காய், இலைக்காக பதினைந்துக்கும் மேற்பட்ட வாழை ரகங்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. பழத்தேவைக்காக... கிராண்ட் நைன்(ஜி-9), பூவன், ரஸ்தாளி, கற்பூரவல்லி, உதயம், பச்சநாடன், நெய்பூவன் (ஏலக்கி), குட்டை கெவண்டிஸ், செவ்வாழை என நடவு செய்யப்படுகின்றன. மலைவாழையில் விருப்பாச்சி போன்ற ரகங்களும்; சமையல் பயன்பாட்டுக்கான ரகங்களில் ஈரோடு மொந்தன், பிடி மொந்தன், சாம்பல் மொந்தன் ஆகிய ரகங்களும்; இரு உபயோக ரகங்களில் நேந்திரன் ரகமும் சாகுபடி செய்யப்படுகின்றன. ஒவ்வொரு ரகத்தைப் பற்றியும் பார்ப்போம்.

ஏற்றுமதிக்கு ஏற்ற கிராண்ட் நைன்!

இந்த ரகத்தின் வயது 11 முதல் 12 மாதங்கள். ஒவ்வொரு தாரிலும் 8 முதல் 12 சீப்புக்களும்; 180 முதல் 200 பழங்களும் இருக்கும். ஒவ்வொரு தாரும் 25 முதல் 30 கிலோ எடை இருக்கும். நல்ல பராமரிப்பு செய்யும்பட்சத்தில் சில வாழைத்தார்கள் 50 கிலோ எடை அளவுக்குகூட வரும். பழங்கள் உண்பதற்கு சுவையாகவும், நீளமாக உருளை வடிவத்தில் சிறிய வளைவுடனும் இருக்கும். சேமித்து வைக்கும்போது தரம் நன்றாக இருக்கும்.

பழங்கள் முதிர்ச்சி அடையும்போது கவரக்கூடிய மஞ்சள் கலந்த பச்சை நிறத்தில் காணப்படும். பழங்கள் உடனே சாப்பிடத் தகுந்தவையாகவும், பதப்படுத்தக்கூடியதாகவும் இருக்கின்றன. தோலிலிருந்து சதைப்பகுதி விகிதம் அதிகமாக இருப்பதால், பதப்படுத்துவதற்கு மிகவும் ஏற்றது. உலக அளவில் ஏற்றுமதிக்கு ஏற்ற சிறந்த ரகம். இந்த ரகவாழைக் கன்றுகள் திசு வளர்ப்பு மூலம் மட்டுமே உற்பத்திச் செய்யப்படுகின்றன. இந்த ரகத்தில் இலைப்புள்ளி நோய் தாக்குவதற்கான வாய்ப்பு உள்ளது.

வாழை!

வறட்சியைத் தாங்கும் பூவன்!

இந்தியாவில் தோன்றிய வாழை ரகங்களில் முக்கியமான ரகம் பூவன். இந்த ரகம், இந்தியா முழுவதும் மாநிலத்துக்கு ஏற்ப பல்வேறு பெயர்களில் சாகுபடி செய்யப்படுகிறது. வறட்சி மற்றும் அசாதாரணமான சூழ்நிலைகளையும் தாங்கி வளரக்கூடியது. தமிழ்நாட்டில் எல்லா மாவட்டங்களிலும், ஆண்டு முழுவதும் அதிகமான அளவில் பயிரிடப்படும் வணிக ரீதியான ரகம்.

இந்த ரக வாழையின் வயது 13 முதல் 14 மாதங்கள். ஒவ்வொரு தாரிலும் 10 முதல் 13 சீப்புகளுடன், 150 முதல் 180 பழங்கள் இருக்கும். தாரின் எடை 20 முதல் 22 கிலோ இருக்கும். பழங்கள் நடுத்தர அளவுடன், உருண்டை வடிவத்தில், தெளிவான காம்புடன் காணப்படும். தோல் மெலிதாக, அடர் மஞ்சள் நிறத்தில், உரித்தால் எளிதாக வந்துவிடும். சதைப்பகுதி மென்மையாகவும், நல்ல மணத்துடன் இருக்கும். இந்த ரகத்தில் வாழைத் தேமல் நச்சுயிரி, வாழைக் கோடு நச்சுயிரி ஆகிய தாக்குதல்கள் அதிகளவில் இருக்கும். அதனால், நோய் தாக்காத கன்றுகளைத் தேர்வு செய்து நடவு செய்ய வேண்டும்.

ஆப்பிள் மணம் கொண்ட ரஸ்தாளி!

கேரளா, கர்நாடகா, ஆந்திரா, பீகார், அசாம் ஆகிய மாநிலங்களிலும், தமிழகத்தின் ஈரோடு, திருச்சி மாவட்டங்களிலும் அதிகமாக இந்த ரகம் பயிரிடப்படுகிறது. இப்பழங்கள் சுவையாகவும், தோல் மெல்லியதாகவும், உரிப்பதற்கு எளிதாகவும், ஆப்பிள் மணத்துடனும் இருக்கும். இந்த ரக வாழையின் வயது 14 முதல் 15 மாதங்கள். ஒவ்வொரு தாரிலும் 7 முதல் 8 சீப்புக்களும், 85 முதல் 100 பழங்களும் இருக்கும். ஒவ்வொரு தாரும் 15 முதல் 17 கிலோ எடை வரை இருக்கும். இந்த ரக வாழையில், குறிப்பாக நுண்ணூட்டச் சத்துக்கள் பற்றாக்குறையால் பழ வெடிப்பு நோய், பனாமா வாடல் நோய், இலைப்புள்ளி நோய் ஆகிய நோய்த்தாக்குதல்கள் அதிகமாக இருக்கும். வாடல்நோய் தாக்காத கன்றுகளைத் தேர்வு செய்து நடவு செய்தால், இழப்பைத் தவிர்க்கலாம்.'

கற்பூரவல்லி, உதயம், பச்சநாடன், நெய் பூவன், நேந்திரன் ஆகியவை பற்றிய தகவல்கள் தொடரும்...