Published:Updated:

நான் நம்மாழ்வார் பேசுகிறேன்

ஒற்றை நாற்றுக்கு மறுவிதை! ஓவியம்: ஹரன்

நான் நம்மாழ்வார் பேசுகிறேன்

ஒற்றை நாற்றுக்கு மறுவிதை! ஓவியம்: ஹரன்

Published:Updated:

வரலாறு

'இயற்கை வேளாண் விஞ்ஞானி' கோ. நம்மாழ்வார், இயற்கையுடன் கலந்துவிட்டார். அவருடன் நெருங்கிப் பழகி, அவரைப் பற்றி முழுவதுமாக அறிந்து வைத்திருக்கும் சிலர்... 'நான் நம்மாழ்வாருக்காகப் பேசுகிறேன்' என்ற தலைப்பில், அவருடைய வாழ்க்கைப் பாதை பற்றி இதழ்தோறும் பேசுகிறார்கள்.  நம்மாழ்வார், செங்கல்பட்டு அருகில் உள்ள இயற்கை விவசாயப் பண்ணையில் இருந்து வெளியேறி, கேளம்பாக்கம் பகுதியில், இயற்கை விவசாயப் பணிகளைத் தொடர்ந்து செய்து வந்தார். அப்போது, நம்மாழ்வாருடன் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை இந்த இதழிலும் 'டி.இ.டி.இ' ஆர். ரங்கநாதன் பேசுகிறார்...

ஆசைப்பட்ட முன்னாள்... ஆத்திரப்பட்ட அண்ணாச்சி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''கேளம்பாக்கத்துல நம்மாழ்வார் அண்ணாச்சி தங்கி இருந்தாலும், இயற்கை விவசாயத்துக்காக நாடு முழுக்க சுத்திக்கிட்டேதான் இருந்தாரு. ஒருமுறை வெளியூர் போயிட்டு வந்தவுடனே, 'ரங்கு, நாம என்னதான், இயற்கை விவசாயம் நல்லதுனு சொன்னாலும். அதை நடைமுறையில காட்டுறதுக்கு மாதிரிப் பண்ணை வேணும். அதுக்கு ஏற்பாடும் செய்யலாம்தானே’னு சொன்னாரு. அவர் ஆசைப்பட்டது போலவே, மாதிரிப் பண்ணையை உருவாக்கினோம். ஊர்ல இருக்கும்போது, மாதிரிப் பண்ணையிலேயேதான் இருப்பாரு. அமுதக்கரைசல் தயாரிக்குற நுட்பம், அப்பதான் வேகமா பரவுச்சு. பண்ணைக்கு யாரு வந்தாலும், 'சாணம், மாட்டுச்சிறுநீர், வெல்லம் இது மூணும் போதும். விளைச்சல் அதிகமா கிடைக்கும். விவசாயி கடனாளியாக மாட்டான்’னு விளக்கமா சொல்லுவாரு. பக்கத்து, கிராமத்துக் கூட்டங்களுக்குப் போனா, 'மாதிரிப் பண்ணையை வந்து பாருங்கய்யா'னு கூப்பிடுவாரு.

நான் நம்மாழ்வார் பேசுகிறேன்

ஒரு நாள், கர்நாடக மாநிலம், பெங்களூருல இருந்து போன் வந்துச்சு. 'நான் முன்னாள் மத்திய அமைச்சர் பேசுறேன். மிஸ்டர் நம்மாழ்வார் பத்தி கேள்விப்பட்டேன். அவர் எங்க பண்ணைக்கு வந்து... விவசாய ஆலோசனை சொல்லணும்’னு அழைப்பு வந்துச்சு. 'பெரிய மனுஷங்க விவசாயத்துப் பக்கம் எட்டிப்பார்க்குறது நல்லதுதான்’னு அண்ணாச்சி சொல்ல, அடுத்த வாரமே அவரும் நானும் பெங்களூரு புறநகர் பகுதியில, ஏக்கர் கணக்குல பரவி கிடந்த, அந்தப் பண்ணையில போய் நின்னோம். பண்ணை முழுக்க சுத்திகாட்டின அந்த முன்னாள் அமைச்சர்கிட்ட, 'அற்புதமான மண்ணு, பல வகையான மரப்பயிர்களை சாகுபடி செய்யலாம். இந்தப் பகுதி விவசாயிகளுக்காக ஒரு இயற்கை விவசாய மாதிரிப் பண்ணையைக்கூட உருவாக்கலாம்’னு சொன்னாரு அண்ணாச்சி.

'மிஸ்டர் நம்மாழ்வார், எனக்கு வயசாயிடுச்சு. என்னோட பையன் குடிக்கு அடிமையா இருக்கான். அதனால, ரெண்டு, மூணு வருஷத்துல லட்சக் கணக்குல வருமானம் வர்றமாதிரி சொல்லுங்க. மரம் வளர்ந்து, எப்போ வருமானம் கிடைக்குறது. மாதிரிப் பண்ணையால எனக்கு என்ன லாபம்?'னு அந்த முன்னாள் சொல்லி முடிக்கிறதுக்குள்ளவே, வேகமா எழுந்து வெளியில போயிட்டாரு அண்ணாச்சி. கூடவே ஓடிவந்த என்கிட்ட, 'ரங்கு, தான் நடுற மரத்துல இருந்து தன்னோட காலத்துல பலனை அனுபவிக்க முடியாதுனு தெரிஞ்சுதான் நம்ம, பாட்டன், முப்பாட்டன் எல்லாம் மரம் நட்டாங்க. ஆனா, பணத்துக்காக மட்டும்தான் மரத்தை வளர்ப்பேன்னு, யாராவது சொன்னா, அந்த மனுஷனோட நிழல்லகூட என்னால நிக்க முடியாதுனு சொல்லிட்டார்'' என்று நிறுத்திய ரங்கநாதன், அருகில் இருந்த நம்மாழ்வாரின் படத்தின் மீது பார்வையை கொஞ்சம் பதித்தபடியே தொடர்ந்தார்.

நான் நம்மாழ்வார் பேசுகிறேன்

ஒற்றை நாற்றுக்கு மறுவிதை போட்டவர்!

''ஒத்தை (ஒற்றை) நடவு... பட்டிதொட்டியெல்லாம் இப்ப பரவியிருக்கு. இதுக்கு மூலக்காரணம், அண்ணாச்சிதான். 2000-ம் வருஷம், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பகுதி கிராமப்புற பள்ளிகள்ல, படிப்பை பாதியில விட்ட பசங்களுக்கு, டி.வி.எஸ் கல்வி நிறுவனத்துல விவசாயப் பாடம் உருவாக்குற பொறுப்புல அண்ணாச்சி இருந்தார். அந்த சமயத்துலதான், மடகாஸ்கர் தீவுல ஒத்தை நாத்து நடவு மூலமா, அதிக நெல் விளைச்சல் கிடைச்சது தொடர் பான கட்டுரை இருந்த இங்கிலீஷ் பேப்பர், அண்ணாச்சி கையில கிடைச்சிருக்கு. அதைப் படிச்சவுடனே, ஒத்தை நாத்து நடவு வேலையை அங்கேயே ஆரம்பிச்சுட்டாரு. தமிழ்நாட்டுல முதன்முதலா, ஒத்தை நாத்து நடவு செஞ்சது யாருனு தெரிஞ்சா ஆச்சர்யமா இருக்கும். டி.வி.எஸ். கல்வி நிறுவனத்துல இருந்த, 15 வயசுகூட நிரம்பாத பசங்கதான்.... ஒத்தை நாத்தை நடவு பண்ணி, ஒத்தை நாத்துப் புரட்சியைத் தொடங்கி வைச்சாங்க. அந்த விளைச்சலைப் பார்க்க, எங்களையும் ஓசூருக்கு அண்ணாச்சி கூப் பிட்டாரு.

நான் நம்மாழ்வார் பேசுகிறேன்

'நூறு வருசத்துக்கு முன்னயே தமிழ்நாட்டுல ஒத்தை நாத்து நடவு முறை இருந்திருக்கு'னு அண்ணாச்சியே பசுமை விகடன்ல எழுதியிருக்காரு. மறுபடியும், அந்த ஒத்தை நாத்து நுட்பம் இங்க வளர்றதுக்கு அண்ணாச்சியோட பங்கு முக்கியமானது. ஆனா, ஒரு தடவைகூட, தன்னோட முயற்சியிலதான், இந்த அளவுக்கு ஒத்தை நாத்து தொழில்நுட்பம் வளர்ந்திருக்குனு அண்ணாச்சி சொல்லிக்கிட்டது கிடையாது.

'ஒத்தை நாத்தை 'அரியனூர்’ ஜெயச்சந்திரன், முருகமங்கலம் சம்பந்தம் பிள்ளை, ஆந்திராவுல நாகரத்தினம் நாயுடுனு பல பேரு நட்டிருக்காங்க.  அவங்களுக்கெல்லாம் அதிகமான விளைச்சல் கிடைச்சிருக்கு'னு விவசாயிகளைத்தான் அண்ணாச்சி முன்னிலைப்படுத்தினாரு. அவர் எந்த கூட்டத்துல கலந்துகிட்டாலும், தவறாம ஒத்தை நாத்து நடவு பத்தின விஷயத்தை, விவசாயிங்க மனசுல விதைக்க ஆரம்பிச்சுடுவாரு. அதனோட பலனைத்தான் நம்ம விவசாயிங்க அதிக விளைச்சலோட அறுவடை செய்துக்கிட்டு இருக்காங்க.

ஈரோட்டுக்கு இடம் மாறிய அண்ணாச்சி!

ஒரு கட்டத்துல அண்ணாச்சிக்கும், டி.வி.எஸ் கல்வி நிறுவனத்துக்கும் இயற்கை விவசாயப் புத்தகம் உருவாக்குற விஷயத்துல கருத்து வேறுபாடு உருவாயிடுச்சு. அதனால, அங்கிருந்து ஈரோடுக்குக் கிளம்பிட்டாரு அண்ணாச்சி. ஏற்கெனவே, ஈரோடு மாவட்டத்துல இருந்த, அறச்சலூர் செல்வத்தோட, அண்ணாச்சிக்கு நட்பு இருந்திச்சு. அதனால, இயற்கை விவசாய வேலையை அண்ணாச்சி, அங்கு இருந்து இன்னும் வேகமா செய்ய ஆரம்பிச்சாரு'' என்று முடித்தார் ரங்கநாதன்.

தந்தை பெரியார் வாழ்ந்த ஈரோட்டு மண்ணில்... மீண்டும் ஒரு புரட்சி வெடிக்கிறது. ஆம்... இது இயற்கை விவசாயப் புரட்சி. தாடி வைத்த உருவத்தில் மட்டுமல்ல, கொண்ட கொள்கையிலும்கூட பெரியாருக்கும், நம்மாழ் வாருக்கும் பலவித பொருத்தங்கள் உண்டு. மஞ்சள் விளையும் அந்த பூமியில், இயற்கை விவசாயப் பணிகளுக்காக நம்மாழ்வார் சுற்றிச்சுழன்ற நாட்கள்... ஆகா!

- பேசுவார்கள்
சந்திப்பு: பொன். செந்தில்குமார்

'இயற்கை உங்களை வாழ வைக்கும்!'

''ஒருதடவை, பொலம்பாக்கம், முத்துமல்லா ரெட்டியார் அறக்கட்டளையோட இணைஞ்சு, இயற்கை விவசாய விழிப்பு உணர்வுப் பேரணியை, சைக்கிள் மூலம் நடத்தினோம். மதுராந்தகத்துல சைக்கிளை நிறுத்தி, மைக் புடிச்சு அண்ணாச்சி பேச ஆரம்பிச்சாரு. கடைத்தெருவுல இருக்கிறவங்க கூடி நின்னு, வேடிக்கைப் பார்க்கிறாங்க. சென்னைக்குப் போற அரசு பஸ்ல இருந்து இறங்கின ஒரு டிரைவர், ஓடிவந்து அண்ணாச்சி கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்கிட்டு... ஓரமா நின்னாரு. பஸ்ல இருந்த பயணிங்க... 'யோவ், டிரைவர் உனக்கு என்ன பைத்தியம் புடிச்சிருக்கா...

நான் நம்மாழ்வார் பேசுகிறேன்

வண்டியை நிறுத்திட்டு வேடிக்கைப் பார்க்கிறீயே'னு சத்தம் போடறாங்க. ஆமாம்யா, எனக்கு இயற்கை விவசாயப் பைத்தியம் புடிச்சிருக்கு. இந்த மனுஷனை சந்திக்கணும்னு தவம் கிடந்தேன். இவரைத்  பாக்குற பாக்கியம் எப்போ கிடைக்குமோனு இருந்தேன்... மண்ணைக் காப்பாத்த வந்த சாமி இது. நீங்களும் இந்த சாமி சொல்ற நுட்பத்தைக் கேளுங்கய்யா. என்னோட வேலையே போனாலும், அவரு பேசுறதை முழுசா கேட்டு முடிக்காம வரமாட்டேன்’னு டிரைவர் பதில் சொன்னாரு.

அது, திருச்சி-சென்னை நெடுஞ்சாலைங்கிறதால கொஞ்ச நேரத்துல போக்குவரத்து நெரிசல் ஏற்பட ஆரம்பிச்சிருச்சு. அந்த டிரைவரை பக்கத்துல கூப்பிட்டு கட்டிப்புடிச்சுகிட்ட அண்ணாச்சி, 'கடமையைச் செய்யுங்க... இயற்கை உங்களை வாழ வைக்கும்'னு வாழ்த்து சொல்லி உடனடியா அனுப்பி வெச்சாரு. அந்த டிரைவர் வேற யாருமில்ல... இப்ப மரம் வளர்ப்புல தீவிரமா இருக்கிற 'மரம்’ கருணாநிதிதான்.''