Published:Updated:

மண்புழு மன்னாரு

தண்ணீரில் இத்தனை வகைகளா? ஓவியம்: ஹரன்

மண்புழு மன்னாரு

தண்ணீரில் இத்தனை வகைகளா? ஓவியம்: ஹரன்

Published:Updated:

மாத்தி யோசி

மாமன்னர் அக்பரும், அவரது மந்திரி பீர்பாலும் அரண்மனைத் தோட்டத்தைச் சுத்திப்பார்க்கப் போனாங்க. அப்போ, ''நம்நாட்டில் எந்தத் தொழிலை அதிக மக்கள் செய்கிறார்கள்... விவசாயமா, வியாபாரமா, படைத்தொழிலா?''னு அக்பர் கேட்டாரு.

உடனே, ''அதிகப்படியானோர் மருத்துவர் வேலைதான் செய்கிறார்கள்''னு பதில் சொன்னாரு பீர்பால்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதைக்கேட்டதுமே மூக்கு மேல கோபம் வந்துடுச்சு அக்பருக்கு. ''நாட்டின் பிரதான தொழில் விவசாயம்தான். நீயோ மருத்துவர்கள்தான் அதிகமாக இருக்கிறார்கள் என்று சொல்கிறாய். உனக்கு சித்தம் எதுவும் கலங்கிவிடவில்லையே?''னு கடுகடுத்தாரு.

''இல்லை மன்னா... நீங்கள் கேட்ட கேள்விக்கு, சரியான பதிலைத்தான் சொல்கிறேன்''னு விடாக்கண்டன் கணக்கா சொன்னாரு பீர்பால்.

''வரவர உனக்கு மூளை மழுங்கிக்கொண்டே போகிறது'னு கோபமா சொல்லிட்டு, அந்தபுரத்துக்குப் போயிட்டாரு அக்பர்.

மறுநாள் அரசவைக் கூட்டத்துக்கு, மந்திரிங்க எல்லாரும் வந்துட்டாங்க... பீர்பால் தவிர.

''பீர்பால் எங்கே?''னு கேட்டாரு அக்பர்.

''அவருக்குக் கடுமையான காய்ச்சல். அதனால் வரவில்லை என்று தகவல் வந்துள்ளது அரசே''னு பதில் சொன்னாங்க.

மண்புழு மன்னாரு

''சாதாரண காய்ச்சலுக்காகவா, அரசவைக் கூட்டத்தைப் புறக்கணிக்கிறார். சுக்கு கஷாயம் போட்டு குடித்துவிட்டால், காய்ச்சல் போய்விடப் போகிறது''னு சொல்லி, பக்கத்துல இருந்த சேவகனைக் கூப்பிட்டு, ''உடனே சென்று பீர்பாலை அழைத்து வா''னு உத்தரவு போட்டாரு அக்பர்.

கொஞ்ச நேரத்துல கம்பளியை, சுருட்டிப் போத்திக்கிட்டு, நடுங்கிக்கிட்டே வந்த பீர்பாலைப் பார்த்த அக்பர், ''உனக்கு நடுங்குகிறதே. குளிர்காய்ச்சலாக இருக்கும். இதற்கு நீ சுக்குடன், கொஞ்சம் கொத்தமல்லியையும் சேர்த்து...''னு சொல்ல ஆரம்பிச்சதும், ''நூற்று நாற்பத்தேழு''னு சொன்னாரு பீர்பால்.

அக்பர், ஒண்ணும் புரியாம, ''என்னது நூற்று நாற்பத்தேழு?''னு கேட்டாரு.

''மன்னா, இன்று காலையில் காய்ச்சல் என்று நான் சொன்னதில் இருந்து, என் மனைவி, பக்கத்து வீட்டுக்காரர், தெருவில் பார்த்தவர்கள், வாயில் காப்போன், அரண்மனை சேவகன் என இதுவரை நூற்று நாற்பத்தாறு பேர் வைத்தியம் சொல்லி இருக்கிறார்கள். இப்போது அரசர் வேலையை விட்டுவிட்டு, நீங்களும் வைத்தியர் வேலை செய்ய வந்துவிட்டீர்கள். ஆக, நம்நாட்டில் எந்தத் தொழிலை அதிக மக்கள் செய்கிறார்கள் என்பது மன்னருக்கே விளங்கியிருக்கும்''னு பீர்பால் சொன்னதும், அவரோட மதிநுட்பத்தைப் பாராட்டிப் பரிசு கொடுத்தாராம் அக்பர்.

மருத்துவர்னு தனியா ஒண்ணும் தேவையில்ல. நமக்கு நாமே மருத்துவர்ங்கிற கணக்கா, ஒவ்வொருத்தருமே உடம்பைப் பத்தி தெரிஞ்சு வெச்சுருக்கிறதுதான் நல்லது. இதைத்தான் அந்தக் காலத்துல நம்ம முன்னோருங்க செய்துக்கிட்டிருந்தாங்க. தனக்குத் தானே வைத்தியமும் பார்த்துக்கிட்டிருந்தாங்க. ஆனா, நாடு முழுக்க இருந்த இந்த மருத்துவ அறிவு, கம்ப்யூட்டர் காலத்துல கொஞ்சம், கொஞ்சமா சரிஞ்சுடுச்சுங்கிறதுதான் வேதனை. நம்மநாட்டு பாரம்பரிய மருத்துவ அறிவுபோல, வேற எந்த நாட்டுலயும் இருக்கிறதுக்கு வாய்ப்பு குறைவு. உதாரணத்துக்கு ஒரு விஷயத்தைப் பார்க்கலாம்.

தண்ணியில, எத்தனை வகை இருக்குனு கேட்டா... நல்ல நீர், உப்பு நீர்னு சொல்லுவோம். ஆனா, பல நூறு வருஷத்துக்கு முன்ன வாழ்ந்த தேரையர் சித்தர்... 18 வகை நீர் இருக்கிறதா சொல்லியிருக்கிறாரு. 1. மழைநீர், 2. ஆலங்கட்டிநீர், 3. பனிநீர், 4. ஆற்றுநீர், 5. குளத்துநீர், 6. ஏரிநீர், 7. சுனைநீர், 8. ஓடைநீர், 9. கிணற்றுநீர், 10. ஊற்றுநீர், 11. பாறைநீர், 12. அருவிநீர், 13. அடவிநீர், 14. வயல்நீர், 15. நண்டுக்குழிநீர், 16. உப்புநீர், 17. சமுத்திரநீர், 18. இளநீர்... இப்படியிருக்கிற இந்த நீர் ஒவ்வொண்ணுக்கும் வெவ்வேற மருத்துவத் தன்மைங்க இருக்குது.

எந்த மண்ணுல விளையுற காய்கறிகளை, எப்படி சாப்பிடணும்னு 'பதார்த்த குண சிந்தாமணி’ நூல்ல விளக்கமா எழுதி வெச்சிருக்காரு தேரையர் சித்தர். .

ஒவ்வொரு  தண்ணிக்கும், ஒரு குணம் உண்டு. உதாரணத்துக்கு ஒரு விஷயத்தைச் சொல்றேன்... இன்னிக்கும்கூட குளூக்கோஸ் கிடைக்காத சமயத்துல, அவசர சிகிச்சைக்கு இளநீரை மனித உடம்புல ஏத்துற ஆங்கில மருத்துவருங்க உண்டு. ஆடு, மாடுகளுக்கு அவசர சிகிச்சை செய்யும்போதும், இளநீரை, குளூக்கோஸுக்கு பதிலா கொடுக்கிறாங்க. இந்த இளநீரை மரத்துல இருந்து கயிறு கட்டித்தான் இறக்கணும். ஏன்னா, இளநீர் 'பொத்’னு கீழ விழுந்தா கலங்கிடும். கலங்குன இளநீரை உடம்புக்குள்ள செலுத்தினா ரத்தக் குழாயில அடைச்சுடும். ஆக, ஒரு மருத்துவத்தை எப்படி செய்யணும்ங்கிற மருத்துவ அறிவு நம்மநாட்டு மக்களோட எந்த அளவுக்கு இருந்திருக்கும்ணு நினைச்சுப் பாருங்க!