Published:Updated:

மீத்தேன் எமன் - பாலைவனமாகும் பரிதாப டெல்டா

காவிரி டெல்டாவின் கருப்பு தினங்கள்...ஓவியம்: செந்தில், படம்: கே. குணசீலன்கு. ராமகிருஷ்ணன்

மீத்தேன் எமன் - பாலைவனமாகும் பரிதாப டெல்டா

காவிரி டெல்டாவின் கருப்பு தினங்கள்...ஓவியம்: செந்தில், படம்: கே. குணசீலன்கு. ராமகிருஷ்ணன்

Published:Updated:

போராட்டம்

சிறுவர் பூங்காவில் துள்ளி விளையாடி, குழந்தைகளை மகிழ்வித்த புள்ளிமான் ஒன்றை திருடிச் சென்றான், சர்க்கஸ் முதலாளி. அதை, நெருப்பில் நடக்க வைத்தும், தலைகீழாகத் தொங்க விட்டும் சாகசம் காட்டினான். அதன் கொம்புகளை அறுத்து விற்பனை செய்தான். உடல் முழுவதும் ரணமாகி கிடந்த அந்த புள்ளிமான், தனக்கு எப்போது விடுதலை கிடைக்கும் என ஏங்கி தவித்துக் கொண்டிருந்த நிலையில்... அதனைக் கொன்று, பெரும் செல்வந்தர் ஒருவருக்கு விருந்து வைத்து, அதன் தோலை பெரும் தொகைக்கு விற்பனை செய்தான்.

இந்த புள்ளிமான் நிலையில்தான் காவிரி டெல்டா கிராமங்கள் உள்ளன. ஒ.என்.ஜி.சி.-யின் பெட்ரோல்-கேஸ் கிணறுகளால் ரணமாகிக் கிடக்கும் காவிரி டெல்டா கிராமங்களை ஒட்டுமொத்தமாகக் கொன்று, மீத்தேன் வாயுவையும் நிலக்கரியையும் எடுத்து பன்னாட்டு நிறுவனங்களுக்கு விருந்து வைக்கத் துடிக்கிறார்கள், நம் ஆட்சியாளர்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

29.07.2010, 04.01.2011... இந்த இரண்டு தினங்கள், காவிரி டெல்டாவின் கருப்பு தினங்கள் என இங்குள்ள மக்களுக்கு அப்போது தெரியாது. மீத்தேன் திட்டம் எனும் எமன், 'தி கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி’ என்ற வாகனத்தில் ஏறி, காவிரி டெல்டா கிராமங்களைச் சூறையாட... மத்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் உரிமம் வழங்கிய நாள் 2010-ம் ஆண்டு, ஜூலை 29-ம் தேதி. தமிழ்நாட்டின் துணை முதல்வராக இருந்த மு.க. ஸ்டாலின் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, மீத்தேன் எமனுக்கு சிகப்பு கம்பளம் விரித்த நாள் 2011-ம் ஆண்டு, ஜனவரி 4-ம் தேதி.

மீத்தேன் எமன் - பாலைவனமாகும் பரிதாப டெல்டா

மனிதனின் வாயில் கத்தியை நுழைத்து, உடலுக்குள் இருக்கும் இதயம், குடல் உள்ளிட்ட அனைத்து பாகங்களையும் வெளியில் எடுத்து வீசினால் என்ன நடக்கும்? உயிரற்ற சடலம்தான் மிஞ்சும். புதுச்சேரி அருகே உள்ள பாகூர் தொடங்கி, நெய்வேலி, ஜெயங்கொண்டம், வீராணம், திருவிடைமருதூர், ஒரத்தநாடு, குடவாசல், வலங்கைமான், நீடாமங்கலம், மன்னார்குடி உள்ளிட்ட இன்னும் பல பகுதிகளில் உள்ள கிராமங்களைக் குதறிப்போட்டு, 98 ஆயிரம் கோடி கன அடி கொண்ட மீத்தேன் வாயுவையும்... 29 ஆயிரத்து 389 மில்லியன் டன் பழுப்பு நிலக்கரியும் எடுக்க 'தி கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி’ நிறுவனம் உரிமம் பெற்றுள்ளது. கடைத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைத்த கதையாக... காவிரி டெல்டா மக்களின் நிலத்தையும் தண்ணீரையும், கனிம வளங்களையும் அந்த நிறுவனத்துக்கு ஆட்சியாளர்கள் தாரை வார்த்துக் கொடுத்திருக்கிறார்கள்.

'மீத்தேன் எடுக்க ஒரு லட்சத்து 66 ஆயிரத்து 210 ஏக்கரில்... இரண்டாயிரம் கிணறுகள் அமைக்கப்படும்’ என்பது, வெறும் புள்ளி விவரக்கணக்கு அல்ல. நம் வயிற்றில் புளியை கரைக்கக்கூடிய, நெஞ்சைப் பதற வைக்கும் பேரிடி இறங்கும் துயரச் செய்தி. 'ஒவ்வொரு கிணறும் 500 முதல் 1,650 அடி ஆழத்துக்கு தோண்டப்பட்டு, பக்கவாட்டுப் பகுதியில் எட்டு திசையிலும் பல கிலோமீட்டர் தூரத்துக்கு குழாய்களைச் செலுத்தி, தண்ணீரை முழுவதுமாக உறிஞ்சி வெளியேற்றிக் கொண்டே இருப்பார்கள்’ என இத்திட்டத்தின் அதிர்ச்சிகரமான தொழில்நுட்பங்களை அம்பலப்படுத்துகிறார், மின்நிலைய கட்டுமானப் பொறியாளராக பணியாற்றி விருப்ப ஓய்வுபெற்ற திருநாவுக்கரசு. மீத்தேன் திட்டத்தை எதிர்த்து போராடும் முதன்மையான களப்போராளிகளில் இவரும் ஒருவர்.

மீத்தேன் எமன் - பாலைவனமாகும் பரிதாப டெல்டா

''எரிவாயு தேவைக்காக... காவிரி டெல்டாவில் பூமிக்குள் புதைந்திருக்கும் நிலக்கரிப் படிமங்களில் இருந்து மீத்தேன் எரிவாயு எடுப்பதற்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளதாக, பெட்ரோலிய அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. நிலக்கரி படிமங்களில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் குவியலாக, செறிவாக மீத்தேன் இருந்தால்... அந்தப்பகுதியை மட்டும் குறிவைத்து ஓரளவுக்கு எளிதாக உறிஞ்சி எடுத்து விடலாம். ஆனால், மீத்தேன் வாயு அதுபோல் அமைந்திருக்காது. நிலக்கரிப் படிமத்தில், அதன் நுண்துளைகளிலும், வெடிப்புகளின் உள்ளேயும் ஊடுருவி பின்னிப் பிணைந்திருக்கும். நிலக்கரிப் படிமங்களை அழுத்திக் கொண்டிருக்கும் நிலத்தடி நீரை முழுமையாக இறைத்து வெளியேற்றினால்தான், அந்த வாயுவை வெளியில் கொண்டு வர முடியும். தண்ணீரை உறிஞ்சி வெளியில் எடுப்பதற்கு, இவர்கள் பயன்படுத்தும் ராட்சத இயந்திரம், நிலத்தின் உள்ளேயும் வெளியிலும் மிகப்பெரும் அதிர்வை உருவாக்கும்.

தினமும் ஒரு கிணற்றில் இருந்து 75 ஆயிரம் லிட்டர் தண்ணீர் வெளியேற்றப்படும். 35 ஆண்டுகளுக்கு மீத்தேன் எடுக்கப்படுகிறது என்றால், அதுவரையிலும் தினந்தோறும் நிலத்தடி நீரை வெளியேற்றித்தான் ஆகவேண்டும். காரணம் ஏதேனும் ஒரு பகுதியில் இருந்து தண்ணீர் ஊறி அந்த கிணறுக்கு வந்து கொண்டே இருக்கும். ஒரு கிணற்றில் இருந்து 75 ஆயிரம் லிட்டர் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது என்றால், 2 ஆயிரம் கிணறுகளுக்கு கணக்குப் பார்த்துக் கொள்ளுங்கள். இதனை 35 ஆண்டுகளுக்கு கணக்கிட்டுப் பார்த்தால் நெஞ்சம் பதறும். நிலத்தடி நீர் முழுமையாக வற்றிப் போய், காய்ந்து போன கருவாடாக, காவிரி டெல்டா கிராமங்கள் மாறும். நிலத்தடி நீர்த்தொகுப்புகள் அனைத்தும் வறண்டு போகும். கடல் நீர், காவிரிப் படுகையின் உள்ளே ஊடுருவி உலா வரும். இது ஒருபுறமிருக்க... அதிக ஆழத்தில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரில் பல வகையான மாசுக்களும் நச்சுத்தன்மை வாய்ந்த ரசாயனமும் நிறைந்திருக்கும். குறிப்பாக, குளோரைடு, சோடியம், சல்ஃபேட், பை-கார்பனேட், ஃபுளுரைடு, இரும்பு, பேரியம், மக்னீசியம், அமோனியா... என பல பொருட்களும், பலவித நீர்கரிமப் பொருட்களும், கதிரியக்கக் கழிவுகளும் அதிகளவில் இருக்கும். இந்த தண்ணீரை வாய்க்கால்களிலும், வயல்களிலும், குளங்களிலும் விடுவார்கள். இதனால் நீர்நிலைகள், நஞ்சாவதோடு மட்டுமல்லாமல், விளைநிலங்கள் எல்லாம் மலடாகிப் போகும்'' என்கிறார், திருநாவுக்கரசு.

இதனால் நீங்கள் பேரதிர்ச்சியில் எல்லாம் இப்போதே உறைந்துவிட வேண்டாம். மீத்தேன் திட்டம் என்கிற, மதம் கொண்ட காட்டு யானையின் பிளிறல் சத்தத்தை மட்டும்தான், இதுவரை கேட்டுள்ளீர்கள். வெறிபிடித்த அந்த யானை, ஊருக்குள் புகுந்து உங்கள் கண் முன்னால், துவம்சம் செய்யும் காட்சிகளை இனிதான் பார்க்கப் போகிறீர்கள்.  

- பாசக்கயிறு நீளும்... 

 'விலங்குகளுக்கு இருக்கிற மரியாதை கூட விவசாயிகளுக்கில்லை!'

 அரசு துறைகளில் உயர் பதவிகளை வகித்த அதிகாரிகள், ஓய்வுக்குப் பிறகும் கூட, அரசின் தவறான நடவடிக்கைகளை விமர்சிக்கத் தயங்குவார்கள். 'நமக்கு ஏன் வீண்வம்பு?’ என பெரும்பாலும் அடக்கியே வாசிப்பார்கள். ஆனால், தமிழ்நாடு பொதுப்பணித்துறையின் மூத்த பொறியாளர்கள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள், மீத்தேன் திட்டத்துக்கு எதிராக துணிவுடன் களம் இறங்கி, திருச்சியில் மீத்தேன் எடுப்பு எதிர்ப்புக் கருத்தரங்கம் நடத்தினார்கள். இவர்கள் தயாரித்த ஆவணப்படம் மற்றும் குறுநூலை தமிழ் தேசிய பேரியக்கத்தின் தலைவர்.

பெ. மணியரசன் வெளியிட... பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முத்துக்குமரன், முன்னாள் தலைமை பொறியாளர்களான வீரப்பன், பரந்தாமன், ரெங்கராமானுஜம், சுப்ரமணியம், தமிழ்நாடு மின்வாரிய முன்னாள் பொறியாளர்கள் சங்க தலைவர் காந்தி, இதயநோய் மருத்துவர் பாரதிச்செல்வன், மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன், மே-17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, விவசாயிகள் சங்க பிரதிநிதிகளான காவிரி தனபாலன், மணிமொழியன் உள்ளிட்டவர்கள் பெற்றுக் கொண்டனர்.

மீத்தேன் எமன் - பாலைவனமாகும் பரிதாப டெல்டா

நிகழ்ச்சியில் நிறைவுப் பேரூரையாற்றிய பெ. மணியரசன், ''அறிவியல் மனிதனுக்கு கட்டுப்பட்டதாக இருக்க வேண்டும். அறிவியலுக்கு மனிதன் கட்டுப்பட்டு இருக்கக் கூடாது. அது ஆபத்தானது. வளர்ச்சி என்பது மனிதகுலத்துக்கான வளர்ச்சியா? தொழிற்சாலைகளின் வளர்ச்சியா? மனிதர்களுக்காகத்தான் உற்பத்திப்பொருட்கள். ஆனால், இங்கு உற்பத்திப்பொருட்களுக்கு ஏற்ற வகையில், மக்களை மாறச் சொல்கிறார்கள். சந்தைக் கும்பலாகவும், ஓட்டு மந்தைகளாகவும்தான் மக்களை ஆட்சியாளர்கள் பார்க்கிறார்கள். பறவைகள், வனவிலங்குகள் இருக்கக்கூடிய பகுதிகளை சரணாலயம் என்ற பெயரில் பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவித்து ஆட்சியாளர்கள் சட்டம் இயற்றுகிறார்கள். அது பாராட்டுக்குரியது. ஆனால், விவசாயிகளின் வாழ்விடமான காவிரி டெல்டாவைப் பாதுகாக்க மறுக்கிறார்கள். மீத்தேன் திட்டத்துக்கு காவிரி டெல்டாவை பழி கொடுக்க ஆட்சியாளர்கள் துடிக்கிறார்கள். பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் கிடைக்கும் மரியாதைகூட, இங்கு விவசாயிகளுக்குக் கிடைக்கவில்லை.

'மீத்தேன்தான் முக்கியமானது’ என்கிறார்கள், அறிவுஜீவிகள். 'திருச்சியில் பூமிக்கடியில் தங்கம் கிடைக்கிறது’ என்றால் இங்குள்ள மக்களை எல்லாம் ஒட்டுமொத்தமாக வெளியேற்றிவிட முடியுமா? ஆய்வு செய்து பார்த்தால்... உலகின் பெரும்பாலான பகுதிகளில், ஏதேனும் ஒர் கனிம வளம் இருக்கதான் செய்யும். அனைத்துக்கும் ஆசைப்பட்டால்... மக்கள் வாழ, இந்த உலகில் எங்குமே இடமே இருக்காது'' என்று நிதர்சனத்தை நெஞ்சில் அறைந்து புரிய வைத்தார்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism