Published:Updated:

ஏக்கருக்கு 2.5 லட்சம்...

இயற்கை மாதுளை தரும் இனிப்பான லாபம்!குறைந்த தண்ணீர்... நிறைவான மகசூல்..!

ஏக்கருக்கு 2.5 லட்சம்...

இயற்கை மாதுளை தரும் இனிப்பான லாபம்!குறைந்த தண்ணீர்... நிறைவான மகசூல்..!

Published:Updated:

'திட்டமிட்டு முறையான தொழில்நுட்பங்களைச் செயல்படுத்தினால், விவசாயம் போல கொட்டிக் கொடுக்கும் தொழில் வேறு எதுவும் இல்லை’ என்பதை நிரூபித்து வருகிற விவசாயிகள் பலர் உண்டு. இப்படிப்பட்டவர்களை 'பசுமை விகடன்’ தொடர்ந்து அடையாளம் காட்டி வருகிறது. இந்த வரிசையில் இணைகிறார்... கேரள மாநிலம், எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்த குரியன் ஜோஸ். இவர், இயற்கை முறையில் மாதுளை சாகுபடி செய்து மகத்தான லாபம் ஈட்டி வருகிறார்.

தமிழகத்தின் தேனி மாவட்டம், கூடலூர் அருகேயுள்ள கழுதைமேடு பகுதியில், பொட்டல்காடாக இருந்த நிலத்தை வாங்கி, கடந்த ஐந்து ஆண்டுகளில் கடின உழைப்பின் மூலம் எழில்கொஞ்சும் தோட்டமாக மாற்றியிருக்கிறார், குரியன் ஜோஸ். வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள், தங்களின் பயணத்தினூடே இவருடைய பண்ணையையும் பார்வையிட வருமளவுக்கு, இயற்கை விவசாயத்தை முன்னெடுத்திருக்கிறார்... குரியன்.

தென்மேற்குப் பருவக்காற்று சிலுசிலுக்கும் கூடலூர்-குமுளி தேசிய நெஞ்சாலையில், ஏழாவது கிலோ மீட்டரில் இருக்கிறது, தம்மனம்பட்டி விலக்கு. வலது பக்கம் பிரியும் தார் சாலையில், மூன்றரை கிலோ மீட்டர் தூரம் பயணித்தால் வருகிறது, கழுதைமேடு. சுற்றிலும் மலைகளால் சூழப்பட்ட இயற்கை எழில்கொஞ்சும் பள்ளத்தாக்கு. வேலியில் பச்சைநிற நிழல் வலை சுற்றப்பட்ட 'ஹார்வெஸ்ட் ஃபிரஷ்’ பண்ணை வரவேற்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஏக்கருக்கு 2.5 லட்சம்...

அன்று மானாவாரிக் கரடு... இன்று மாதுளைத் தோட்டம்!

கொஞ்சும் தமிழ் கலந்த மலையாளத்தில் நம்மிடம் பறையத் தொடங்கிய குரியன், ''எர்ணாகுளத்துல எக்ஸ்போர்ட் பிசினஸ் செய்றேன். இருந்தாலும், கிருஷி (விவசாயம்) ஆர்வம் உண்டு. குமுளி, மூணாறுனு கேரளாவை ஒட்டிய பகுதியா இருக்கறதால தேடி அலைஞ்சு இந்த இடத்தை வாங்கினேன். தண்ணிக்கு பஞ்சம் இல்லை. சூழல் அதிகம் மாசுபடாத பகுதி. சுற்றிலும் மலைப்பகுதியா இருக்கறதால பாக்கவே ரம்யமா இருக்கும். அஞ்சு வருஷத்துக்கு முன்ன வாங்கும்போது பொட்டல்வெளி. இன்னிக்கு எப்படி மாறி இருக்குனு பாருங்க.

இந்த இடத்தை வாங்கினதும் இயற்கை விவசாயம்தான்னு முடிவு செஞ்சேன். மொத்தம் இருக்கிறது 35 ஏக்கர். இதுல கிட்டத்தட்ட 30 ஏக்கர்ல 10 ஆயிரம் மாதுளை செடிகள் இருக்கு. இதுல, 7 ஆயிரத்து 500 செடிகள்ல மகசூல் வந்துட்டு இருக்கு. ரெண்டு ஏக்கர்ல பப்பாளி இருக்கு. மத்த இடங்கள்ல பண்ணைக் குட்டை, மாட்டுக் கொட்டகை, பேக்கிங் ரூம், பணியாளர் குடியிருப்பு, பண்ணை வீடு, பறவைகளுக்கான கொட்டகை கள் இருக்கு. இதை முழுமையான ஒருங்கிணைந்தப் பண்ணையா வடிவமைச்சிருக் கோம்'' என்றபடி, மாதுளைத் தோட்டத்துக்குள் அழைத்துச் சென்றார்.

ஏக்கருக்கு 2.5 லட்சம்...

பராமரிப்பு தருமே பணம்!

''முழுக்க இயற்கை முறையிலதான் விளைவிக்கிறேன். அதனால, பழம் வெடிச்சு கீழே விழுந்துடுது. காய்களோட தோல் சொறிசொறியா இருக்கு. நம்ம ஆளுங்க கடைக்கு போனதும் 'பளபள’னு இருக்கற பழங்களைத்தான் முதல்ல எடுக்குறாங்க. ஆனா, அது ரசாயனத்துல விளைஞ்சதுங்கிறதை யோசிக்கறதில்ல. எங்க பழங்களை ஆரம்பத்துல வாங்கத் தயங்கினவங்க, உறிச்சுப் பாத்தவுடனே ஆச்சர்யமாகிடுவாங்க. அவ்வளவு தெளிவா, அழகான முத்துக்களோட ரத்தச் சிவப்புல இருக்கும். ருசியும் பிரமாதமா இருக்கும். இதைத் தெரிஞ்சுகிட்ட பிறகு, இப்ப கேரளாவுல இருக்கற கடைகள்ல எங்க பழத்துக்கு தனி கிராக்கி ஏற்பட்டுப் போச்சு. வெளிநாட்டு ஆர்டரும் கிடைச்சிருக்கு'' என்ற குரியன், ஒரு பழத்தைப் பறித்து உடைத்து காண்பித்தார். ரத்தச் சிவப்பில் சிரித்தன, மாதுளை முத்துக்கள். எடுத்து வாயில் போட்டவுடன், அசரடித்தது சுவை.

தொடர்ந்தவர், ''இந்த ரகத்துக்கு பேரு பக்வா. 12 அடிக்கு 10 அடி, 10 அடிக்கு 10 அடினு ஒவ்வொரு பகுதியிலும் வெவ்வேறு இடைவெளியில நடவு செஞ்சிருக்கோம். உலகளவுல இயற்கை முறையில மாதுளை சாகுபடி செய்ற நுட்பங்களை இன்டர்நெட் மூலமாகவும், சில வேளாண் அறிஞர்கள், ஆலோசகர்கள் மூலமாகவும் தெரிஞ்சுக்கிட்டு செயல்படுத்துறோம். மாதுளை ஒரு மென்மையான பயிர். இதை, கைக்குழந்தையைப் பராமரிப்பது போல பராமரிக்கணும். மாதுளை விவசாயத்தோட வெற்றி, தோல்வி ரெண்டுமே பராமரிப்புலதான் அடங்கியிருக்கு.

ஏக்கருக்கு 2.5 லட்சம்...

செடிக்கு 10 கிலோ!

'மாதுளையை வெச்சேன்... மகசூல் கிடைக்கல’னு புலம்புறவங்களைப் பாத்திருக்கேன். தண்ணி பாய்ச்சி, உரம் வெச்சா மட்டும் போதாது. எதிர்பார்த்தபடி பழம் கிடைக்கணும்னா... ஒவ்வொரு கட்டத்துலயும் அதுக்கு செய்ய வேண்டிய சாகுபடி முறைகளை, தொழில்நுட்பங்களைத் தெளிவா தெரிஞ்சுக்கிட்டு செய்யணும். நான் அதை சரியா செய்றதால உழைப்புக்கு ஏத்த ஊதியம் கிடைக்குது. ஒரு செடிக்கு வருஷத்துக்கு 200 ரூபாய் செலவாகுது. ஒரு செடியில இருந்து 10 கிலோ பழம் கிடைக்குது. ஒரு கிலோ சராசரியா 120 ரூபாய் வீதம், பத்து கிலோவுக்கு 1,200 ரூபாய் கிடைக்கும். செலவு 200 ரூபாய் போக, ஒரு செடி மூலமா வருஷத்துக்கு 1,000 ரூபாய் லாபம். 7 ஆயிரத்து 500 செடி மூலமா 75 லட்ச ரூபாய் லாபமா கிடைக்குது. ஏக்கருக்கு சராசரியா 2.5 லட்சத்துக்குக் குறையாம லாபம் வருகிறது'' என்று லாப கணக்குச் சொல்லி மகிழ வைத்தார், குரியன் ஜோஸ்.  

ஏக்கருக்கு 2.5 லட்சம்...

தொடர்புக்கு,
குரியன் ஜோஸ்,
செல்போன்: 093886-10249,
ஜான் தாமஸ் (மேலாளர்),
செல்போன்: 95780-72722

இயற்கை முறை மாதுளை சாகுபடி!

பண்ணையை முழுக்கப் பராமரிப்பவர், அதன் மேலாளர் ஜான் தாமஸ். அவரிடம் பேச்சுக் கொடுத்தபோது, ''எங்க பண்ணையில கேரளாவோட பாரம்பரிய ரகமான காசர்கோடு குட்டை, தமிழ்நாட்டோட பாரம்பரிய மாடான காங்கேயம்னு நாட்டு மாடுங்க பத்து இருக்கு. இந்த மாடுகளோட சிறுநீர், சாணத்தை வெச்சி ஜீவாமிர்தத்தை நாங்களே தயாரிச்சுக்கிறோம். பண்ணைக் கழிவுகள், தென்னை நார்க் கழிவை வெச்சி கம்போஸ்ட் தயாரிக்குறோம். மாட்டுச் சாணத்தைப் பயன்படுத்தி சமையல் எரிவாயு உற்பத்தி செய்றோம். எல்லா மரங்களுக்கும் மூடாக்கு போட்டிருக்கோம். தொழுவுரத் தையும், உயிரிப் பூச்சி கொல்லியையும் வெளியில இருந்து வாங்கிக்குவோம். அதனால சாகுபடிச் செலவு குறையுது. எங்க பண்ணைக்கு ஆர்கானிக் சான்றிதழும் இருக்கு'' என்ற ஜான் தாமஸ், மாதுளை சாகுபடி முறைகளைச் சொன்னார். அது இங்கே பாடமாக விரிகிறது.

ஏக்கருக்கு 2.5 லட்சம்...

'மாதுளை, களிமண்ணைத் தவிர அனைத்து மண்ணிலும் வளரும். 10 அடிக்கு 10 அடி இடைவெளியில் நடுவது சிறந்த முறை. 2 அடி சதுரம், 2 அடி ஆழத்துக்குக் குழியெடுத்து ஆறவைத்து... ஒவ்வொரு குழியிலும், 10 கிலோ தொழுவுரம், 5 கிலோ மண்புழு உரம் போட்டு செடியை நடவு செய்ய வேண்டும். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, ஒவ்வொரு செடிக்கும் 5 கிலோ மண்புழு உரம் வைத்து வரவேண்டும். மூன்றாம் மாதத்தில் இருந்து, வாரம் ஒரு முறை சொட்டு நீர்ப் பாசனத்துடன்,  ஏக்கருக்கு 200 லிட்டர் ஜீவாமிர்தக் கரைசலைக் கலந்து கொடுக்க வேண்டும். ஆறு மாதங்களில் செடிகளில் பூ எடுக்கத் தொடங்கும். ஆனால், அந்தப் பூக்களை உதிர்த்துவிட வேண்டும். குறைந்தது 24 மாதங்கள் முடிந்த பிறகே, காய்ப்புக்குவிட வேண்டும். அதற்கு முன்பாக காய்க்கவிட்டால், செடியின் வளர்ச்சி தடைபடும். ஆறாவது மாதம் செடியில் அதிகக் கிளைகள் இருக்கும். இந்தச் சமயத்தில், நன்கு தடிப்பான, வாளிப்பான நான்கு கிளைகளை மட்டும் வைத்துக்கொண்டு, மற்றவற்றைக் கவாத்து செய்ய (கழித்துவிட) வேண்டும். செடிகள் காய்க்க ஆரம்பிக்கும் வரை, ஆறு மாதங்களுக்கு ஒரு தடவை கவாத்து செய்ய வேண்டும். காய்க்க ஆரம்பித்த பிறகு, ஆண்டுக்கு ஒரு முறை கவாத்து செய்தால் போதுமானது.

ஒரு மாதம் ஒய்வு!

பூக்க ஆரம்பித்ததில் இருந்து, 160 முதல் 180 நாட்கள் கழித்துதான் பழத்தை அறுவடை செய்ய முடியும். ஒவ்வோர் ஆண்டும் செடிகளுக்கு ஓய்வுகொடுக்க வேண்டும். டிசம்பர் மாதத்தில் தண்ணீர் கொடுக்காமல், செடியை வாட விட வேண்டும். ஒரு மாதம் தண்ணீர் இல்லாமல் காய்ந்து போன நிலையில் இருக்கும்போது... ஜனவரி மாதம் தண்ணீரைக் கொடுக்க வேண்டும். இப்படி வாடவிட்டு தண்ணீர் கொடுப்பதால், செடியில் அதிக பூக்கள் பூத்து, நல்ல மகசூல் கிடைக்கும். ஜனவரி மாதத்தில் தண்ணீர் கொடுத்த பிறகு, பூக்கும் பூக்கள் காயாக மாறி, ஜூலை மாதத்தில் அறுவடைக்கு வரும். அதிலிருந்து, நவம்பர் மாதக் கடைசி வரை அறுவடை செய்யலாம். பிறகு ஓய்வு கொடுத்துவிட வேண்டும்.

ஏக்கருக்கு 2.5 லட்சம்...

மாதுளையை அதிகம் தாக்குவது, பழ ஈக்கள் மற்றும் சில பாக்டீரியாக்கள்தான். இதற்கு பயோ மருந்து அல்லது மூலிகைப் பூச்சிவிரட்டி தெளித்துக் கட்டுப்படுத்தலாம். சோலார் விளக்குப் பொறிகள், மஞ்சள் ஒட்டு அட்டைகள் வைத்தும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம். பழங்களில் சில நேரங்களில் கருப்புநிறத் துளைகள் இருக்கும். ''ஃப்ரூட் போரல்’ எனப்படும் இத்தாக்குதலைச் சமாளிக்க, 200 லிட்டர் தண்ணீரில், தலா 500 கிராம் டிரைக்கோ-டெர்மா விர்டி, சூடோமோனஸ் ஆகியவற்றைக் கலந்து தெளிக்கலாம்'' என்றார், ஜான் தாமஸ்.

பண்ணைச் சுற்றுலா!

தான் மட்டும் இயற்கை விவசாயம் செய்தால் போதாது. இந்தப் பகுதி விவசாயிகள் மற்றும் அனைத்து விவசாயிகளையும் இயற்கை விவசாயத்துக்கு மாற்ற வேண்டும். இயற்கை விளைபொருட்களின் அருமையை நுகர்வோர்கள் உணர்ந்துகொள்ளச் செய்ய வேண்டும் என்பது குரியனின் நோக்கம். இதற்காக, 'இயற்கை விவசாயப் பண்ணைச் சுற்றுலா’ திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறார். யார் வேண்டுமானாலும், இந்தப் பண்ணையில் வந்து தங்கி, தோட்டத்தில் பழங்களைப் பறித்து ருசித்துச் செல்லலாம். குழந்தைகளுக்கு இயற்கையுடனான பிணைப்பை ஏற்படுத்தலாம். மாட்டுவண்டி மூலமாக, இந்தப் பள்ளத்தாக்குப் பகுதியை சுற்றிவரலாம் என்பதற்காக, மதிய உணவு, மாட்டு வண்டிப் பயணம், பண்ணை வீடு என அனைத்தையும் ஏற்பாடு செய்திருக்கிறார். இதற்காகக் குறைந்த கட்டணத்தையே வசூல் செய்கிறார். வெளிநாட்டினர் பலரும் இதற்காகவே இங்கே ஆர்வத்துடன் வருகிறார்களாம், இயற்கை விவசாயத்தின் அருமையை உணர்ந்த வர்களாக!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism