Published:Updated:

சாதனை- 9 : தடுத்து நிறுத்தப்பட்ட மீத்தேன் திட்டம்!

மருத்துவர் பாரதிச்செல்வன்
பிரீமியம் ஸ்டோரி
News
மருத்துவர் பாரதிச்செல்வன்

மீத்தேன் - மருத்துவர் பாரதிச்செல்வன் ஆலோசகர், மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு

மீத்தேன், ஹைட்ரோ கார்பன்... போன்ற அழிவுத்திட்டங்களால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தியதில் பசுமை விகடனின் பங்கு போற்றுதலுக்குரியது. தமிழக அரசு பேரழிவுத் திட்டங்களிலிருந்து, உணவுக் கோப்பையான காவிரிப் படுகையைக் காப்பாற்ற, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலச் சட்டத்தை நிறைவேற்றியது. இதற்குக் காரணம் மக்களிடம் இத்திட்டங்களைப் பற்றி ஏற்பட்ட விழிப்புணர்வுமே ஆகும்.

தொடக்கத்தில் நம்மாழ்வார் தலைமையில் பேரிழப்புக்கு எதிரான பேரியக்கமும், பேராசிரியர் ஜெயராமன் தலைமையில் என் போன்றவர்கள் செயல்பட்ட மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பும், பிற இயக்கங்களும் மீத்தேன் திட்டத்திற்கு எதிராகக் களமாடின. அப்போது பசுமை விகடன் பேராயுதமாகத் திகழ்ந்தது.

சாதனை- 9 :  தடுத்து நிறுத்தப்பட்ட மீத்தேன் திட்டம்!

‘மீத்தேன் எமன்’ என்ற தலைப்பில் பசுமை விகடனில் வெளியிடப்பட்ட தொடர் கட்டுரை, பேரழிவுத் திட்டங்களால் ஏற்படும் ஆபத்துகளை, பாமரர்களுக்கும் புரியும் வகையில் மிகவும் எளிமையான நடையில் எடுத்துச் சொல்லியது. மீத்தேன் எடுக்கும் கோரமான தொழில்நுட்பத்தையும் பரிமாணத்தையும் படத்துடன் விளக்கியது. காவிரிப்படுகையில் செயல்பட்டுக்கொண்டிருந்த ஓ.என்.ஜி.சி-யின் எண்ணெய்-எரிவாயு கிணறுகளினால் நேர்ந்த பலவிதமான பாதிப்புகளை ஆழமாகப் பதிவு செய்தது. நீர்வளம், மண்வளம், காற்று நஞ்சாகிப்போனதை ஆதாரங்களோடு அம்பலப்படுத்தியது.

குழாய் வெடிப்பினால் இறந்துபோன மாணவன் ஆனந்தராஜ், உயிர் சாட்சியாய், கரிக்கட்டையாய் நடமாடிக்கொண்டிருக்கும் சேதுபதியையும் பதிவு செய்து பதைபதைக்க வைத்தது. இப்படியாக, என்னைப் போன்ற, மீத்தேன் திட்ட எதிர்ப்பு களச் செயற்பாட்டாளர்களுக்கு, மீத்தேன் எமன் தொடர், கருத்துப் போர்க்கருவியாகப் பயன்பட்டது.

மீத்தேன் தடுப்பு யுத்தத்தைப் பசுமை விகடன் அத்தொடரோடு நிறுத்திக்கொள்ளவில்லை. மக்களின் கவனத்தைத் திசை திருப்பக்கூடிய, மத்திய அரசின் ஏமாற்று நடவடிக்கைகளைத் தொடர்ந்து கண்காணித்து அம்பலப்படுத்திக் கொண்டே இருந்தது. தமிழக அரசு, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலச் சட்டம் இயற்றியபிறகும் கூட, அது நடைமுறைக்கு வராதது பற்றியும், அதைச் செயல்படுத்த செய்வதிலும் பசுமை விகடன் ஆற்றிவரும் பங்களிப்பைப் பார்க்கிறோம். மீத்தேன் திட்டம் மட்டுமில்லை. தமிழ்நாட்டில் எங்கு பிரச்னைகள் நடந்தாலும் குரல் கொடுப்பதில் முன்னணியில் இருக்கிறது பசுமை விகடன்.