Published:Updated:

‘மோசமான மண்ணிலும் பயிர் செய்ய முடியும்!’ - நம்மாழ்வாரின் வானகம் உருவான வரலாறு!

பசுமை போர்த்திக் கொண்டிருக்கும் வானகம் பண்ணை
பிரீமியம் ஸ்டோரி
பசுமை போர்த்திக் கொண்டிருக்கும் வானகம் பண்ணை ( நா.ராஜமுருகன் )

பகிர்வு

‘மோசமான மண்ணிலும் பயிர் செய்ய முடியும்!’ - நம்மாழ்வாரின் வானகம் உருவான வரலாறு!

பகிர்வு

Published:Updated:
பசுமை போர்த்திக் கொண்டிருக்கும் வானகம் பண்ணை
பிரீமியம் ஸ்டோரி
பசுமை போர்த்திக் கொண்டிருக்கும் வானகம் பண்ணை ( நா.ராஜமுருகன் )
‘நஞ்சான உணவைத் தொடர்ந்து உண்பதால், மனிதகுலம் சந்திக்கப்போகும் நோய்கள் ஏராளம். இயற்கையை நாம் தொடர்ந்து சீண்டிவருகிறோம். இனி, அடிக்கடி புயல், வறட்சி, வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடர்கள் ஏற்படும்’ என்று தீர்க்கதரிசியாகச் சொல்லியவர், இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வார். 20 வருடங்களுக்கு முன்பே அவர் சுட்டிக்காட்டிய அனைத்தையும், இன்று நாம் சந்தித்துக்கொண்டிருக்கிறோம். அதேநேரம், ‘பசுமைப் புரட்சி’ என்ற பெயரில் மண்ணையும் உணவையும் விஷமாக்கிக்கொண்டிருந்த பலர், இப்போது இயற்கை விவசாயம் பக்கம் கவனத்தைத் திருப்பியிருக்கிறார்கள்.

இந்த ஆக்கபூர்வ மாற்றத்துக்கான முதல் காரணம், நம்மாழ்வார் ஊர் ஊராகப் பயணித்து, விதைத்த விழிப் புணர்வுதான். அத்தனை மாற்றங்களை நிகழ்த்திக்காட்டியவர், தற்போது பேரமைதியாக வானகத்தில் உள்ள சமாதியில் உறங்குகிறார். ஆனால், அவரது கனவு உறங்கவில்லை. முன்பைவிட அதிவேகத்தில் பரவி வருகிறது.

பசுமை போர்த்திக் கொண்டிருக்கும் வானகம் பண்ணை
பசுமை போர்த்திக் கொண்டிருக்கும் வானகம் பண்ணை

கரூர் மாவட்டம், கடவூர் ஒன்றியத்தில் உள்ள சுருமான்பட்டியில் இருக்கிறது, 35 ஏக்கர் பரப்பளவுள்ள வானகம். நம்மாழ்வாருக்குச் சொந்த ஊர், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள இளங்காடு. ஆனால், அவர் ஏன் கரூர் மாவட்டத்தில் செயல்பட நினைத்தார். எதற்காக வானகத்தை அமைத்தார்? என்ற கேள்விகளை ஆரம்பகாலத்தில் அவரோடு பயணித்த சிலரிடம் பேசினோம்.

‘மோசமான மண்ணிலும் பயிர் செய்ய முடியும்!’ - நம்மாழ்வாரின் வானகம் உருவான வரலாறு!

அறச்சலூர் செல்வம், இயற்கை வேளாண்மைச் செயற்பாட்டாளர்

“அரசு வேலையை உதறிவிட்டு, இயற்கை விவசாயத்தை முன்னெடுத்து 1990-களில் தமிழகம் முழுக்க நம்மாழ்வார் பயணித்த காலகட்டம் அது. அப்போது அவர் அடிக்கடி, ‘தொடர்ந்து பயணிச்சுக்கிட்டே இருக்கேன். ஆனா, ஒரு இடத்துல இருந்து வேலை செய்யணும். எனக்கு வயசு அதிகமாயிட்டேபோகுது. என் வாழ்நாளுக்குள் தமிழக மக்களுக்கு முக்கிய விஷயங்களைச் செய்து காட்டணும்’ என்று சொல்வார். அதோடு, ‘நல்ல மண்ணுல இயற்கை விவசாயத்தை யார் வேணும்னாலும் செய்யலாம். ஆனா, தமிழ்நாட்டுல நிறைய மானாவாரி நிலங்கள் இருக்கு. நிறைய இடங்கள்ல மேல்மண் காத்துல அடிச்சுட்டுப் போய், அங்கெல்லாம் மண்வளமில்லாம மாறிடுச்சு. இந்த மோசமான மண்ணையும் வளப்படுத்தி, அதில் விவசாயம் செய்ய முடியும்னு மக்களுக்கு நாம காட்டணும்’ என்று சொல்வார்.

‘மோசமான மண்ணிலும் பயிர் செய்ய முடியும்!’ - நம்மாழ்வாரின் வானகம் உருவான வரலாறு!

அதற்காக, எதற்கும் பயனில்லாதது என்று ஒதுக்கப்பட்ட நிலப்பகுதியாகப் பார்க்கச் சொன்னார். இதற்கிடையில், தனிநபர் இடங்களில் 1998-ம் ஆண்டுச் சத்தியமங்கலம் பக்கத்திலும், 2002-ம் ஆண்டு வாக்கில், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தாத்யங்கார்பேட்டை அருகில் உள்ள கிராமத்திலும் ஒரு மாதிரிப் பண்ணையை ஆரம்பிக்க முயன்றார். ஆனால், அங்கெல்லாம் நிரந்தரமாக இயங்க முடியவில்லை. பல இடங்களில் நாங்கள் இடம் பார்த்தோம். அதெல்லாம் அவருக்குப் பிடிக்கவில்லை. சில தன்னார்வலர்கள் சொன்னதன் பேரில், கரூர் மாவட்டத்தில், சுருமான்பட்டியில் உள்ள இந்த இடத்தை வந்து பார்த்தார். உடனே, ‘இதுதான் நான் தேடிய இடம்’னு சம்மதம் சொன்னார். ஆனால், எங்களுக்கெல்லாம் பயங்கர அதிர்ச்சி. சுற்றி எங்கும் மரங்களே இல்லை. பொட்டல்காடாக இருந்தது நிலம். நிலம் முழுக்க சீமைக் கருவேலமரம்தான் இருந்தது.

‘மோசமான மண்ணிலும் பயிர் செய்ய முடியும்!’ - நம்மாழ்வாரின் வானகம் உருவான வரலாறு!

‘இதுதான் நான் வேலை செய்ய வேண்டிய இடம். இந்த இடத்தை மாற்றிக் காட்டுவோம். எந்த மோசமான மண்ணிலும் பயிர் செய்ய முடியும்னு விவசாயிகளுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவோம்’ என்று உறுதியா சொன்னார். இந்த நிலத்தை வாங்க 100 பேர் வரை நிதியுதவி அளிக்க, 35 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டது. 2009-ம் ஆண்டுதான் அந்த இடத்தை வாங்கினோம். பண்ணை ஆராய்ச்சி மற்றும் உலக உணவுப் பாதுகாப்புக்கான உயிர்ச்சூழல் நடுவமாக இந்த இடத்தை மாற்ற வேலை செய்ய ஆரம்பித்தார். அவரோடு நாங்களும் களப்பணியில் இறங்கினோம். முதலில், மழைநீரைப் பூமிக்குள் அனுப்பி, நிலத்தடி நீர்மட்டத்தை உயர வைக்கும் முயற்சியில் இறங்கினோம். அங்கிருந்த எந்தக் கிணற்றிலும் தண்ணீர் இல்லாத சூழல். குடிநீருக்காக, பக்கத்து ஊர்கள்வரை போய் வர வேண்டியிருந்தது. அங்கே வேலை செய்ய ஆரம்பித்தபோது, வெயிலுக்கு ஒதுங்கக்கூட இடம் இல்லை. அங்கே இருந்த ஒரே ஒரு சீமைக் கருவேலம் மரத்தினடியில்தான், நம்மாழ்வார் உட்பட எல்லோரும் இளைப்பாறுவோம். ஆரம்பத்தில் எல்லோருக்கும் நிழல் தந்த அந்த மரம் இன்னமும் அங்கே இருக்கிறது.

அறச்சலூர் செல்வம்
அறச்சலூர் செல்வம்

மழைநீரைப் பூமிக்குள் அனுப்ப, பண்ணையில் அங்கங்கே சிறு குட்டைகளை அமைத்தோம். தொடர்ந்து, அந்த இடத்தைச் சுற்றி உயிர்வேலி அமைக்க ஆரம்பித்தோம். அதாவது, வறட்சியைத் தாங்கி வளரும் நார் கற்றாழை, சோற்றுக்கற்றாழை, கிளுவை, வேலம் முள் என உயிர்வேலிகளை அமைத்தோம். குடிதண்ணீர் பிரச்னை இருந்ததால், ஒரு போர்வெல் போட்டோம். ஆனால், அதை நம்மாழ்வார் கடுமையா எதிர்த்தார்.

நம்மாழ்வார் விதைக்கப்பட்ட இடம்
நம்மாழ்வார் விதைக்கப்பட்ட இடம்

குடிநீருக்காகப் பல கிலோமீட்டர் பயணிக்க வேண்டிய கொடுமையைச் சொல்லியும், அவர் ஆரம்பத்தில் சமாதானம் ஆகவில்லை. அவர் மட்டும், அந்த போர்வெல் தண்ணீரைக் குடிக்கவில்லை. வெளியில் போய்த் தண்ணீர் குடிப்பார். ஒருகட்டத்தில் சமாதானமாகி அந்தத் தண்ணீரை அருந்தினார். தொடர்ந்து, மழைநீரைப் பூமிக்குள் இறக்கும் வகையிலான அமைப்பைச் செய்ததால், குறுகிய காலத்திலேயே அங்கு நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது. சுற்றியுள்ள நான்கு கிணறுகளிலும் தண்ணீர் ஊறியது. வானகத் தைப் பற்றிக் கேள்விப்பட்டுத் தமிழகம் முழுக்க இருந்த பல தன்னார்வலர்கள் இங்கே வர ஆரம்பித்தார்கள். நம்மாழ்வாரோடு வாரக் கணக்கில் இங்கே தங்க ஆரம்பித்தார்கள். அதோடு, அவர்கள் வானகத்துக்குள் அங்கங்கே மரக்கன்றுகளை நட ஆரம்பித்தார்கள். அங்குள்ள மேல் மண் இருக்கும் சில இடங்களில் நரிப்பயறு, சோளம், கொள்ளு எனப் பயிர் செய்ய ஆரம்பித்தார் நம்மாழ்வார். அதோடு, தன்னார்வலர்கள் ஆடுகள், நாட்டுமாடுகள் வாங்கி வந்து, வானகத்தில் ஒப்படைத்தார்கள்.

நம்மாழ்வார் நினைவாக...
நம்மாழ்வார் நினைவாக...

நம்மாழ்வார் தங்குவதற்காக ‘வள்ளுவம்’ என்ற பெயரில் ஒரு குடில் அமைத்தோம். நாங்கள் தங்கவும், தன்னார்வலர்கள் தங்கவும் தனித்தனியா குடில்கள் அமைத்தோம். ‘காத்து அடித்துப்போன மேல்மண் நீங்கிய இடங்களில் மண்வளத்தை இயற்கையே வளமாக்க குறைந்தது 500 வருஷமாவது ஆகும். அதனால், இயற்கையைப் புரிஞ்சுகிட்டு, அதன்போக்குல போய் மேல் மண்ணைச் சரிபண்ண கொஞ்சம் காலம் ஆகும். அதுவரை காத்திருக்கணும்’னு நம்மாழ்வார் சொல்வார். வானகத்தில் இயற்கையைக் கட்டமைப்பதோடு, இங்கு வரும் தன்னார்வலர்களுக்குப் பல்வேறு பயிற்சிகளையும் கொடுத்து வந்தார்.

‘‘நம்மாழ்வார் அதிகம் வேலை செய்தது, ஈரோடு மாவட்டத்தில்தான். காரணம், இங்குதான் அதிகம் பூச்சிக்கொல்லி மருந்துகள், ரசாயனங்களைப் பயன்படுத்தினார்கள் விவசாயிகள்.’’

இந்த நிலையில்தான், 2013-ம் ஆண்டு டெல்டா பகுதியில் மீத்தேன் பிரச்னை விஸ்வ ரூபமெடுத்தது. அதனால், நம்மாழ்வார் அங்கே போக வேண்டியிருந்தது. வானகத்தை எங்கள் பொறுப்பில் விட்டுவிட்டு, டெல்டா முழுக்க மீத்தேனுக்கு எதிரான போராட்டங்கள், நிகழ்ச்சிகளில் தொடர்ந்து கலந்துகொண்டார். மறைவதற்கு முதல்நாள்கூடத் தஞ்சாவூரில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டார். ஆனால், ‘வானகம்’ என்று அவர் கட்டமைக்க நினைத்த பெருங்கனவை நனவாக்குவதற்குள், அவரை இயற்கை தன்னோடு அழைத்துக் கொண்டது.

உயிரோடு இருக்கும்போதே, ‘நான் இறந்தால், என் உடலை வானகத்தில்தான் அடக்கம் பண்ணனும். எந்தக் கட்டுமானமும் பண்ணாமல், ரஷ்ய எழுத்தாளர் டால்ஸ்டாய்க்கு இருப்பதைப்போல, மண்ணோடு மண்ணாக இருக்கும்படி உடலை அடக்கம் பண்ணணும். ஒரே ஒரு வேப்பமரம் மட்டும் நடணும்’னு சொன்னார். அதன்படியே, அவருக்குச் சமாதி அமைத்தோம். ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 6-ம் தேதி அவர் பிறந்தநாளை விழாவாகக் கொண்டாடுகிறோம். ஜனவரி 1-ம் தேதி அவரை பூமியில் விதைத்த நாளில் நினைவேந்தல் நடத்துவோம். அப்போது, ஆயிரக்கணக் கானவர்கள் வருவார்கள்.

வானகத்தில் இயற்கை வேளாண்மை, களப்பணி உள்ளிட்ட பயிற்சிகள் கொடுக் கிறார்கள். பயிற்சிகளுக்கு வரும் தன்னார் வலர்கள் மூலமாக, நம்மாழ்வார் சொன்ன கருத்துகள் மூலை முடுகெல்லாம் போய்ச் சேர்க்கப்படுகிறது. நம்மாழ்வார் இறப்புக்குப் பிறகுதான், அவரின் முக்கியத்துவமும், அவர்மீதான புரிதலும், அவரின் தேவையும் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் புரிய ஆரம்பித்திருக்கிறது. வையகம் உள்ள வரையில் வானகம் இருக்கும். வானகம் இருக்கும் வரை, மக்கள் மனங்களில் நம்மாழ்வார் வாழ்வார். அவர் கண்ட கனவை வானகத்தில் நிகழ்த்திக் காட்ட இன்னும் அதிக தூரம், பயணிக்க வேண்டியிருக்கிறது. அதை நிகழ்த்திக் காட்டுவோம்” என்றார் நம்பிக்கையுடன்.

மருத்துவர் ஜீவானந்தம், ஈரோடு.

ஜீவானந்தம்
ஜீவானந்தம்

“நம்மாழ்வார் அதிகம் வேலை செய்தது, ஈரோடு மாவட்டத்தில்தான். காரணம், இங்குதான் அதிகம் பூச்சிக்கொல்லி மருந்துகள், ரசாயனங்களைப் பயன்படுத்தினார்கள் விவசாயிகள். அதனால், அவரை அழைத்து வந்து கூட்டங்கள், பாதயாத்திரை, போராட்டங்கள் எனத் தொடர் நிகழ்ச்சிகளை நடத்தினோம். அவர், இயற்கை விஞ்ஞானியாகப் பரிமளிக்க ஆரம்பித்ததில், ஈரோடு மாவட்டத்துக்குப் பெரும் பங்கு உள்ளது. கரூர் சுருமான்பட்டியில் வானகம் உள்ள இடத்தைச் சுற்றி, 32 குக்கிராமங்கள் உள்ளன. அந்தக் கிராமங்களைச் சுற்றி, இயற்கையே வட்டவடிவில் மலைகளை அமைத்திருக்கிறது. வெளியிலிருந்து அந்த ஊர்களுக்குப் போய்வர மூன்றே மூன்று வழிகள்தான் உள்ளன. இந்த இடத்தை நம்மாழ்வார் வாங்க முடிவு செய்ததைப் பார்த்து, ‘ஐயா, இது வறட்சியான இடமா தெரியுதே. இதில் என்ன செய்ய முடியும்? வேறு இடம் பார்க்கலாமே?’னு சொன்னேன். ஆனால் அவர், ‘மகாராஷ்டிரா மாநில எல்லையில் காந்தி அமைத்த வார்தா ஆசிரமம் உள்ள இடம், மிகவும் வறண்ட பகுதி. அதைக் காந்தி செம்மைப்படுத்தினார். அதுபோல், மோசமான இந்த நிலத்தை வளமான மண்ணாக மாத்தணும்’னு உறுதியாகச் சொல்லி விட்டார். அந்த இடத்தை வாங்க நானும் என் பங்களிப்பைச் செய்தேன். அறக்கட்டளை மூலமாக, அந்த வானகம் இயங்கி வருகிறது. ஆனால், நம்மாழ்வார் நினைத்ததுபோல், அந்த இடத்தின் மண்வளம் முழுமையாக இன்னும் வளமாகவில்லை. ஓரளவு மாற்றம் பெற்றிருக்கிறது.

‘‘மழைநீரைப் பூமிக்குள் அனுப்ப, பண்ணையில் அங்கங்கே சிறு குட்டைகளை அமைத்தோம். தொடர்ந்து, அந்த இடத்தைச் சுற்றி உயிர்வேலி அமைக்க ஆரம்பித்தோம்.’’

தற்போது வானகம் பயிற்சிக்களமாகச் செயல்பட்டு வருகிறது. அங்குள்ள மக்களுக்கு இந்த வானகம் மூலம் நல்ல உணவு கொடுத்து, நல்ல கல்வியும் கொடுக்க வேண்டும் என்பதுதான் நம்மாழ்வாரின் பெருங்கனவு. ஆனால், அவர் லட்சியங்களை வானகத்தில் நிறைவேற்றிப் பார்ப்பதற்குள், இயற்கையில் இரண்டற கலந்துவிட்டார். அவருக்குத் தொடர்ந்து உடம்புக்கு முடியாமல் இருந்தது. ‘ஆங்கில மருத்துவம் எடுத்துக்குங்க’னு சொன்னேன். ‘அப்படிச் செய்தால், நான் கொண்ட லட்சியம் கேலிக்கூத்தாகிவிடும்’னு அதை மறுத்துவிட்டார். கடைசிவரை, கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்து, இன்று தமிழகத்தில் பெரும்பாலானோர் மனதில், இயற்கை விவசாயம் குறித்த உத்வேகத்தை ஏற்படுத்திவிட்டு, வானகத்தில் நிரந்தரமாகத் துயில்கொள்கிறார். ஆனால், அவர் கனவுகள் ஒருபோதும் உறங்காது” என்றார் உறுதியுடன்.

நம்மாழ்வார் பற்ற வைத்த இயற்கை பெரும்ஜோதி, தொடர் ஜோதியாக இளைஞர்களின் கைகளில் தவழ்ந்து கொண்டிருக்கிறது. காலத்துக்கும் மக்களின் மனங்களில் அது ஒளி வீசும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism