நாட்டு நடப்பு
மகசூல்
Published:Updated:

‘விளைஞ்ச நெல்ல அறுக்கவும் முடியலை... அப்படியே விடவும் முடியலை!’

டெல்டா
பிரீமியம் ஸ்டோரி
News
டெல்டா

வேதனை: டெல்டா விவசாயிகளைக் கதற வைத்த மார்கழி மழை

மார்கழி மாசத்துல, இப்படியொரு பேய் மழையை இதுக்கு முன்னாடி நாங்க பார்த்ததே இல்லை. அதுவும் தைப்பொங்கல் சமயத்துல இந்தளவுக்கெல்லாம் தொடர்ச்சியா கனமழை பெய்ஞ்சதே இல்லை. அறுவடைக்குத் தயாரா இருந்த நெற்பயிரெல்லாம் கீழே சாய்ஞ்சு மண்ணோடு மண்ணா கிடக்கு. எல்லாமே போச்சு. முதலுக்கே மோசமாயிடுச்சு. ஏக்கருக்கு ஒரு மூட்டை நெல்லுகூடத் தேறாது. பயிர்கள் அடியோடு கீழ சாய்ஞ்சதுனால, கதிர்கள் சேத்துல மூழ்கிக் கிடக்கு. விளைஞ்ச நெல்ல அறுக்கவும் முடியலை... அப்படியே விடவும் முடியலை’’ பொங்கல் பண்டிகையை மிகுந்த உற்சாகத்தோடு எதிர்பார்த்திருந்த டெல்டா விவசாயிகளை, கண்ணீரில் தத்தளிக்க வைத்துவிட்டது மார்கழி மழை.

தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த ஆண்டு 10 லட்சம் ஏக்கருக்கும் அதிகமான பரப்பில் சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்டது. நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நிவர், புரெவி புயலின் தாக்கத்தால் கொட்டித்தீர்த்த கனமழையால், நெல் வயல்களில் தண்ணீரில் தேங்கி, பயிர்களை மூழ்கடித்தது. பதைபதைத்துப்போன விவசாயிகள், தங்களது நெற்பயிர்களை மீட்டெடுக்க, படாதபாடு பட்டார்கள். மீண்டும் வெயில் அடிக்கத் தொடங்கியதும், சற்று நிம்மதி அடைந்தார்கள். குறைவான மகசூல் கிடைத்தாலும் பரவாயில்லை, எஞ்சியிருக்கும் நெற்பயிர்களையாவது காப்பாற்றலாமென நினைத்து, வயலில் தேங்கியிருந்த தண்ணீரை வெளியேற்றி, உரமிட்டு, பயிரை மீட்டெடுத்தார்கள். கதிர்கள் முற்றி, அறுவடைக்குத் தயாராகத் தொடங்கியதும், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தார்கள். அறுவடையை எதிர்பார்த்துக் காத்திருந்த நிலையில்தான், இவர்களைப் பேரிடியாய்த் தாக்கியது, பொங்கல் தருணத்தில் பெய்த, எதிர்பாராத தொடர் மழை.

மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்கள்
மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்கள்

இது தொடர்பாகப் பேசிய காவிரி டெல்டா பாசன விவசாயச் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் இளங்கீரன், “பயிர்கள் அடியோடு கீழ சாஞ்சதுனால, கதிர்கள் சேத்துல மூழ்கிக் கிடக்கு. அறுவடை மிஷினை உள்ளாற இறக்க முடியாது. ஆள் வச்சு அறுக்குறதும் சாதாரணக் காரியமில்லை. கஷ்டப்பட்டு அறுத்தாலும்கூட, அதைக் கரை சேர்க்குறது ரொம்பக் கஷ்டம். பயிர்களை அறுவடை செய்யும்போது நெல்மணிகளும் சேத்துக்குள்ளாறக் கொட்டிடும். தாள்களும் ஈரமா இருக்கு. மழை விட்டு, வெயில் அடிச்ச பிறகு அறுவடை செய்யலாம்னா, அதுக்கு வாய்ப்பே இல்லை. சேறு காய்ஞ்சிப் போயி, கதிர்கள் முழுக்க மூடி இறுகிடும். இதை அப்படியே விட்டுடவும் முடியாது. இதையெல்லாம் வெளியேத்தினால்தான், மறுபடியும் பயிர் சாகுபடி செய்ய முடியும். வயல்ல ஈரம் இருக்கும்போதே இதை வெளியேத்தியாகணும். வெயில் வந்து சேறு காய்ஞ்சிப் போயிடுச்சுனா, பயிர்களை வெளியேத்த முடியாது. இதை உடனடியா ஆள் வச்சி அறுத்து, வெளியேத்த, ஏக்கருக்கு 10,000 ரூபாய்ச் செலவாகும். உடனடியாகத் தமிழக அரசு இந்தத் தொகையைக் கொடுத்து விவசாயிகளுக்கு உதவணும். அடுத்தகட்டமா ஏக்கருக்கு 35,000 ரூபாய் நிவாரணம் கொடுக்கணும்” எனக் கோரிக்கை வைத்தார்.

தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் துணைச் செயலாளர் சுகுமாறன், ‘‘டெல்டா மாவட்டங்கள் முழுக்கவே பயிர்கள் பாதிக்கப்பட்ருக்குறதுனால, இந்தப் பகுதிகள் முழுவதையுமே இயற்கைப் பேரிடராக அறிவிச்சு, எல்லா விவசாயிகளுக்குமே நிவாரணமும், பயிர் இன்ஷுரன்ஸ் இழப்பீடும் கொடுக்கணும். இன்ஷுரன்ஸ் இழப்பீடு கொடுக்க, பயிர் அறுவடை சோதனைங்கற பேர்ல கண் துடைப்புச் செய்யாமல், எல்லா விவசாயிகளுக்கும் இழப்பீடு கொடுக்கணும்” என்றார்.

இளங்கீரன் - சுகுமாறன்
இளங்கீரன் - சுகுமாறன்

நிலக்கடலை, உளுந்து, காய்கறிகள் உள்ளிட்ட பயிர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இதற்கும் நிவாரணம் இழப்பீடு வழங்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது. இது தொடர்பாகத் தமிழக வேளாண்மைத்துறை செயலாளர் ககன் தீப்சிங் பேடி வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘‘ஜனவரி மாத மழை பாதிப்பு 4.5 லட்சம் ஹெக்டேர் எனத் தெரிய வந்துள்ளது. தற்போது 18 மாவட்டங்களில் கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. ஜனவரி 29-ம் தேதிக்குள் கணக்கெடுப்புப் பணிகள் முடிந்து, அரசுக்கு அறிக்கை அளிக்கப்படும். அதன்படி விரைவில் நிவாரணம் வழங்கப்படும். இதுதவிர, பயிர் காப்பீட்டுத் தொகையைப் பெற்றுத்தரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’’ எனத் தெரிவித்துள்ளார்.